வள்ளுவர் நிழல்
கா. அப்பாத்துரையார்
மூலநூற்குறிப்பு
நுற்பெயர் : வள்ளுவர் நிழல் (அப்பாத்துரையம் - 19)
ஆசிரியர் : கா.அப்பாதுரையார்
தொகுப்பாசிரியர் : முனைவர் கல்பனா சேக்கிழார்
பதிப்பாளர் : கோ. இளவழகன்
முதல்பதிப்பு : 2017
பக்கம் : 24+272 = 296
விலை : 370/-
பதிப்பு : தமிழ்மண் பதிப்பகம், எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை 600 017, தொ.பே.: 24339030, செல்: 9444410654
மின்னஞ்சல் : [email protected]
தாள் : 16.0 கி. மேப்லித்தோ, அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 11.5 புள்ளி, பக்கம் : 312
கட்டமைப்பு : இயல்பு படிகள் : 500
நூலாக்கம் : கோ. சித்திரா
அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)
அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.
நுழைவுரை
தமிழினத்திற்குத் தம் இன உணர்வையும், மொழியுணர்வையும் ஊட்டி வளர்த்தவர்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர், பாவேந்தர் பாரதிதாசன், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலான பெருமக்கள் பலராவர்.
பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் இரவு பகல் பாராது உழைத்து எழுதிய நூல்கள் 120 க்கும் மேற்பட்டவை (அவற்றுள் ஆங்கில நூல்கள் ஐந்து). எங்கள் கைகளுக்குக் கிடைத்த நூல்கள் 97. அவற்றைப் பொருள்வழிப் பிரித்துக் கால வரிசைப்படுத்தி 48 தொகுதிகளாக அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழ் உலகுக்கு வழங்குகிறோம்.
தமிழினம் தன் நிலையுணரத் தவறிய வேளையில் தமிழின் தூய்மையையும், தமிழினத்தின் பண்டைப் பெருமையையும் காப்பதற்குத் தக்க வழிகாட்டி அமைப்புகளாக 1916இல் தொடங்கப்பட்டவை தனித்தமிழ் இயக்கமும், திராவிடர் இயக்கமும் ஆகும். இவ்விரு இயக்கங்களின் பங்களிப்பால் தமிழினம் எழுச்சிபெற்றது. இவ்வுண்மையை இத் இத்தொகுப்புகளைப் பயில்வோர் எளிதாய் உணர முடியும்.
தமிழ்மொழி ஆய்வாலும், தமிழக வரலாற்று ஆய்வாலும், மொழி பெயர்ப்புத் திறத்தாலும் பன்மொழிப் புலமையாலும் தமிழின் மேன்மைக்குப் பெரும் பங்காற்றியவர் அப்பாத்துரையார். 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்களுள் முதல் வரிசையில் வைத்துப் போற்றப்படுபவர் அவர். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைக்குறித்து பெரியவர் முகம் மாமணி அவர்களும், பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியன் அவர்களும் தத்தம் நூல்களில் வழங்கிய வரிசையைப் பின்பற்றி அப்பாத்துரையம் தொகுப்புகளை வெளியிடுகிறோம்.
தமிழகம் முழுவதும் அலைந்து, பெருமுயற்சியால் தேடிச்சேகரித்தவை இந்த 97 நூல்கள். எங்களுக்குக் கிடைக்காத நூல்களைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளோம். அந்நூல்கள் வைத்திருப்போர் வழங்கினால் நன்றியுடன் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடுவோம். இத் தொகுப்புகளில் அடங்கியுள்ள நூல்களை உருவாக்கித் தமிழர் கைகளில் தவழ விடுவதற்குத் தொகுப்பாசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களும், யானும் பெற்ற இடர்ப்பாடுகள் மிகுதி. அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் தம் தொகுப்புரையில் இத்தொகுப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதை விரிவாக விளக்கியுள்ளார்.
அப்பாத்துரையாரின் அறிவுச் செல்வங்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய பதிப்பகங்களில் முதன்மையானது சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். தமிழ்-தமிழர் மூலங்களைத் தமிழகம் தேடிப்படிப்பதற்கு அடித்தளமாக அமைந்த பதிப்பகம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
பாரி நிலையம், மணிவாசகர் பதிப்பகம், வள்ளுவர் பண்ணை, பூம்புகார் பதிப்பகம், வசந்தா பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம் முலிய பல பதிப்பகங்கள் இப்பெருந்தமிழ் அறிஞரின் நூல்களை வெளியிட்டுத் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்துள்ளன.
இந்நூல்களின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்கள், தமிழாய்வுக் களத்தில் குறிப்பிடத்தக்கவர். தமிழாய்வுப் பரப்பிற்கு வலிமையூட்ட இவருக்குப் பல்லாற்றானும் உதவிவருபவர் இவருடைய அருமைக் கணவர் மருத்துவர் சேக்கிழார் அவர்கள். தமிழ்ப்பதிப்புலகம், இவ்விணையரின் தமிழ்க்காப்புப் பேருழைப்பை என்றும் நினைவு கூரும்.
தொகுப்பு நூல்களின் உள்ளடக்கம் செப்பமாக உருவாவதற்குத் தனக்குள்ள உடல் நலிவையும் தாங்கிக் கொண்டு உழைத்த தமிழ்மகள்
கோ. சித்திராவுக்கு நன்றி. தொகுப்புகளின் முகப்பு அட்டைகள் பல வண்ண வடிவமைப்புடன் வருவதற்கு உழைத்த செல்வன். பா. அரி (ஹரிஷ்) உழைப்பிற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இத் தொகுப்புகள் எல்லா நிலை
யிலும் நன்றாக வருவதற்கு உள்ளும் புறமும் உழைத்து உதவியவர்
திரு. இரா. பரமேசுவரன். பதிப்புச்சிறப்பிற்கு உதவிய திரு. தனசேகரன்,
திரு. கு. மருது, திரு. வி. மதிமாறன் இந்நால்வரும் நன்றிக்குரியோர்.
இத்தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள நூல்கள் பல இடங்களிலும் தேடிச் சேர்த்தவை. கன்னிமாரா நூலகத்தில் இருந்த நூல்களைப் படியெடுத்து உதவிய ‘கன்னிமாரா’ நூலகப் பணியாளர்களுக்கும்’சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம்’ (கும்பகோணம்), தாளாளர் பேரா. முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. சென்னை தரமணியில் இயங்கி வரும் ரோசா முத்தையா நூலகப் பணியாளர்கள் உதவிக்கு நன்றி.
நூல்களை மெய்ப்புப் பார்த்து உதவியவர் பெரும்புலவர் அய்யா பனசை அருணா அவர்கள். முனைவர் அரு. அபிராமி தன் ஆசிரியப் பணிக்கிடையிலும் சோர்வுறாது பதிப்பகம் வந்து இத் தொகுப்புகள் வெளிவருவதற்கு எல்லா நிலையிலும் உதவியவர். மேலும் இத்தொகுப்புகள் நன்றாக வெளிவருவதற்கு உதவியவர்களின் பெயர்கள் தனிப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனக்கென வாழாது, தமிழ்க்கென வாழ்ந்து, பல்லாண்டுக் காலம் உழைத்த பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரின் நூல்களை அப்பாத்துரையம் எனும் தலைப்பில் தமிழர்களின் கைகளில் தவழ விடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
“ஆக்கத்தை எனக்கிந் நாட்டார்
அளித்திட்ட அறிவை யெல்லாம்
தேக்கிஎன் தமிழ்மேன் மைக்கே
செலவிடக் கடமைப் பட்டேன்.”
- பாவேந்தர்
கோ. இளவழகன்
தொகுப்புரை
மறைமலையடிகளாரிடம் பட்டை தீட்டப் பெற்ற தன்மானத் தமிழறிஞர்!
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிவாளுமைகளில் பெரும் புலமையாளர் பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார். இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியராய்த் தொடங்கியது அவரின் வாழ்க்கை. பின்பு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் சிந்தனையில் ஈடுபட்டார்; நுட்பமான பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியும் பிற மொழிகளில் இருந்து (இலக்கியம், ஆய்வு, அறிஞர்களின் சிந்தனைகள் போன்ற நூல்கள்) தமிழில் மொழி பெயர்த்தும் தமிழிழுலகுக்கு வழங்கினார். அவர் நூல்கள் தமிழ் ஆய்வுப் பரப்பில் பெரும் நல்விளைவுகளை ஏற்படுத்தின.
“அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவி துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் இடையே தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார்” பேரறிஞர் அண்ணா பன்மொழிப் புலவரின் ஆய்வுத் தன்மையை இப்படி எடுத்துக்காட்டுகிறார்.
பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவரையும், பாவாணரையும் ஒப்பிட்டுக் காட்டுவது மனங்கொளத்தக்கது. தேவநேயப்பாவாணரையும் - கா. அப்பாத்துரையாரையும் குறிப்பிடும் போது, “இவ்விருவரும் இருபதாம் நூற்றாண்டுப் புலமைக்கு இரண்டு மேருமலைகள்; மறைந்த குமரிக் கண்டத்து ஓடியிருந்த பஃறுளியாறும் குமரியாறும் போன்றவர்கள்; கழகப் புலவருள் பரணரும் கபிலரும் போன்ற பெருமக்கள்; மொழியையும் இனத்தையும் தூக்கி நிறுத்த வந்த நுண்ணறி வாளர்கள். இவர்கள் காலத்து மற்ற பிற புலவர்கள் விண்மீன்கள் என்றால், இவர்கள் இருவரும் கதிரவனும் நிலவும் போன்ற அந்தணர்கள்; செந்தமிழ் அறவோர்கள்; தொண்டு தவம் இயற்றிய தீந்தமிழ்த் துறவோர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல் உரவோர்கள்.” தமிழுலகிற்கு அப்பாத்துரையார் ஆற்றிய பணியின் இன்றியமையாமையையும் அவருடைய எழுத்துக்களின் தேவையையும் பெருஞ்சித்திரனார் இவ்வாறு உணர்த்துகிறார்.
சமூகம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அச்செயல்பாடுகள் சரியான வகையில் அமைந்து உரிய புள்ளியில் இணையும் பொழுது, அச் சமூகம் மேலெழுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில் தமிழகத்தில் அப்படியான ஒன்றைக் கட்டியமைக்க வேண்டிய நிலை இருந்ததால், அதன் தொடரச்சியான செயல்பாடுகளும் எழுந்தன.
- தனித்தமிழ் இயக்கத் தோற்றம்
- நீதிக் கட்சி தொடக்கம்
- நாட்டு விடுதலை உணர்ச்சி
- தமிழின உரிமை எழுச்சி
- பகுத்தறிவு விழிப்புணர்ச்சி
- இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர்
- புதிய கல்வி முறைப் பயிற்சி
- புதுவகை இலக்கிய வடிவங்களின் அறிமுகம்
இப்படிப் பல்வேறு தளங்களில் தமிழகம் தன்னை மறு கட்டமைப்புச் செய்ய முனைந்துகொண்டிருந்தது. அதற்கான ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் பல்வேறு நிலைகளில் துணையாக அமைந்தன. அப்பாத்துரையாரிடம் இந்தி ஆசிரியர் - இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பக்தி சார்பு - பகுத்தறிவுச் சிந்தனை, காங்கிரசுக் கொள்கை - திராவிடக் கொள்கை, மரபிலக்கியம் - நவீன இலக்கியம் என்னும் முரண்நிலைகள் இருந்தாலும், “தமிழ், தமிழர், தமிழ்நாடு” என்னும் தளத்தில் உறுதியாகச் செயல்பட்டார். மறைமலையடிகள், தேவநேயப்பாவாணரின் சிந்தனைகளை உட்செறித்து, வலுவான கருத்தாக்கங்களை உருவாக்கினார். அவை தமிழினத்தின் மறுமலர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமைந்தன.
“தாய்மொழியும், தாய்மொழி இலக்கியமும், தாய்மொழிக் கல்வியுமே மனித நாகரிகத்தின் அடிப்படை என்பது உணரப்படாமல் இந்தியா நெடுநாள் வாழ முடியாது. தமிழர் இவ்வுண்மையை அறிந்து தமிழறிவும் உலக அறிவும் ஒருங்கே பெற உதவும் எண்ணம் கொண்டே தமிழிலக்கிய வரலாற்றிலே ஆர்வம் ஏற்படாத இக்காலத்தில் உலக வரலாறு எழுத முற்பட்டோம்” என்பது அவர் கூற்று, இன்றும் அந்நிலை முழுதாய் உணரப்படாமல் உள்ளதை என்ன சொல்வது!
அப்பாத்துரையார் தொடக்கத்தில் இந்திய தேசியப் பேரியக்கத்துக்குள் தம்மை இணைத்துக் கொண்டு, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றார். அதனடிப்படையில் காந்தி ரத்தின திருப்புகழ், காந்தி புராணம், தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு விழா முதலான பாடல்களை இதழ்களில் எழுதினார். காங்கிரசு முன் வைத்த மொழிக்கொள்கை குறிப்பாகத் தமிழகத்தில் இந்தியைத் திணிக்க முற்பட்ட முயற்சி, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை உருவாகியது. இந்த நிகழ்வு (1938 - 1939) அவரைத் தமிழர் தேசியம் நோக்கித் திருப்பியது. அதனால் பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுச் சிந்தனைகளோடு தம்மை இணைத்துக்கொண்டார். தமது நிலைப்பாட்டை, அவரே கூறுகிறார். “சர்.ஏ. இராமசாமி முதலியார் போன்றவர்கள் தொடக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பின் விலக நேர்ந்தது. இந்தக் காலங்களில் காங்கிரசை விட்டோ, சைவ இயக்கங்களை விட்டோ, தமிழ் இயக்கங்களை விட்டோ விலகாமல் நின்று, எல்லா முற்போக்கு வீரர்களையும் இணைக்க நான் முயன்றேன். பெரியார் இதனை எதிர்க்கவில்லை. தன்மான இயக்கத்திற்கும், திராவிட இயக்கத்துக்கும், தமிழ் இயக்கத்துக்கும் என்னுடைய நிலை இன்றுவரை பயன்பட்டே வந்துள்ளது” - (அறிவுச் சுரங்கம், பக்.100,101) பன்மொழிப் புலவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் (இயக்கம் சார்ந்தும் எழுத்து சார்ந்தும்) நின்றுவிடாத உரிமையுணர்வினர்!
பன்மொழிப் புலவர் பெயரால் வெளிவந்த முதல் நூல் குமரிக்கண்டம் (1940-43). இது மொழிபெயர்ப்பு நூல். காழி. கண்ணுசாமி பிள்ளை சில பக்கங்கள் மொழிபெயர்த்து இருந்ததை, முழுமையாக இவர் மொழிபெயர்த்துள்ளார். இதன் தொடர்ச்சியாக,
- உலக இலக்கியங்களை, வரலாறுகளைத் தமிழில் மொழி பெயர்த்தல்.
- தமிழ் மொழி, இனம் தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் தருதல்.
- தமிழ் மொழி, இனம், நாடு சார்ந்த சிந்தனையாக்கங்கள் வழங்கல்.
- தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு நோக்கி தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தல்.
- திருக்குறளுக்கு மிக விரிவான விளக்கவுரை வரைதல்.
- நுண் விளக்கங்களுடன் பல்வகை அகராதி தொகுத்தல்.
இந்த அடிப்படையில் அவருடைய நூல்கள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. 1947 - 1949 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றிய பொழுது, இந்தியாவில் மொழிச் சிக்கல் என்னும் நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலையடிகள் 40 பக்க அளவில் முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூல் எழுதியதன் காரணமாக அவரது அரசுப் பணி பறிக்கப்பட்டது.
பணியின்றி இருந்த (1949 - 1959) காலக்கட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவருடைய நூல்களைச் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரிநிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், வள்ளுவர் பண்ணை, அலமேலு பதிப்பகம் போன்ற பதிப்பகங்களும் பிறவும் வெளியிட்டுள்ளன. தமிழ்மண் பதிப்பகம் இப்போது அனைத்து நூல்களையும் 48 தொகுதிகளாக வெளியிடும் அரும்பணியை நிறைவேற்றியுள்ளது.
உலக நாகரிகத்தின் வித்து தமிழ் எனத் தம் நுண்ணாய்வின் வழி நிறுவிய, பன்மொழிப் புலவரின் அனைத்து நூல்களும் தொகுக்கப்பட வேண்டும் என்ற வேணவாவினால் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் ஐயா இளவழகனார் இத் தொகுப்பினை உருவாக்கப் பணித்தார்கள். ஐயா அவர்கள் தமிழுக்கு ஆற்றும் பேருழைப்பு என்னை வியக்கச் செய்யும். மெய்வருத்தம் பாராமல் கண்துஞ்சாமல் எடுத்த செயலை நேர்த்தியோடு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக நிற்பவர். அவருடன் இணைந்து இத்தொகுப்பினை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இத் தொகுப்பிற்கான நூல்கள் கும்பகோணம் செந்தமிழ் நூலகம், ரோசா முத்தையா நூலகம், கன்னிமாரா நூலகம், வெற்றியரசி பதிப்பகம் முதலான இடங்களில் இருந்து திரட்டப்பெற்றன. பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்களிடமிருந்தும் சில நூல்கள் பெறப்பட்டன. கிடைத்த நூல்கள் 97. அவை 48 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளி வருகின்றன. அத் தொகுதிகள் கீழ்க்காணும் முறைகளில் பகுக்கப்பட்டுள்ளன.
1. தமிழ் - தமிழர் - தமிழ்நாடு
2. வரலாறு
3. ஆய்வுகள்
4. மொழிபெயர்ப்பு
5. இளையோர் கதைகள்
6. பொது நிலை
பெரும்பான்மை நூல்கள் இத்தொகுப்பிற்குள் அதனதன் பொருள் அடிப்படையிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. பக்கச் சமநிலை கருதி மாற்றம் பெற்றும் உள்ளன. வெவ்வேறு பதிப்பகங்கள் ஒரே நூலை வேறு வேறு பெயர்களில் வெளியிட்டிருந்தன. சில நூல்களின் முதல் பதிப்பு கிடைக்காத நிலை! கிடைத்த பதிப்புகளின் அடிப்படையிலேயே நூல்கள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. முகம் மாமணி அவர்களின் அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார் என்ற நூலையும், பேராசிரியர் முனைவர் கு.வெ. பால சுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ள பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு அப்பாத்துரையம் தொகுக்கப் பட்டுள்ளது. இந்தக் கால வரிசை அடிப்படையிலான நூற்பட்டியல் இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளன. அப்பாத்துரையார் குறித்து வெளிவந்துள்ள கட்டுரைகள், அறிஞர்கள் கருத்துக்கள், அவர் குறித்த பாடல்கள் திரட்டப்பட்டு இத் தொகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளன. விடுபட்ட நூல்கள் கிடைக்கச் செய்தால் அடுத்த பதிப்பில் நன்றியுடன் வெளியிடப்பெறும். அவரின் திருக்குறள் விளக்கவுரை இத்துடன் இணைக்கவில்லை. காரணம் பக்கம் மிகுந்து இருப்பதே. குறைகள் இருப்பின், சுட்டிக் காட்டவும். மறுபதிப்பில் அவை திருத்திக்கொள்ளப்படும்.
இத்தொகுப்பு உருவாவதற்கு எல்லாவகையிலும் முன்னின்றவர் ஐயா திரு கோ. இளவழகனார். பகுப்பு முறைகளைச் சரிபார்த்துக் கொடுத்தவர் ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார். நூல்களைத் தட்டச்சு செய்தும், நூலின்
உள் வடிவமைப்பினைச் செப்பம் செய்தும் தந்தவர் திருமதி. கோ. சித்திரா, தொகுப்பு அனைத்திற்கும் சிறப்புற மேல் அட்டைகளை வடிவமைத்தவர் செல்வன். பா. அரி (ஹரிஷ்), தொகுப்புப் பணியில் துணை செய்தோர் என் ஆய்வு மாணவர்கள் திருமதி. பா. மாலதி, திரு. கா. பாபு, செல்வன். சு. கோவிந்தராசு, செல்வி. கா. கயல்விழி. என் பணிகள் அனைத்திற்கும் என்றும் துணைநிற்பவர் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார். இவர்கள் அனைவருக்கும் என்றும் என் நன்றியும் அன்பும் உரியன.
கல்பனா சேக்கிழார்
நூலாசிரியர் விவரம்
பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார்
இயற்பெயர் : நல்ல சிவம்
பிறப்பு : 24.06.1907 இறப்பு: 26.05.1989
பெற்றோர் : காசிநாதப் பிள்ளை, முத்து இலக்குமி
பிறந்த ஊர் : கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய் மொழி (அறை வாய் மொழி)
உடன் பிறந்தோர் : தங்கை இருவர், தம்பியர் இருவர்
மனைவியர் : திருமதி. நாச்சியார், திருமதி. அலமேலு
வளர்ப்பு மகள் : திருமதி. மல்லிகா
தொடக்கக் கல்வி : ஆரல்வாய் மொழி
பள்ளிக் கல்வி : நாகர்கோவில்
கல்லூரிக் கல்வி : திருவனந்தபுரம், இளங்கலை ஆங்கிலம் (ஆனர்ஸ்), முதுகலை தமிழ், இந்தி ‘விசாரத்’, எல்.டி.
கற்ற மொழிகள் : 40 (புழக்கத்தில் - தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம், மலையாளம், இந்தி)
நூல்கள் : 120 (ஆங்கிலம், 5)
இதழ்பணி : திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லோகோபகாரி, தாருஸ் இஸ்லாம், குமரன், தென்றல், விடுதலை.
பணி :
- 1936-37 திருநெல்வேலி நாசரேத் பகுதியில் இந்திப் பிரச்சார சபா ஆசிரியர்.
- 1937-1939 நெல்லை எம்.டி.டி. கல்லூரி இந்தி ஆசிரியர்.
- பள்ளி ஆசிரியர், செட்டிநாட்டில் அமராவதிபுத்தூர் மற்றும் கோனாப்பட்டு.
- 1947-1949 மைய அரசின் செய்தித் தொடர்புதுறையில் பணி
- 1959 - 1965 சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் தமிழ் அகராதிப் பணியில் இணை ஆசிரியர்.
- 1975-1979 தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர்
அறிஞர் தொடர்பு:
- தொடக்கத்தில் காந்திய சிந்தனை.
- 1938-39 இல் இந்தி எதிர்ப்பு இயக்கம், பெரியார், அண்ணா, பாரதிதாசன் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, மறைமலையடிகள், பாவேந்தர், பாவலரேறு, தேவநேயப் பாவாணர் மற்றும் சமகால அறிஞர் பெருமக்கள், படைப் பாளுமைகள் தொடர்பு
விருதுகள்:
- மதுரையில் நிகழ்ந்த 5ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழியும் கேடயமும் வழங்கப்பட்டது,
- 1973 இல் செந்தமிழ்ச் செல்வர், சேலம் தமிழகப் புலவர் குழு கூட்டத்தில் ’சான்றோர் பட்டம்’, ‘தமிழன்பர்’ பட்டம்.
- 1981 சனவரி 26 இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் ’கலைமாமணி’.
- 1983 இல் தமிழ்நாடு அரசு வழங்கிய ’திரு.வி.க.’ விருது, தங்கப் பதக்கம்.
- மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் சிறப்பித்து வழங்கிய ’பேரவைச் செம்மல்’ விருது.
- 1961 இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர்.
- 1970 இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்பு உறுப்பினராகக் கலந்து கொண்டார்.
- இங்கிலாந்து ஆக்சுபோடு பல்கலைக்கழகம் இவரது ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ நூலை அங்குப் படிக்கும் மேல்பட்டப் படிப்பு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டு இருந்தது.
பன்மொழிப்புலவரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள்:
- அறிவுச் சுரங்கம் கா. அப்பாத்துரையார், முகமாமணி, மாணவர் பதிப்பகம், சென்னை -17, 2005.
- பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், பேரா.முனைவர். கு.வெ. பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, 2007.
பதிப்பாளர் விவரம்
கோ. இளவழகன்
பிறந்த நாள் : 3.7.1948
பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625,தஞ்சாவூர் மாவட்டம்.
கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு
இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல்
ஆற்றியுள்ள பொதுப்பணிகள்
1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர்.
பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் ’ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர்.
உரத்தநாட்டில் ’தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர்.
பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ’உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர்.
தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும்,
19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர்.
பொதுநிலை
தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கை களை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர்.
தொகுப்பாசிரியர் விவரம்
முனைவர் கல்பனா சேக்கிழார்
பிறந்த நாள் : 5.6.1972
பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம்.
கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர்
இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
ஆற்றியுள்ள கல்விப்பணிகள்
- அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி.
- திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு.
- புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள் ஆகிய நூல்களின் ஆசிரியர்.
- பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார்.
- பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார்.
- 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
- மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார்.
- இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார்.
- செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார்.
நூலாக்கத்திற்கு உதவியோர்
தொகுப்பாசிரியர்:
- முனைவர் கல்பனா சேக்கிழார்
கணினி செய்தோர்:
- திருமதி கோ. சித்திரா
- திரு ஆனந்தன்
- திருமதி செல்வி
- திருமதி வ. மலர்
- திருமதி சு. கீதா
- திருமிகு ஜா. செயசீலி
நூல் வடிவமைப்பு:
- திருமதி கோ. சித்திரா
மேலட்டை வடிவமைப்பு:
- செல்வன் பா. அரி (ஹரிஷ்)
திருத்தத்திற்கு உதவியோர்:
- பெரும்புலவர் பனசை அருணா,
- திரு. க. கருப்பையா,
- புலவர் மு. இராசவேலு
- திரு. நாக. சொக்கலிங்கம்
- செல்வி பு. கலைச்செல்வி
- முனைவர் அரு. அபிராமி
- முனைவர் அ. கோகிலா
- முனைவர் மா. வசந்தகுமாரி
- முனைவர் ஜா. கிரிசா
- திருமதி சுபா இராணி
- திரு. இளங்கோவன்
நூலாக்கத்திற்கு உதவியோர்:
- திரு இரா. பரமேசுவரன்,
- திரு தனசேகரன்,
- திரு கு. மருது
- திரு வி. மதிமாறன்
அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு:
- வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14.
பேரறிஞர் அண்ணா - மணிவிழா வாழ்த்துரை
பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் அவர்களின் மணி விழாவிலே கலந்து கொள்வதில் நான் மிகுந்த உற்சாகம் அடைவதற்கும், இதனை ஒரு நல்ல வாய்ப்பாகக் கருதுவதற்கும் காரணம் - பல ஆண்டுகளாக அப்பாத்துரையார் அவர்களுடன் நெருங்கிப் பழகி அவரை அறிந்தவன்; அவருடைய தமிழ்த் தொண்டால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நற்பயனை உணர்ந்தவன்; அவர்கள் குடும்பத்தில் நெருங்கிய தொடர்பு கொண்டவன் என்பதுதான்.
ஒருவரை நாம் மதிக்கிற நேரத்தில் மாற்றுக் கருத்துக் கொண்டவர்களும் மதிக்கிறார்கள் என்பதை அறியும்போது ஏற்படுகிற இனிமையை விட வேறு ஓர் இனிமை இருக்க முடியாது.
அப்பாத்துரையாரை நாம் எந்தக் கோணத்திலிருந்து பாராட்டுக் கிறோமோ அதையல்லாமல், அவருடைய தனித் திறமையை அறிந்த மற்றவர்கள் அவருடைய தொண்டின் மேன்மையை உணர்ந்து. பல்வேறு கோணங்களில் பாராட்டிப் பேசுவதைக் கேட்கும்போது, நாம் மேலும் மகிழ்ச்சி அடைகிறோம்.
நம்முடைய அப்பாத்துரையார் அவர்கள் ஆசிரியராகத் தம் பணியைத் தொடங்கிய காலத்திலிருந்து, அறப் போராட்டங் களில் ஈடுபட்ட கட்டம் வரை அவரது தனித் திறமையை நாம் நன்கு அறிவோம்.
தமிழின் மூலத்தை ஆய்ந்தவர்
அவர், தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர்; தமிழ் இனத்தின் வரலாற்றைத் துருவித் துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்துக்கும் மற்ற இனத்துக்கும் இடையே பகைமூட்ட அல்ல - தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார். அவர் அறிந்த அனைத்தையும் எழுதி ஏடாக்கினால், அவை இந்த மண்டபமே நிறையும் அளவுக்கு இருக்கும்.
நம் அப்பாத்துரையார் அவர்கள், எந்த நேரத்தில் பார்த்தாலும், சிந்தனை - படிப்பு - எழுத்து என்று சிறப்பாகக் கழித்திருக்கிறார்.
மற்ற நாடுகளில் அறிவாளர்கள் ஒன்று சொன்னால், அதை ஏற்றுக் கொள்வதற்கு அங்கே ஒருவரோடு ஒருவர்போட்டி போட்டுக் கொள்வார்கள். ஆனால் இந்த நாட்டில் ஒருவரை ‘அறிவாளி’ என்று சொன்னாலே ஆபத்து; “அவன் என்ன பெரிய அறிவாளியா? என்ன அறிவு?”…. பெரிய அறிவு!" என்று கேட்பதன் மூலம் தங்களிடம் அறிவு இருக்கிறது எனக்காட்டிக் கொள்ளச் சிலர் முனைவார்கள்!
இத்தகைய அறிவுப் பணி புரிவதே பெரிய சிக்கல்தான்; ஆனால் சிக்கலிலேதான் சுவையும் இருக்கும். மேனாடுகளில் எந்த அளவு இப்பணியில் ஈடுபடுகிறார்களோ அந்த அளவுக்கு எழுத்துத் துறையானாலும், பேச்சுத் துறையானாலும், வேறு எந்தத் துறையானாலும் இங்கே உற்சாகமாக ஈடுபடுவது என்பது மிகமிகக் கடினம். இப்படிப்பட்ட கடினமான தொண்டை முப்பது - முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்கி, பன்மொழிப்புலவர் அப்பாத்துரையார் நிறைவேற்றி வருகிறார். அவர், தம் வாழ்க்கையைக் கரடு முரடான பாதையில் நடத்தி, அதே வேளையில் மிகத் தெளிவான தமிழறிவைத் தமிழகம் ஏற்கும் அளவுக்குப் பணி புரிந்திருக்கிறார்.
சுதிக்குள் பாடும் இசைவாணர்
அப்பாத்துரையாரது வாழ்க்கை, ஒரு பூந்தோட்டமா? இல்லை! வறுமைச் சூழலிலே தம் குடும்பச் சூழலை அமைத்துக் கொண்டு இருப்பவர் அவர். எனினும் பண்பட்ட உள்ளத்தோடு மாற்றாரின் இழிமொழிகளையும் ஏசல்களையும் தாங்கிக் கொண்டு - தம் பணிகளைச் செய்திருக்கிறார்.
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் சொன்னது போல், அவர் விரும்பியிருந்தால் ஒரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக ஆகியிருக்க முடியும். ஆனால் அவர் அப்படிச் செய்து கொள்ளவில்லை. எந்தெந்த வகையில் எல்லாம் தமிழுக்குத் தொண்டாற்றலாம் - எந்தெந்த வழிகளில் எல்லாம் தமிழ் நாட்டுக்குப் பணியாற்றலாம் என்று எண்ணி எண்ணி, அந்ததந்த நேரங்களில் அருந்தொண்டு ஆற்றியவர் அப்பாத்துரை யார்.
ஒவ்வொன்றையும் பற்றி ‘இப்படிச் செய்வது சரியா?’ என்ற கேள்வி அவருடைய எண்ணத்தில் ஊடுருவி நிற்கும். ஆகவே, சிறிது காலம் பள்ளி ஆசிரியராக இருப்பார்; பிறகு அது பிடிக்காமல் பத்திரிகை ஆசிரியர் ஆவார்; அதன் பிறகு, தமிழ்ப் பாதுகாப்புப் பணியில் குதிப்பார். பின்னர், போராட்டத்தினால் பயனில்லை என்று கருதி, ஏடுகளை எழுதி அளிக்கஎண்ணுவார். இவ்வாறு அந்தந்த நேரத்தில் தோன்றுவதில் ஈடுபடுவார்.
இசை நிகழ்ச்சியில் பாடுபவர் - பல வகையான பண்களை ஏற்ற இறக்கத்தோடு பாடினாலும் - பல்வேறு இசை நுணுக்கங் களைக் கையாண்டாலும் - ஒரு சுதிக்குள்ளே நின்றுதான் பாடுவார்.
அதுபோலவே, அப்பாத்துரையாரும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டாலும் ஒரு சுதிக்குள்ளாகவே - ‘தமிழ் வாழ வேண்டும் தமிழ் வளர வேண்டும்’ என்ற ஒரு குறிப்பிட்ட கொள்கை வட்டத்தில் நின்று தொண்டாற்றியவர்.
மாறுபட்ட கருத்துடையவர்களும் தமிழ் மொழியின் பாதுகாப்பைப் பொறுத்து இன்று ஒன்றுபடுகிறார்கள்.
நானும் குன்றக்குடி அடிகளாரும் தோற்றம் - போக - நடவடிக்கைகள் - இருக்கும் இடம் - ஆகியவற்றில் மாறுபட்ட வர்கள்; என்றாலும், எங்கள் இருவரையும் தமிழ் ஒன்றுபடுத்தி இருக்கிறது. இதுதான் நாம் கையாள வேண்டிய சுதி! இதற்குள் நாம் எல்லா வற்றையும் காட்டலாம்; இந்த நிலை ஏற்பட, தமிழ் நாட்டில் முப்பது ஆண்டுகளுக்குமேல் பாடுபட வேண்டியிருந்தது!
இந்தச் சுதியை நமக்கு அமைத்துக் தந்தவர்களில் அப்பத் துரையாரும் ஒருவர், அப்படிப்பட்ட முறையில் அமைவதுதான் அடிப்படையான தொண்டு.
கடன்பட்டுக் குடிமாறும் புத்தக ஆசிரியர்கள்
மேலை நாடுகளில் ஒரே ஒரு புத்தகம் எழுதினாலே, ஒருவர் தம் வாழ்நாளை வசதியாகக் கழித்துவிட முடியும் - அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு! அப்படிதான் ஓர் எழுத்தாளர் தாம் எழுதிய புத்தகத்தின் வருவாயைச் செலவழிப்பதற்காக - ஓராண்டுக் காலம் ஓய்வில் இருந்தே செலவழிப்பதற்காக - தென்அமெரிக்காவுக்குச் சென்று அங்கே வாழ்ந்தாராம்!
இங்கோ… … ஓர் ஆசிரியர், ஒரு புத்தகத்தை எழுதி வெளி யிட்டார் என்றாலே, குடியிருந்த வீட்டை மாற்றுவதைப் பார்க்கிறோம். அந்தப் புத்தகத்தை அச்சிடுவதற்குத் தாம் பட்ட கடனை அடைக்க முடியாமல், கடன்காரர்களுக்கு அஞ்சி, தென் சென்னையில் வீடு இருந்தால் வட சென்னைக்கும், வடசென்னை யில் வீடு இருந்தால் தென் சென்னைக்கும் அவர் குடிபோவார்! அப்படிப்பட்ட நிலையே இங்கு இருக்கிறது!
இங்குப் புத்தகம் எழுதுவதும் அதன் மூலம் வருவாய் தேடுவதும் அவ்வளவு கடினம்!
புத்தகம் வாங்கும் பழக்கம் எல்லோருக்கும் ஏற்பட வேண்டும்.
அப்பாத்துரையின் நூல்களை - ஏடுகளை - வீடுதோறும் வாங்கி வைக்க வேண்டும்.
அப்பாத்துரையார் எழுதிய நூல்களில் ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ என்னும் நூல் என்னை மிகவும் கவர்ந்த ஒன்றாகும். அந்த நூலின் ஒரே ஓர் ஏட்டை எழுத, அவர் எத்தனை ஆயிரம் ஏடுகளைத் தேடிப் பார்த்திருக்க வேண்டும் - எத்தனை ஆயிரம் கவிதைகளை, இலக்கியங்களைத் திரட்டிப் பார்த்திருக்க வேண்டும் - என்பதை எண்ணி எண்ணி வியந்தேன்.
புத்தகம் எழுதுவோரை மற்ற நாடுகளில் எல்லாம் வித்தகர் களாகப் போற்றுகிறார்கள். இந்த நாட்டிலோ, ‘புத்தகம் எழுதி இருந்த பணத்தைப் பாழாக்கிக் கொண்டவர்கள்’ என்கிற பழிச் சொல்தான் கிடைக்கும் எழுத்தாளர்களுக்கு!
இந்த நிலையிலும் நம்முடைய அப்பாத்துரையார் அவர்கள், தமிழ்மொழிக்கு ஏற்றம் தரும் பல அரிய நூல்களை எழுதி யிருக்கிறார்.
மறதி ஆகும் மரபு
நம்மால் மதிக்கத் தக்கவர்களின் வாழ்க்கை வரலாறு முழு அளவுக்குத் தமிழகத்தில் இல்லை.
‘தனித்தமிழ் இயக்கம்’ கண்ட மறைமலையடிகள், ‘தமிழ்த் தென்றல்’-திரு.வி.க. நீதிக்கட்சித் தலைவர் சர்.பி.தியாகராயர் போன்றவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளைக் குறிப்பெடுத்துத் தொகுத்து, நூல்கள் ஆக்கித் தருவதில் இன்றைய புலவர் பெருமக்கள் ஈடுபட வேண்டும்.
தமிழ் பெரும்புலவர்களின் - வாழ்க்கை வரலாறுகள் நம் மிடத்திலே இல்லை. அப்படிப்பட்ட பெரியார்களின் வரலாற்றை மறந்துவிட்டால், நம்முடைய ‘மரபு’ பிறகு நமக்குக் கிடைக்காது.
‘மரபு’ என்பதே இப்போது ‘மறதி’ என்று ஆகிவிட்டது.
பண்டைத் தமிழ் மன்னர்களைப் பற்றிச் சரியாக எந்த நூலிலும் குறிப்பிடப்படவில்லை.
நம்முடைய பள்ளிச் சிறுவர்களின் பாடநூலைப் பார்த்தால் - இராசராச சோழனுக்கு இராசேந்திர சோழன் மகன் என்று சொல்வாரும் உண்டு; தம்பி என்பாரும் உண்டு’ என்று இருக்கும்! ஒரு புத்தகத்தில் கரிகாலனைப் பற்றியத் செய்தி வருகிற இடத்தில் ஒரு நட்சத்திரக் குறி இட்டிருப்பார்கள். அதற்கு விளக்கம் கடைசிப் பக்கத்தில் இருக்கும். ‘கரிகால் வளவன் உரையூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டான் என்பது உண்மை என்பாரும் உண்டு; இல்லை என்பாரும் உண்டு’ என்று இப்படித்தான் அந்த விளக்கம் எழுதப்பட்டிருக்கும்!
உண்மை வரலாறு உருவாகட்டும்
இப்படி ஐயப்பாடுகளுக்கு இடம் கொடுக்கும் போக்கினை நீக்கி, உண்மையான தமிழக வரலாற்றை உருவாக்கும் பணியினை வரலாற்று ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.
கல்வெட்டுகளில் காணப்படுவதையும், இலக்கிய ஏடுகளில் உள்ளவற்றையும், இன்ன பிற சான்றுகளையும் திரட்டி, தமிழக வரலாற்றைத் தொகுத்துக் கொடுக்கும் பணியைத் தமிழ் மக்கள் - தமிழ்ச் சான்றோர்கள் - ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இன்னும் சில திங்கள்களில் (1968- சனவரித் திங்கள் முதல் வாரத்தில்) இரண்டாம் உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கருத்தரங்கு மாநாடு சென்னையில் நடைபெறவிருக்கிறது. அதற்குள் இந்தப் பணியைச் செய்து முடித்தால், வெளிநாடுகளிலிருந்து வருபவர் கட்கு, “இது தான் எங்கள் நாட்டு வரலாறு” என்ற எடுத்துக் காட்டமுடியும்.
இத்தகைய பணியை செய்து முடிக்கக்கூடிய குழு ஒன்று அமைக்கப்பட்டால், அதற்குத் தலைமை - ஏற்றுப் பணியாற்று வதற்கு முழுத் திறமை பெற்றவர் - பன்மொழிப் புலவர் அப்பாத் துரையாரே ஆவார் என்பதை இங்கு நான் தெரிவித்துக் கொள் கிறேன்.
(சென்னையில் 20-9-1967 அன்று நடைபெற்ற
பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார்
அவர்களின் மணி விழாவுக்குத் தலைமை தாங்கி
அன்றைய முதல்வர் - பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய
பாராட்டுரை.
நன்றி - ‘நம் நாடு’ நாளிதழ் - : 22-9-1967.)
வள்ளுவர் நிழல்
முதற் பதிப்பு – 1959
இந்நூல் 2001இல் தமிழ்மண் பதிப்பகம், சென்னை - 17. வெளியிட்ட பதிப்பை மூலமாகக் கொண்டு வெளிவருகிறது.
நிழலும் ஒளியும்
நிழலும் ஒளியும் வேறு வேறு பண்புகளல்ல. தமிழிலக்கிய வழக்கு அடிக்கடி இரண்டையும் ஒரு பொருளில் வழங்குவது உண்டு. தவிர, ஒளியின்றி நிழலுக்கோ, நிழலின்றி ஒளிக்கோ உருவும், வடிவும், எல்லையும் இருக்க முடியாது. ஒளி நிழல் விரவிய இடங்களில் எது நிழல், எது ஒளி, என்று கூறுவது அரிது. ஏனெனில், திண்ணிய நிழலை நோக்க நிழல் ஒளியாகவும்; முனைத்த ஒளியை நோக்க, ஒளி நிழலாகவுமே காட்சியளிக் கின்றன. எனவே நிழல், ஒளி என்பவை அளவு வேறுபாடுடைய ஒரே பண்புக்கூறுகள்; வேறு வேறு பண்புகள் அல்ல.
ஒளியாயினும் சரி, நிழலாயினும் சரி-உருவோ, வடிவோ, வண்ணமோ உடையதனை நாம் நிழல் என்றே கூறுகிறோம். வானவில் ஏழு வண்ணங்களையும் ஒரே வண்ணமாகக் காட்டும் கதிரவனொளிகூட இவ்வகையில் நோக்கினால் கதிரவன் நிழலேயாகும். அது நிழலுக்கெல்லாம் உருக்கொடுத்து எங்கும் பரவுவதாதலினாலேயே நாம் அதனை நிழல் என்று கூறாமல் ஒளி என்று கூறுகிறோம். அத்துடன் அதன் ஒளி நிழல் கூறுகளில் நாம் காணும் கூறு மிக மிகச் சிறிது. நம் கண்கள் காணப்பெறாத கூறுகளே மிக மிகப் பெரியன; மிக மிகப் பல. அவற்றை இயல் நூலார் வானவில் வண்ணப் பட்டைக்கு இப்பால் கதிர்கள்(ultra rays), அப்பால் கதிர்கள் (infra rays) என்று குறித்துள்ளனர்.
அறிஞரின் அறிவை நாம் ஒளியென்று கூறினால், அறிஞருள் அறிஞரான திருவள்ளுவரை நாம் ஒளிகளுக்கு ஒளியாகிய கதிரவன் என்னலாம். கதிரவன் நிழல் நம்மீதும் வீசும், மற்ற ஒளிகள் மீதும் வீசும். அந் நிழல் நமக்கு ஒளியாய், அவ்வொளிகளுக்கும் ஒளியாய் அமையும். அதுபோலத் திருவள்ளுவர் அறிவை நாம் நம் அறிவால் அளந்தாலும் அது கடல் போன்றதாகவே, கதிரவன் ஒளி போன்றதாகவே இருக்கும். நாம் கடல்களென கதிரவனொளிகளெனக் கருதும் அறிஞர் பேரறிஞர் அறிவுகளால் அளந்தாலும், அப்போதும் அது கடலாக, கதிரவனொளியாகவே திகழும். எந்த நிழலுக்கும் அஃது உருத்தரும் வண்ணம் பிரித்துக் காட்டும். ஆனால், அதை நிழலாக்கிக் காட்டும் எந்த நிழலையோ, அதன் வண்ணம் பிரித்துக் காட்டும் எந்த ஒளியையோ நாம் காண முடியாது.
கதிரவனைப்பற்றி, கதிரவனொளியைப்பற்றி ஆராயத் துணிந்த உயிரினம் எதுவும் கிடையாது. மனிதனுக்கு மட்டுமே அந்தத் துணிவு பிறந்துள்ளது. கதிரவனைத் தாண்டிய ஓர் உயர் ஒளிக் கூறு அவன் அகத்தில் மின்னுகின்றது என்பதற்கு இஃது ஒரு சான்று. ஆனால், இந்த உயிரினத்தின் துணிச்சல் இத்துடன் நின்றுவிடவில்லை. தன்னைப்பற்றித் தாய் தந்தையர், தாய் தந்தையரைப் பெற்ற மூதாதையர், அம் மூதாதையரையும், தாய் தந்தையரையும் தன்னையும் உலகுடன் படைத்தவராகக் கூறப்படும் மூலமுதற் பொருள் எதையும், எவரையும் அவன் ஆராயாது விட்டது இல்லை. எனவே, திருவள்ளுவரும், அவர் திருக்குறளும் அவன் ஆராய்ச்சிக்கு உட்படாதிருக்க முடியாது. ஆயினும், திருக்குறளாராய்ச்சியில், வள்ளுவர் ஆராய்ச்சியில் அவன் இன்னும் புராணக் கால அறிஞரின் நிலையிலேயே இருக்கிறான் என்னலாம். திங்களின் ஒளியும், மற்றக் கோளினங்களின் ஒளிகளும் கதிரவனோடொத்த ஒளிகள், அவை கதிரவனைப் போலவே தொலைவிலுள்ளன என்று புராண அறிஞர் எண்ணினர். மற்றக் கோளினங்களும் கதிரவனும் பரந்தகன்ற மண்ணுலகை, நாம் கண்டு களிக்கும்படி வலம் வருகின்றன என்று மக்கள் நம்பினர். ஆனால், இன்றோ அவை வலம் வரவில்லை. கோளினங்களும் நாமும் இடம் செல்கின்றோம் என்று காண்கிறோம். வள்ளுவர் ஆராய்ச்சி வகையிலும் இது போன்ற ஒரு பெரிய மாறுதல் உலகில் வரக் காத்துக் கொண்டிருக்கிறது; வேகமாக வரத் தொடங்கியுள்ளது.
கதிரவனொளியை நம் கண்களிலிருந்து பிற கோளினங்களின் நிழல் மறைப்பதுண்டு. நம் மண்ணுலகின் நிழலேகூட நாள்தோறும் அரை நாளைக்கு ஒரு பாதி உலகுக்கு அவ்வொளியை மறைக்கின்றது. ஆனால், கதிரவனின் ஒளிப் பிழம்பின்மீது வேறு எதன் ஒளியோ, நிழலோ சாய்வதை நாம் என்றும் காண முடியாது. கதிரவனைவிட ஆற்றல் வாய்ந்த ஓர் ஒளி இருப்பதாக நாம் அறிந்தால்கூட அதன் ஒளி நிழல் அதன்மீது படுவதை நாம் காணமுடியாது. ஏனெனில், நம் கண்ணுக்கு ஒளிகாட்டும் ஒளியே அக் கதிரவன் ஒளிதான்.
கதிரவனுக்கு ஒளி தருவது எது?
கடவுளுக்குத் தாய் தந்தையர் யார்?
அவர் எந்த ஆண்டில் பிறந்தார்?
இத்தகைய கேள்விகளை யாராவது கேட்டால் நாம் அவர் களைப் பித்தர் என்று கருதுவோம். ஆனால், திருவள்ளுவர்க்கு முன் மாதிரி எது? அவர் கருத்தொளியினூடாக நெளியும் நிழற் கூறுகள் அல்லது ஒளிக் கூறுகள் எவை? என்று யாராவது கேட்டால் நாம் இன்று சிரிக்க மாட்டோம், கேட்பவர்களைப் பித்தர் என்று கருதமாட்டோம். எனினும், இவ்வாறு கருதும் காலம்-தமிழர் கருதும் காலமல்ல, உலகம் கருதும் காலம்-நெடுந் தொலைவில் இல்லை.
அக் காலத்தை நோக்கிச் செல்லும்-அதன் வாயிலைத் திறக்கும் திறவை நம்முன் நீட்டும் திறமுடைய சில கருத்துகளையே வள்ளுவர் நிழற் கூறுகளாகத் தமிழன்னையின் திருவடிகளில் அன்பு மலர்களாகத் தூவுவோம்.
ஜெர்மானிய அறிஞர் கண்ட கீழ்த்திசை ஒளி
வள்ளுவர் புகழ் இன்று வையகமெங்கும் பரவி வருகிறது. கிறித்துவ நெறி, புத்த நெறி, இசுலாமிய நெறி ஆகிய உலகப் பெருநெறிகளுக்குரிய திருவேடுகளின் புகழ் அளாவி, அவற்றுடன் அன்புப் போட்டியிட்ட வண்ணமே அது நாடு கடந்து நாடாக, மொழி கடந்து மொழியாக, உலகெங்கும் புகழொளி வீசத் தொடங்கியுள்ளது.
உலகாளும் மேலை வல்லரசுகள் போற்றி வளர்க்கும் நெறி கிறித்துவம். உலகில் பல பெரு நாடுகள் அளாவிப் பரவியுள்ள நெறிகள் புத்தமும் இசுலாமும். அவற்றின் திருவேடுகள் நாடு, மொழி, எல்லை கடந்து பரவுவதற்கான வாய்ப்புகள் பல. அவற்றைப் பரப்புவதற்கான முயற்சிகளும் திட்டங்களும் நிலையங்களும் ஏராளம். ஆனால், வள்ளுவர் பிறந்த தமிழினமோ இன்னும் ஊரும், பேரும், உரிமையும் அற்ற நிலையிலேயே மறுகுகின்றது. அவ்வினத்தின் தாயகங்கள் அரசியல் வாழ்வில் தட்டுக் கெட்டுத் தடுமாறுகின்றன. அயலகங்களிலோ, அவ்வினத்தவர் அயல் நாட்டவர்களாலும், இனத்தவர்களாலும் கறிவேப்பிலைகளாகப் பயன்படுத்தப்பட்டும் அவர்கள் வாழ்வு முற்றிலும் சீர்குலைவுக்கே ஆளாகி வருகிறது. இந் நிலையில், நல்லிலக்கிய ஏடு என்ற தனியொரு வாய்ப்பின்றி வள்ளுவர் குறளின் புகழுக்கு வேறு வாய்ப்பு இல்லை. இன்றும் வேறு வாய்ப்பு ஏற்பட வழியும் இல்லை. ஆயினும், வாய்ப்பில்லாமலே அது வாழ்ந்து வந்துள்ளது. வளர்ப்பாரில்லாமலே வளர்ந்து, பரப்புவாரில்லாமலே பரந்து, அஃது உலகில் வண்ண ஒளி வீசிவருகின்றது.
இவ்வாறு இன முயற்சியின்றித் திருக்குறள் உலகப் பொது மறையாகப் பரவி வருவதன் மறைதிறவு யாது?
தமிழகத்திலேயே-தமிழர்களிடையிலேயே-பாகவதம், பகவத்கீதை, இராமாயணம், பாரதம், புராணங்கள் ஆகியவற்றைப் பரப்புவதற்கான முயற்சிகள் எவ்வளவோ உண்டு. அவற்றில் பத்தில் ஒரு பங்குகூடத் திருக்குறளுக்கு என்றும் இருந்ததில்லை. இன்றும் இல்லை என்னலாம். தமிழகம் சூழ்ந்த தமிழின மொழிகளிலேயே திருக்குறளைத் தமிழர் எவரும் மொழி பெயர்க்க முயன்றதில்லை. அவ்வம் மொழியினரே அத் துறையில் முனைந்துள்ளனர். ஆங்கில மொழி ஒன்றில் மட்டுமே-அதுவும் வெளியார் போற்றி மொழிபெயர்க்கத் தொடங்கிய பின்னரே தமிழர் அப் பக்கம் கருத்துத் திருப்பியுள்ளனர். ஏனைய உலக மொழிகளிலோ, அன்றும் இன்றும், தமிழர் முயற்சி முயற் கொம்பேயாகும். ஆயினும், இச் சூழல்களிடையேகூடத் திருக்குறள், கிறித்துவத் திருவேடாகிய விவிலிய நூலுக்கு அடுத்தபடியாக, உலக மொழிகளறிந்த இரண்டாவது திருஏடாக, இடம் பெற்றுள்ளது என்று அறிகிறோம்.
திருக்குறளின் இப் புகழொளி பற்றித் தமிழர் பெருமைப் படத் தொடங்கிவிட்டனர் என்பதில் ஐயமில்லை. தமிழகத்திலேயே இப்பொழுது எங்கும் திருக்குறட் கழகங்கள் நிலவி வருகின்றன; பெருகி வருகின்றன; அத்துடன்,
‘வள்ளுவன் புகழ் வையகம் எல்லாம்
வாரி இறையடா தமிழா’!
என்ற கவிதையாணையும் பிறப்பிக்கப்பட்டுவிட்டது. ஆயினும், இவ்வுணர்ச்சிகள் யாவும் இன்னும் உணர்ச்சி நிலையிலேயே இருக்கின்றன. அறிவும் செயலும் அவ்வழி செல்லவில்லை. மக்கள் உணர்ச்சியை அவ்வழி ஊக்கிச் செயலாற்று விக்கத்தக்க, அதைப் பேணி வளர்க்கத்தக்க தமிழர் சமுதாய ஆட்சியும் அறிவாட்சியும், அரசாட்சியும் இன்னும் தொலைக் கூக்குரல்களாகவே உள்ளன.
இன்றைய நிலையில் வள்ளுவர் குறள் பற்றிய தமிழக உயர்ச்சி அவர் உலகப் புகழை வளர்க்கும் உணர்ச்சியாய் அமையவில்லை. நேர்மாறாக, அஃது இன்னும் அப் புகழின் ஓர் எதிர் நிழலாக, ஓர் எதிரொலியாகவே இயல்கின்றது.
வள்ளுவர் புகழின் மறைதிறவை-மருமத்தையே தமிழர் எவரும் இதுவரை கண்டுணர்ந்ததில்லை; காண முயன்றதில்லை என்றால் தவறாகாது. ஏனெனில், நூல்களென்னும் கோடானு கோடி மின்மினிகளிடையே அதை ஓர் ஒளி மிக்க மின்மினியாகத் தான் அவர்கள் கருதி வந்துள்ளனர். மின்மினிகளுக்கு ஒளிதரும் ஒளிகளுக்கெல்லாம் ஒளியான கதிரவன் அவர் என்று தமிழர் எவரும் கருதியதில்லை. அது மட்டுமன்று. தமிழகம் சூழ்ந்த நாடுகளில் உள்ளவர்களோ, தமிழகத்தில் வந்து தங்கித் தமிழும், தமிழரும் உணர்ந்து, தமிழாராய்ந்த மேலை நாட்டு அறிஞரோ கூட இதைக் கண்டுணரவில்லை. தமிழே அறியாது, தமிழகமே காணாது, ஜெர்மன் மொழியிலுள்ள ஏதோ ஒரு தொலை மொழிபெயர்ப்பு மூலமே திருக்குறளைப் பற்றி அறிந்த தொலைநாட்டு உலகப் பேரறிஞர் ஒருவருக்கே அம் முழுப் பெருமை உரியது. அவர்தாம் ஆல்ஃபிரட் ஷ்வைட்சர் என்னும் ஜெர்மானிய அறிஞர்.
குறள் தந்த கோமானான வள்ளுவரைப் பற்றி, அவர் காலத்தைப் பற்றி நாம் அறிந்துள்ள மெய்ச் செய்திகள் மிக மிகச் சிலவே. இவைபற்றி அறிஞர் ஆல்ஃபிரட் ஷ்வைட்ஃசருக்கும் நம்மைவிட மிகுதியாக எதுவும் தெரிந்திருந்தது என்று கூறமுடியாது. வள்ளுவர் வாழ்ந்த காலம் கி.பி.முதல் நூற்றாண்டு அல்லது அதற்கு முற்பட்டதாயிருக்கலாம் என்பதே நம் வரலாற்றாராய்ச்சியாளர் பெரும்பாலாரின் முடிவு. இதன் ஒரு தொலை நிழல் மட்டுமே, அறிஞர் ஷ்வைட்சர் இயற்றிய இந்தியர் கருத்து வளர்ச்சி வரலாறு என்ற ஏட்டிலும் இடம் பெறுகிறது. அது கிறித்து பிறந்த ஊழியின் முதல் இரண்டு நூற்றாண்டுகளில் இயற்றப்பட் டிருத்தல் கூடும் என்று மட்டுமே அந் நூலில் அவர் சுட்டியுள்ளார். ஆனால், இம் முடிபுடன் அவர் தொடங்கியுள்ள கீழை உலக ஒப்பீட்டாராய்ச்சிகள் வியத்தகு புது விளக்கங்களைக் கண்டுள்ளன.
தமிழகத்தின் சைவ, வைணவ பத்தி இயக்கங்கள்; அவற்றின் நாயன்மார்கள், ஆழ்வார்கள்; அவர்கள் வழி வந்த இடைக்கால இந்திய மாநிலத்தின் சமய அறிவுத்துறை ஆசாரியர்களான சங்கரர், இராமானுசர், மத்துவர், சைதன்னியர், இராமானந்தர், கபீர், அணிமைக்காலப் புதுமலர்ச்சித் தலைவர்களான இராசாராம்மோகன் ராயர், தயானந்த சரசுவதி, மகரிஷி தேவேந்திரநாத தாகூர், இராமகிருஷ்ண பரம ஹம்சர், விவேகானந்த அடிகள், கவிஞர் இரவீந்திரநாத தாகூர், மகாத்மா காந்தியடிகள் ஆகியோர் சமய அருட் கருத்துகளின் தோற்ற வளர்ச்சி வரலாறுகளை ஷ்வைட்சர் அலசி ஆராய்ந்துள்ளார். அவர்களின் உயிர் மூலக்கருத்துகளை எல்லா உலக அறிஞர்களின் வழக்கப்படி வேதபிராம்மண, ஆரணியக உபநிடதங்களிலே இதிகாச புராணங்களிலே இடைக்கால சமற்கிருத இலக்கிய ஏடுகளிலே அவர் தேட முற்பட்டுள்ளார். ஆனால், அக் கருத்துகளின் மூலங்கள் அவற்றுள் எவற்றிலும் உபநிடதங்களில் கூட நேரிய முறையில் காணக் கிடைக்கவில்லை. இவற்றின் பயனாக, அக் கருத்துகள் அவற்றினின்றும் இயல்பாக வளர்ந்தவையல்ல என்ற முடிவுக்கு அவர் வருகிறார். அதே சமயம் அம் மூலக் கருத்துகளை அவர் திருக்குறளில் காண்கிறார்! அவை வேத புராண இதிகாசங்களுக்கு சமற்கிருத இலக்கியத்துக்குப் புறம்பான வேறொரு தொடர்பான உயிர் வளர்ச்சியிலிருந்து கிளைத் தவை என்பது அவர் கருத்து. அவ்வெல்லாக் கிளைகளின் மூலங்களையும் நாம் திருக்குறளில் காண முடியும் என்று அவர் கூறுகிறார்!
இது மட்டுமோ?
கி.பி.முதல் நூற்றாண்டுக்கே உரியதென்று கருதப்படும் புதிய இந்து சமயத் திருவேடான பகவத்கீதையின் கருத்து களுடனும், திருவள்ளுவர் காலத்துக்கே முற்பட்டவை என்று நாளிது வரை கருதப்பட்டுவரும் பார்ப்பன சமய, புத்த, சமண சமயக் கருத்துகளுடனும் திருக்குறட் கருத்துகளை அவர் ஒப்பிட்டுக் காண்கிறார். தவிர, கீழையுலகின் மேல் கோடியில் கி.பி.முதல் நூற்றாண்டிலும் புதிதாக எழுந்த கிறித்துவ, இசுலாமிய சமய முதல்வர்களின் தனி ஒளிகளுடனும் அவர் வள்ளுவர் ஒளியை ஒப்பிட்டாராய்ந்துள்ளார். வள்ளுவர்க்குரிய தாகக் கருதப்பட்ட நாள்களுடன் சம காலத்தவராகவும் முற்பட்ட பிற்பட்ட காலங்களுக் குரியவராகவும் அவரும் அணித்தான நாட்டினராகவும், தொலை நாட்டினராகவும் இவ்வெல்லா வகையினர்களின் தலைசிறந்த கருத்துகளையும், தனிச்சிறப்பு வாய்ந்த கருத்துகளையும் அவர் திருக்குறளில் காண்கிறார். அதேசமயம் ஒவ்வொரு கருத்து வகையிலும், திருக்குறளே வளர்ச்சிப் படியிலும் தன்மையிலும் முற்பட்ட கருத்து மூலங்களை உடையதாய் இலங்குவதை அவர் எடுத்துக்காட்டு கிறார். திருக்குறளின் தலைசிறந்த கருத்துகளின் பலதரப்பட்ட நிழல்களாகவே, திருவள்ளுவர் முழுநிறை கருத்துகளின் கால தேச வேறுபாட்டுத் திரிபான பண்புச் சிதைவுகளாகவே இவ்வுலகக் கருத்துகள் யாவும் அமைந்துள்ளன- இதுவே ஷ்வைட்சர் கண்ட வியத்தகு முடிவு.
மேலீடாகப் பார்ப்பவர்க்கும் இம்முடிபில் ஒரு கால முரண்பாடு எளிதில் தென்படும். இதை ஷ்வைட்சர் உணராம லில்லை. அதற்கு அவரே, அவர் கண்ட ஆதாரங்களினடிப் படையில், ஒரு விளக்கமும் தருகிறார்.
கிறித்துவ ஊழியின் தொடக்க நூற்றாண்டுகளிலே, தமிழகத்திலே எழுந்ததாகக் கொள்ளப்படும் திருக்குறள், எப்படி அக் காலத்துக்கு உரியனவும் முற்பட்டனவும் தமிழகத்துக்கு அப்பாற்பட்டனவுமான இத்தனை கருத்துப் பரப்புகளுக்கும் மூலமாயிருக்கக்கூடும்? இஃது ஒருவன் தன் பிள்ளை பேரப் பிள்ளைகளை மட்டுமன்றி, உடன் பிறந்தார்களையும் தாதை மூதாதையர்களையும் பெற்றான் என்று கூறுவது போன்றதே யாகுமன்றோ?
இக் கேள்விக்கு ஷ்வைட்சர் தரும் விளக்கத்தை அவர் மொழியிலேயே காண்போம்.
“இவ்வுலகம் மாயை யன்று. இவ் வாழ்க்கை நிலையாமை யுடையதன்று, நிலையானதே. இக் கருத்தை இயல்பாகவும், சமயம் சாராத ஒழுக்க முறையாகவும் விளக்கும் ஒரு கோட்பாடு இந்திய மக்களிடையே கி.பி.முதல் நூற்றாண்டுகளில் நிலவிற்று. ஆனால், இது பற்றிய தடத்தையே நாம் பார்ப்பன சமயத்திலோ, புத்த சமயத்திலோ பகவத்கீதை சார்ந்த புதிய இந்து சமயத்திலோ காண முடியாது. ஆயினும், அது நாளடைவில் இந்து சமயத்தில் சமயப் பேராசிரியர்கள் மூலமாகத் தோய்ந்து ஊறிச் சுரந்துள்ளது-சுரந்து வருகிறது. இச் சமயப் பேராசிரியர்கள் பெரும்பாலும் ’தாழ்ந்தவர்’கள் எனக் கருதப்படும் பொதுமக்கள் வகுப்பிலேயே பிறந்தவர்களென்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அவர்களிடையே மக்களாக வாழ்ந்து, மக்கள் உணர்ச்சி களாலேயே உந்தப்பட்டு இக் கருத்துகளை இந்து சமயத்தின் அழகு மலர்களாக வளர்த்துள்ளனர், வளர்த்து வருகின்றனர்!”- இந்தியக் கருத்துகளின் வளர்ச்சி வரலாறு - பக்கம் 205.
திருவள்ளுவரின் கருத்துகள் திருக்குறள் வடிவிலேயே நமக்கு வந்தெட்டியுள்ளன. இஃது இயல்பே. கிட்டத்தட்ட இதே நிலைமையிலேதான் சமய முதல்வர்கள், சமயாசிரியர்கள், கருத்துகள்கூட நமக்குக் கிட்டியுள்ளன. இவ்வெல்லாத் தலைவர்கள் வகையிலுமே அவ்வத் தலைவர்களுக்குரிய புதுமைக் கருத்துகள் அல்லது சிறப்புக் கருத்துகள் மூலமே அவர்கள் புகழ்பெற்றிருத்தல் வேண்டும் என்பதிலும் ஐயமில்லை. அதே சமயம் அவர்கள் கருத்துகளின் ஒரு பகுதி அவர்களுக்கு முற்பட்ட மரபுரிமைக் கருத்துகளாக இருக்கக் கூடாதென் றில்லை. கருத்துகளின் பெரும்பகுதியோ, கிட்டத்தட்ட முழுவதுமோகூட மரபு வரவாக இருந்திருத்தலும் முடியாததன்று. ஏனெனில், முதல்வர் பங்கு கருத்துகளின் தொகுப்புரை, விரிவுரை, திருத்தவுரைகளாக இருத்தல்கூடும். இந் நிலையில் எம்முதல்வர் கருத்துத் தொகுதியிலும் அது போலவே திருவள்ளுவர் கருத்துத் தொகுதியிலும், அவ்வவர்களுக்குரிய தனிப்பகுதி எவ்வளவு, அவ்வவர்கள் முன்னோர்களுக்குரிய பொதுப்பகுதி எவ்வளவு என்று போதிய சான்றுகளின்றி நம்மால் பகுத்துரைக்க முடியாது.
திருவள்ளுவர் தமிழினத்தவர் கருத்துகளுக்கு அழகிய உருவும் கலைக்கோப்பும் ஒழுங்கும் தந்த பேரறிஞர், பேரெழுத் தாளர் மட்டுமே என ஷ்வைட்சர் கருதியுள்ளார். அவை பொதுக் கருத்துகளே யென்றும், கீழை உலகின் ஒரு மக்கட் பேரினத்தின் இனக் கோட்பாடே என்றும் அவர் எண்ணியுள்ளார். ஆகவே தான் திருவள்ளுவர் கி.பி. முதல் நூற்றாண்டுகளுக்குரியவர் என்று அவர் நம்பினாலும், அக் கோட்பாடு வேதகாலத்துக்கு முன்னிருந்தே நிலவி வந்த ஒன்று என்று அவர் கொள்கிறார். சமுதாய, சமய, அரசியல் ஆட்சி வகுப்பினரால் மதிக்கப்படாமல், இருட்டடிக்கப்பட்ட நிலையிலேயே அம் மூலப் பண்டாரத்தி லிருந்து நேர் நிழலாகத் திருவள்ளுவர் திருக்குறளும், சுற்று வழியாகவும் கிளை நிழல்களாவும், வள்ளுவர் மரபிலேயே வந்த அவர் நேர் நிழலாகவும் உலக, கீழையுலகச் சமய சமுதாயக் கருத்துகளும் வளர்ந்திருத்தல் வேண்டும் என்பது அவர் உய்த்துணர் முடிபு ஆகும்.
நாகரிக உலகின் சமயக் கருத்துகளுக்கும் திருவள்ளுவர் திருக்குறளுக்கும் இடையே ஷ்வைட்சர் கண்டுணர்த்தும் தொடர்பு விளக்கம் இது.
ஷ்வைட்சருக்கே யுரிய இக் கருத்துத் தமிழகத்துக்கும் உலகத்துக்கும் புத்தம் புதிது. உலக நாகரிகம், உலகப் பெருஞ் சமயங்கள், இந்திய மாநில நாகரிகம் ஆகியவற்றின் வரலாறு பற்றிய உலகப் பொதுக் கருத்துகளில் அது புரட்சிகரமான மாறுபாடு வேண்டுவது. எனவே, அதன் முழு நிறை விளக்க ஆராய்ச்சி திருவள்ளுவர் திருக்குறளாராய்ச்சிக்கும், தமிழக ஆராய்ச்சிக்கும் மட்டும் உரியதன்று. இந்திய நாகரிக ஆராய்ச்சி, உலக நாகரிக ஆராய்ச்சி ஆகிய அகல் அரங்குகளுக்கே உரியது. ஆயினும், தமிழக நோக்கிலிருந்து, அதன் சார்வு எதிர்வுகளை, அதன் மூலம் ஏற்படும் புதிய ஒளி நிழற் கோடுகளை ஆராய முயல்வோம்.
திருவள்ளுவர் காலம்
மனித நாகரிகம் ஓர் ஒளி வளர்ச்சி. அது முற்றொளி நோக்கிப் பொதுவாக முன்னேறிவருகிறது. ஆனால், அவ்வப் போது ஆங்காங்கு முன்னேற்றம் தடைப்பட்டுச் சிறிது தேக்கம் ஏற்படுவதும், சில சமயம் இடையே தற்காலிகத் தளர்ச்சி ஏற்படுவதும் உண்டு. வளர்ச்சியை நாம் நிழலினின்று ஒளி-நிழல் நோக்கிச் செல்லும் முன்னேற்றமாகவும், தளர்ச்சியை ஒளி நிழலினின்று தற்காலிகமாகப் பின்னடைந்த நிழல் ஒளியாகவும் காணலாம். இந்த ஒளி நிழல் கூறுகளை மதிப்பிட்டுணர்வதற்கு வள்ளுவர் பற்றிய கால வரையறை இன்றியமையாததாகும்.
கால வரையறையை ஆராயப் புகாமலே அதை ஒதுக்கி வைத்தே அறிஞர் ஷ்வைட்சர் வள்ளுவர் தனி ஒளி நிழல் கூறுகளை ஆராய முற்பட்டுள்ளார். இதில் அவர் ஓரளவு வெற்றியும் கண்டிருக்கிறார். இதற்கு ஒரு காரணம் உண்டு. திருவள்ளுவர் ஓர் உலகப் பெரியார். ஆனால், அவர் தம் காலத்தில் வாழ்ந்த பெரியார்களுள்ளும், காலங்கண்ட பெரியார் களுள்ளும், காலங் கடந்த பெரியார்களுள்ளும் தனி முதன்மை யுடையவர். அவர் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு என்று கொண்டாலும் சரி. அதற்குமுன் ஆயிர, ஈராயிர ஆண்டு, அல்லது அதற்குப் பின் ஆயிர, ஈராயிர ஆண்டு என்று கொண்டாலும் சரி, இவ்வெல்லாக் காலங்களிலும் அவர் ஒரே நிலையில், ஒத்த புதுமை, ஒத்த பெருமை உடையவராகவே காணப்படுவார் என்பதில் ஐயமில்லை.
ஆனால், காலங் கடந்த இந்தப் பண்பே வள்ளுவர் காலத்தை அறுதியிட்டுக் காணும் ஆர்வத்தைத் தூண்டுவது ஆகும். அதுவே ஓரளவு அதைச் சுட்டிக்காட்டவும் போதியது என்னலாம்.
திருவள்ளுவர் காலம் கிறித்துவ ஊழியின் தொடக்க நூற்றாண்டுகள் அல்லது கி.பி.இரண்டாம் நூற்றாண்டு என்பதை அறிஞர் ஷ்வைட்சர் ஒரு முடிந்த முடிபாகக் கொண்டுள்ளார். ஆனால், தமிழகத்திலே எந்த ஆராய்ச்சியாளரும் அத்தகைய முடிந்த முடிபாக எதையும் அறுதியிட்டுக் கூறியதாகத் தெரியவில்லை. பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள், அது சங்க காலத்திய நூல், சங்க காலத்திலும் கி.பி.2ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாய் இருத்தல் வேண்டும் என்று மட்டுமே கூறுகின்றனர். இவருள் சிலர் அது கி.பி.முதல் நூற்றாண்டுக்கு உரியதாகலாம் என்றும், வேறு சிலர் கி.மு.1,2,3ஆம் நூற்றாண்டுகளுக் குரியதாகலாம் என்றும் ஊக மதிப்புத் தந்துள்ளனர். ஆனால், முதற் கருத்தின் ஒரு தொலை நிழலே ஷ்வைட்சர் வரை சென்று எட்டியுள்ளதாகத் தெரிகிறது. ஏனெனில் கி.பி.2ஆம் நூற்றாண்டு அல்லது அதற்கு முற்பட்டது என்பது 2ஆம் நூற்றாண்டு என்று அவரால் கொள்ளப் பட்டுள்ளது.
ஷ்வைட்சர் கொண்ட காலத்துக்குத் திருவள்ளுவர் முற்பட்டவர் என்று கருதும் ஆராய்ச்சியாளரே மிகப் பெரும்பாலானவர். ஆயினும், அக் காலத்துக்கு அவர் பிற்பட்டவராயிருத்தல் வேண்டும் என்று கருதுபவர் ஓரிருவரே. முடிந்த முடிபாக எதுவும் கொள்ள முடியாத நம் நிலையை இது வலியுறுத்திக் காட்டுகிறது. ஆனால், நாம் ஏற்கும் முடிபு எதுவானாலும், எல்லாச் சார்பாளரும் தரும் ஆதாரங்களைக் கூர்ந்து நோக்கினாலன்றி, நாம் வள்ளுவர் காலச் சூழ்நிலையை உள்ளவாறு காணமுடியாது. வாதங்களின் முடிபுகளைவிட இவ்வகையில் வாத ஆதாரங்களே மிகவும் பயன் உடையவை.
சங்க இலக்கியப் பாடல்கள் பலவற்றிலும், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றிலும் திருக்குறளை ஒட்டிய கருத்துகளும் சொற்றொடர்களும் பல உள்ளன. ஆனால், திருவள்ளுவர் காலத்தை நிலையாக அறுதியிடுவதில் இத்தகைய ஒற்றுமைக் கூறுகள் முற்றிலும் பயன்படவில்லை. ஏனெனில், சிலர் இவ்வொற்றுமைக் கூறுகளில், திருவள்ளுவர் கருத்தையும் சொல்லையுமே மூலமாகவும், வேறுசிலர் மற்ற நூல்களையே மூலமாகவும் கொள்ள இடமேற்படுகிறது. திருக்குறளின் பெயரையோ, ஆசிரியரையோ மேற்கோளாகக் காட்டும். சொற்றொடர்களே இவற்றைவிட நன்கு பயன்படுபவை. அத்தகையவை ஒரு சிலவே.
‘தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை’
- குறள் 55
என்ற குறட்பா, திருவள்ளுவர் கருத்துப் பொறிப்பும் சொற் பொறிப்பும் கொண்ட ஒன்று, மணிமேகலையில்,
‘தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்எனப்பெய்யும் பெருமழை என்றஅப்
பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்!’
என்ற அடிகள் இந்தக் குறட்பா முழுவதையும் தன்னகம் கொண்டு, அவ்வறவுரைக்குரிய அறவோராகிய திருவள்ளுவரைப் பொய்யில் புலவன் என்று சுட்டியும் காட்டுகிறது. திருவள்ளுவர்க்குத் தமிழகம் சூட்டியுள்ள தனிப் பெரும் புகழ்ப் பெயர்களுள் “பொய்யில் புலவன்” என்பதும் ஒன்று. திருக்குறள் நூலையும் அதன் அறிவுரைகளையும்-ஆசிரியரையும், இந் நாளில் நாம் எவ்வளவு உச்சிமேற் கொண்டு பாராட்டுகிறோமோ, அதே அளவில் மணிமேகலை ஆசிரியர் காலத்துக்குள்ளேயே அவர் புகழ் பெற்றிருந்தார் என்பதை இப் பாடல் காட்டுகிறது. சொற்றொடரின் உயிர்த்துடிப்பை நோக்க, திருவள்ளுவர் புகழ் இன்று போலவே அன்றும் பழம் புகழாய் விளங்கியிருந்தது என்று தோற்றுகிறது.
திருக்குறட் கருத்துகளும் வாசகங்களும் சொற்றொடர் களும் மணி மேகலை நூலெங்கும் சிதறலாகக் காணப்படுகின்றன. அவ்வெல்லா ஒப்புவமைக் கூறுகளிலும் திருக்குறளே மூல நூல் என்பதை மேலே காட்டிய ஒரு மேற்கோளே நிலைநாட்டப் போதியது.
மணிமேகலையுடன் கதை நிகழ்ச்சி, ஆசிரியர் வாழ்வு ஆகிய இரு வகைகளிலும் சமகாலத் தொடர்புடையது சிலப்பதிகாரம். மேற்குறிப்பிட்ட குறட்பாவே அந் நூலிலும் இது போலக் கிட்டத்தட்ட முழுவதும் எடுத்தாளப் பட்டுள்ளது. வள்ளுவர் பெயர் இங்கே குறிக்கப்படாவிட்டாலும், சிலப்பதிகாரமும் மணிமேகலையும் ஒரு காலத்தனவாதலால், இங்கும் திருவள்ளுவர் திருக்குறளுரையே மேற்கோளாகக் காட்டப் பட்டுள்ளது என்பதில் ஐயமில்லை.
‘தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுவாளைத்
தெய்வம் தொழும்தகைமை திண்ணிதால் - தெய்வமாய்
மண்ணக மாதர்க்கு அணியாய கண்ணகி
விண்ணக மாதர்க்கு விருந்து!’
என்ற காதை இறுதிக் கண்ணுள்ள வெண்பாவே அது. மணிமேகலை ஆசிரியரைப் போலவே சிலப்பதிகார ஆசிரியரும் நூலெங்கும் குறளாசிரியர் கருத்தையும், சொல்லையும் அடியொற்றிப் பின் சென்றுள்ளார்.
மணிமேகலை ஆசிரியர் மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் மற்ற சங்கப்பாடல்கள் பலவற்றின் ஆசிரியரான சீத்தலைத் சாத்தனாரே என்று பொதுவாகக் கருதப்படுகிறது. இருவரும் வேறு வேறு புலவர் என்பாரும் உளர். ஆனால், இஃது எப்படியானாலும், சிலப்பதிகாரத்தின் ஆசிரியரான இளங்கோ வடிகள் அவர் கூற்றுப்படியே சேரன் செங்குட்டுவன் இளவல் ஆவார். சேரன் செங்குட்டுவனைப் பதிற்றுப்பத்தில் பரணர் பாடியுள்ளார். பரணர் சங்கப் புலவர்களுள்ளும் பழைமை யானவர். செங்குட்டுவனையோ, அவன் முன்னோர் பின்னோர் களையோ பாடும் பாடல்களும் சங்கத் தொகை நூல்களில் பல. ஆகவே சிலப்பதிகார, மணிமேகலை நூல்கள் சங்கத் தொகை நூல்களில் சேர்ந்தவையல்லவானாலும், சங்ககால ஏடுகளே என்பது மறுக்க முடியாத உண்மை.
செங்குட்டுவன் காலம் கி.பி.2ஆம் நூற்றாண்டு என்று இலங்கைச் சமகால வரலாற்றுக் குறிப்புகளால் நிறுவப்பட்டுள்ளது. திருக்குறளின் காலம் கி.பி.2ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்று வரையறுக்கப்படுவதற்கான ஆதாரம் இதுவே. ஆனால், இது திருவள்ளுவர் காலம் இன்னதுதான் என்று வரையறுக்க வில்லை. இன்ன காலத்துக்கு முற்பட்டது என்றே வரையறுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும், மேலே கண்டபடி கி.பி.2ஆம் நூற்றாண்டுக்குரிய இந் நூல்களிலேயே வள்ளுவர் பழங்காலப் புகழ் வாய்ந்த அறவோராகக் குறிக்கப்பட்டுள்ளார் என்பது நோக்க, அவர் இதற்கு நெடுநாள் முற்பட்டவராக இருத்தல் வேண்டும். அத்தகைய பழம் புகழ் நிலை பெறுவதற்குக் குறைந்தது ஓரிரு நூற்றாண்டாவது தேவைப்படும் என்ற காரணம் காட்டிய அறிஞர் பலர்; அவர் காலத்தை, கி.பி.1 அல்லது கி.மு.1ஆம் நூற்றாண்டு என்று மதிப்பிட்டனர்.
சிலப்பதிகாரம், மணிமேகலைக் காப்பியங்கள் சங்க காலத்தைச் சார்ந்தவை என்பதை மறுக்கும் அறிஞர் சிலர் உண்டு. அவர்கள் சிலப்பதிகார மணிமேகலை மேற்கோள்களால் ஏற்படும் கால வரையறையையும் ஏற்கத் தயங்கியுள்ளனர். சங்க ஏடுகளிலே இது போன்ற நூலுரை மேற்கோள்களோ, ஆசிரியர் திருவள்ளுவர் பற்றிய குறிப்போ காணப்படவில்லை என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதனால் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவையும் அவற்றால் எடுத்தாளப்பட்ட திருக்குறளும் பிற்காலத்தவை ஆகக்கூடும் என்று அவர்கள் கருதியுள்ளனர்.
மணிமேகலை, சிலப்பதிகாரத்தில் வரும் குறட் கருத்துகள், சொற்றொடர்கள் சங்கப்பாடல்களிலும் பலப்பல உண்டு. அவ்விரு நூல்களைப்போலவே இப் பாடல்களும் குறளடிகளைப் பின்பற்றியே பாடப்பட்டிருத்தல் வேண்டு மென்பதில் ஐயமில்லை. ஆனால், வெறும் ஐயுறவு, ஆராய்ச்சி ஆகமாட்டா தென்றாலும். ஐயுறவாளர் ஐயத்துக்குத் தக்க ஆதாரங்கள் காட்டியே ஐயமறுக்க முடியும். குறள்-சங்க இலக்கிய ஒப்புவமைகளுள் ஒன்று, கிட்டத்தட்ட மணிமேகலையைப் போலவே ஒரு குறட்பாவை எடுத்தாளுகின்றது என்னலாம்.
‘ஆன்முலை யறுத்த அறனி லோர்க்கும்
மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்,
பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கில் கழுவாயும் உளவே,
நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்,
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென
அறம்பா டிற்றே ஆயிழை கணவ!’
- புறம். 34
என்ற அடிகள் புறநானூற்றில் ஆலத்தூர்க்கிழார் என்ற புலவர் பாடலில் இடம் பெற்றுள்ளன. இங்கே,
‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு’
- குறள் 110
என்ற குறட்பாவின் கருத்தும் சொல்லும் பொதிந்துள்ளன என்பதில் ஐயமில்லை. முதல் நான்கடிகள் ‘எந்நன்றி கொன்றார்க்கும்’ என்ற தொடரின் எடுத்துக்காட்டு விளக்கங்களாகவே அமைந் துள்ளன. அத்துடன் ஆசிரியரே இவ் வாசகம் வேறொரு நூலிலிருந்து எடுத்தாளப்பட்டதென்றும் சுட்டியுள்ளார். ஆனால், மணிமேகலை வள்ளுவரைப் புகழ் பெயரால் ‘பொய்யில் புலவன்’ என்று குறித்தது போலவே, ஆலத்தூர்க்கிழாரும் குறளை அதற்குரிய ஒரு பெருஞ் சிறப்புப் பெயரால் ‘அறம்’ என்று குறித்தார்.
புறநானூற்றிலேயே காக்கைபாடினியார் என்ற புலவர் மற்றொரு திருக்குறட்பாவின் கருத்தும் சொல்லும் அடியொற்றிப் பாடியுள்ளார். களத்தில் புண்பட்டு மாண்ட தன் புதல்வன் புண்ணுற்றது முதுகிலே என்று யாரோ கூறக் கேட்டுக் கடுஞ்சினத்துடன் பிணங்களைத் துழாவிய வீரத்தாய், அவன் மார்பில் புண்பட்டிறந்தது கண்டு மகிழ்வதை வருணிக்கும் காட்சி அது.
‘படுமகன் கிடைக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே’
- புறம். 278
இவ்வடிகளில்,
‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்!’
- குறள். 69
என்ற குறட் கருத்தும் சொல்லும் குறிக்கப்பட்டுள்ளன என்பதை எவரும் காணாமலிருக்க முடியாது.
வள்ளுவர் குறளின் கருத்தும் சொல்லும் தழுவிப் பாடிய சங்கப் புலவர் பாடல்கள் இன்னும் மிகப்பல உண்டு.
ஆலத்தூர்கிழார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடியவர். காக்கை பாடினியார் காலத்தால் அவர்க்கு முற்பட்டவர் என்று கருதப்படுபவர். இப் புலவர்கள் கி.பி.1, 2ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவராதலால், திருவள்ளுவர் காலம் இவர்களுக்கு முற்பட்டதாதல் வேண்டும் என்று காட்டி அறிஞர் சிலர் அவர் கி.மு முதல் நூற்றாண்டுக் குரியராகலாம் என்று மதிப்பிட்டுள்ளனர்.
திருவள்ளுவர் கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்குரியராதல் கூடும் என்று கருதுபவர், அவர் கதை மரபின் ஒரு கூறுடன் வரலாற்றுச் செய்தியொன்றை இணைத்துக் காண்கின்றனர். திருவள்ளுவர் மாணவனும் புரவலனுமாக இருந்து அவரை ஆதரித்தவன், வணிகக் கோமானான ஏலேல சிங்கன் அல்லது ஏலேலன் என்று கதை மரபு கூறுகிறது. கப்பற்பாட்டுகளிலும் தொழிலாளர் பாட்டுக்களிலும் செவிப்படும் விடாப்பல்லவியான ‘ஏலேலோ’ என்பது அவன் பெயரையே நினைவூட்டுவதாகக் கொள்ளப் படுகிறது. இப் பெயரை ஒத்த ‘ஏலாரா’ என்ற சோணாட்டுக் கடலோடி வீரன் இலங்கை மீது படையெடுத்து வென்று கி.மு.2ஆம் நூற்றாண்டில் அந் நாட்டை ஆண்டானென்று இலங்கை வரலாறு குறிக்கிறது. திருவள்ளுவர் வாழ்வு கிமு.2ஆம் நூற்றாண்டினது என்று அறிஞர் கொண்டதன் அடிப்படை இதுவே.
திருக்குறளாராய்ச்சி அறிஞரான டி.எஸ்.கந்தசாமி முதலியார் அவர்கள் புத்தர் கோட்பாடுகளைத் திருவள்ளுவர் கண்டித்திருப்பதாகக் கருதுகிறார். ஆகவே, வள்ளுவர் புத்தர் காலமாகிய கி.மு.5ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் என்றும், சங்கப் புலவர் வாழ்ந்த கி.பி.1, 2ஆம் நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவர் என்றும் அவர் துணிந்துள்ளார். ஆயினும், எவ்வாறோ இந்த இரு எல்லைகளுக்கும் இடையில் அவர் வள்ளுவர் காலத்தைக் கி.மு.3ஆம் நூற்றாண்டென்று முடிவு செய்தார்.
திருவள்ளுவர், புத்தர் காலத்தவராகவே அதாவது, கி.மு.5ஆம் நூற் றாண்டினராகவே இருத்தல் வேண்டுமென்பது சேலம் கல்லூரித் தலைவராயிருந்த அறிஞர், காலஞ்சென்ற இராமசாமிக் கவுண்டர் அவர்கள் கொள்கை. கடைச் சங்க காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் தொடங்கி கி.பி. 3ஆம் நூற்றாண்டின் நடுவில் முடிவுற்றதாகப் பொதுவாகக் கொள்ளப்படுகிறது. திருவள்ளுவர் கடைச் சங்க காலத்துக்கே நெடிது முற்பட்டவ ராதல் வேண்டும் என்பது அவர் எண்ணம் ஆகலாம்.
இவ்வாராய்ச்சிகள் யாவும் வள்ளுவர் கி.பி.2ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர், நெடிது முற்பட்டவர் என்ற முடிபையே வலியுறுத்தப் போதியன. எவ்வளவு முற்பட்டவர், எந்நூற்றாண்டினர் என்று முடிவு படுத்துவதில் எவரும் வெற்றி பெறவில்லை என்றே கூறுதல் வேண்டும். ஏனெனில், இவ் வகையில் எல்லா முடிவுகளும் ஏறத்தாழ ஊக மதிப்புகளே.
சங்ககாலம் அல்லது கி.பி. 2ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டே வள்ளுவர் வாழ்ந்திருத்தல் வேண்டும் என்ற கருத்துக்கு ஆதரவு தரும் ஆராய்ச்சியறிஞர் எவரும் தற்போது இல்லை. ஆனால், அவ்வாறு கருதியவர், வாதிட்டவர் ஒருவர், இருவர் உண்டு. அவர்கள் முற்பட்ட தமிழக அறிஞருள் ஒருவரான கே.என். சிவராஜபிள்ளையும், காலஞ்சென்ற முன்னாள் சென்னை, திருவாங்கூர் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைத் தலைவரான இராவ் பகதூர் எஸ்.வையாபுரிப் பிள்ளையுமே யாவர். இவர்கள் தொடக்கத்திலிருந்தே தமிழ்ப் பழைமையிலும், தமிழ் ஓர் உயர்தனிச் செம்மொழி என்பதிலும் அவநம்பிக்கையும், அதே சமயம் சமற்கிருதப் பழைமையிலும், பெருமையிலும்; ஆராயா நம்பிக்கையும் ஆர்வமும் உடையவர்கள். வரலாற் றாராய்ச்சி முன்னேறுந்தோறும் அவர்கள் வாத முடிபுகள் பெரிதும் மங்கி மறைந்தே வந்துள்ளன. ஆயினும், அவர்கள் வாதம் புதுமை வாய்ந்தது; புதுமை வாய்ந்த மெய்ம்மைகளுக்கு வழிகாட்டுவது. பிறர் வலியுறுத்திக் காணாது மேலீடாக விட்ட செய்திகள் சில பலவற்றைத் தம்கோள் நிறுவும் முயற்சியில் அவர்கள் வற்புறுத்தி விளக்கிச் சென்றுள்ளனர். வள்ளுவர் கால ஆராய்ச்சிக்கு இவை உதவுபவை ஆகும்.
தமிழ் ஐயுறவு வாதிகளான இவ்விருவருள் அறிஞர் கே.என்.சிவராஜ பிள்ளை அவர்களே முதல்வரும் வழிகாட்டியும் ஆவார். சங்ககாலத்தை முற்காலப் பிற்காலப் பல்லவர்களுக் கிடைப்பட்ட கி.பி.5ஆம் நூற்றாண்டில் காண விழைந்தவர் அவர். ஆந்திர நாட்டு அறிஞர் ஒரு சிலர் இதை ஆர்வமாகத் தழுவ முயன்றும் ஆராய்ச்சிப் போக்கால் இம் முடிவு சிதறுற்றுள்ளது. தொல்காப்பியம், சங்க காலத்துக்குப் பிற்பட்டது என்ற தம் கொள்கையை வலியுறுத்தவும் இவர் அரும்பாடு பட்டுள்ளார். இதுவும், ஆழ்ந்தகன்ற ஆராய்ச்சி, எதிர் ஆராய்ச்சிகளின் முன் நிற்கவில்லை யாயினும், இத் துறையில் அறிஞர் ஆராய்ச்சி வீண்போகவில்லை. புறநானூற்றில் சில பகுதிகளும் மற்றச் சங்க இலக்கியப் பாடல்களில் சிலவும் கடைச் சங்க காலத்துக்கோ, தொல்காப்பியத்துக்கோகூட முற்பட்டவையாயிருத்தல் வேண்டும் என்பதை இது நிலை நாட்டியுள்ளது. அவ்வாராய்ச்சி, மொழியாராய்ச்சித் துறையிலும் சில புரட்சிகரமான முடிபுகள் தந்துள்ளது.
இராவ் பகதூர் வையாபுரிப்பிள்ளை அவர்கள் ஆராய்ச்சி களும் புதுமையில் குறைந்தவையல்ல. சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள் தம்மைச் செங்குட்டுவன் இளவல் என்று கூறியபோதிலும் செங்குட்டுவனைப் பாடிய சங்கப் புலவர்கள் எவரும் அப் பெருங் கவிஞரைப் பற்றி எதுவும் குறிக்கவில்லை. ஆகவே, சிலப்பதிகார ஆசிரியர் கூற்றுகளும், சிலப்பதிகாரக் கதையும்; அதனுடன் இணைந்த மணிமேகலைக் கதையும், அதன் ஆசிரியர் கூற்றுகளும் அத்தனையும் இட்டுக் கட்டான புனைந்துரைகள் என்பது அவர் வாதம். இந் நூல்கள் 7ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவை அல்ல என்றும், அவற்றால் மேற்கோளாகக் காட்டப்பட்ட திருக்குறளும் சங்க காலத்துக்குப் பிற்பட்டதாகவே இருத்தல் சாலு மென்றும் அவர் கருதியுள்ளார்.
சிலப்பதிகார, மணிமேகலைக் காப்பியங்களின் கதை, கதைப் பொருள், கருத்து, இலக்கிய வழக்கு, இலக்கண வழக்கு, மொழி வழக்கு ஆகியவை சங்க இலக்கியத்தினின்றும் பொதுவாக வேறுபட்டவை என்பதை எவரும் ஒப்புக் கொள்வர். அவை பிற்பட்ட காலத்தவை என்பதை வலியுறுத்த இவையும் பயன்படுத்தப்பட்டுள்ளன. திருவள்ளுவர் காலம் பற்றிய அவர் முடிபை ஏற்காத தமிழ்ப் புலவர்களுள்ளும் அறிஞர்களுள்ளும் பலர் சிலப்பதிகார, மணிமேகலை பற்றிய அவர் முடிபு நோக்கிச் சிறிது சாயத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அக் காவியங்கள் சங்க காலத்திலேயே பிற்பட்டவையாக இருத்தல் கூடும் என்று புலவர் உலகிலே கூடச் சிலர் கருத, இது தூண்டுதல் தந்துள்ளது.
மூன்றாவதாக, சங்க இலக்கியத்தின் மூன்று பிரிவுகளான பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு ஆகியவற்றில் திருக்குறளை உள்ளடக்கிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் 18உம் பத்துப் பாட்டில் ஒன்றாகிய திருமுருகாற்றுப் படையும், எட்டுத் தொகையுள் ஒன்றான பரிபாடலும் சங்க காலத்துக்குப் பிற்பட்ட பிற்சேர்க்கைகளாதல் வேண்டும் என்ற ஐயுறவையும் எஸ்.வையாபுரிப் பிள்ளை வலியுறுத்த முயன்றுள்ளார்.
ஆராய்ச்சி - சிறப்பாக, ஐயுறவுவாத அடிப்படையான ஆராய்ச்சி - ஓர் இரு திசைக் கூர் உடைய வாள். சங்க இலக்கியம் வரலாற்று நோக்குடைய தென்பதை யாவரும் ஒத்துக் கொள்வர். இதை அடிப்படையாகக் கொண்டு சங்க ஏடுகளில் ஒன்றான பதிற்றுப்பத்தை மெய்த்தளமாக்கி, அதனுடன் முரண்பட்ட காரணத்தால் சிலப்பதிகார, மணிமேகலைக் காப்பியங்களை இட்டுக்கட்டு நூல் என்று ஒரு சிலர் கூறினால், நேர்மாறாக, சிலப்பதிகார, மணிமேகலைகளை மெய்த்தளமாக்கி, பத்துப்பாட்டு அதற்கு முரண்படுவதனால், அது முழுவதும் இட்டுக்கட்டான நூல் என்று கூறுபவரும் உண்டு. இத்தகைய வாதங்களை ஆராய்ச்சி உலகம் ஒரு பொழுது போக்காகக் கருதக் கூடுமேயன்றி, கோட்பாட்டு விளக்கத்துக்காக ஆதாரங்களைப் போலியாக்குவதில் பயன் எதுவும் இராது.
சிலப்பதிகார மணிமேகலைக் காப்பியங்கள் இட்டுக்கட்டிய நூல்கள் என்று குற்றஞ்சாட்டுவது எளிது. அதை நிறுவுவது முடியாத காரியம். ஏனெனில், சங்க இலக்கியங்களால் நமக்கு விளக்கமுறாத முத்தமிழ்ப் பழைமைக்கு அவையே சான்று தருகின்றன. அவற்றின் சான்றுக்குச் சிலப்பதிகாரத்தின் பழைய உரையாசிரியர் இருவரும் மேலும் விளக்கம் அளிக்கின்றனர். கடைச் சங்க இலக்கியத்துக்கும் முற்பட்ட பல நூல்களின் பெயர் விவரங்கள், பாடல்கள், நூற்பெயர் அறியப்படாப் பாடல்கள் ஆகியவற்றைத் தரும் இத்தகைய உரைகளும்; அவற்றுக்கு இலக்கியமான முதல் நூல்களும், சங்க இலக்கியங்களால் ஒரு சிறிதும் உணரப்படக் கூடாத அந் நாளைய சமயநிலை, சமயக் கருத்துகளைத் தரும் மணிமேகலை போன்ற காப்பியங்களும் இட்டுக்கட்டுகள் என்று கூறும் ஆராய்ச்சியாளர்கள் தங்களையே ஆராய்ச்சியுலகின் கேலிக்கு ஆளாக்கிக் கொள்பவர் ஆவார்கள். சிலப்பதிகார, மணிமேகலைகள் சங்க இலக்கியத் தோடொத்த பழைமையுடையவை மட்டுமல்ல, அவற்றிலும் முற்பட்ட பழைமை மரபில் வந்தவை என்பதைத் தமிழர் கவனித்தல் வேண்டும்.
தவிர, சங்க இலக்கியமும் சிலப்பதிகாரமும் ஒருங்கே தமிழக வரலாற்றுக்கே பேரொளி விளக்கம் தந்துள்ளவை, தரத்தக்கவை என்பதையும் அறிவுலகம் மறந்து விடுவதற்கில்லை.
மொழி நூலாராய்ச்சியும் இலக்கண ஆராய்ச்சியும் தமிழில் மிக மிகக் குறைவு. தமிழ்ப் புலவர்க்கு இன்னும் அவை புறம் பானவை. இதனாலேயே எஸ்.வையாபுரியாரின் இத்துறை சார்ந்த வாதங்கள் புலவருலகையும், பல்கலைக் கழக அறிஞரையும் சில சமயம் மயங்க வைத்துவிடுகின்றன. சிலப்பதிகார, மணிமேகலைக் காப்பியங்கள் நடையிலும், இலக்கிய இலக்கண வழக்கிலும், மொழி வழக்கிலும் சங்க இலக்கியத்திலிருந்து மாறுபட்டிருப்பது உண்மையே. இதன் காரணம் ஆராய்ச்சிக்குரியது என்பதிலும் ஐயமில்லை. ஆனால், இத்தகைய செய்திகள் கால வேறுபாடு ஒன்றால் மட்டுமே விளக்கத் தக்கவையல்ல. காலவேறுபாடு ஒன்று மட்டுமே அத்தகைய வேறுபாடுகளுக்குக் காரணம் என்று கூறிவிட முடியாது. ஒரே காலத்தில் கம்பராமாயணம் போன்ற புலவர் இலக்கியமும், குறவஞ்சி, பள்ளுப்போன்ற மக்கள் இலக்கியமும் நிலவ முடியாதன அல்ல. இரண்டின் இலக்கிய நடை, இலக்கண இலக்கிய வழக்கு, மொழி நடை வேறுபாடும் போல், காலவேறுபாடில்லாமலே இத்தகைய நோக்க வேறுபாடு, இட வேறுபாடு, கணித வேறுபாடாயிருத்தலும் கூடியதேயாகும். சங்க இலக்கியத்தையும் தேவாரத்தையும்விட நிகழ் காலத்தை மிகுதியாகப் பயன்படுத்தும் திருவாசகம் பிற்பட்டதென்று எஸ்.வையாபுரியாரும் அறிஞர் பலரும் கொள்வது சரியானால், தேவார திருவாசகங்களைவிட இத்தகைய வழக்குகள் குறையப் பெற்ற கம்பராமாயணம் முதலிய நூல்கள் தேவார, திருவாசகங் களுக்கு முற்பட்டவை என்றும் கூற வேண்டிவரும். இவ் வேறுபாட்டின் உண்மை விளக்கம் சங்க இலக்கியம் அல்லது உயர்ந்தோர் இலக்கியம் என்பதும்; சிலப்பதிகாரம், மணிமேகலை, திருவாசகம் போன்றவை இசை நாடக இலக்கியம் அல்லது மக்கள் இலக்கியம் என்பதுமேயாகும். தவிர கால வேற்றுமை யுடன் இடவேற்றுமையும் சேர்ந்து கம்பராமாயணம் போன்ற இடைக்கால நூல்களைப் பல கூறுகளில் சங்க இலக்கியத்தை விடப் பழைமை வழக்குகள் உடையவையாகச் செய்துள்ளன. சங்க இலக்கியங்களில் காணமுடியாத உரிச்சொல், திரிசொல் வழக்குகளைக் கம்பராமாயணத்திலும், கம்பராமாயணத்தில் காணமுடியாத நாட்டுமக்கள் வழக்குகள் மிகப் பலவற்றைச் சங்க இலக்கியத்திலும் நாம் காணலாம்.
வையாபுரியாரின் மூன்றாவது வாதம் நேரடியாகத் திருக்குறளைப் பாதிப்பதாகும். திருக்குறள் உட்படப் பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் 18உம், பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படையும் எட்டுத் தொகையில் பரிபாடலும், சங்க காலத்தவை அல்ல, பிற்பட்டவை என்பதே அது. அவர் வாதங்களுள் வலிமை மிக்க வாதம் இதுவே. ஏனெனில், இறையனார் அகப்பொருளுரை தரும் முச்சங்க மரபு வரலாற்றில் கடைச்சங்க நூல்களின் பட்டியலில் திருக்குறளோ, மற்றக் கீழ்க்கணக்கு நூல்களோ குறிக்கப்படவில்லை. அத்துடன் கீழே தரப்படும் மேற்கோள் சுட்டிக்காட்டுகிறபடி, பழைய உரையாசிரியர்கள் பத்துப்பாட்டையும் எட்டுத் தொகையையும் மட்டுமே சங்க இலக்கியம் என்ற பெயருடன் குறிப்பிட்டுள்ளனர்.
இறையனார் அகப்பொருளுரையின் பட்டியலில் வரும் ஏடுகள் அத்தனையுமே நமக்கு வந்தெட்டவில்லை. கூத்து, வரி முதலியவை அத்தகையவை. வந்தெட்டியவற்றுள்ளும் அரை குறையாக எட்டியன சில. அதே சமயம் இறையனார் அகப்பொருளுரை குறிப்பிடாது நம்மிடம் வந்து சேர்ந்திருக்கும் சில பாடல்கள் சங்ககாலத்தன வென்று உறுதியாகக் கூறத்தக்கவை. வையாபுரியார் அவர்களே கண்டு வெளியிட்டுள்ள புறத்தொகை மூலம் கிடைத்த பல நூற்பகுதிகளில் தகடூர்யாத்திரை ஒன்று. அது சங்க காலத்திலேயே நடந்த ஒரு போர் பற்றியது. சங்கப் புலவர்களே நேரில் கண்டு பாடியது. எனவே, இறையனார் அகப்பொருளுரையின் பட்டியலை முழு நிறைவாகக் கொண்டு ஆராய்வது முறைமையின் பாற்படாத ஒன்றேயாகும். சிலப்பதிகார உரைகள் தரும் நூல்கள் சில இறையனார் உரையில் உள்ளன. ஆனால், பல அதில் காணக் கிடைக்க வில்லை என்பதை நாம் கூர்ந்து கவனித்தல் வேண்டும்.
கீழ்க்கணக்கு நூல்கள் பற்றிய அறிஞர் எஸ்.வையாபுரிப் பிள்ளை யவர்களின் முடிவைச் சைவ சிந்தாந்த சமாசத்தின் சங்க இலக்கியத் தொகுப்பாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்னலாம். ஏனெனில், அவர்கள் திருக்குறளையும் மற்றக் கீழ்க்கணக்கு நூல்களையும் அத் தொகுப்பில் சேர்க்கவில்லை. அது மட்டுமன்று; அதற்கான விளக்கத்தையும் அவர்கள் தம் சீரிய முன்னுரையில் தந்துள்ளனர்.
“பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் சங்க இலக்கியத்தின் பாற்பட்டவை என்பதை எவரும் மறுக்க முடியாது. சிலப்பதிகாரம், பதினெண் கீழ்க்கணக்கு முதலியவற்றுக்குச் சங்க இலக்கியம் என்ற பெயர் பொருந்துவதைப் பற்றிப் பல வகையான கருத்து வேற்றுமைகள் உண்டு. தொல்காப்பிய உரையுள் பேராசிரியர் மரபியல் 94ஆம் சூத்திர உரையிலும், நச்சினார்க்கினியர் அகத்திணையியல் 6ஆம் சூத்திர உரையிலும் கூறுவனவற்றி லிருந்து எட்டுத் தொகையும் பத்துப்பாட்டுமே சங்க இலக்கியம் என்று கருதப்பட்டன என்பது தெளிவாகலாம்.”
பழங்கால உரையாசிரியர், நம் காலச் சமாசத்தார், வையாபுரிப் பிள்ளை யவர்கள் ஆகியோர் முடிபுகளை ஆராயுமுன், அம் முடிபுகளிடையேயுள்ள சிறு வேறுபாடு கூர்ந்து கவனிக்கத்தக்கது. உரையாசிரியர்களும், அவர்களைப் பின்பற்றிச் சமாசத்தாரும் சிலப்பதிகாரத்தையும் (மணிமேகலையையும்), திருக்குறள் உட்பட்ட கீழ்க்கணக்கு நூல்களையுமே விலக்கி யமைந்தனர். அறிஞர் வையாபுரி அவர்களோ, இதே கதிக்குத் திருமுருகாற்றுப்படையையும் பரிபாடலையும் உட்படுத்தி, அம் மூவேறு வகைப்பட்ட நூல் தொகுதிகளையும் மறுப்பதற்கு மூவேறு வகைப்பட்ட ஆராய்ச்சி ஆதாரங்களை நாடியுள்ளார்.
சமாசத்தார் தம் முடிபுக்கு உரையாசிரியர்கள் கூற்றையே ஆதாரமாகக் காட்டுகின்றனர். ஆனால், முடிபு முற்றிலும் ஆராய்ச்சி ஆதாரம் நாடியதன்று என்றும் எண்ண இடமுண்டு. ஏனெனில், அதன் பின்னணியிலுள்ள உணர்ச்சிச் சார்பான உட்கிடக்கையை முகவுரை மொழிகளே சுட்டிக் காட்டுகின்றன.
“நமது சமாஜம் சங்க இலக்கியத்தை வெளியிடுதல் பொருத்தமாமோ என்று சிலர் ஐயுறுதல் கூடும். ‘சங்க நூல்களெல்லாம், புத்த, சமண சமயச் சார்புடையன; அவற்றைப் பயிலுதல் கூடாது’ என்று எனது இளமைப் பருவத்தில் சில சிவனடியார்கள் கூறியதுண்டு. இக்காலத்தின் நல்வினைப் பயனாக இக் கொள்கை மறைந்துவிட்டது.”
முகவுரையை வகுத்துரைத்துள்ள சமாசச் செயலாளர் திரு.ம.பால சுப்பிரமணியன் அவர்கள் தரும் அனுபவ மொழிகள் இவை. இந்’நல்வினைப் பயன்’ சைவ சித்தாந்த மகாசமாசத்துக்கு விக்கிரம வருஷம் சித்திரை மாதம் 1ஆம் தேதிக்குச் சரியான 1940 ஏப்ரல் 13ஆம் நாளிலேயே கிட்டியதாகத் தெரிகிறது.
கீழ்க்கணக்கு நூல்களில் பல மறுக்கக் கூடாதபடி, மழுப்பக் கூடாதபடி சமண நூல்கள் என்பதும், அது போலவே மணிமேகலை புத்த சமய உலகையே தமிழ் நோக்கி ஈர்க்கவல்ல புத்த சமயப் பெருங்காப்பியம் என்பதும் யாவரும் அறிந்ததே. அத்துடன் திருக்குறளையும் சிலப்பதிகாரத்தையும் கூடச் சமண நெறியினர் தம் சமய ஏடுகளென உரிமை கொண்டாடுகின்றனர். கொண்டாடி வந்துள்ளனர். இந் நிலையில் புத்தாராய்ச்சியாளர் உதவி கொண்டோ, பழைய உரையாசிரியர் ஆதாரங்காட்டியோ இத்தகைய நூல்களை விலக்கி, புறச்சமய அளறு நீக்கிச் சங்க இலக்கியத்தைப் புனிதப்படுத்தியதே ‘இக்காலத்தின் வினைப் பயன்’ ஆதல் கூடும் என்று ஐயுறாதிருக்க முடியவில்லை!
உரையாசிரியர் இந் நூல்களை விலக்கியதற்கும் இதுவே காரணமாய் இருத்தல் கூடும். ஏனெனில், அவர்கள் சங்க காலத்தைவிட நம் காலத்துக்கே அணிமையானவர்கள். அத்துடன் வையாபுரியாரின் முழு ஆராய்ச்சி முடிபையும் நாம் ஒப்புக் கொள்ளுவதானால், அவர் விலக்கிய பத்துப்பாட்டையும் பரிபாடலையும் அவர்களும் சமாசத்தாரும் உட்படுத்தியதற்கும் இதுவே காரணமாகக் கொள்ளப்பட இடமுண்டு. ஏனெனில், அவற்றுள் ஒன்று திருமால் புகழ் பாடுவதாயினும், இரண்டும் முருகன் புகழும் தம்மகம் கொண்டவை.
சைவ சித்தாந்த சமாசத்தாரைவிடச் சைவ சித்தாந்தக் கழகத்தார் சைவப்பற்றில் குறைந்தவர் அல்லர். ஆனால், அறிஞர் கா.சுப்பிரமணிய பிள்ளை, ஆசிரியர் மறைமலையடிகள் ஆகியவர்களைப் பின்பற்றி அவர்கள் சைவப் பற்றுடனொத்த ஊன்றிய தமிழ்ப் பற்றுக் கொண்டவர்கள். அவர்கள் ஐயுறவுக் குழுவைச் சார்ந்தவர்கள் அல்லர். அவர்கள் தமிழ்ப் பற்று சமாசத்தாரின் குறுகிய போக்கினின்றும் அவர்களைத் தொடக்கத்திலிருந்தே விலக்கியிருத்தல் வேண்டும். ஏனெனில், அவர்கள் சமய சாதி வேறுபாடின்றி எல்லாச் சமயஞ் சார்ந்த சங்க இலக்கியங்களையும் பிற தமிழ் ஏடுகளையும் வெளியிட்டுப் பரப்பத் தயங்கவில்லை. உண்மையில் தமிழ்ப் பற்றிலூன்றிய கழகத்தார் புத்த சமண நூல்கள் உட்படச் சங்க இலக்கியம் முழுவதையும் வெளியிட்டுப் பரப்பத் தொடங்கியபின்னரே, சமாசத்தார் சங்க இலக்கியத்தில் புத்தார்வம் காட்டி அதைச் சைவப் போர்வையுள் நின்று புனிதப்படுத்தி வெளியிட முற்படலாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமயத் திரையின் பின்னும் தமிழ் இலக்கியத் திரையின் பின்னும் இருந்து ஆராய்ச்சியில் முனைந்துள்ள இவ்விரு வகைப்பட்ட சமற்கிருதப் பற்றாளர்களும் வலியுறுத்திய ஆதாரங் கள் அவர்கள் நோக்கிய திசையில் நன்முடிவு காணப் பயன்பட மாட்டா. பயன்படவில்லை. ஆனால், அவை எதிர்த் திசையின் முடிபு சுட்டிக் காட்டத்தக்கவை. ஆகவே, ஐயுறவாராய்ச்சியாளர் நோக்க உட்கிடக்கைகளை விட்டு அவர்கள் வாதங்களையே ஆராய்வோம்.
எட்டுத் தொகை என்பது எட்டுத் தொகுப்பு நூல்களடங்கிய பெருந் தொகுப்பேயாகும். அத் தொகைநூல்கள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறு நூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பவை. பத்துப்பாட்டு என்பவை திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறு பாணாற்றுப்படை, முல்லைப் பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகியவை. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பதினெழு நூல்களே நமக்குக் கிட்டியுள்ளன. அவை நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி நானூறு, சிறு பஞ்ச மூலம், ஏலாதி, முதுமொழிக் காஞ்சி ஆகியவை. நமக்குக் கிட்டாத ஏடு ஐந்திணை பற்றிய ஐந்து நூல்களில் ஒன்று என்பது கீழ்க்கணக்கு நூல்களின் பெயர்கள் கூறும் பழம் பாடலால் தெரியவருகிறது.
எட்டுத் தொகையின் எட்டுத் தொகை நூல்களில் நான்கிற்கே தொகுத்தவர், தொகுப்பித்தவர் பெயர்கள் வந்தெட்டியுள்ளன. கலித் தொகைக்குத் தொகுத்தவர் பெயர் மட்டிலுமுண்டு. புறநானூற்றுக்கு இரண்டும் கிட்டவில்லை. பதிற்றுப்பத்து, பரிபாடல் ஆகியவற்றின் தொடக்க இறுதிகளே கிடைக்கப் பெறாததால் அவற்றுக்கும் தொகுத்தவர், தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை. ஆனால், தெரிந்த அளவில் தொகுத்தவர், தொகுப்பித்தவர்கள் சங்க காலத்தவர்களே. இவற்றினடிப்படையிலே எட்டில் ஆறு சங்க காலத் தொகுப்புகளே என்று வையாபுரிப் பிள்ளையவர்களே காட்டியுள்ளார். அத்துடன் அகநானூறு 43ஆம் பாடலைப் பாடிய ஆசிரியர் நல்லந்துவனாரே கலித்தொகையில் நெய்தல் கலி முழுவதும் பாடி அதைத் தொகுத்தவராகவும் அமைகிறார். அப் பாடல்கள் பரிபாடலிலும் உள்ளன. எனவே, வையாபுரியார் கருதியபடி எட்டுத் தொகை நூல்களும் பெருந் தொகுப்பாகக் கி.பி.4ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டன என்பதை ஒத்துக்கொண்டால்கூட, எட்டும் சங்ககால ஏடுகள், சங்ககாலத் தொகைகள் என்பதில் ஐயமில்லை. கடைச்சங்கம் கி.பி. 3ஆம் நூற்றாண்டு நடுவில் முடிவுற்றுவிட்டபடியால் பெருந்தொகுப்பு அதன்பின் தொகுக்கப்பட்டது என்பதும் பொருந்தாக் கூற்று ஆகும். வையாபுரியாரின் கால வரையறை என்பது பெரிதும் ஐயுறவு வரையறையே. பின் எல்லை குறிப்பது ஒன்றில் மட்டுமே அவர் ஊக்கம் காட்டியுள்ளார். ஆனால், நேர்மையான பின் எல்லை பெருந்தொகுப்புக்குக்கூட கி.பி.3ஆம் நூற்றாண்டுகள் நடுப்பகுதியேயாகும்.
பத்துப் பாட்டுத் தொகுக்கப்பட்டது பிற்காலத்தே என்பதற்கும் உரையாசிரியர் குறிப்பையே வையாபுரியார் வேதவாக்காகக் கொண்டுள்ளார். அதன் பின் எல்லை வரையறுக்க மட்டுமே இது பயன்படுத்தப்படுதல் வேண்டும். தவிர, பத்தில் திருமுருகாற்றுப்படை நீங்கிய ஒன்பதும் சங்ககாலத்துப் புலவரால் பாடப்பட்டவையே. அத்துடன் நெடுநல் வாடையும் பிறசங்கப் பாடல்களும் பாடிய நக்கீரனாரே திருமுருகாற்றுப்படை ஆசிரியர் என்று கொள்வதில் தவறொன்றும் இல்லை. அது வேறு நக்கீரனார் என்று வையாபுரியார் கொள்வது தம்கோள் நிறுவுவதற்காகவே யன்றி வேறன்று. ஏனெனில், நடைவேறுபாடும் அதன் பொருள் வேறுபாடும் அதை ஒட்டிய நோக்க வேறுபாடும் சார்ந்ததேயாதல் இயல்பு. தவிர, திருமுருகாற்றுப்படை நக்கீரனாரின் நடுவயதுக்கும், நெடுநல் வாடை அவரது முதிர் வயதுக்கும் உரியனவாகவே இருத்தல்கூடும். கால வேறுபாடு என்பது இவ்வகைப்பட்ட வாழ்க்கைக் கால வேறுபாடு மட்டிலுமாகவே கொள்ளத்தக்கது. அத்துடன் சமயக் கருத்துகள் பிற்பட்டன என்று கொண்டு, அதனடிப்படையில் நூல்கள் பிற்பட்டனவென்றும், நூல்கள் பிற்பட்டன என்று கொண்டு, அதனடிப்படையில் சமயக் கருத்துகள் பிற்பட்டன என்றும் கொள்ளும் வையாபுரியார் வாதம் வளைய வளைய வரும் சுழல் வாதமேயாகும். இதுவன்றி, நாம் மேலே காட்டியபடி சமயச்சார்பு மிக்க பரிபாடல் சங்க ஏடாதலின் திருமுருகாற்றுப்படையும் சங்க ஏடேயாதல் கூடாததன்று.
தமிழர்க்குத் தமக்கென ஒரு சமயம் கிடையாதென்பதிலும், தமிழருக்கு சமயக் கருத்துகள் யாவும் சமற்கிருதவாணர் அல்லது ஆரியரிடமிருந்தே வந்திருத்தல் வேண்டும் என்பதிலும் வையாபுரியார் கொண்ட ஊன்றிய ஆராயா நம்பிக்கையே அவரை இத்தகைய சுழல் வாதங்களில் உழலவிடுகின்றன. சமற்கிருதத்தில் கால ஆராய்ச்சியுடையவர் எவரேனும் தமிழாராய்ச்சியில் புகும் நாள் வந்தால், அன்று மெய்ம்மை இதற்கு நேர்மாறானதென்ற முனைப்பான செய்தி மறைபடாது வெளியாகிவிடும்.
எட்டுத்தொகை தொகைநூல்கள் அடங்கிய பெருந் தொகுதி. பத்துப் பாட்டும் கீழ்க்கணக்கு நூல்களும் தனி நூல்களின் தொகுப்பே. பெருந் தொகுப்பும், தொகை நூல் தொகுப்புப் போன்றதன்று. எனவே, அவற்றுக்குத் தொகுத்தார், தொகுப்பித்தார் தேவைப்பட்டிருக்க முடியாது. தொகுப்பு வேலை சங்கத்தார் பொது நடைமுறைக்கே விடப்பட்டிருத்தல் இயல்பு. ஆகவே, எட்டுத் தொகையைப் போலவே பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க் கணக்கும் சங்க காலத் தொகுப்புகளே என்பதில் ஐயமில்லை. நூல்கள் சங்ககாலத்தவையாய் இருத்தல் வேண்டும். அல்லது அதற்கு முற்பட்டவையாதல் வேண்டும். ஏனெனில், சங்கத் தொகுப்புகளில் கடைச் சங்கத்துக்கு முற்பட்ட பாடல்களும் இடம் பெற்றுள்ளன என்று நாம் காண்கிறோம். தவிர, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று சங்க காலத்துக்குப்பின் இறந்துபட்டிருப்பதும், களவழி நாற்பது போன்ற நூல்கள் சங்க கால நிகழ்ச்சிகள் பற்றியதாக இருப்பதும், ஒருவேளை சங்க கால அல்லது சங்கப் புலவர்களால் பாடப் பட்டிருப்பதும் நோக்கத்தக்கது. எனவே, கீழ்க்கணக்கு நூல்களும் அவற்றில் உட்பட்ட திருக்குறளும் கடைச் சங்க காலத்தவை அல்லது கடைச் சங்கத்துக்கு முற்பட்டவையாய் இருத்தல் கூடுமேயன்றி, சங்க காலத்துக்குப் பிற்பட்டன ஆகமாட்டா. கடைச் சங்கத்துக்கு முற்பட்ட முத்தமிழ்க் கால மரபுடன் தொடர்புடைய சிலப்பதிகார, மணிமேகலைக் காப்பியங்களே பழம் புகழ் ஏடாக எடுத்தாண்ட திருக்குறள் கடைச் சங்க காலத்திலேயே முற்பட்ட நூலாகவோ, கடைச் சங்கத்திலும் முற்பட்ட நூலாகவோதான் இருத்தல் வேண்டும் என்பதில் ஐயமில்லை.
வள்ளுவர் கால ஆராய்ச்சிக்கு அறிஞர் வையாபுரிப் பிள்ளை மட்டுமன்றி, அவர்க்கு முந்திய ஆராய்ச்சியாளரான கே.என்.சிவராஜபிள்ளையும் வழிகாட்டும் இடம் இதுவே.
சிலப்பதிகார மணிமேகலைகள் சங்க இலக்கியத் தொகுப்பில் சேர்க்கப் படாமைக்கும், சிலப்பதிகாரமும் அரச துறவியான அதன் ஆசிரியர் இளங்கோ வடிகளும் சங்க ஏடுகளிலே குறிப்பாகச் செங்குட்டுவனையும் சேரர்களையும் பாடிய பதிற்றுப்பத்திலே - குறிக்கப் பெறாமைக்கும் தனிக் காரணங்கள் இருத்தல் கூடும் என்பது மேலே கூறப்பட்டது. ஆனால், வள்ளுவர் குறிக்கப் பெறாமைக்கு இதுபோன்ற காரணம் கூறமுடியாது. வள்ளுவர் சங்க காலத்தவரன்று என்று அறிஞர் வையாபுரி கருதியதற்கான அடிப்படை இதுவே. அவர் கருத்து முற்றிலும் தவறு என்று கூறுவதற்கில்லை. பிற்பட்ட தென்று காட்டும் ஆர்வம் அவர்க்கு மிகுதியானதனாலேயே பிற்பட்டதா, முற்பட்டதா என்ற வினாவை அவர் எழுப்பவில்லை. கீழ்க்கணக்கு நூல்கள் தொகுப்பு பிற்பட்டது என்று கருதினால் கூடத் திருக்குறள் பிற்பட்டது என்று தெளிவுபட முடியாது. அத்துடன் திருக்குறட் கருத்தும், சொல்லும், சொற்றொடர் களும், உவமையணிகளும்; சிலப்பதிகாரம், மணிமேகலை நூல்களைப் போலவே சங்க இலக்கியங்களிலும் பலவாகக் காணப்படுகின்றன. ‘திருவள்ளுவர் சங்க காலத்துக்குப் பிந்தியவரும் அல்லர். களவழி நாற்பது, இன்னா நாற்பது ஆசிரியர்கள் போலச் சங்க காலத்தவரும் அல்லர். முந்தியவரே’ என்பதை இது காட்டும்.
திருவள்ளுவர் பெரும் புலவராதலால் சங்கப் பாடல்களை யெல்லாம் கற்றறிந்து பலர் பாடற் கருத்துகளையும் கையாண்டார் என்று கூறுதல் கால ஆராய்ச்சிக்குரிய வாதமாகாது. ஏனெனில், சிலப்பதிகார மணிமேகலையை அவர் படித்து மேற்கோள் காட்டவில்லை. குறளையே அவை மேற்கோள் காட்டின. அதுபோலவே புறநானூற்றில் ஆலத்தூர்க்கிழார் திருக்குறட் கருத்தும் சொல்லும் கையாளும்போது, தாம் வேறொரு நூலிலிருந்து அதை எடுத்தாண்டதாகவே கூறுகிறார். எனவே, காக்கைபாடினியார் போன்ற பிற சங்ககாலப் புலவர்கள் கையாண்ட வள்ளுவர் கருத்துகளும், சொற்றொடர்களும் இவைபோலத் திருக்குறளையே உள்ளத்துட் கொண்டு எடுத்தாளப்பட்டவை என்பதில் ஐயமில்லை.
திருக்குறள் சொல், கருத்து ஒற்றுமைகளை நாம் சங்க காலச் செய்யுள்களிலும் இடைக்கால, இக்காலச் செய்யுள்களிலும் காண்பதைப் போலவே இன்றைய தமிழர் அறிந்த மிகப் பழம் பெரும் நூலாகிய தொல் காப்பியத்திலும் காண்கிறோம்.
‘நிறைமொழி மாந்தர் ஆணையின் கிளக்கும்
மறைமொழி தானே மந்திரம் என்ப’
- தொல்காப்பியம் செய்யுளியல் : சூத்திரம் - 175
என்ற தொல்காப்பியச் சூத்திரம்,
‘நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்’
- குறள்-28
என்ற திருக்குறட்பாவை எவர்க்கும் நினைவூட்டாமலிராது.
தொல்காப்பியர் காலம் இன்னது, அதன் பழைமை எல்லை எது என்பது இன்னும் வரையறுக்கக் கூடாத செய்தியே. ஆனால், அது கடைச்சங்கத்துக்கு முற்பட்டது. இடைச் சங்கத்திற்கூடத் தொடக்கக் காலத்துக்கே உரியது என்று கூறத்தக்கது. ஆசிரியர் மறைமலையடிகளார் அது முதற் சங்கத்து இறுதிக்கே உரியது என்று கொண்டுள்ளார். தொல்காப்பியக் கால அரசன் நிலந்தரு திருவிற் பாண்டியன் அல்லது நெடியோன் பஃறுளியாற்றின் கரையிலிருந்த தென்மதுரை யாண்டவன் என்று சங்கப் பாடல்களாலேயே தெரிவதால் இது வலியுறவு பெறுகிறது. திருவள்ளுவர் இவ்வளவு பழங் காலத்தவராய் இருக்கமாட்டார் என்ற எண்ணமே இவ்வொப்புவமை வகையில் திருக்குறள் மொழி மூல வாசகமன்று, தொல்காப்பிய மொழியே மூலவாசகம் என்ற நம்பிக்கையை உண்டு பண்ணியுள்ளது. ஆனால், உண்மை இதற்கு நேர்மாறாய் இருக்கக் கூடாததன்று. கே.என்.சிவராஜ பிள்ளை சங்க இலக்கியப் பாடல்கள் சிலவற்றுக்குக் கொடுத்த பழைமை திருக்குறளுக்கும் உரியதாய் இருத்தல் கூடாததன்று.
திருவள்ளுவர் காலமறியாதவர், இடைக்கால, பிற்கால நூல் ஒப்புவமைகளைக் கூடத் திருவள்ளுவர் மூலங்களாகக் கொள்ளத் தடை எதுவும் இல்லை. ஏனெனில், கம்பர் முதலிய மிகப் பல இடைக்காலப் புலவர்கள் திருவள்ளுவர் கருத்தும் சொல்லும் எடுத்தாண்டனரே யன்றி நூற் பெயர், ஆசிரியர் பெயர்கள் பெரும்பாலும் குறித்ததில்லை. வால்மீகியும், நாரதரும், உபமன்னியுவும் பிற்கால ஏடுகளில் குறிக்கப்படும் அளவுக்குத் திருவள்ளுவர் பெயர் எங்கும் காணப்படவில்லை என்பதைத் தமிழாராய்ச்சியாளர் இதுவரை எண்ணிப் பார்த்ததில்லை. காரணம் பிற்பட்டவற்றை முற்பட்டன என்று எவரும் கூற முனையவில்லை என்பதே. திருவள்ளுவர் காலம் தெளிவாக அறியப்படும் அளவிலேயே ஒப்புவமைக் கூறுகள் குறளையே மூலமாகக் கொண்டன என்பது தெளிவுற முடியும். வள்ளுவர் சொல்லாற்றலும், தனிச்சுவையும், பொருள் நயமும் அவர் தனி இலச்சினையாக மாட்டாவோ என்று இங்கே பலர் வினாவுதல் இயல்பு. ஆனால், சிலப்பதிகார மணிமேகலை வகையிலும் சங்கப் பாடல்கள் வகையிலும் வள்ளுவர் கால வரையறை செய்ய இவை பயன்படாதது காண்டல் வேண்டும். சொல் நயம், பொருள் திட்டம் ஆகியவை ஒப்புவமை மூலம் காட்டக்கூடுமானால் மேற் குறிப்பிட்ட தொல்காப்பிய-திருக்குறள் ஒப்புவமையிலும் அதை எவரும் காணமுடியும். சொல் நயத்தில் தொல்காப்பியர் திருவள்ளுவர்க்குக் குறைந்தவரல்லர். திட்பத்தில்கூடத் திருவள்ளுவருடன் ஒப்பிடக்கூடிய ஒரு தமிழ்ப் புலவர் உண்டென்றால் அது தொல்காப்பிய ஆசிரியரே. ஆயினும், தொல்காப்பியத்தின் இந்த நூற்பாவின் நயமும் திட்பமும் தொல்காப்பியத்தின் வேறு எந்தச் சூத்திரத்திலும் காணாத ஒன்று. அதன் தனிச் சுவையும் திட்பமும் திருவள்ளுவர் இலச்சினை பெற்றதன்றாயின், வேறு எதுவும் அது பெற்றதல்ல என்னலாம்.
வள்ளுவர் தொல்காப்பியர்க்கும் முற்பட்டவர் என்பது உணரப்பட்டால், சிலப்பதிகார மணிமேகலைகள் அவர்க்குத் தந்த பழம் புகழ்ச்சிறப்பின் அருமையை நாம் முற்றிலும் காண்பவராவோம். நமக்குக் கம்பர் எவ்வளவு முற்பட்டவரோ, அவ்வளவு கம்பர்க்கு முற்பட்ட பெருமை, பழைமை உடையவர்கள் இளங்கோவும் சாத்தனாரும், சங்கப் புலவராகிய கபிலரும் ஒளவையாரும். அதே சமயம் அந்த இளங்கோவும், சாத்தனாரும் நமக்கு எவ்வளவு தொலைப் பழைமையும் பெருமையும் உடையவரோ, அவ்வளவு அவர்களுக்குத் தொல்காப்பியரும் தொல்காப்பியர்க்கு வள்ளுவரும் பழைமையானவராயிருத்தல் கூடும்.
இக் கோட்பாட்டை வருங்கால ஆராய்ச்சிகள் தெளிவுபட நிலைநாட்டக் கூடுமானால், சங்க இலக்கியம் ‘திருவள்ளுவர்’, ‘குறள்’ என்ற பெயர்களைக் கையாளாமைக்கும் ‘அறம்’, ‘பொய்யில் புலவன்’ என்ற பெயர்களையே கையாண்டமைக்கும் உள்ள வரலாற்றுக் காரணம் ஒளி பெறக் கூடும். ‘முப்பால்’, ‘அறம்’, ‘தமிழ் வேதம்’, ‘பொய்யா மொழி’ முதலிய நூலின் புகழ்ப் பெயர்களுடன் ‘குறள்’ என்ற பெயரும் ‘பொய்யில் புலவன்’ , ‘தெய்வப் புலவன்’, ‘செந்நாப் போதார்’ முதலிய புகழ்ப் பெயர்களுடன் ‘திருவள்ளுவர்’ என்ற பெயரும் ‘திருவள்ளுவ மாலை’ என்ற தொகுப்பு ஏட்டிலேயே தெளிவாகக் காணப்படு கின்றன. சங்க காலத்தில் நூற்பெயரும் ஆசிரியர் பெயரும் பல புகழ்ப் பெயர்களாகவே வழங்கி, ‘திருவள்ளுவர்’ ‘குறள்’ என்ற பெயர்கள் கடைச்சங்க காலத்தில், சங்கத்திலேயே அளிக்கப் பட்டன ஆகலாம். வள்ளுவமாலை சங்க காலத்ததெனில் அத் தொகுப்புத் தொடங்கியதற்குரிய காரணமும் இதுவேயாகக் கூடும். ஏனெனில், உக்கிரப் பெருவழுதியின் அவையில் திருவள்ளுவர் திருக்குறளை அரங்கேற்றினார் என்ற கதை மரபுக்கு உக்கிரப் பெருவழுதியின் காலமோ சங்கப் பாடல்களின் சூழலோ சிறிதும் இடம் தரவில்லை. ஆசிரியர் இயற்பெயரும் நூற்பெயரும் நீணாள் வழக்கால் மறைவுற்று, மக்களிடையே பொதுப் பெயரால் பரவி வந்த ஒரு பழைய நூலுக்கும், நூலாசிரியருக்கும் சங்கப் புலவர் சுட்டுப் பெயர்களிட்டு, அதனை அவ்வக்காலப் புலவர்களால்கூடச் சிறப்பித்திருத்தல் கூடும்.
‘அறம், பொருள், இன்பம்’ என்ற பாகுபாடும் தொல்காப்பியத்துக்கு முற்பட்டது. ‘அறம், பொருள், இன்பம், வீடு’ என்ற பாகுபாடும் அத்தகையதே. அவற்றை முத்தமிழின் இலக்கியங்களும் பயனாகக் கொள்பவையேயன்றி வகுத் துரைப்பவை அல்ல. அங்ஙனம் வகுத்துரைக்கும் நூல், அறிவு நூல், மறை நூல் அல்லது வேத உரையின் பிற்பட்டனவாகத் தொல்காப்பியர் காலமுதல் சங்ககாலம் வரை கருதப்பட்டு வந்ததாதல் வேண்டும். முத்தமிழ் இலக்கியத்தில் இடம்பெறாத அத்தனி முதல் நூலும் பின்னாளில் நல்லிலக்கியங்களுள் ஒன்றாகப் பேணப்படத் தொடங்கிய பின்னர், அது போன்ற பிற நூல்களும் எழுந்து அவை திருக்குறளுடன் சேர, இலக்கியத்துக்குப் புறம்பாகக் ‘கீழ்க்கணக்கு அல்லது சில்லறை நூல்கள்’ என்று தொகுக்கப்பட்டிருத்தல் சாலும். இங்ஙனமில்லாவிடில் ‘கீழ்க்கணக்கு’ என்னும் சொல் பொருளற்ற சொல் ஆகும். பின்னாளைய இலக்கணங்கள் ‘மேற்கணக்கு’, ‘கீழ்க்கணக்கு’ என்ற தொடர்களுக்குத் தரும் இலக்கணம் பொருந்தாக் கூற்றும் முரண்பட்ட கூற்றுமாகும்.
திருக்குறள் போன்ற ஒரு முழு முதல் நூலே தமிழர் மறை நூலாக இருந்திருக்க வேண்டுமென்றும், அதனையே பண்டைய இலக்கணங்கள் முதனூலாகச் சிறப்பித்தன என்றும், அது சார்ந்த துணை நூல்களே மெய்ம் மொழி (ஆகமம்), பட்டாங்கு (மெய்ந்நூல், சாத்திரம்) என வழங்கப்பட்டன என்றும்; இவை அழிந்துபட்டபின் திருக்குறளும், திருமந்திரமும், பின்னாளைய மெய்ஞ்ஞான நூல்களும் மரபு வழி நின்று அக் கருத்துரைகளைத் தொகுத்தன என்றும் ஆசிரியர் மறைமலையடிகள் கருதியுள்ளார். இக் கருத்துத் தவறன்று என்பதைப் பரந்த தமிழ்-சமற்கிருத சமய நூல் இலக்கிய ஒப்புவமை ஆராய்ச்சிகள் நிலைநாட்ட வல்லன. ஏனெனில், பிற்கால சமற்கிருத இலக்கியங்களிலும் புராண இதிகாசங்களிலும், பிற்காலத் தமிழ்ச் சமய நூல்களிலும் காணும் கருத்துகளை அவற்றுக்கு முற்பட்ட தமிழ் இலக்கியத்திலே பலவிடங்களில் பரக்கக் காணலாகும். ஆனால், திருக்குறள் அம் முதல் நூல்களின் வழிவந்த தொன்றன்று; அஃது ஒரு முதல் நூலேயாகும்.
இக் கருத்தை வலியுறுத்தும் பல்வேறு செய்திகளை, வரும் இயல்களில் காண்போம்.
வள்ளுவர் சமய ஒளி
‘எல்லாப் பொருளும் இதன்பா லுளவிதன்பால்
இல்லாத எப்பொருளும் இல்லையால்!’
என்று மதுரைத் தமிழ் நாகனார் என்பாரும்,
‘கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்’
என்று இடைக்காடர் என்ற புலவரும் திருக்குறளைச் சிறப்பித்ததாகப் பழைய ஏட்டுத் தொகுப்புகளிலுள்ள பாடல் களால் அறிகிறோம்.
மனித இனம் சிந்தித்த, சிந்திக்கிற, சிந்திக்க இருக்கும் சிந்தனைகள் ஒன்று விடாமல் - குடும்பம், சமுதாயம், அரசியல், சமயம் ஆகிய பல்வேறு வகைப்பட்ட வாழ்க்கைப் பகுதிகள் பற்றிய செய்திகள் எல்லாம் - உச்ச உயர் முறையில் திருக்குறளில் இடம் பெற்றுள்ளன. இதை - இன்றன்று - மிகப் பழங் காலத்திலேயே தமிழர் கூர்ந்து கண்டுணர்ந்தனர். மேற் குறிப்பிட்ட பழம் பாடல்கள் இதைக் காட்டுகின்றன.
எல்லாச் செய்திகளையும் கூறுவது மட்டுமல்ல, எல்லாச் செய்திகளையும் எல்லாரும் ஏற்கும்படி, வரவேற்கும்படி, ஆர்வமாகப் பாராட்டி உச்சி மேற்கொள்ளும்படி தெள்ளத் தெளியக் கூறுவது திருக்குறள். மொழி வேற்றுமை, நாட்டு வேற்றுமை, இன வேற்றுமை, பண்பாட்டு வேற்றுமை, நாகரிக வேற்றுமை, கோட்பாட்டு வேற்றுமை, இவை எல்லாவற்றையும் கடந்த இணக்கத்தை அது கண்டுள்ளது. இவை பெரிதல்ல. இவை எல்லாவற்றையும்விட மனித இனத்தை அலைக்கழித்த வேறுபாடு சமய வேறுபாடே. உலகில் பழஞ் சமயங்களும் உள்ளன. புதுச் சமயங்களும் உள்ளன. தமிழகங் கண்ட, கீழ்த்திசை கண்ட சமயங்கள் உண்டு. மேல் திசை கண்ட சமயங்கள் உண்டு. இவை எல்லாமே ‘எம் சமயத்துக் குரியது,’ ‘எம் சமயத்துக்கே உரியது’ என்று இத் திருநூலை ஏற்க முந்துகின்றன. எதிலும் எளிதில் ஒவ்வாச் சமயங்கள், இஃது ஒன்றில் எளிதில் ஒத்த பண்பு காட்டுகின்றன.
இந் நிலை வியத்தற்குரியது, ஆழ்ந்து சிந்திக்கச் சிந்திக்க இந் நிலை மலைப்புக்குரியதேயாகும்.
தமிழர் இவ்வுண்மையையும் பழங்காலத்திலேயே கண்டுள்ளனர். மிகப் பழைமை வாய்ந்த சமயப் பெரியாரான கல்லாடர் பெயரால் இயலும் பாடல் ஒன்று இதை அழகு நயம்படக் குறித்துள்ளது.
‘ஒன்றே பொருள்எனின் வேறுஎன்ப வேறுஎனின்
அன்றுஎன்ப ஆறு சமயத்தார் - நன்றுஎன்ன
எப்பா வலரும் இயைபவே, வள்ளுவனார்
முப்பால் மொழிந்த மொழி,’
குறுகிய குறட்பா. சொற்கள் சில. பொருள்களோ பல. எல்லாப் பொருளும் அடங்குவன. இது மட்டுமோ? அவற்றை எல்லாரும் ஏற்கும்படி, எல்லாச் சமயத்தாரும் வரவேற்கும்படி கூறினார்! இஃது எப்படி முடிந்தது? எப்படி முடியும்?
மேலை உலகு நடுவுநிலை கண்ட உலகுதான். ஆனால், அதன் நடுவு நிலை வாணிக நடுவுநிலையே, தமிழகமும் கீழ்த்திசை உலகும் பண்டிருந்தே நடுவுநிலை பயில்வதுதான். ஆனால், இஃது ஒப்பு நடுவுநிலையே.
‘வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம், பேணிப்
பிறவுந் தமபோற் செயின்!’
- குறள் 120
என்று வாணிக நடுவுநிலையையும்,
‘ஒப்புரவி னால்வரும் கேடெனின், அஃதொருவன்
விற்றுக்கோள் தக்கது உடைத்து’
- குறள் 220
என்று ஒப்புரவு நடுவுநிலையையும் வள்ளுவரே சிறப்பித்துள்ளார். ஆனால், வள்ளுவர் கண்ட நடுவுநிலை வாணிக நடுவுநிலையன்று. ஒப்புரவு நடுவுநிலையுமன்று. அஃது இவை கடந்த இவற்றுக்கு எட்டாத ஓர் உயர் பண்பு.
வாணிக நடுவுநிலை தன்னலக் குறிக்கோளுடையது. ஆனால், இத் தன்னலம் அறிவுடைத் தன்னலம். தொலை அறிவுடைத் தன்னலம். வள்ளுவர் இந்த வாணிகப் படியில் உள்ளவர்க்கு இதனைப் பரிந்துரைக்கத் தயங்கவில்லை. முந்திய குறட்பா இத்தகையது. “நீ உன் பொருளை நன்கு பேணுபவனா? பெருக்க நாடுபவனா? நல்ல வாணிகனா? சரி அப்படியானால் உனக்கு ஒரு நல்ல வாணிக முறையையே கற்றுத்தருகிறேன். பிறர் பொருள்களை உன் பொருள்கள் போலப் பேணிப் பார்! உன் வாணிக முறையால் வரும் ஆதாயம் இரட்டிப்பதை, பெருகுவதை நீ காணலாம்” என்று அவர் வணிக அறிஞன் போலவே பேசுகிறார். ஆனால், இரண்டாவது குறட்பா இன்னும் ஓர் உயர்ந்த படிக்கு நம்மை இட்டுச் செல்கிறது. இன்னும் உயர்வுடைய ஒரு பண்பை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. “ஒப்புரவினால் கேடுவருவது அருமை. ஆனால், வரக்கூடும் என்று ஐயுறுகிறாயா? சரி. அப்படி வந்துவிட்டால்கூட என்ன கெட்டுவிடும்? கேட்டிலெல்லாம் பெரும் கேடு, தன் உடைமைகளை விற்பதல்ல, தன்னை விற்பது. அப்படித் தன்னை விற்றுக்கூடப் பெறத்தக்கதே ஒப்புரவு. ஏனெனில், உயிர் போனாலும் உயிரினும் மேலான, நிலையான புகழை அது தருவதாகும்! எனவே, தயங்காது ஒப்புரவு நாடு!” என்று ஊக்குகிறார். புகழ் வேட்டைக் கலத்து அறிஞர் போல! ஆனால், வள்ளுவர் கண்ட நடுவுநிலை-சமய நடுவுநிலை, வாழ்க்கை நடுவுநிலை—இவ்விருவகை நடுவுநிலைகளிலிருந்தும் எத்தனையோ படி உயர்வுடையது.
வள்ளுவர் பெருமையை அறியாதவரல்லர், அவர்க்கு உச்ச உயர்வு தாராதவரல்லர் - பரிமேலழகர்! ஆனால், அவர் வள்ளுவர் நடுவுநிலைப் பண்பை வாணிக நடுவுநிலையாகவே காண்கிறார்.
அறம் என்பது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என்ற முப்பாற் பாகு பாடுடையதென்று பரிமேலழகர் கொள்கிறார். வள்ளுவர் ஒழுக்கம் மட்டுமே கூறுவதாகக் கண்டு, அதற்குத் தம் விளக்கம் தருகிறார்.
“வழக்கும், தண்டமும் உலக நெறி நிறுத்துதற் பயத்தவாவ தல்லது. ஒழுக்கம் போல மக்கள் உயிர்க்கு உறுதி பயத்தல் சிறப்பில வாகலானும்; அவை தாம் நூலானேயன்றி உணர்வு மிகுதியானும் தேய இயற்கையானும் அறியப்படுதலானும், அவற்றை ஒழித்து ஈண்டுத் தெய்வப் புலமைத் திருவள்ளுவரால் சிறப்புடைய ஒழுக்கமே அறமென எடுத்துக் கொள்ளப்பட்டது.”
- திருக்குறள்; பரிமேலழகர் உரைப்பாயிரம்
இங்கே பரிமேலழகர் தமிழ் மொழிக்குக் கொடுத்த மதிப்பைவிட, திருவள்ளுவர்க்குக் கொடுக்கும் மதிப்பே பெரிது என்று எளிதில் காணலாம். சமற்கிருத மொழி தெய்வ மொழி என்று அவரால் கருதப்பட்டது. ஆயினும், அத் தெய்வமொழியில் அறத்துடன் வழக்கும் விரவி எழுதிய மனு, ஆபத்தம்பர், கோதமர் முதலானோர் சமயப் பெரியாராயினும் மனிதப் புலமை உடையவரே. நேர்மாறாகத் தமிழ் மொழி மனித மொழியே யானாலும், அதில் அறம் வகுத்த திருவள்ளுவர் தெய்வப் புதல்வர், இங்ஙனம் மொழி தாழ்ந்ததானாலும் புலவர் தெய்வத்தன்மை உடையவர் என்பதைப் பரிமேலழகர் ஒத்துக்கொள்கிறார்—- சிறிது பெருமையுடனே சுட்டிக்காட்டு கிறார்! ஆயினும், பரிமேலழகர் கண்ட சமயமும் வாணிகச் சமயம். அவர் கண்ட தெய்வமும் வாணிகத் தெய்வமே. அது மட்டுமன்று, அவ் வாணிகமும் திருவள்ளுவர் குறட்பாவில் மேலே சுட்டிக் காட்டிய பண்புடை வாணிகமன்று. தமிழ் வாணிகப் பண்பன்று. எனவே, திருவள்ளுவர் தெய்வப் புலமையையும் ஒரு வாணிகத் தெய்வப் புலமையாகவும், நடுவுநிலை யையும் ஒரு வாணிக நடுவுநிலையாகவும் அவர் கருதுவார்.
பரிமேலழகர் கருத்துப்படி, திருவள்ளுவர் தேசந்தோறும் மாறுபடும் வழக்கும், தண்டமும் விட்டு, எல்லா நாடுகளுக்கும் உரிய ஒழுக்க முறையையே மேற்கொண்டார். அத்துடன் எத்தேசத்திலும் நூல் அறிவும் உணர்வு மிகுதியும் உடைய ஒரு சிலர்க்கே உரிய பண்புகளை ஒதுக்கி, எல்லாத் தேசங்களின் எல்லா மக்களுக்கும் உரிய பொதுப் பண்பை வகுத்தார். இவ் விளக்கம் முழுவதும் சரியானால் திருவள்ளுவர் சிறப்பு, நன்மையும் தீமையும் கலந்த உரைகளில், தீமை விலக்கி நன்மை மிளிரச் செய்வதே நாம் கொள்ளுதல் வேண்டும். ஆனால், இக் கருத்து முற்றிலும் சரியன்று. ஏனெனில், திருவள்ளுவர் சமய நடுவுநிலையை ஒரு சிறிதும் விளக்காது, திருவள்ளுவர் கருத்துகளின் தனி முதன்மை, தனிச்சிறப்பு ஆகியவற்றையும் அது கருத்திற்கொள்ளவில்லை என்பது தெளிவு.
வாணிக முறைச் சமயம், வாணிக முறை ஒழுக்கம் கடந்து நெடுந்தொலை சென்றவர் தமிழர்.
‘இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும்
அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்’
- புறம். 134
என்ற உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் சங்கப் பாடல் இவ் வாணிக முறை அறத்தைக் கடிந்துள்ளது. ‘மேல் உலகம் இல்லெனினும் ஈதலே நன்று’ என்று கட்டுரைத்த வள்ளுவர்க்கும், வாணிக முறைச் சமய வாணர்க்கும், அறவாணர்க்கும், இடையேயுள்ள தொலை எட்டா நெடுநீளத் தொலை என்று கூறத் தேவையில்லை.
தற்காலத் தமிழரும் அறிவுலகத்தாரும் திருவள்ளுவர் நடுவுநிலையை ஒப்புரவு நடுவுநிலையாகவே கொள்கின்றனர் என்பதில் ஐயமில்லை. சமய வேறுபாடுகளை அவர் முனைப் பாகக் கூறவில்லை. எல்லாச் சமயங்களுக்கும் பொதுவான அடிப்படை மூலக் கருத்துகளை அவர் வலியுறுத்தி விளக்கி யுள்ளார். அவர் நடுவுநிலையின் தன்மையும், தனிச்சிறப்பும் இதுதான் என்று பலரும் எண்ணுகிறார்கள்.
நடுவுநிலைப் பண்பின் பொதுவிளக்கம் என்ற முறையில் இக் கருத்துப் பெரிதளவு சரியே. அதனால், திருவள்ளுவர் நடுவுநிலைப் பண்பையோ அவர் தனிச்சிறப்புகளையோ இஃது ஒரு சிறிதும் விளக்கப் போதாது. ஏனெனில், அவர் கருத்து அவர் காலத்தனவென்று கொள்ளப்படும் பழஞ் சமயங்களுக்கு மட்டும் பொதுவன்று, அதற்குத் தெளிவாகப் பிற்பட்ட இசுலாம் போன்ற சமயங்களுக்கும், கீழ்த்திசைக்குத் தெளிவாகப் புறம்பான கிறித்தவ நெறி போன்ற சமயங்களுக்கும் பொதுவேயாகும். ஷ்வைட்சர் சுட்டிக்காட்டுகிறபடி, அவர்க்கு முற்பட்டனவென்று பொதுவாகக் கருதப்படும் சமயங்களில்கூட, பின்னாளைய மாறுபட்ட கோட்பாடுகள் அனைத்துக்கும் அது பொதுவாகவே அமைந் துள்ளது. இவற்றை ஒப்புரவு நடுவுநிலை விளக்கம் தெளிவுபடுத்துவதாகக் கொள்ள முடியாது.
இரண்டாவதாகத் திருவள்ளுவர் பொதுமையின் சிறப்பு அது விலக்குவன விலக்கி, கொள்வன கொள்வதில் மட்டும் அமைவதன்று. ஏனெனில், அவர் விலக்குவன எல்லாச் சமயங்களும் விலக்குவனவே. எல்லாச் சமயங்களும் வள்ளுவரை ஏற்பதுடன் நில்லாது, ஆர்வமாக ஏற்பதன் மறைதிறவு, இதுவே. அத்துடன் கொள்பவற்றையும் வாளா கொண்டமைந்தவரல்லர் திருவள்ளுவர். அவற்றுக்கு அவர் தரும் விளக்கம், அவற்றிடையே அவர் காணும் தொடர்பு அவற்றின் எல்லாக் கூறுகளையும் வாழ்க்கையுடன் இணைத்துக் காணும் அவர் திறம் ஆகிய பல ஆக்கப் பண்புகள் சமய முதனூல்களுக்கெல்லாம் ஒப்புயர்வற்ற ஒரு விளக்க உரையாய் அமைவன. நம்பிக்கை அடிப்படையாகச் சமயங்கள் வலியுறுத்தும் பண்புகளுக்கெல்லாம் அவர் பகுத்தறிவு அடிப்படையான காரணம் கூறுகிறார். சமயவாணர் ஒவ்வொரு வரும் அவரை ‘எம் சமயத்துக்குரியவர்’, ‘எம் சமயத்துக்குரியவர்’ என்று கூறுவது இதன் அருமை நோக்கியேயாகும்.
மூன்றாவதாக, எந்தச் சமய முதல்வரும், எந்த அறநூலாரும், எந்த அறிஞரும், முன்னோ, பின்னோ, சமகாலத்திலோ காட்டாத முறையில், இன்னும் திருக்குறள் உரையாசிரியரால், வாசகர் களால் முற்றிலும் தனிப்பட உணரப்படாத முறையில், அவர் மனித இனத்தில் நாகரிகப் பண்புகள், கருத்துகள், வாழ்க்கைப் பண்புகள், கலைப்பண்புகள் ஆகிய எல்லாவற்றையும் ஒரே வாழ்க்கைக் கோட்பாட்டின் அடிப்படையில் இணைத்துக் காட்டுகிறார். உலகெலாம் ஒருங்கிணைத்து ஆராய்ச்சியறிவு களையெல்லாம் ஒருங்கு தொகுத்து விளக்கம் நாடும் மெய் விளக்க அறிஞரால்கூட, வள்ளுவர் கண்ட ஒருமைப்பாட்டைக் காண முடியாது. இதை நோக்க, வள்ளுவர் நடுவுநிலை சமய நடுவு நிலை மட்டுமன்று, வாழ்க்கைக் கோட்பாடுகளனைத்தையும் இணைக்கும் வாழ்க்கை நடுவுநிலை மட்டும்கூட அன்று, ஷ்வைட்சர் காட்டுகிறபடி அதுவே சமயங்களின் பொருளிழந்த நம்பிக்கைக் கோட்பாடுகளுக்கெல்லாம் பொருள் காட்டி விளக்கும் மூலக் கோட்பாடு ஆகும். வாழ்க்கைக் கோட்பாடுகளின் நோக்கம், செயல், தொடர்பு மறக்கப்பட்டு மயக்கம் தரும் குருட்டுத்தனங்களுக்கெல்லாம், திருக்குறள் கண்ணளித்து உயிர்ப்பூட்டும் உயிர் முதல் ஆகும்.
வள்ளுவரிடம் சமயக் கோட்பாடு வேறு; வாழ்க்கைக் கோட்பாடு வேறு என்ற நிலை கிடையாது. அவர் சமயக் கோட்பாடு அவர் வாழ்க்கைக் கோட்பாடே! அதுபோல அவரிடம் சமுதாயக் கோட்பாடு வேறு, அரசியல் கோட்பாடு வேறென்பது கிடையாது. இன்பக் கோட்பாடு வேறு, அறிவுக் கோட்பாடு வேறு, அறக் கோட்பாடு வேறென்பதும் கிடையாது. சமயம், வாழ்க்கை; சமுதாயம், அரசியல்; இன்பம், அறிவு, அறம் ஆகிய எல்லாம் வள்ளுவரால் ஒரே மனித நாகரிகக் கோட்பாடாக அழகுபட யாத்தமைக்கப்பட்டுள்ளன.
சமயம் என்றால் என்ன? சமுதாயம் என்றால் என்ன? அரசியல் எவ்வாறு இருத்தல் வேண்டும்? அறிவுக்கும், இன்பத்துக்கும், அறத்துக்கும் உள்ள தொடர்பு யாது?
கடவுள் ஒருவர் உண்டா, இல்லையா? உண்டென்றால் நம் வாழ்க்கைக்கும் அவர்க்கும் உள்ள தொடர்பு யாது?
பிறப்பு, இறப்பு என்றால் என்ன? ஏன் பிறக்கிறோம்? ஏன் இறக்கிறோம்? உயிர் என்றால் என்ன? மறுபிறப்பு, மேல் உலகம், கீழ் உலகம் ஆகியவை உண்டா, இல்லையா? உண்டென்றால் அவற்றின் விளக்கம் யாது?
அழகு, மெய்ம்மை, நன்மை இவற்றின் தன்மை என்ன? தொடர்பு யாது?
உணர்ச்சி, அறிவு, உணர்வு ஆகியவற்றின் தொடர்பு யாது?
சாவா வாழ்வின் மறைதிறவு யாது?
அறிஞர்களால், சமயங்களால், கலைஞர்களால் கிட்டத் தட்ட விடை காணமுடியாத கேள்விகளாகவே இவை இன்று கூட இயல்கின்றன. ஆனால் இத்தனைக்கும் விடை விளக்கங்கள் திருக்குறளில் உள்ளன. தமிழ்மொழி அறியாமல் தமிழர் அறிந்த அளவுகூடத் தமிழக வரலாறும் தமிழ் இலக்கிய வரலாறும் அறியாமலே தொலை தூரத்திலேயிருந்து மொழி பெயர்ப்புக் கண்ணாடி மூலம் திருக்குறளில், இவற்றில் சிலவற்றையேனும் ஷ்வைட்சர் கண்டுள்ளார். நாமும் இனிக் காண இருக்கிறோம். ஆனால், ஷ்வைட்சரின் விளக்கத்தை வரலாற்று மொழியில் மொழி பெயர்ப்பதானால் அப்போது தான் நமக்கு அதன் முழு உண்மை விளங்கும் —-முழுப் புரட்சிகரமான மெய்ம்மை வெளிப்படும்!
சமயங்கள் ஏற்பட்டபின் அவற்றிடையே நடுவுநிலை கண்ட நடுவுநிலை ஞானியரல்லர் திருவள்ளுவர். அவர் கண்ட நடுவுநிலையே உலகில் பல சமயங்களாகப் பரவியுள்ளன. சமயங்கள், தம் கோட்பாடுகளின் தேசகால வேறுபாடுகளை நீக்கி அடிப்படை ஒருமையைப் பின்பற்றியே தேசகாலங்களுக் கிடையில் உலகச் சமயங்கள், தம் கோட்பாடுகளை வளர்த்து வந்தன; வளர்த்து வருகின்றன; வளர்த்துவரும்!
மனித இன நாகரிகத்துக்கு, சமய உலகுக்கு வள்ளுவர் ஒரு நூலாசிரியரல்லர். அறிஞர், கவிஞர், கலைஞர் அல்லது அறவோர் அல்லர்; சமய முதல்வர்கூட அல்லர். இத்தகையவர் அனைவர்க்கும் முற்பட வாழ்ந்து தம் காலங்கடந்த, தேசங்கடந்த அறிவால், இத்தகைய அனைவர்க்கும் மூல முதல்வராய், தோன்றாத் துணைவராய் இருந்து, வரலாற்றில் வாழ்ந்த ஒரு தெய்வமாய் இயங்கியவரே திருவள்ளுவர். அவர் தெய்வத் திருநூலே, காலத்தூசி படிந்த நம் தமிழ் மொழியில் புதையுண்டு கிடக்கிறது.
வள்ளுவரிடம் சமணக் கருத்துகள், புத்தக் கருத்துகள் உண்டு, ஆனால் சமண, புத்தக்கருத்துகளறிந்து அவர் நடுவுநிலை உண்மை கூறியவரல்லர். ’அவர் கருத்துகளே சமண, புத்த சமயங்களாகப் பின்னாள்களில் இயல்பாக வளர்ந்தன. அவரிடம் சைவ, வைணவக் கருத்துகள் காணப்படுவது இயல்பு. ஏனெனில், அவர் கருத்துகளே சைவ, வைணவ சமயங்களாக வளர்ந்தன. கிறித்தவ இசுலாமியச் சமயங்களுள் அவர்க்குத் தொடர்பு உண்டு. ஏனெனில், அவர் கருத்துகளின் தொலை ஒளிகளாகவே அவை தோன்றி வளர்ந்தன.
தமிழர் திருக்குறளைப் போற்றிப் புதைத்து வைத்த பின்னும் அஃது இன்று உலகில் புகழொளி வீசியுள்ளது. சமயங்களை யெல்லாம் வளர்த்து வந்துள்ளது. பண்டிருந்து இன்றுவரை! ஆனால், உலகம் அதனைத் தங்கு தடையின்றிக் காணும்படி தமிழகம் திருவருள் பாலித்திருந்தால், இனியேனும் பாலிக்கக் கூடுமானால்கூட, உலகில் அது சமய ஒளி மட்டுமன்றி, முழு நாகரிக ஒளியே பரப்பியிருக்கும்; பரப்பும். ஏனெனில், அரசியல் துறையில் கிரேக்க அறிஞர் பிளேட்டோ முதல் இன்றைய குடியாட்சிப் பொதுவுடைமைவாத முதல்வர்கள் வரை எழுப்பியுள்ள விடைகாணாச் சிக்கல் வினாவுக்கெல்லாம் திருக்குறள் விளக்கம் அளித்திருப்பது உறுதி. அது மட்டுமன்று, அவர்களிடையே ஒற்றுமை விளைத்திருக்கவும் முடியும். ஏனெனில், சமயத்துறைக் கருத்துகளுக்கும் மூல முதல்வர் திருவள்ளுவரே. சமயம், அரசியல் ஆகிய இத் துறைகளில் மட்டுமன்றி, சமுதாயம், கலை, காதல் ஆகிய துறைகள் எல்லாவற்றிலும் வள்ளுவர் அறிவே உலகின் மூல முதல் அறிவு-வள்ளுவர் விளக்கங்களே இன்னும் நீண்டநாள் அவற்றின் தொலை விளக்கமாகவும் இருக்க முடியும். ஏனெனில், வள்ளுவர் கோட்பாடு இவ்வெல்லாத் துறைகளையும் ஒரே துறையாக்கும் ஒப்பற்ற உயர்வுடையது. வள்ளுவர் உதவியின்றி அதே முடிவு காண நம் உலகுக்கு - கீழை உலகானாலும்சரி, மேலை உலகானாலும்சரி —-இன்னும் எத்தனை எத்தனையோ பன்னூற்றாண்டுகள் தேவைப்படக்கூடும்.
வள்ளுவரின் திருக்குறளை உலகச் சமயங்களின் முதல் நூல் என்று கண்டு, அம் முறையில் அதற்கு நேரிய உரைகண்டால், அதனால் சமயங்களுக்கு ஆதாயம் உண்டு. ஏனெனில், அது சமய வேறுபாடுகளை இணைக்கும், சமய வரலாற்றை விளக்கும். பகுத்தறிவாளர் ஆதரவு பெற முடியாமல் வலிமையிழக்கும் சமய வாழ்வில், பகுத்தறிவு விளக்கம் மூலம், பல கூறுகள் ஒளியும் வலிமையும் பெறும். இது போலவே உலக நாகரிகத்தின் மூல முதல் நூல் திருக்குறள் என்று கொண்டு அதற்கு உரை விளக்கங்கள் வகுக்கப்படுமானால், அதனால் உலகுக்கும், உலக நாகரிகத்துக்கும் ஆதாயம் உண்டு. ஏனெனில், உலக நாகரிகத்தின் இன்றுள்ள சிக்கல்கள் நீக்கி, அதை விரைந்து நெடுந்தொலை கொண்டு செல்லும் ஆற்றல் திருக்குறளுக்கு உண்டு.
சமயத் துறை வேறு, உலகியல் வேறு என்று கொண்டனர் இடைக்கால சமற்கிருதவாணர். தற்கால மேலை உலகின் கருத்தும் இதுவே. ஆனால், பண்டைத் தமிழரும் சீனரும் இவ்வாறு கருதியதில்லை. இதனாலேயே மேலையுலகில் சமயத்துறை முன்னேற்றம் கீழை உலகைப் போலவே பிற்போக்கடைந்து இருப்பினும், உலகியல் வாழ்வு நெடுந்தொலை முன்னேறத் தொடங்கியுள்ளது. சமயத்துறை என்பது அகவாழ்வு, வாழ்வின் நீண்டகாலத் திட்டம் அல்லது பண்பு என்பது உணரப்படாத நிலையில், இம் முன்னேற்றம் சூழ் வனமற்ற நிலத்தின் புல் வளர்ச்சி தழை வளர்ச்சியாகவே அமைந்து விடுகிறது. வள்ளுவர் காட்டிய முழுவாழ்க்கை ஒளியறிந்து முன்னேறக் கூடுமானால் மேல் திசை மட்டுமன்றிக் கீழ்த் திசையும் வருங்காலத்தில் வளமான வளர்ச்சி காண வழி ஏற்படும்.
வரலாற்றுக்கு முற்பட்ட - அழிந்து போன நாகரிகங்கள் திருவள்ளுவரைப் போன்ற ஒரு தெய்வ அறிஞரைப் பெற்று, அவரை உணர்ந்து, அவர் வழி நின்றிருக்கக் கூடுமானால், அவை ஒரு நாளும் அழிந்துபட்டிருக்கமாட்டா! ஆனால், தமிழகம் அத்தகைய தெய்வ அறிஞரைப் பெற்றும் இன்னும் உணரத் தொடங்கவில்லை என்றே கூறுதல் வேண்டும்.
உலகின் அறிவு வளர்ச்சியில் நாம் பல பேரலைகளைக் காண்கிறோம். ஒவ்வோர் அலைக்கும் காலமய்யமும் தேசமய்யமும் உண்டு, அக் காலத்திருந்தும் தேசத்திலிருந்தும் அஃது எல்லையற்ற காலமளாவ, உலகமளாவப் பரப்புபவை. இத்தகைய அலைகளில் நம் காலத்தில் காந்தியடிகள், டால்ஸ்டாய் ஆகியோர் எழுப்பிய அலைகளே பெரியன. ஆனால், காந்தியடிகளும் டால்ஸ்டாயும் அருளாளர் வழி வந்த அருளாளரேயாயினும், தம்காலச் சூழ்நிலையை மாற்றியமைக்கும் ஆற்றல் அவர்களிடையே குறைவு. அதன் கோளாறுகளைக் கண்டு விளக்குவதிலும் அவர்கள் காலத்தை ஊடுருவ முடியவில்லை. ஆற்றலில் அவர்களை விஞ்சிய கார்ல்மார்க்சு சூழலிலிருந்து தம்மைப் புறமாக்க முடியாது சூழலில் சிக்குண்டனர் என்னலாம். ஆகவே, அவராலும் சூழலை மாற்றியமைக்க முடியாது போய்விட்டது. இம் மூவரும் எழுப்பிய கால அலைகள் இதன் பயனாகச் சிற்றலைகளாகவே இயங்கியுள்ளன.
உலகில் பேரலை எழுப்பிய முதல்வர்களுள் கடைசி யானவர்கள் முகமதுவும் இயேசுவுமே. வரலாறு இவர்களையும், இவர்கள் காலத்தையும் நன்கறிந்துள்ளது. ஏனெனில், மேலை நாகரிகத்துக்கு நேரடியான மூலமாய் அமைந்தவை, அவர்கள் இருவரும் எழுப்பிய அலைகளே. ஆனால், அவர்கட்கு முற்பட்ட அலை புத்தபிரானையும், மகாவீரரையும் அளித்தது.
முகமது நபியையும் இயேசு பிரானையும் முகப்பு மய்யங்களாகக் கொண்ட அலைகளின் தாயகம் கிட்டத்தட்ட ஒரே உலகப் பகுதியே - அராபிய உலகம் என்று இன்று வழங்கப்படும் மேலை ஆசியாவே. அது மட்டுமன்று, அவ்விரு அலைமுகப்புகளும் எழுநூறு ஆண்டுகள் இடைப்பட்டன வாயினும் உண்மையில் ஒரே அலையைச் சார்ந்தவையே. மேலும், அவ்வலை அவ்விருவருடனும் ஓய்வுற்றதேயன்றி இருவருடனும் தொடங்கியதன்று. அதன் தொடக்கம் சாலமன் தாவீது, மூசா, ஆபிரகாம் ஆகியவர்கள் காலங்களை உள்ளடக்கியது. ஆகவே, அந்த அலையின் தொடக்கம் கி.மு.1000க்கு முற்பட்டது. அஃது உலகில் கிட்டத்தட்ட மூவாயிர ஆண்டுகளுக்கு மேற்பட வீசும் ஓர் உலக அலையாகும்.
முகமது நபி, இயேசுபிரான் ஆகியோரை முகப்பு மய்யங்களாகக் கொண்ட அலைகளைப் போலவே, புத்தர்பிரானையும் மகாவீரரையும் முகப்பு மய்யங்களாகக் கொண்ட அலையும் இரண்டாயிர மூவாயிர ஆண்டுகள் வீசிய ஓர் உலகப் பேரலையாகும். ஏனெனில், கடைசி அலை உலகுக்கு யூதநெறி, கிறித்துவ நெறி, இசுலாமிய நெறி ஆகிய மூன்று நெறிகளை அளித்துள்ளது போலவே, இவ்வலையும் உலகுக்குப் புத்த நெறி, சமண நெறி ஆகிய இரு பெரு நெறிகளை அளித்துள்ளது. அது மட்டுமன்று; கடைசி அலை யூத இலக்கியம், அராபிய இலக்கியம் என்ற இரு பேரிலக்கியங்களை ஊக்கி, விவிலிய நூலாகவும், திருக்குரானாகவும் மணியுருப் பெற்றது போலவே, இந்த அலையும் தென்திசை யில் கடைச் சங்க இலக்கியம் என்று நாம் கூறும் தமிழ்ப் பேரிலக்கியத்தையும், வடதிசையில் உபநிடதங்கள் என்று சமற்கிருத வாணரால் அழைக்கப்படும் அறிவுப் பேரிலக்கியத்தையும் அளித்து, இறுதியில் புத்த பீடமாகவும், மகாவீரர் திருநூலாகவும் மணியுருப்பெற்றது.
கடைசியலை கி.பி.7ஆம் நூற்றாண்டில் ஓய்வுற்றது. அதன் தொடக்கம் கி.மு. 1000க்கு முற்பட்டது. ஆனால் புத்த, சமண —-உபநிடத அலை கி.மு. 6ஆம் நூற்றாண்டில் முடிவுற்றது. அதன் தொடக்கக் காலத்தை நாம் வரையறுக்க முடியாவிட்டாலும், அஃது இருக்கு வேதக் காலம் என்று குறிக்கப்படும் கி.மு. 1500க்கு முற்பட்டதென்று துணிந்து கூறலாம். ஏனெனில், ஷ்வைட்சரும் அறிஞர் பலரும் கண்டு கூறுகிறபடி உபநிடதங்கள் புதிய ஆராய்ச்சிகளாகத் தொடங்க வில்லை. ஆராய்ச்சியடிப்படையில் வேதங்களுக்குரிய புது விளக்கங்களாகவே தொடங்குகின்றன. அவ்வாராய்ச்சிக்குரிய அலை முகப்பு சனகர் போன்ற மன்னர்கள், அதனை உலகில் பரப்பிய அறிஞர்களே உபநிடத முதல்வர்கள். அதனடிப்படையில் வேதங்களுக்கும் வேதச் சமயத்துக்கும் புது விளக்கம் தந்தவர்களே ஆரியர் மீது மெல்லத் தம் ஆதிக்கம் பரப்ப எழுந்த ’பிராம்மணர்’என்ற புதிய பண்டைக்கால அறிவு வகுப்பார்! இவற்றைக் கருத்துட்கொண்டால் இவ்வலையின் தொடக்கம் கி.மு. 2000க்குப் பிற்பட்டதல்ல என்று ஊகமாகக் கூறலாம்.
புத்த, சமண அலைகளுக்கும் முற்பட்ட அலை உலகில் உண்டு. அதன் அலை முகப்புகளே சீன அறிவு முதல்வர் கன்பூசியஸ், பாரசீக அறிவு முதல்வர் ஜரதுஷ்டிரர் ஆகியோர். இவர்கள் காலத்தை நாம் வரையறுத்துக் கூற முடியவில்லை. ஆனால், கி.மு. 600க்கு அதாவது புத்த சமண சமயத்துக்கு நெடுநாள் முற்பட்டவர் என்றே கூறத்தகும். கன்பூசியஸ் கி.மு. 1200க்கு உரியவர் என்று சீன அறிஞர் கருதுகின்றனர். ஜரதுஷ்டிரர் காலமும் கிட்டத்தட்ட அதே அளவு பழைமையுடையதென்று துணிந்து கூறலாம். உண்மையில் இருவருமே கி.மு. 1500க்கு உரியவராகக்கூட இருத்தல் ஏலாததன்று. ஏனெனில், ஜரதுஷ்டிரர் எழுப்பிய அலையே நடு ஆசியாவில் பாரசீக ஆரியருடன் வாழ்ந்த இந்திய ஆரியரை இந்தியாவை நோக்கி வெளியேற்றிற்று!
முகமது - —இயேசு அலை கடைசி அலை. ஆயினும், அதன் தொடக்கம் புத்தர் மகாவீரர் காலத்துக்கும் முற்பட்ட தென்பது மேலே காணப்பட்டது. அதுபோலவே புத்த மகாவீரர் அலையின் தொடக்கம் உண்மையில் கன்பூசியஸ்— - ஜரதுஷ்டிரர் காலத்துக்கு முற்பட்டது என்பதை நாம் ஒத்துக்கொள்ளலாம். ஆனால், கன்பூசியஸ் - ஜரதுஷ்டிரர் அலையில், ஜரதுஷ்டிரர் - கன்பூசியசும் அலை முகப்புகளும் அலையின் ஓய்விறுதியுமேயாவர். ஆகவே, சமய உலக வரலாற்றில் நாம் காணும் உலகப் பேரலைகளுள் முந்திய பேரலை ஜரதுஷ்டிரர்- கன்பூசியஸ் அலையே என்பதில் ஐயமில்லை. அதன் தொடக்கமும் வரலாறும் இன்றும் காணாதது. உலக வரலாறு பற்றியும் சமய வரலாறு பற்றியும் வரலாற்றாசிரியர்கள் கொண்டுள்ள ஆராயாத தவறான நம்பிக்கைகள் அவற்றை மேலும் துருவி ஆராய இன்னும் தடையாகவே உள்ளன.
இந்த அலைகளின் வரலாற்றைக் காண்பதில் நமக்குள்ள இடர்ப்பாடு பெரிது. ஆனால், அதைவிட வள்ளுவர் காலமும் பண்பும் காண்பதிலுள்ள இடர்ப்பாடு இன்னும் பெரிது. உண்மையில் பண்பு காண ஷ்வைட்சர் உதவியிராவிட்டால் காலங்காணும் வாய்ப்பே நமக்கும் உலகுக்கும் என்றும் ஏற்பட்டிராது. திருக்குறள் சங்க காலத்து ஏடு, தொல்காப்பியத்துக்குப் பிற்பட்டது என்ற தமிழர் முடிபு அதை என்றென்றும் ஒளி பெறாமலே தடுத்திருக்கவல்லது. இப்போதுகூடப் பொது மக்களிடையே இன்னும் இருந்து வரும் தாய்மொழிப் பற்று ஒன்று தவிர, தமிழக அறிவுலகிலிருந்து இதுவகையில் புதிய நடுவுநிலை கோடா அறிவாற்றலை எழுப்பித் தூண்டினாலன்றி, இவ்வகையில் உலகுக்கு வேறு ‘கதி’ ஏற்படாது. ஆனால், வள்ளுவரைத் தந்த தமிழகம் ஆராய்ச்சியுலகிலும் மேலையுலகுக்கும் வழிகாட்டிக் கீழை உலகைத் தட்டி எழுப்பவல்ல ஒரு வள்ளுவ—அறிஞரை அல்லது மரபைத் தரும் என்று நாம் நம்பலாம்.
திருவள்ளுவர் காலம் எவ்வளவு பழைமையானது என்று கொள்ள முடியுமோ அவ்வளவு பழைமையானதாகக் காட்டுதல் வேண்டும் என்ற ஆர்வம் தமிழார்வலரிடையே இருப்பது இயல்பு. ஆனால், இது திருவள்ளுவர் கால ஆராய்ச்சி வகையில் இதுவரை தடையாய் இருந்து வந்திருக்கிறதேயன்றி உதவியாய் இருந்ததென்று கூறுவதற்கில்லை. ஏனெனில், முற்பட்டதென்ற ஆராய்ச்சி முடிவுகள் யாவுமே இத்தகைய ஆர்வ முடிவுகள் என்ற எண்ணத்தை இது பரப்ப ஏதுவாகிறது. தமிழினம் இன்று இருக்கும் நிலையில் இந்த எண்ணத்திலும் தமிழர்க்குக் கேடு பயப்பது எதுவுமில்லை. ஏனெனில், நல்ல பாம்பைக் கண்டு அஞ்சுபவர்கள் அவ்வினத்தின் குஞ்சுகளையும் முட்டைகளையும் இரக்கமின்றி ஒழிக்க முற்படுவதன்றி, அதே இனம், அல்லது இனத்தின் குஞ்சு அல்லது முட்டை என்று ஐயுறத்தக்க பிற உயிரினங்களையும், அவற்றின் கரு உருவங்களையும், கொன் றொழிக்க நேர்ந்துவிட்டது. இந் நிலையில் தமிழ் நாகரிகம் பிற்பட்டதென்ற முனைப்புடன் ஆராய்ச்சியில் புகும் வையாபுரியார், கே.என். சிவராஜ பிள்ளை போன்றாரது ஆராய்ச்சிகள் தமிழகத்துக்கு மிகவும் பயன் தந்த ஆராய்ச்சிகளே என்பது உறுதி. ஏனெனில், சங்க காலத்தை வையாபுரியார் ஏற்றுக்கொண்டதே தமிழக ஆராய்ச்சித் துறையில் ஒரு முதற்படி முன்னேற்றமாய் அமைந்தது. ஆனால், உலகில் அம் முடிபு அதன்பின்னும் அறியப்படவில்லை. வையாபுரியார் போன்றார் ஆள்பவர் நம்பிக்கை பெற்றவராயினும் அவரும் தமிழர்தாமே! அறிஞர் வையாபுரியார் போன்றாரும் முனைவர் உ.வே. சாமிநாதய்யர் போன்றாரும்கூடத் தமிழகத்துக்கு வெளியே தமிழராகத்தான் மதிக்கப்படுகின்றனர். அறிஞராக மதிக்கப்படுவ தில்லை. அவர்கள் முதல் பற்று சமற்கிருதமாய் இருப்பதுகூட தமிழகத்துக்கு வெளியே, தமிழில் அவர்கள் கொண்ட இரண்டாம் படியான தாய்மொழிப் பற்றை மன்னிக்கத்தக்க ஒரு குற்றமாகக் கருதப்பட உதவவில்லை!
வள்ளுவர் புத்த சமயத்தைக் கண்டிப்பதாகக் கொண்டு அவர் காலத்தை, கி.மு. மூன்றாம் நூற்றாண்டு என்று கொண்டார் அறிஞர் டி.எஸ். கந்தசாமி முதலியார் அவர்கள். இங்ஙனம் அவர் கொண்டதற்குக் காரணமான குறட்பா புலால் மறுத்தல் பற்றியதே என்னலாம்.
‘தினல்பொருட்டால் கொல்லாது உலகுஎனின், யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்’
- குறள் 256
இக் குறட்பா புத்த நெறியின் வழக்கைக் குறித்ததானால் கனிஷ்கன், மணிமேகலை காலங்களுக்குப் பிற்பட்ட பண்புக் கேடுகள் புகுந்த பிற்காலப் புத்த நெறிக்கே பொருந்துவதாகும். ஆனால், மணிமேகலையே திருக்குறளை மேற்கோளாகக் காட்டும் நூல். அறிஞர் கந்தசாமி முதலியார் புத்த சமயத் தடமுடையவை என்று காட்டக்கூடும் மற்றக் குறட்பாக்கள் சில உண்டு. ஆனால், அவை புத்த நெறியினரே திருக்குறள் தம் சமயத்துக்குரியதென்று சொல்வதற்கு மூலக் காரணமான குறட்பாக்கள் மட்டுமே. எனினும், அதே வகைக் கருத்துகளைப் புத்தர் மட்டுமன்றிச் சைவ, வைணவ, கிறித்துவ, இசுலாமிய சமயத்தாரும் வேறுபாடின்றி ஏற்கமுடியும். வள்ளுவர் நாத்திகர் என்பதற்கும் மார்க்சியப் பொதுவுடைமைவாதி என்பதற்கும்கூடச் சில பல குறட்பாக்கள் சான்றளிக்க முடியும். இவையனைத்தும் நேர்மையான ஒப்புவமைகளே —-ஆனால், வள்ளுவர் இத்தனையையும் பின்பற்றியவர் என்பதைவிட, இத்தனையும் வள்ளுவரைப் பின்பற்றியன என்று கூறுவதே பொருத்தமுடையதாகும்.
அறிஞர் இராமசாமிக் கவுண்டர் அவர்கள் திருவள்ளுவரைப் புத்தர் காலத்தவர் என்று கருதினார். ஆனால், புத்த, சமணஅலை வேத காலங்களுக்கு முன்னிருந்தே தொடங்கியது. புத்தர்க்கு, நெடிது முற்பட்ட உபநிடதங்களிலும், உபநிடதங்களுக்கு முற்பட்டனவாகக் கருதப்படும் ஆரணியங்களிலும், ஷ்வைட்சர் திருவள்ளுவர் தடம் காணத் தவறவில்லை, ஆனால், திருவள்ளுவர் கோட்பாட்டையே இந்தியா முழுவதிலும் பரவி வாழ்ந்த தாழ்த்தப்பட்ட தமிழினத்தின் கருத்தாக அவர் கருதினார். அக் கருத்தின் தடத்தை அவர் உபநிடத, ஆரணியங்களிடையே கண்டார். ஆகவே, திருவள்ளுவர் புத்த, சமண நெறிகளுக்கு மட்டுமன்றி, வேத உபநிடதங்களுக்கும் முற்பட்டவர் என்பது உறுதி.
வரலாற்றறிஞர் புத்தர் அலைக்கும், அதற்கும் நெடிது முற்பட்ட ஜரதுஷ்டிரர் அலைக்கும் உள்ள ஒரு தொடர்பை எக்காரணத்தாலோ கண்டும் காணாதவராகக் கண்ணை மூடிக்கொள்கின்றனர். காலத்தாலும் இடத்தாலும் நெடிது பிரிவுற்ற இந்த ஈரலைகளிடையிலேயும் மாறுபாடு இருப்பது இயல்பு. ஒற்றுமை இருப்பதுதான் இயல்புக்கு மாறானது. ஆனால், ஒற்றுமையே—வரலாற்று இன ஒற்றுமையே—- அவற்றிடையே பெரிது. ஜரதுஷ்டிரர் மேற்கொண்ட ஒரு பண்பாட்டை எதிர்த்துப் போராடித் தோல்வியுற்றே, இந்திய ஆரியரெனப்படுபவர் சிந்து வெளியிலும் அதன்பின் கங்கை வெளியிலும் பரவினர். ஆனால், அவர்கள் கங்கை வெளியடை வதற்குள் எதிர்ப்பு இங்கும் தொடங்கிற்று. ஈர் எதிர்ப்புகளும் ஒரே இனப் பண்பாட்டின் எதிர்ப்புகளே என்பதை இது தெள்ளத் தெளியக் காட்டுகிறது.
எதிர்ப்பின் வேறுபாடுகளில்—- இனிக் கருத்துச் செலுத்து வோம். வேத ஆரியர் பல தெய்வ வழிபாட்டுடனேயே சிந்து வெளியில் நுழைந்தனர். ஜரதுஷ்டிரர் ஒரே கடவுள் கொள்கையை உறுதியாய்ப் பற்றியவர். ஆகையால், வேத வழிபாட்டை மூர்க்கமாக எதிர்த்தார். ஆனால், ஆரியர் பொது வேதத்தில், இந்திய ஆரியர் பல தெய்வ வழிபாட்டுக்கு ஆதரவான பகுதிகளை மட்டும் பிரித்தெடுத்ததுபோல, அவர் அதே மூல வேதத்தில் ஒரு கடவுள் வணக்கத்துக்கு உரியவற்றை மட்டும் பிரித்தெடுத்தார். அதனையே அவர் (சிலப்பதிகார, மணிமேகலைப் பிரிவுகளை நினைவூட்டும்) காதைகள் (காதா gatha) என்ற சொல்லால் குறித்தார். இருக்கு வேதத் தேவர்களை மட்டுமன்றி ‘தேவர்’ என்ற சொல்லையே ஜரதுஷ்டிரர் பேய்களைக் குறிப்பதாகக் கொண்டார். வேதங் களிலும், பிற்காலப் புராண மொழி, சமற்கிருத மொழிகளிலும், தேவர் பகைவர் பெயராகக் குறிக்கப்பட்ட ‘அசுர’ என்ற சொல்லையே அவர் கடவுள் தூதர் (Angel) பெயராகக் கொண்டு, கடவுளைப் பெரிய அசுரன் (அஹுர மஜ்தா) என்று குறித்தார். ஆங்கிலத்தில் தேவ என்ற சொல்லின் பாரசீகப் பொருளையும், இருக்கு வேதப் பொருளையும் வேறு இரு சொற்களில் (Devil, Divine) இன்றும் காணலாம். புத்த சமயத்திலும் கடவுட் பகைவனான பேய்மகன் தேவலன் என்றே அழைக்கப்பட்டான்.
வேத ஆரியரின் பலதெய்வ வழிபாட்டை, ஒருதெய்வ வழிபாட்டால் எதிர்த்த பாரசீக முதல்வர் போலன்றி, புத்தர் பிரான் பலதெய்வ வழிபாட்டை தெய்வ மறுப்பு அல்லது கடவுள் பற்றிப் பேசாத பகுத்தறிவு ஆராய்ச்சியாலேயே எதிர்த்தார்.
இரண்டாவதாக பார்சிகள் இன்றளவும் ஊன் உண்பவரே. ஆனாலும், ஜரதுஷ்டிரர் கொலை வேள்வியை மட்டுமன்றி, வேள்வியையும் அதுபோன்ற வினைமுறைகளையும் தவம், நோன்பு ஆகியவற்றையும் எதிர்த்தார். புத்தர் பெருமானோ கொலையையும் புலால் உண்ணுதலையுமே கடிந்தார்.
ஜரதுஷ்டிரர் காலத்தில் பாரசீக ஆரியரிடையிலோ, இந்திய ஆரியரிடையிலோகூடச் சாதி வேறுபாடு கிடையாது. ஆனால், வேள்வியாற்றிய குருமார் வகுப்புத் தொடங்கி இருத்தல் வேண்டும். ஜரதுஷ்டிரர் குருமார் வகுப்பைத் தொழில் வகுப்பாக்கிப் பிறப்புரிமை அழித்தார். புத்தர் காலத்துக்குள் புதிய இந்திய ஆரியரிடையே சாதி வேறுபாடு தோன்றவில்லை யாயினும் மூவருண வேறுபாடு தோன்றிவிட்டது. புத்தர் அதனைச் சாடினார். குருமார் வகுப்பு, துறவி வகுப்பு இரண்டையும் ஒழிக்க அவரும், சமணரும் மணவாழ்வற்ற துறவறத்தை வலியுறுத்தினர். இந் நோக்கம் நல்ல நோக்கமேயாயினும், இதன் மூலமே கீழ்த்திசையில் வெறுப்புத் துறவறத்தைப் பரப்ப புத்த சமயமும், சமண சமயமும் பெரிதும் காரணமாயின.
ஜரதுஷ்டிரர் குடும்ப, சமுதாய ஒழுக்கம்; தாய்மை ஆகியவற்றை வலியுறுத்தினார். குடியைக் கடிந்தார். இவை வேத ஆரியர்க்கு முரண்பட்டவை. ஆனால், புத்தர் இன்னும் ஒருபடி மேற்சென்றார். அகப்புறத் தூய்மைகளை வலியுறுத்தினார். அவாவையே ஒழிக்க வேண்டுமென்றும். உயிர்களுக்கு உதவவேண்டுமென்றும் வலியுறுத்தினார். இந்திய சமயங்களுள் அவா ஒழிப்பு மேற்கொண்ட முதல் சமயங்கள் புத்த சமயமும் சமண சமயமுமேயாகும். (திரு வள்ளுவர் அவா வடக்கம் இதனில் சற்று வேறுபட்டது. ஆனால், அஃது இக் கருத்துக்கு மூலமானது ஆகக்கூடும்).
புத்த சமயத்தவர் ஒழுக்கக் கேடும் குடி ஆதரவும் மணிமேகலைக் காலத்துக்கு மிகவும் பிற்பட்ட பண்புக் கேடுகளேயாகும்.
புத்த, ஜரதுஷ்டிர சமயங்களுக்கு இடையேயுள்ள வேற்றுமை ஓரினத்துக்கு உட்பட்ட வேற்றுமை என்று திண்ணமாகக் கூறலாம். ஏனென்றால், காலத்திலும் இடத்திலும் புத்த நெறிக்கு மிக அணிமையான சமண நெறிக்கும் அதற்குமுள்ள வேறு பாட்டைவிட இது முனைப்பானதன்று, சமண சமயம் ஒரு கடவுள் நெறி பேணிற்று. ஆனால், சமணர் கடவுட் கருத்துத் திருவள்ளுவர் கருத்துக்கும் சைவ, வைணவக் கருத்துகளுக்கும் இடைப்பட்ட தென்னலாம். கொல்லாமை வகையில் அது புத்த நெறியைவிடத் தீவிரமானது. வேள்வியை அது புத்த, சைவ, வைணவ நெறிகளைப் போலவே கண்டித்ததாயினும், சைவ வைணவ நெறிகளைப் போலத் தவமும் நோன்பும் போற்றிற்று. சாதி வருண முறைகளைப் புத்த சமயம் போலவே சமண, சைவ, வைணவ சமயங்கள் கண்டித்தாலும், புத்த சமயத்தைவிட இச் சமயங்கள் படிப்படியாகக் கண்டிப்பைத் தளர்த்தின.
உலகில் பரவிய புத்த நெறி இந்தியாவில் நீடித்து நிலவாததற்கு, அதன் சாதி எதிர்ப்பே பெரிதும் காரணம் என்று அறிஞர் கருதுகின்றனர். சமணம் வெளியுலகில் பரவாததற்கும், இந்தியாவில் பரப்புக் குறுகியதற்கும் காரணம் அதன் கடுவாழ்வு என்றும், இந்தியாவில் அஃது அழியாது நிலவியதற்குக் காரணம் சாதி எதிர்ப்பு வகையில் அதன் கண்டிப்புத் தளர்வுற்றதேயாகும் என்றும் அவர்கள் எண்ணியுள்ளனர்.
வேத ஆரியரை இந்தியாவில் எதிர்த்த புத்த, சமண அலை திருக்குறள் கருத்துகளை மேற்கொண்ட அலையே என்பது ஷ்வைட்சர் கருத்து. மேற்காட்டிய ஒப்புவமைகள் இதே பண்பை ஜரதுஷ்டிரர் சமயச் சீர்திருத்த அலைமீதும் ஏற்றப் போதியன. ஆனால், இதை வலியுறுத்தும் வேறு செய்திகளும் உள்ளன.
வேதக் காலத்துக்கு முன்பே ஓர் அறிவார்ந்த உலோகாயத (பகுத்தறிவு)க் கோட்பாடு இந்தியா வெங்கும் பரவி இருந்தது என்பதைப் பண்டித ஜவஹர்லால் நேரு ‘இந்தியாவின் கண்டு பிடிப்பு’ என்ற நூலில் விளக்கியுள்ளார். அது சார்ந்த இலக்கியம் எதுவும் நமக்கு வந்தெட்டவில்லை. ஆனால், இது சமயத்தின் அறிவுத் துறைகளாக இன்று உலவும் சாங்கியம், யோகம், நியாயம், வைசேடிகம், மீமாம்சை, பூர்வ மீமாம்சை என்ற ஆறு அறிவுத்துறைக் கோட்பாடுகளும் அந்தப் பண்டைக்கால உலோகாயதத்தின் கிளைகளே என்பதை அறிஞர் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். அறிவார்ந்த இந்த நாத்திக உலோகாயதத்துடனேயே, அது போல அறிவார்ந்த ஓர் ஆத்திக உலோகாயதமும் இருந்தது என்று கூறலாம். ஆனால், பிற்காலத்தார் இந்த அறிவார்ந்த ஆத்திக உலோகாயதத்துக்கும், அறிவார்ந்த நாத்திக உலோகாயதத்துக்கும் வேறுபாடு காணாது இரண்டையும் நாத்திகம் என்று கருதியிருத்தல் வேண்டும். ஏனெனில், இந்த நாத்திகரும் பல ஆத்திகரும் நாத்திக சமய முதல்வரையே, கடவுள், கண்டுணர்ந்த கண்கண்ட கடவுளாகக் கருதினர். பகவன், அல்லது பகவான் என்ற பெயர் முதல் முதல் வழங்கப்பட்டது இம் முதல்வர்க்கே. புத்த, சமண, சைவ, வைணவ, புதிய வேதம் அல்லது இந்து சமயங்கள் பின்னாளில் இச் சொல்லை இதே மரபில் கையாண்டுள்ளன.
திருவள்ளுவர் சமயம் சார்ந்த கருத்துகள் நாத்திக முதல்வர் கருத்துகள் என்று கருதப்பட்டவற்றுடன் பெரிதும் சொல் ஒற்றுமையும் ஓரளவு கருத்து ஒற்றுமையும் உடையனவாக உள்ளன. முதன் முதல் கடவுட் கருத்தை—ஒரு கடவுட் கருத்தை மனித இனத்துக்கு வகுத்தளித்த பகுத்தறிவு முதல்வர் திருவள்ளுவர் தானோ என்று ஐயுற இடமுண்டு. ஏனெனில், அக் கடவுட் கருத்து ஒன்றே நாத்திகரும் ஆத்திகரும் ஒருங்கே ஏற்கும் கருத்தாய் அமைந்துள்ளது. தமிழக அருளாளர் அனைவரும் இன்றுவரை ‘உண்டென்பார்க்கு உளதாகி, இல்லை யென்பார்க்கும் அதுவாகும் பொருள்’ என்று கடவுளைப் பாடத் தயங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருவள்ளுவர் புத்த, சமண அலைக்குரியவரல்லர். அதற்கு முற்பட்ட ஜரதுஷ்டிரர், கன்பூசியஸ் அலைக்கும் முற்பட்ட முதல்வர் என்பதை ஈர் அலைகளின் ஒப்பீடு தெள்ளத் தெளியக் காட்டுகிறது. கங்கை வெளியில் திருவள்ளுவர் கடவுட் கருத்தைச் சமணரும், கடவுள் சாரா உலோகாயதக் கருத்தைப் புத்தர் பிரானும் மேற்கொண்டது போலவே, முற்பட்ட அலையில் ஜரதுஷ்டிரர் திருவள்ளுவர் ஒரு தெய்வக் கருத்தையும், கன்பூசியஸ் கடவுள் சாரா உலோகாயதக் கருத்தையும் தழுவினர். அத்துடன் பொதுவாக, புத்த சமண சமயங்களைவிட, ஜரதுஷ்டிரர், கன்பூசியஸ் சமயக் கருத்துகளே இருவேறு வகையில் திருவள்ளுவருக்கு அணிமையானவை. வளையாத சமயஞ் சாரா வாழ்க்கைக் கோட்பாட்டு விளக்கத்தில் பிந்தியவரும் வள்ளுவரை நினைவூட்டு பவராவர்.
வள்ளுவர் மூவலைகளுக்கும் முற்பட்டவர் என்பதைச் சுட்டிக்காட்டும் மற்றொரு பேருண்மை அறிவார்ந்த கடவுட் கோட்பாடே. ஒரு கடவுள் கோட்பாடு பல தெய்வக் கோட்பாட்டின் படிப்படியான வளர்ச்சியே என்று பொதுவாக உலக ஆராய்ச்சியறிஞர்கள் கருதுகின்றனர். உபநிடதங்களின் கடவுள் பற்றிய ஆராய்ச்சிகளை இதற்காதாரமாகக் காட்டுபவரும் உண்டு. ஆனால், ஷ்வைட்சர் சுட்டிக்காட்டியபடி, உபநிடதங்கள் ஆராய்ந்துருவாக்கப்பட்ட ஒரு கோட்பாட்டைப் புதிய நிலத்தவர்க்கு விளக்குபவையே யன்றி, புத்தாராய்ச்சியில் புகுபவையல்ல. தவிர, ஒரு தெய்வ வணக்கத்துக்குப் பேர்போன இசுலாமிய, கிறித்துவ, யூத சமயங்களின் வரலாறு காட்டும் உண்மை இதற்கு ஆதரவானதல்ல. ஒரு கடவுட் கோட்பாட்டின் வளர்ச்சிவேறு. பலதெய்வ நம்பிக்கை வேறு. முன்னது அறிவார்ந்த இன சமுதாயத் தலைவர்கள், அறிஞர்கள் வழி தொன்றுதொட்டு ஒரு தெய்வக் கோட்பாடாகவே வளர்ந்து வந்துள்ளது. அந்த ஒரு தெய்வக் கோட்பாட்டுடன் இயல்பாக இணைந்த தெய்வக் கோட்பாடு, பல தெய்வக் கோட்பாடு அன்று; இன முதல்வர் அல்லது பகவர் கோட்பாடே.
யூதரின் ஒரு தெய்வக் கோட்பாட்டுக்கும் ஜரதுஷ்டிரரின் ஒரு தெய்வக் கோட்பாட்டுக்கும் இடையேயுள்ள அலைகளின் சூழல் மாறுபாடுகள் பல. அதுபோலக் கன்பூசியசின் உலோகாயதத்துக்கும், புத்தர்பிரான் உலோகாயதத் துக்கும் இடையேயுள்ள அலைகளின் சூழல் வேறுபாடுகள் பல. இரண்டையும் இணைக்கும் மூல முதலின் தடங்களைச் சைவ, சமண, புத்த, வைணவ சமயங்களிலும், வேதகால நாத்திக உலோகாயதத்திலும் காணலாம். இவை அனைத்தின் மூல முதல் கரு வடிவத்தையே நாம் திருக்குறளில் காண்கிறோம்.
உலக சமய ஒப்பீட்டால் நாம் காணும் இம் முடிபைத் தொல்காப்பிய, திருக்குறள் ஒப்பீடும் வலியுறுத்துகிறது. தொல்காப்பியர் காலம் இஃது என்று உறுதிப்படாவிட்டாலும் அது முதற்சங்க இறுதி, இடைச் சங்கத் தொடக்கக் காலத்தது என்று அறிகிறோம். தொல்காப்பியக் காலப் பாண்டியன் நெடியோன் கடலுள் ஆழ்ந்த குமரி, பஃறுளியாற்றுப் பகுதியை ஆண்டதுடன், இமயம் வரையும், கடல்கடந்த கடாரத்தையும் (சுமத்ராவையும்) வென்றதாகத் தெரிய வருகிறது. இக் காலம் இலங்கை ஒரு தனித்தீவாக ஆகாத காலம்; வடதிசையில் ஆரியர் புகாத காலமாகும். ஆகவே, தொல்காப்பியத்துக்கு முற்பட்ட திருவள்ளுவர் ஆரியர் வருகைக்கு நெடிது முற்பட்டவராகவே இருத்தல் வேண்டும்.
வேதங்களை வியாசர் வகுப்பதற்கும், இராமாயண பாரதங்களுக்கும் தொல்காப்பியம் முற்பட்டதென்றே நச்சினார்க் கினியர் கருதியுள்ளார். அத்தகைய ஒரு மரபுரை அன்றும் தமிழகத்தில் உலவியிருத்தல் கூடும்.
தொல்காப்பியர் சுட்டிய முதல் நூலும், தமிழ் நூல்கள் சுட்டிய நால் வேதமும் நாற் பொருள் கூறும் முப்பால் நூலாகவே இருத்தல் வேண்டும் என்னலாம். வள்ளுவரையே தமிழர் இறைவன் அல்லது இறையனாராகக் கருதி, இவ் வேதத்தை வெளியிட்ட முதல்வனாகப் பின்னாளில் கொண்டவராதல் வேண்டும். தொல்காப்பியர் முதல் அணிமைக்கால இலக்கண நூல் வரை முதல் நூல் இலக்கணமாகத் தரும் நூற்பாவின் பொருள் மட்டுமன்றிச் சொல்லும் திருக்குறள் வாசகங்களை நினைவூட்டுவதாய் உள்ளது.
‘வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதல் நூலாகும்’
இவ் இலக்கண நூல் நூற்பாவுடன் கீழ்வரும் குறட்பா ஒப்பு நோக்கத்தக்கது:
‘இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு’
- குறள் 5
முப்பால் அறம்
வாழ்க்கையின் முழுநிறை இலக்கணமாக அமைந்த ஏடு திருக்குறள். திருவள்ளுவர் இவ்விலக்கணத்தை அறம், பொருள், இன்பம் என்ற முப் பால்களாக வகுத்துள்ளார். முப்பால் என்ற அதன் பெயர் இவ்வமைப்பையே சுட்டிக்காட்டுகிறது. முப்பால்களில் ‘அறம்’ ஒரு கூறேயானாலும், சங்க காலங்களில் நூல் முழுவதுமே ‘அறம்’ என்று பெயர் பெற்றிருந்ததாகத் தோற்றுகிறது. முப்பாலில் அறத்தின் சிறப்பை இது குறிக்கிறது.
காலஞ்சென்ற எஸ். மீனாட்சி சுந்தர முதலியார் ‘நூற் பொருள் விளக்கம்’ என்ற சிறந்த புத்தாராய்ச்சி நூலின் ஆசிரியர் ஆவார். திருவள்ளுவர் நூலுக்குப் பொருத்தமான பெயர் இன்பம் அல்லது இன்ப நூல் என்பதே என்றும், அவ்வாறே அது வழங்கப் பெற்றிருத்தல் வேண்டும் என்றும் அவர் கருதுகிறார்.
வள்ளுவர் ஒருவர் நீங்கலாக, உலகின் ஏனைய அறிஞர் யாவரும் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற நான்கு குறிக்கோள்களாகவோ, அல்லது ஒன்றிலிருந்து ஒன்று உயர்ந்த நால் வேறு படிகளாகவோதான் கருதியுள்ளனர். ஆனால், வள்ளுவரோ வீட்டை இன்பத்தின் முதிர்ச்சியான பேரின்பமாகவே கொண்டார். இன்பத்துக்குரிய இல்லறமும், வீட்டுக்குரிய துறவறமும் ஒரே அறத்தின் பால் உட்படுத்தப்பட்டதன் காரணம் இதுவே. அத்துடன் வள்ளுவர் முப்பால் பாகுபாட்டிலேயே ஒரு தனிச்சிறப்பு உண்டு. அவரது முப்பாலில் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றும், மூன்று வேறு வேறு பண்புகளும் அல்ல. முரண்பட்ட பண்புகளும் அல்ல. மூன்றும் ஒன்றன் மீது ஒன்று சார்ந்த, ஒன்றை ஒன்று தழுவிய ஒரே வாழ்க்கை இலக்கணத்தின் மூன்று கோணங்களேயாகும்.
அறம் என்பது தனி மனிதனுக்கும் சமுதாயத்துக்கும் அல்லது தனிமனிதனுக்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்பேயாகும். பொருள் இதன் மறு நிலை. சமுதாயத்துக்கும் அரசியலுக்கும் தனிமனிதன் வாழ்வின் மீதுள்ள பொறுப்பு அது. இன்பம் தனிமனிதனைச் சமுதாயத்தின் உறுப்பினனாக்கும் குடும்பப் பண்பு. அஃது அறம், பொருள் ஆகியவற்றின் அடிப்படை; இரண்டின் பண்பும் பயனும் முடிபும் அதுவே. ஏனெனில், அது தனி மனிதனைச் சமுதாயத்துடன் இணைக்கும் கண்ணி மட்டுமல்ல, அதுவே சமுதாயத்தின் ஒரு தலைமுறையை முன்பின் தலைமுறைகளுடன் இணைவித்து இறவா இனவாழ்வு பெருக்கும் பண்பு வலையின் பின்னல் முடி ஆகும்.
இவ்வாறு திருவள்ளுவர் நூலில், அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றும் உண்மையில் சரி ஒத்த சிறப்பு உடையனவே. அறமும் பொருளும் இல்லாமல் இன்பமோ; பொருளும், இன்பமும் இல்லாமல் அறமோ; இன்பமும், அறமும் இல்லாமல் பொருளோ கிடையாது. மூன்று பண்புகளும் மூன்று பண்புகளிலும் உள்ளீடாக உள் நிலவும் ஒளியாகின்றன. எனவே, வள்ளுவர் நூலுக்கு ஒரே பெயராக நாம் முப்பால் என்று கூறுவது போலவே, ‘அறநூல்’ என்றும் கூறலாம். ‘பொருள் நூல்’ என்றும் கூறலாம். ‘இன்ப நூல்’ என்றும் கூறலாம். முப்பால் பெயர்களும் ஒப்பாகவே நூற்பெயர்க்குப் பொருத்தமானவை. எனினும், அந் நூலை ‘அறநூல்’ என்று கூறுவதற்கு இப் பொதுக் காரணமன்றி வேறு தனிக் காரணங்களும் உண்டு.
வள்ளுவர் நூல் அறத்தில் தொடங்குகிறது. இன்பத்தில் முடிவுறுகிறது. ஆனால், முடிவுக்கும் தொடக்கத்துக்கும் இணைப்பாக இன்பத்துப் பாலின் இறுதியில் கற்பியலும். அறத்துப்பாலின் தொடக்கத்திலே இல்லறவியலும் அமைந் துள்ளன. இவ்வாறு தொடக்கமே இறுதியாகவும், இறுதியே தொடக்கமாகவும் உள்ள இத் திருக்குறள் ஆரத்தில்; கற்பியலும், இல்லறவியலும் ஆரத்தின் பூட்டு முகப்பாக உள்ளன. அம் முகப்பிலிருந்து தொங்கும் மதாணி அல்லது பதக்கமாகப் பாயிரம் அமைந்துள்ளது. வள்ளுவர் நூலுக்குத் தொடக்கமும் இறுதியும் அதுவே. அறம், பொருள்,இன்பம் என்னும் முப்பாலையும் ஒரு பாலாக்கி ஒரு வாழ்க்கை இலக்கணமாக இசைவித்துக் காட்டும் பகுதியும் அதுவே.
பாயிரத்தின் ஒழுங்குமுறை அறம், பொருள், இன்பம் என்ற நூலின் பொது ஒழுங்கு முறைக்கு நேர்மாறானது. வான் சிறப்பு இன்பத்துப் பாலுக்கும், ஒழுக்கத்து நீத்தார் பெருமை பொருட்பாலுக்கும், அறன் வலியுறுத்தல் அறத்துப் பாலுக்கும் இசைந்தவை, நூற் பகுதி பொதுவாக உயிர்களின் வாழ்க்கைப் பயன் காட்டுவது. ஆகவே, அறத்தின் வழி பொருளும், பொருளின் வழி இன்பமும்; பயனாகவும், வளமாகவும் காட்டப்பட்டன. இல்வாழ்வில் அறத்தின் பண்பு இல்லாவிட்டால் சமுதாய, அரசியல் வாழ்வுகளில் பொருள் கெடுவது உறுதி. சமுதாய அரசியல் வாழ்வில் பொருள் சிதைவுற்றால் குடும்பத்தில் இன்பம் பொங்கமாட்டாது. குடும்ப இன்பமே அறத்தின் அடிப்படையாத லால் முப்பாலையும் ஒரே அற ஆழியாக்குவது அறப்பகுதியாகிய இல்லறமேயாகும். இது நூலின் ஒழுங்குமுறை தரும் படிப்பினை. ஆனால், பாயிரம் இதையே உயிர்ப் பொதுநிலை அல்லது இயற்கை மீதேற்றி, இயற்கையின் பயனான உயிர்ப் பண்பாக அறத்தைக் காட்டுகிறது.
தூண்டுவாரும், இயக்குவாரும் இன்றித் தனிமனிதர் வாழ்வில் நிகழும் இன்பம் போன்றதே வான் அல்லது மழை இன்பத்தின் வழி இயங்குவது உயிர் வளம். தனியுயிரின் இன்ப வாய்ப்பின் வளமே பொருள். அதைப் பெருக்கும் அமைப்புகளே சமுதாயமும் அரசியலும். இயற்கையில் இவற்றை இயக்கும் சத்தி எது? கடவுட் பண்பு. அதாவது ஒழுக்கத்து நீத்த பண்பு. அல்லது அன்புத் தியாகம், அல்லது தன்னலமற்ற சேவை. இதனையுடைய ஒழுக்கத்து நீத்தாரின் பெருமையே இயற்கையின் பொருட் கூறு ஆகும். பாயிரத்தின் பொருட்பாற் கூறும் இதுவே. இந் நீத்தார் தம்மைக் கடந்து உலகுக்குப் பரப்பும் பண்பே அறம். அஃது இயற்கையில் வான் தரும் வளத்தால் இயங்கும் உயிர்வளம் போன்றது. இஃது அறன் வலியுறுத்தலாகிய பாயிரத்தின் அறப் பகுதியாயிற்று.
பாயிரத்தின் இறுதி, நூலின் தொடக்கத்துக்கும்; நூலின் இறுதி, பாயிரத்தின் தொடக்கமாகிய வான் சிறப்புக்கும், நூல் தொடக்கத்துக்கும் தோற்றுவாய் ஆதலை இங்கே காணலாம். ஆனால், பாயிரத்தின் பாயிரமாக அமைவது முதல் அதிகாரம் ஆகிய இறை வழிபாடு அல்லது கடவுள் வணக்கமே. நூலின் முப்பாலையும் பாயிரத்தின் முப்பாற் கூறுகளையும் ஒரு பால், ஒரு கூறாக்கி இணைப்பது இதுவே. கடவுள் அறத்தின் அறம், பொருளின் பொருள், இன்பத்தின் இன்பம். அறம், பொருள், இன்பம் ஆகிய மூவகைக் குறிக்கோள்களும் உள்ளடக்கிய வாழ்வின் மொத்த இனக் குறிக்கோளே இறைவன் அல்லது கடவுள். அதனை முதலிற் கண்டு பிறர்க்கும் சுட்டிக்காட்டும் மனித இன முதல்வரே பகவர். ஆதிபகவன் அல்லது முதற்பகவனும் அவன் வழி நின்ற பிற பகவரும் சுட்டிக்காட்டியவழி காண்பதே இறைவன்தாள் சேர்வது ஆகும். அவ் வழி நிற்பதும் அவ் வழி செல்வதுமே இறைவழிபாடு ஆகும். முப்பால் முதல்வனான அவ்விறைவனின் சிறந்த வழிபாடு, அறம், பொருள், இன்பம், ஆகிய முப்பால் வழி நின்று வாழ்வதேயாகும். வாழ்வு என்னும் அற ஆழி இயக்குவதேயாகும்.
‘ஆதி பகவன்’ என்ற தொடரே திருக்குறளின் தொல் பெரும் பழைமையைச் சுட்டிக்காட்டுவது ஆகும். இச் சொல் மரபு பிற்காலங்களில் கடவுள் தன்மையுடைய மனிதர்கள் வகையில் பகவான் எனத் திரிபுற்று வழங்கிற்று, பகவர் புத்த சமண நெறிகளில் புத்தர் என்றும், தீர்த்தங்கரர் என்றும்; சைவ வைணவ நெறிகளில் நாயன்மார் என்றும் ஆழ்வார்கள் என்றும்; யூத, கிறித்துவ. இசுலாமிய நெறிகளில் தொலைக் காட்சிவாணர் அல்லது பார்ப்பார் (தீர்க்கதரிசிகள்), நபிகள் என்றும் வழங்கப்பட்டனர்.
பகவர் கருத்தின் இம் மரபு வளர்ச்சியில் நாம் மூன்று படிகளைக் காண்கிறோம். தொடக்கக் காலத்தில் பகவரில் முந்தியவர் முதல்வர் எனச் சிறப்பிக்கப்பட்டனர். திருவள்ளுவர் கால ஆதி பகவனும், சமணர்தம் முதல் தீர்த்தங்கரரான இடபதே வரும் இத்தகையவர். நாத்திகப் பகுத்தறிவு நெறியாகிய தொல் பழங்கால உலோகாயத நெறியின் முதல்வர் பிரகஸ்பதியே சமற்கிருத மரபால் முதல் முதலாக, சிறப்பிக்கப்பட்ட ‘பகவான்’ என்ற சொல்லால் குறிக்கப்பட்டார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. யூத நெறியிலும் முதன்மைச் சிறப்பு முந்தியவர்க்கே அளிக்கப்பட்டது.
இரண்டாவது பகவான் மரபு சமண, புத்த சமயங்களுட னேயே தொடங்கு கிறது. இங்கே கடைசிப் பகவருக்கு முதன்மைச் சிறப்புத் தரப்பட்டது. அவரே முந்தியவர். அனைவரிலும் முழு நிறைவுடையவராகக் கருதப்பட்டார். இம் மரபு கிறித்துவ, இசுலாமிய நெறிகளிலேயே முழுவளர்ச்சி பெற்றது. பகவரில் கடைசிப் பகவரான முழுநிறை தெய்வ உருவாக இயேசுவும் முழுநிறை மனித உருவாக முகமது நபிகளும் கருதப்பட்டனர்.
மூன்றாம் மரபு யூதரிடம் மெல்லத் தொடங்கிக் கிறித்துவ நெறியில் விளைவுற்று, நம் நாளிலேயே முதிர்வுற்று வருகிறது. உலக முன்னேற்றத்திலும் வளர்ச்சியிலும் மேனாட்டினர்க்குரிய அசைக்க முடியாத நம்பிக்கை இம்மூன்றாம் மரபின் சுவடேயாகும். இறுதிக் கணக்கு அல்லது இறுதித் தீர்ப்புப் பற்றிய புராண நம்பிக்கை (சித்திரபுத்திர நாயனார் நோன்பு மரபு) யூத, கிறித்துவ, இசுலாமிய மரபு இதன் சின்னங்களே.
தொல் பழங்கால நாத்திக உலோகாயத முதல்வர் பிரகஸ்பதியும், சாங்கிய ஆராய்ச்சித் துறை முதல்வர் கபிலரும் தமிழ் மரபில் பழஞ் சங்கப் புலவர்களுள் ஒருவராகக் குறிக்கப் படும் இறையனாரும் ஒருவரே என்றும் அவர் திருவள்ளு வராகவே இருத்தல் வேண்டும் என்றும் ‘நூல்விளக்க’ ஆசிரியர் குறித்துப் போந்தார். அவர் தரும் ஆதார மேற்கோள்கள் பிற்காலத் தமிழ்ப் புராணங்களே யாயினும் அவர் கூற்றுகள் பிறமொழிச் சான்றுகளுடன் ஒப்பிட்டு ஆராயத் தக்கவையே யாகும். ஏனெனில், திருவள்ளுவர் காலமும், ஆதிபகவனாகிய இறையனார் காலமும் தொடர்புடையவை. இரண்டு கருத்து மரபுகளும் முன் இயலில் குறிக்கப்பட்ட ஜரதுஷ்டிரர்— கன்பூசியசின் முதல் அலைக்கும் முற்பட்டவை. இருவரும் ஒருவர் பற்றிய ஈர் உலக மரபுகளாகவே கூட இருத்தல் இயலாததன்று. ஏனெனில், திருவள்ளுவர் வகுத்த கடவுட் கருத்து ஆத்திக, நாத்திக வேறுபாடற்றது. இரு சார்புக்கும் மூலமானது. நாத்திக மரபிலிருந்து ஆத்திக மரபோ, ஆத்திக மரபிலிருந்து நாத்திக மரபோ தோன்றிய தென்பதைவிட, இரண்டுக்கும் மூலமுதலான திருவள்ளுவர் மரபிலிருந்தே இரண்டும் இருவேறு கிளைகளாகப் பிரிந்தன என்றால் பொருத்த முடைத்தாகும்.
வள்ளுவர் நூல் இவ்வாறு எல்லாப் பொருளும் கூறுவது மட்டுமன்று; ஏற்றுக் கொள்ளும் வகையில் கூறுவது மட்டுமன்று; அது எல்லாப் பொருளையும் ஒரே மூலப் பொருளுடன் இணைத்து, அதையே நாத்திகரும் ஆத்திகரும் ஒப்புக் கொள்ளத் தக்க முறையில், கடவுட் கருத்தாக உலகுக்கு அளித்துள்ளது. வள்ளுவர் கடவுட் கருத்தும் அதனுடன் அவர் அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை இணைத்த அருமையும் வள்ளுவர் காலத்துக்குப் பின் பரக்க எங்கும் உணரப்பட்டிருந்தால், ஆத்திக நாத்திக வேறுபாடோ, சமயப் பூசல்களோ உலகில் என்றுமே ஏற்பட்டிராது என்னல் தகும். ஏனெனில், வள்ளுவர் கடவுட் கருத்து ஆத்திகர்களும் நாத்திகர்களும் ‘கடவுள்’ என்ற சொல்லால் பின்னாள்களில் கருதிய கருத்துக் கடந்தது. ஆத்திகர் கூறும் கடவுளின் பண்புகள் யாவும் அதில் உண்டு. அறிவுடைய நாத்திகர் விரும்பும் வாழ்க்கைப் பண்புகள் யாவும் அதில் இடம் பெறுகின்றன. ஆனால், ஆத்திகரின் கடவுள்; மனித வாழ்க்கை யுடனோ, வாழ்க்கையின் பல்வேறு கூறுகளான அறம், பொருள், இன்பங்களுடனோ தொடர்பற்றவர். மற்றொரு புறம் நாத்திகர் போற்றும் வாழ்க்கைப் பண்புகளோ ஒருமைப்பாடும் நோக்கமும் தொடர்பும் அற்றவை. ஒன்றுபட இயங்காதவை. என்றும் உலகை இயக்காதவை, இயக்க முடியாதவை. வள்ளுவர் இரு சாராரையும் போலல்லாது வாழ்க்கைச் சகடத்தை இயக்கும் இயல்பான உயர் குறிக்கோளாகக் கடவுட் கருத்தைப் படைத்துருவாக்கியுள்ளார். அவர் கருத்தை உலகம் முழுதுற உணர்ந்த நிலையில்கூட, அது பல்வேறு சமயங்களின் மூலமாக, திரைமுலம் ஒளி தரும் பெரு விளக்கம் போல, உலகைச் சென்ற ஆயிரக்கணக்கான ஆண்டு காலமாக இயக்கி வந்துள்ளது.
கடவுளைக் குறிக்கத் திருவள்ளுவர் வழங்கிய பண்பார்ந்த அடை மொழிகளுள் ஒன்று ‘அறவாழி அந்தணன்’ என்பது. இறைவழி நிற்கும் அருளாளர்க்கு உரிய சொல் என்ற முறையில், அதற்குத் திருவள்ளுவரே பொருள் விளக்கமும் தந்துள்ளார்.
‘அந்தணர் என்போர் அறவோர்; மற்றுஎவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்’
- குறள் 30
இக் குறட்பா நீத்தார் பெருமை என்ற பாயிரத்தின் பொருட் கூறான அதிகாரத்துக்கு உரியது. அவ்வொழுக்கத்து நீத்தாரையே இக் குறட்பாவில் வள்ளுவர் அந்தணர் என்று குறிக்கிறார். அவர்கள் அறவோர்கள் அதாவது இறை வழி நின்று அற ஆழி இயக்குபவர்கள், கைம்மாறு குறியாது செயலாற்றி இயற்கையில் பொருளும் இன்பமும் பெருக்கும் இயல்புடைய வான் போல, அவர்கள் வாழ்வில் எல்லா உயிர்க்கும் இன்நலம் செய்வதையே இயல்பாகக் கொண்டவர், வாழ்க்கையில் அன்பறமும், இயற்கையில் வானின் அளிப்பும் அவர்கள் பண்போடியைந்த பண்புக் கூறுகளாகவே இயல்வன. இம் மூன்று பண்புக் கூறுகளையும் உள் நின்று இயக்கும் அன்பு, இன்பம், அறிவு ஆகியவற்றின் முழுநிறை வாழ்க்கைக் குறிக்கோளே இறைவன். ‘அறவாழி அந்தணன்’ என்ற தொடர் இறைவனுக்குப் பொருந்தும் வகை இதுவே.
அந்தணன் என்ற சொல் தமிழில் கடவுளையும் கடவுட் பண்புடைய மனிதரையும் ஒருங்கே குறிக்கிறது. ‘அம்’ அதாவது அழகிய ‘தண்மை’ அல்லது குளிர்ச்சி வாய்ந்த அருளன்புடை யவர் என்ற பொருளிலேயே திருவள்ளுவர் அச் சொல்லை வழங்கினாரென்பதை மேற்குறிப்பிட்ட குறட்பாவில் உள்ள ‘செந்தண்மை’ என்ற விளக்கம் காட்டுகிறது. திருமூலர் ‘அந்தத்தை அணவுபவர் அந்தணர்’ என்று பொருள் கொண்டதாகத் தோற்றுகிறது. ‘அந்தத்தைச் சிந்தை செய் அந்தணர்’ என்று அவர் தம் திருமந்திரத்தில் குறிக்கிறார். இங்கும் ‘அந்தம்’ என்ற சொல் அழகு, முடிவு அல்லது குறிக்கோள் என்ற இருபொருளும் தருதல் காணலாம். அழகு மனிதர் இயல்பான குறிக்கோள் ஆவது என்ற முறையிலேயே இச் சொல் இரு பொருளும் குறித்திருத்தல் சாலும். ஆகவே, வள்ளுவர் ‘அந்தணன்’ என்ற சொல்லுக்குக் கொண்ட தமிழ்ப் பொருளும் திருமூலர் கொண்ட தமிழ்ப் பொருளும் வேறுபடுபவை போலத் தோன்றினாலும் மாறு படுபவை அல்ல. வள்ளுவர் ஒளி வழிவந்த மற்றோர் அறிவுப் பொறியான கிரேக்க அறிஞன் பிளேட்டோ அழகு, மெய்ம்மை, நன்மை ஆகிய மூன்றுமே உலகும் தோற்றமும் இறுதியும் உள்ளீடும் குறித்த கடவுள் என்று விளக்கியுள்ளது காணலாம்.
உயிர், வாழ்வு, இயற்கை ஆகிய முத்தளங்களும் கடந்த அந்தணன் இறைவன். அவன் கூறாக இயற்கையில் அந்தண்மை அல்லது வானும், சமுதாயப் பொதுவாழ்வில் அந்தணர் அல்லது ஒழுக்கத்து நீத்த உரவோரும், தனி உயிர் வாழ்க்கை அல்லது குடும்ப வாழ்வில் அன்பு அல்லது அறமும் நிலவுகின்றன. இவ்வாறு வள்ளுவர் வகுத்த அறம் முப்பால் என்ற அற ஆழியில் ஒரு புறம் கடவுளையும், இயற்கையையும்; மறுபுறம் தனி மனிதன் வாழ்வையும், சமுதாய, சமய, அரசியல் வாழ்வுகளையும் இடை நின்று இயக்கும் நடுநாயக அச்சாக இயங்குகிறது. சங்க காலங்களில் திருக்குறள் ‘தாளா அறம்’ என்று வழங்கப்பட்டதன் தனிப் பொருத்தம் இதுவே. முப்பாலும் இணைத்துக் கூறும் பாயிரத்துக்கும் நூலின் பிற்பகுதிக்கும் இடையே அறன் வலியுறுத்தலும், அறத்துப்பாலும் வாயில்களாக அமைந்தது இதனாலேயேயாகும். அற ஆழியாகிய இறைவன் அறத்தை ஆழியாக அல்லது சக்கரமாகக் கொண்டே உலகை இயக்கு கிறான் என்பதைக் குறட்பாக்களாலன்றி வரிசை முறையி னாலேயே வள்ளுவர் தெரிவித்துள்ளார். தமிழில்கூட இவ்வருமைப் பாட்டை வேறெங்கும் காண்டல் அரிது.
அற ஆழி உருட்டுதல் என்னும் தொடர் கடவுள் செயலாகவும், அரசன் செயலாகவும் சிலப்பதிகாரத்திலும் சங்க இலக்கியத்திலும் குறிக்கப்படுகின்றன. புற வினை உருவில் இதுவே புத்த சமயத்தில் பொதுவாகவும், திபேத்திய ‘லாமா’ சமயத்தில் சிறப்பாகவும் இன்றளவும் செயற்படுத்திக் காட்டப்படுகிறது.
அறத்துப் பாலுக்கும் அறத்துக்கும் திருக்குறளில் மற்றொரு சிறப்பு உண்டு. சென்ற, இரண்டாயிர மூவாயிர ஆண்டுகளாகச் சமய வாணரும் தமிழக உரையாசிரியர்களும் திரித்துணர்ந்து மயங்கிய பண்பு இதுவே. திருவள்ளுவர் ஒரே அறத்தின் இரு பிரிவுகளாக இல்லறம், துறவறம் ஆகிய இரண்டையும் வகுத்துரைத்தார். இந்த இரண்டின் தொடர்பையும் உணர்ந்து கொள்ளாமல் இவற்றை எதிரெதிர் பண்புகளாகக் கருதிய தனாலேயே, திருவள்ளுவர் அறத்தின் உயிர்ப் பண்பைச் சமயவாணர் புரிந்து கொள்ளாது அலமரல் உற்றனர்.
துறவறத்தை இல்லறத்தின் எதிர்ப் பண்பு என்று கருதியது போலவே, பலர் மறத்தை அறத்தின் எதிர்ப் பண்பு என்று கொள்வதுண்டு. ‘அறம் வெல்லும், மறம் அழிவுறும்’ என்ற அறிவுரை கூறுபவரை நாம் இன்று காண்கிறோம். ஆனால், திருவள்ளுவர் துறவறத்தை மட்டுமன்றி, மறத்தையும் அறத்தின் கூறாகவே கொண்டார். அறம் அன்பை அடிப்படையாகக் கொண்டது. துறவறம் மட்டுமன்று, மறமும் இதுபோல அன்பையே அடிப்படையாகக் கொண்டது என்று திருவள்ளுவர் வலியுறுத்தியுள்ளார்.
‘அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.’
- குறள் 76
‘அறம்தான் அன்படிப்படையான பண்பு என்று கூறுபவர் அறிவில்லாதவர்கள். உண்மையில் மறத்துக்குக்கூட அதுதான் அடிப்படையான பண்பு ஆகும்’ என்று அவர் குறித்துள்ளார். மறத்துக்கும் அறத்துக்கும் உள்ள வேறுபாடு, குறிக்கோள் பற்றியதன்று, முறைபற்றியதே. அறம் உணவு போன்றது. மறம் மருந்து போன்றது. அறம் தாயின் அன்பு அணைப்புப் போன்றது. மறம் தாயின் அன்பு வெறுப்புப் போன்றது. அறம், மறம் ஆகியவற்றின் வகையிலேயே திருவள்ளுவர் தரும் இவ் விளக்கம், இல்லறம், துறவறம் ஆகிய அறத்தின் உட்பிரிவுகள் வகையில் அவர் கருத்தொளியை முனைப்பாகச் சுட்டிக்காட்டப் போதிய தாகும்.
‘வள்ளுவர் துறவறம் வெறுப்புத் துறவறம் அன்று, அன்புத் துறவறமே’ என்பதை முதன் முதலாகச் சுட்டிக் காட்டியவர் காலஞ் சென்ற தமிழ்ப் பெரியார் திரு.வி.கலியாணசுந்தரனாரே யாவார். அது மட்டுமன்று. துறவு என்பது உலகைத் துறப்பதோ, இன்பத்தைத் துறப்பதோ அன்று, தன்னலத்தைத் துறப்பதே என்ற அறிவொளி விளக்கம் தந்தவரும் அவரே. ஆனால், திருவள்ளுவர் திருக்குறளை அணுகும்போதே, நாம் உலகியல், ஆன்மிக இயல்; அறம், மறம்; இல்லறம், துறவறம்; தன்னலம்; பொதுநலம் ஆகிய சொற்களை எதிரெதிர் சொற்களாகக் கொள்ளும் நம் காலக் கருத்துப் பழக்கத்தை ஒதுக்கி வைத்துவிட வேண்டியது அவசியம். தன்னலம் அற்ற பண்பே பொதுநலம் என்று நாம் அடிக்கடி கருது கிறோம். ஆனால், தன்னலத்தின் விரிவு, தொலை அறிவுடைய தன்னலமே, பொதுநலம் என்ற உணர்வு கொளுத்தியவர் திருவள்ளுவர். ஆகவே, துறக்க வேண்டியது தன்னலத்தையன்று, அறிவற்ற குறுகிய நோக்குடைய சிறு தன்னல மயக்கத்தையே; தன்னலம் வேறு, பொது நலம் வேறு என்ற கருத்தையே, தற்காலப் பொதுமக்கள் மட்டுமன்றி அறிஞர் பலரும், கீழ்த் திசையறிஞர் மட்டுமன்றி மேல் திசை அறிஞர் பெரும்பாலோரும் இம் மயக்கத்துக்கு உரியவர்களே என்னலாம். பொதுவாகச் சீன நாட்டறிஞர் மட்டுமே இத் துறையில் வள்ளுவப் பண்பை மரபறாது காத்து வந்துள்ளனர் என்னல் வேண்டும்.
அறம், மறம்; தன்னலம், பொதுநலம் ஆகிய இணைப் பண்புகளிடையேயுள்ள சிறிதளவு வேறுபாடுகூட இல்லறம், துறவறம் ஆகியவற்றினிடையே கிடையாது. ஏனெனில், துறவறம் இல்லறத்துக்கு உட்பட்ட, அதன் பரந்த அடிப்படை மீதமைந்த ஒரு சிறப்புப் பண்பே. இதனால் இரண்டின் பண்புக்கும் அடிப்படை இல்லறத்தின் பண்புதான்.
‘அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை’
- குறள் 49
என்றும்,
‘அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவது எவன்?’
- குறள் 46
என்றும்,
திருவள்ளுவர் அறத்தின் சிறப்பு முழுவதையும் இல்லறத்துக்கு அளித்ததன் காரணம் இதுவே. ஆனால், சிறந்த இல்லறமே துறவறமாதலால், இது துறவறத்தின் சிறப்பை ஒரு சிறிதும் குறைப்பதன்று.
‘தலைப்பட்டார் தீரத் துறந்தார், மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்’
- குறள் 348
என்று துறவு பற்றியும்,
‘துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்’
- குறள் 263
என்ற துறவோர் பண்பாகிய தவம் பற்றியும், இல்லறத்தினும் உயர்வு தோன்ற வள்ளுவர் கூற முடிந்தது இதனாலேயே, இவை முரண்பட்ட உயர்வு நவிற்சி யுரைகளல்ல. உயர்வுமேல் உயர்வு கூறிய தன்மை விளக்க வுரைகளேயாகும்.
அறம் அன்பை அடிப்படையாகக் கொண்டது. அதனாலேயே இன்பம் தருவது; அன்பு அடைக்கும் தாழ் அற்றது. எல்லையற்ற விரிவுடையது. இன்பமும் அது போன்றதே. அன்பு விரிவுறும், எல்லையற்ற வளர்ச்சி பெறும்.
‘அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல’
- குறள் 39
‘இன்பம், உண்மையான இன்பம் அன்பு வழியிலும் அற வழியிலும் மட்டுமே வரும். மற்ற எந்த வழியிலும் முயல்பவர் இன்பம் பெறார். அது மட்டுமன்று. அவ் வழிகள் புகழும் தாரா; துன்பமே தரும்’ என்று வள்ளுவர் வகுத்துரைத்தார்.
அறத்தின் விரிவு, அன்பின் எல்லைக் கேற்றபடி விரிவுறும். குடும்ப எல்லையிலும் சமுதாய எல்லையிலும் செயலாற்றும் இல்லறம், சிறிய எல்லையில் சிற்றின்பத்திலிருந்து தொடங்கிப் பெரிய எல்லையில் உள்ள பேரின்பம் நோக்கி வளரும். அதில் சிற்றின்ப எல்லை வீடாகவும்; பேரின்ப எல்லை, நாடாகவும், உலகமாகவும் இடஎல்லை அல்லது பரப்பில் விரிந்து செல்லு கின்றது. ஆனால், துறவறத்தில் அன்பு, பெருங்குடும்பமாகிய சமுதாயம், அதாவது நாடு, உலக எல்லையிலேயே தொடங்குகிறது. அத்துடன் அது கால எல்லையில் உலகு தாண்டி இனம் நோக்கிச் செயலாற்றுகிறது. அது பேரின்பத்திலிருந்து தொடங்கிப் பெரும் பேரின்பம் அல்லது நீடின்பம் என்ற இன இன்பம் அளாவுகிறது. இந்த வளர்ச்சிப் போக்கையே திருவள்ளுவர் இசை அல்லது புகழ் என்று கூறினார்.
மதுரைத் திருமலை நாயகன் மகால், ஆக்ராவில் உள்ள தாஜ்மகால், உரோம் நகரிலுள்ள செயின்ட் பீட்டரின் திருக்கோவில் ஆகியவற்றின் கலைப் பண்புகள் பற்றிக் கலைத் திறனாய்வாளர் சில அடிப்படை மெய்ம்மைகளை நமக்கு உணர்த்துவதுண்டு. அப் பாரக் கலைகளின் மாபேரளவே பார்ப்பவர்கள் கண்களுக்கு முதலில் பெருமைப் பண்புகாட்டி, அழகுப் பண்பை மறைக்கு மென்றும்; பின் அழகுப் பண்பு காட்டிப் பெருமைப் பண்பை மறைக்கும் என்றும், இவற்றை விட்டு வெளிவரும் சமயத்தில்தான் இரண்டும் கலந்த வீறமைதிப் பண்பு மனத்தில் இயல்பாகத் தங்கும் என்றும் கூறக் கேட்டிருக்கிறோம். இஃது அவற்றைக் காண்போர் கொள்ளும் சொல்லொணா உணர்வின் விளக்கம் என்பதில் ஐயமில்லை. திருவள்ளுவர் தரும் திருக்குறள் பாவுருவிலும் நூலுருவிலும் சிறிதேயானாலும், உண்மையில் இத்தகைய பாரக்கலையே. இன்று பொதுவாக உலகம் அதில் காண்பது அதன் சொல்லழகையும் சொல்திட்பம் அல்லது பொருட் செறிவையும் மட்டுமேயாகும். இவை கட்டட அழகல்ல, கட்டடத்தின் செங்கல்களின் அழகே. பார அகலக் கலையின் வீறமைதியை நாம் காண வேண்டுமானால், நாம் முதலில் செங்கல்லின் அளவும் கட்டடத்தின் அளவும் பொருளின் ஆழ அகல விரிவு உயர்ச்சிகளும் அகங்கொள்ளுதல் வேண்டும். அதன்பின் பொருளுடன் பொருளைப் பிணைத்த அவர் அழகு நயம் காணுதல் வேண்டும். இரண்டையும் நாம் பொது அறிவுநிலை யுடன் ஒப்பிட்டுக் காணும்போதே, அவர் பார வீறமைதியை நாம் நுகர முடியும். பார அகலக் கலை நுகர்பவர் நுகரும் சமயத்தில் தாமும் பார அகலப் பண்பு எய்துவர். அதுபோலவே வள்ளுவர் முப்பாலை நுகரும் சமயம் நாமும் நம்மை அறியாது வள்ளுவர் பார அகல உலகின் தன்மை பெறுவோம்.
துறவு, தவம், கடவுள் ஆகிய உச்ச உயர் பொருள்களுக்குச் சமயவாணர் கொடுத்துள்ள உயர்வு முழுவதையும், திருவள்ளுவர் தம் மாளிகையின் செங்கல் ஒவ்வொன்றுக்கும்—இல்லறத்தில் வாழும் ஒவ்வொரு தனி மனிதர்க்கும்—கொடுத்திருக்கிறார்.
‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்!’
- குறள் 50
இல்லற நெறிப்படி வாழ்பவன் தெய்வத்துக்கு ஒப்பாவான் என்று திருவள்ளுவர் குறிக்கிறார்.
இங்கே ‘கடவுள்’ அல்லது ‘இறைவன்’ என்ற பதத்தைத் திருவள்ளுவர் வழங்கவில்லை. இறைவன், பகவன், அந்தணன், தெய்வம் என்பன கடவுட் பண்பின் படிகள். இறைவன், வாக்கும் மனமும் சென்றெட்டாக் குறிக்கோள். பகவன் அத்திசை திரும்பி நின்று அதைக் காட்டியவன். அந்தணன், அதைக் கண்டு வழிபடுபவர்க்கு வழிகாட்டியான கடவுட் பண்பினன். தெய்வம் ‘அற ஆழி’ யான இறைவனின் அறவடிவம். அஃது இயற்கையின் அமைதியாகவும் உயிருலகின் அற ஆழியாகவும் இயங்குகிறது. இல்லறத்தில் வாழாது வாழ்பவன் இவ் வடிவாகிறான் என்பது அவன் உச்ச உயர் நிலையை விளக்குகிறது. அத்துடன் இக் கருத்துக் கவிஞர் உயர்வு நவிற்சியணியா யமையாமல் அதே அழகும் அதை விஞ்சிய நயமுமுடைய தெய்வக் கலைஞன் தன்மை நவிற்சி யணியாகவும் திகழ்கிறது.
இல்லறத்தான் ‘தெய்வ’ வடிவினனானால், துறவறத்தான் வடிவு யாது? துறவுப் பண்பில் மேன்மேலும் உயர்ந்து செல்லும் சான்றோன், அந்தணன், பகவன், ஆதிபகவன் வடிவுகள் எத்தகையவை? பாரக் கலையின் பாரப் பொருளை, அதன் பாரப் பெருமையை உணர இவ் வினாக்கள் உதவக்கூடும்!
வள்ளுவர் இல்லற துறவறக் கோட்பாடுகளின் தொடர்பு அறிபவர்களுக்கு, அவர் கூறும் தவமும், நோன்பும்; சமயவாணர் கூறும் குறுகிய தன்னல வெறுப்புத் தவமும், குருட்டு நோன்பாசாரங்களும் அல்ல என்பது தெளிவாக விளங்கும். தவம் என்பது கிட்டத்தட்ட தற்கால மொழியில் நாம் தன்மறுப்பு, தியாகம் என்று கூறும் கருத்தேயாகும். ஆனால், நம் தன்மறுப்பும். தியாகமும், கால, தேச எல்லை கடந்து இனக் குறிக்கோள்களான பின்பே வள்ளுவர் கருத்தளாவ முடியும். நோன்பு என்பதும் அதுபோலக் கிட்டத்தட்ட காந்தியடிகள் குறிக்கொண்ட அறப்போர் அல்லது மெய்யார்வமேயாகும். ஆனால், இங்கும் திருவள்ளுவரின் கால—தேசங் கடந்த இனக் குறிக்கோளுடன் சேர்த்தே அஃது உணரப்படுதல் வேண்டும். தவிர, சமய வாணர்க்கு நோன்பு தாழ்ந்த படி; தவம் உயர்ந்த படி. திருவள்ளுவர் கருத்தில் தவத்தின் முடிவே நோன்பு.
வள்ளுவர் கருத்தைத் தவம் (தவ்வு =—தாண்டு). நோன்பு (நோன்=வலிமை) என்ற சொற்களே சுட்டிக் காட்டும். வள்ளுவர் அறிவு தமிழின அறிவின் முதிர்ச்சியே என்று ஷ்வைட்சர் கூறிய செய்தியை இது வலியுறுத்துவது என்பதில் ஐயமில்லை. ஆனால், தமிழ் மொழி இப் பண்பைச் சங்க காலத்துக்கு நெடுங்காலம் முன்னரே, தொல்காப்பியத்துக்கு முன்னரே இழந்து வரத் தொடங்கிற்று. பெரிதும் இழந்திருந்தது என்பதைக் குறள்—தொல்காப்பிய—சங்க இலக்கிய ஆராய்ச்சி எளிதில் காட்டும். ஆயினும், இதன் சாதனை வருங்காலத்துக்கே உரியதென்றாகும். சேலம் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் உயர் திரு ஞா.தேவநேயப் பாவாணர் அவர்கள் போன்ற நுண்ணாய்வாளர் பலர் இவ் வழி முயன்றாலன்றி அது விளக்கம் உறாது.
துறவு கடந்து தவம், தவம் கடந்து உளத்திண்மை. இத் திண்மை யுடையார் கூறும் சொற்களே மந்திரம்.
தமிழகத்தில் நாம் அறியும் சமயத்துறை மந்திர ஏடுகளுள் பழைமை சான்றது திருமந்திரம். ஆனால், அதனினும் பழைமை சான்ற மந்திரத்தைத் தொல்காப்பியர் அறிந்திருந்தார். அவர் திருக்குறளையே அத்தகைய மந்திரமாகக் கருதியிருத்தல் வேண்டும். ஏனெனில், மந்திரத்துக்கு இலக்கணம் கூறும்போது அவர் வள்ளுவர் குறளை நினைத்தே, ஒரு குறட்பாவைத் தழுவி அதையே தம் மந்திர இலக்கணமாக்கினார். ஆனால், வள்ளுவர்க்கு முன்னும் அத்தகைய மந்திரங்கள் இருந்தனவோ, இல்லையோ?யாம் அறியோம்! ஏனெனில், வள்ளுவர் குறளினும் பழைமையான இலக்கியம் எதனையும் இதுகாறும் மனித உலகம் அறிந்ததில்லை. எனினும், கடவுட் கருத்தை உலகில் பரப்பிய முதல் மந்திரத் தொகுதி குறளாகவே இருத்தல் வேண்டும். ஏனெனில், திருக்குறளுக்கு அடுத்தபடி பழைமை வாய்ந்த அவெஸ்தா, இருக்கு வேதம் ஆகியவற்றின் மந்திரங்கள் மீது திருவள்ளுவரின் ஒளி நிழல்களை நாம் காண்கிறோமானாலும், அவ்வொளி நிழல் சென்று எட்டுவதற்குமுன் நிலவிய அரையிருள் நிழல்களும் அவற்றின் மீது படர்ந்துள்ளன என்பதில் ஐயமில்லை. உண்மையில் வள்ளுவர் ஒளி நிழல் அவற்றின்மீது ஒளி பரப்பியிருந்தாலும், வள்ளுவர் ஒளி நிழலை அவையும் அவைபோன்ற அரையிருட் படலங்களும் இந் நாள் வரை உலகில் பல படிகளாக மறைத்தேயுள்ளன என்று காண்கிறோம்.
நல்ல காலமாக, வள்ளுவர் ஒளி நிழலை நம் கீழ் திசைக் கண்களிலிருந்து மறைத்த அரையிருள் நிழற்படங்கள் மேல் திசையில் அவ்வளவு திண்ணிதாகப் பரவவில்லை. மேல்திசை அறிஞருள் ஒருவரான ஷ்வைட்சரின் கண்ணொளி அரையிருள் நிழல்படாத தொலைவினின்றும் இக் கதிரவன் ஒளி நிழல் கண்டுள்ளது.
கடவுட் கருத்தை முதலில் கண்டு உலகுக்கு அறிவித்தவர் என்ற முறையில் திருவள்ளுவரே உலகுக்கு ஆதி பகவன் என்று கூறத்தக்கவர். ஆனால், விவேகானந்த அடிகள் தம் பெருமை முழுவதையும் தம் ஆசானான இராமகிருஷ்ணர்க்கு அளித்தது போல, திருவள்ளுவரும் தம் பெருமை அனைத்தையும் தம் ஆசானுக்கே அளித்திருக்கக்கூடும். அவர்க்கு அவ்வாசான் அணிமைக் காலத்தவராய் இருந்ததனாலேயே, அவர் மெய்ப் பெருமை தோன்ற எழுத்து வகுத்துருவாக்கிய முன்னோன் ஒருவனை எண்ணி, உலகுக்கு எழுத்தையும், ஆதிபகவனுக்கு அதன் முதன்மை நிலையான அகரத்தையும் உவமையாக்கி இருத்தல் கூடும் என்னலாம்.
திண்மையை அறத்தின் உச்சியில், தவத்தின் கொடுமுடியில் நிற்பவர் பண்பாகத் திருவள்ளுவர் காண்கிறார். ஆனால், வியப்பு என்னவென்றால், பெண்மையில் அதைப் பொதுப் பண்பாக, கற்பாக அவர் கண்டுணர்ந்தார்.
‘எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்’
-குறள் 666
என்ற குறள் திண்மையுடையாரே ‘செயற்கரிய செய்பவர்’ என்று சுட்டிக் காட்டுகிறது. தவத்தாலும் நோன்பாலுமே பொதுவாகக் கைவரப்பெறும் இத் திண்மை, பெண்பாலார்க்குக் கற்பு ஒன்றின் மூலமே கைவரப் பெறுவது என்று வள்ளுவர் கட்டுரைத் துள்ளார்.
அறம் என்ற இமய மலை—- அதன்மேல் துறவறம் என்ற எவரஸ்ட் கொடுமுடி- அதன் மேல் ஏற்றிய தமிழ்க் கொடி திருவள்ளுவர் கண்ட பெண்மை, அவர் கண்ட பெண்மை கனவுப் பெண்மை மட்டுமன்று, தமிழகம் அவர்காலம் முதல் நெடிது பேணிவரும் பெண்மை அது!
பெண்மைக் கென்றே-தனிமனிதன், சமுதாயம், சமயம், அரசியல் ஆகிய படிகள் கடந்த இனப்படி அல்லது கடவுட் படிக்குரிய இனமாகிய பெண்ணினத்துக் கென்றே-வள்ளுவர் வகுத்த பால்தான் இன்பப்பால்! ஆகவே, அதுபற்றிய முழு விளக்கத்தை அந்தப் பாலுக்கு ஒத்திவைத்துவிட்டு, அறம் பற்றிய ஆராய்ச்சியில் மேற் செல்லுவோம்.
வள்ளுவர் வாழ்க்கைக் கோட்பாட்டில் ஊழ் மிகமிக முக்கியமான இடம் வகிக்கிறது. ஓர் அதிகாரமாகவும் ஓர் இயலாகவும் அது வகுக்கப்பட்டு, அறத்துப் பாலின் இறுதி இயலாக அமைந்துவிட்டது. பொருட்பாலின் முதல் இயலான அரசியலைத் துறவியலுடன் இணைக்கும் பகுதி அதுவே. எனவே, துறவறவியலின் கடைசி அதிகாரமான அவாவறுத்தலையும், பொருட்பால் அரசியல் ஆகியவற்றின் முதல் அதிகாரமான ‘இறைமாட்சி’யையும் சேர்த்தே அதன் ’வாயிற்’ பண்பை நாம் விளங்கக் காணுதல் தகும்.
அறத்துப்பால் இறை வணக்கத்துடன் தொடங்கிற்று. வான்சிறப்பு, ஒழுக்கத்து நீத்தார், அறன்வலியுறுத்தல் என்ற மூன்றதிகாரங்களாலும் இன்பம், பொருள், அறம் ஆகிய இயற்கைக் கூறுகள் வழி இறைவன் தனி மனிதனை அவன் தனி அறத்தில் நின்று இயக்குகிறான். உள் நின்று இயக்கும் இந்த இறைவனை அன்றித் தனி மனிதனை இயக்கும் ஆற்றல் வேறில்லை. ஆனால், சமுதாய, அரசியல் நிலையடைந்த மனிதனுக்கு இது போலவே புறம் நின்று இயக்கும் ஓர் இறைவனும் உண்டு. அவன்தான் அரசன். இறைவழிபாட்டுடன் தொடங்கும் அறத்துப் பால் போல, இறைமாட்சியுடன் பொருட்பால் தொடங்கு கிறது.
மனிதனை உள் நின்று இயக்கும் அக இறைவனாகிய கடவுள் போல, சமுதாயத்தைப் புறம் நின்று இயக்கும் புற இறைவன் அரசன். இருவரையும் தமிழில் ஒரே சொல் குறிக்கும் புதைபொருள் இதுவே. வேறெம் மொழியிலும் இஃது அமையாதது கூர்ந்து நோக்கத்தக்கது.
வள்ளுவர் சமுதாய அரசியற் கருத்துகள்
சமயம், சமுதாயம், அரசியல் ஆகிய மூன்றும் மூவேறு துறைகளாகவே இன்று மனித சமுதாயத்தில் நிலவுகின்றன. மூன்றிலும் உறுப்பினர், ஆளப்படுவோர், பண்பாட்சிக்கு உரியவர் ஒரே மனித இனம் சார்ந்தவர்களே. ஒரே மனித இனத்தின் நலங்களைப் பேணவே அம் முத்துறைகளும் மனித இனத்தில் அமைந்துள்ளன என்பதையும் எவரும் ஒத்துக் கொள்வார்கள். ஆயினும், மூன்றும் மூவேறு பாகுபாடுகளென்றும்; மூன்றின் பண்புகளும் வேறு வேறு என்றும்; மூன்றின் பரப்பு, உட்பரப்புப் பாகுபாடுகளும் தனித் தனியானவை என்றும்; முத்துறைகளின் ஆட்சியாளர்களும் வேறு வேறானவர் மட்டுமல்லர்; வேறு வேறு பண்பும், நோக்கமும், இயல்பும் உடையவர்கள் என்றுமே பொதுவாக உலக மக்களும் உலக அறிஞரும் கருதி வந்துள்ளனர். கருதி வருகின்றனர்.
சமயத்தின் மீது சமுதாயத்தையும், சமுதாயத்தின் மீது அரசியலையும் கட்டமைக்க மனு முதலிய சமற்கிருத சுமிருதிவாணர் சிறப்பாகவும் சமற்கிருத வாணர் பொதுவாகவும் முயன்றதுண்டு. இதன் பயனாக அவர்கள் கண்ட கோட்பாடே வருணாசிரமக் கோட்பாடு. சுமிருதிகளும் பகவத்கீதையும், அர்த்த சாத்திரமும். புராண இதிகாசங்களும். சமற்கிருத இலக்கியமும் இதைப் பலவேறு வகையில் புதிது புதிதாக விளக்க முற்பட் டுள்ளன. திருவள்ளுவர் மரபின் நிழல் தடவி அவரைப் போல மும்மையில் ஒருமை காண இடைக்கால சமற்கிருத நாகரிகம் பெரிதும் முயன்றுள்ளது என்பதற்கு இவை சான்றுகள் ஆகும்.
இந்திய அருட் பெரியார் அனைவருடனாகவும், சில சமயம் சொற்கடந்து பண்பிலும் உள்ளீடாக ஷ்வைட்சர், திருவள்ளுவர் மரபைக் கண்டதில் வியப்பில்லை. அம் மரபில் இஃது ஒரு பகுதியேயாகும்.
மேலைச் சமயங்களாகிய கிறித்துவ, இசுலாமிய ஏடுகளில் சமயம், சமுதாயம், அரசியல் ஆகிய மூன்றும் ஒரே வாழ்க்கைப் பண்பு என்ற கருத்தின் நிழலைக் காணலாம். எனினும், இவை சமயக் கோட்பாடுகளாதலால், நாளடைவில் மேலை நாடுகளில் சமயங் கடந்து செயலாற்றவில்லை. இன்றைய உலக வாழ்வில் சிறப்பாகவும் மேலே குறித்துள்ளபடி மூன்றும் மூவேறு ஆட்சிக்குட்பட்ட, மூவேறு பரப்புடைய, மூவேறு பண்பு களாகவே கருதப்பட்டு வருகின்றன.
மேலை நாடுகளிலும் கீழை நாடுகளிலும் அருட் பெரியார்கள் மூன்றையும் ஒன்றாகக் காணும் ஆர்வமுடையவர் களாகவே உள்ளனர். ஆனால், இருதிசையிலும் அறிஞர்கள், பொதுமக்கள், ஆட்சியாளர்கள் இம் மூன்றையும் வேறு வேறாகவே கண்டுள்ளனர். இதற்குச் சிறு சிறு விதி விலக்குகள் உண்டு. எடுத்துக்காட்டாகச் சட்ட அறிஞர்கள் சமுதாயப் பழக்கவழக்கப் பண்புகளின் மீதே சட்டங்கள் அமைகின்றன என்ற மெய்ம்மை கண்டு வகுத்துள்ளனர். உயிரின வளர்ச்சியில் கருத்துச் செலுத்தியவர்கள் குடும்ப சமுதாயப் பண்புகள் மீதே அரசியல் மட்டுமன்றி, சமயமும்கூடக் கட்டமைக்கப்படுகிறது என்று விளக்க முற்பட்டுள்ளனர். இருபால் பற்றிய இன்ப இயலார் பாலின உணர்வினின்றே உயிரியக்கம் முழுவதும் நாகரிகப் பண்புகள் யாவும் மலர்கின்றன என்று காட்டுகின்றனர். ஆனால், மூன்றும் வேறு வேறு என்ற பரந்து செறிந்த பொதுக் கருத்தி னிடையே இவ் விளக்கங்கள் மின்னல்களாக, மின்மினிகளாக நிலவுகின்றனவேயன்றி, நிலையான மெய்ம்மைகளாக, கோட்பாடாக இன்னும் உணரப்படவில்லை.
இந்த உலகப் பின்னணிகளிடையே திருவள்ளுவர் வாழ்க்கைக் கோட்பாடு தனித்தன்மை உடையது. அதே சமயம் அது கீழை உலகுக்கும், மேலையுலகுக்கும்; அறிஞர்க்கும் அருளாளர்க்கும் இடையே பாலமாகவும், அவர்கள் வேறுபாட்டுக் குரிய விளக்கமாகவும் அமைகின்றது.
திருக்குறளின் பொருட்பாலில் பொருள் என்பது சமயம், சமுதாயம், அரசியல் ஆகிய மூன்றையும் உட்படுத்தும் கூறு ஆகும். இவற்றுள் சமயம் என்பது பொருளின் அறக்கூறு-இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு கூறுவது. பாயிரத்தாலும் அறத்துப்பாலின் துறவறத்தாலும் சுட்டிக் காட்டப்பட்டது. அதன் மீந்த பகுதியே இறைமாட்சி, கல்வி முதலிய பொருட்பாலின் தொடக்க அதிகாரங்களால் விளக்கப்படுகிறது. ‘அரசியல்’ என்ற இயல் முழுவதும் இவற்றின் விரிவே. நாம் இன்று அரசியல் என்ற தொடரால் வழங்கும் வாழ்க்கைக் கூறு அங்கவியலில் விளக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இதே அங்க இயலின் பல அதிகாரங்கள் ஆள்வோரை ஆள்வோனாகிய அரசன் அல்லது இறைக்கும், அமைச்சர் முதலாக ஆன்றோர் அதாவது சமுதாயத் தலைவர் ஈறாக உள்ள ஆள்வோராகிய பெரியார்க்கும் அவர் வழி நிற்கும் ஆளப்படுபவ ராகிய குடிகளுக்கும் உரிய பண்புகளையும் பொதுப்பட நிறுவி அடுத்த ஒழிபியலுக்குத் தோற்றுவாய் செய்கின்றன.
ஒழிபியல் என்ற பெயர் பொருட்பாலின் கடைசி இயலின் முக்கியத்துவத்தைச் சிறிது மறைப்பதாகவே அமைந்துள்ளது. உண்மையில் பொருட் பாலின் உயிர்க் கூறாகிய குடியியல் அல்லது சமுதாய இயல் அதுவேயாகும். சமுதாயத்தை உள்ளே நின்றியக்கி, சமயத்தையும் அரசியலையும் வகுத்து நல்லரசாக்க வும், அல்லரசு தவிர்க்கவும் மக்கட்கு வழிகாட்டுபவர் ஒழுக்கத்து நீத்தாராகிய சான்றோரேயாவர். அவர் பண்புகளும் அவர் வழி நிற்கும் குடிகளின் பண்புகளும் விளக்கும் பகுதியே ஒழிபியல்!
அறம், பொருள், இன்பம் என்ற பாகுபாட்டை இன்பம், பொருள், அறம் எனக் கொள்ள விரும்புபவர் உண்டு. இங்ஙனம் கொள்வதிலும் ஓர் உண்மை தொக்கி நிற்கிறது என்பதில் ஐயமில்லை. ஏனெனில், இன்பத்தின் அடிப்படையிலேயே பொருளும், பொருளின் அடிப்படையிலேயே அறமும் நிகழக் கூடும். இதுபோலவே சமயம், அரசியல், சமுதாயம் என்ற பாகுபாட்டிலும் சமுதாயமே அடிப்படையானது. சமுதாயத்தின் வழியே அரசியலும் அரசியலின் வழியே சமயமும் வளம் பெறுதல் கூடும். ஆனால், முப்பாலில் பாயிர முறையன்றி எதிர் முறையில் வள்ளுவர் வரிசையமைத்தது போலவே பொருட் பாலிலும் இவ்வெதிர் முறையையே பின்பற்றியுள்ளார். இதில் நாம் கருத்துச் செலுத்துதல் பயனுடையது.
தமிழில் ‘இறை’ என்ற சொல் கடவுளையும் குறிக்கும்; அரசனையும் குறிக்கும். திருவள்ளுவரும் இரு பொருளையும் இந்த ஒரு சொல்லால் குறித்துள்ளார். இது தற்செயலான சொல் வழக்காறன்று. ஏனெனில், கடவுளைக் குறிக்கும் முதல் அதிகாரத்தில் ஆதிபகவனுடன் கடவுளை ஒன்றுபடக் கூறி, பண்புப் பெயர்களை வழங்கியுள்ளார். ‘இறைவன்’ என்ற சொல் இரு தடவையே வழங்கப்பட்டுள்ளது. மற்றச் சொற்கள் இறைவனின் கண்கண்ட வடிவமான ஆதி பகவனையும், ஆதி பகவனுக்குப் பேரளவிலும் இறைவனுக்கு நிறையளவிலும் பொருந்தும் பண்புகளையும் காட்டின. இதுபோலவே பொருட் பாலின் முதல் இயலான அரசியலின் முதல் அதிகாரமான இறைமாட்சியிலும் தலைப்பை விடுத்தால் ஒரே ஒரு தடவை இறைவன் என்ற சொல் வழங்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் அரசு, மன்னன், வேந்தன் முதலிய சொற்களும் பிற பண்பு சார்ந்த அடைச் சொற்களும் கருத்து விளக்கங்களாகத் தரப்பட்டுள்ளன.
‘இறை வாழ்த்து’ அதிகாரம் முப்பாலுக்குப் பொதுவாகவும் அறத்துப் பாலுக்குச் சிறப்பாகவும் தோற்றுவாய் ஆதல் போல, இறைமாட்சி பொருட்பாலுக்குப் பொதுவாகவும் அறத்துப் பாலுக்குச் சிறப்பாகவும் தோற்றுவாய் செய்கிறது. அறத்தை இயக்கி முப்பால் வாழ்வாகிய உலக வாழ்வை இயக்குபவன் கடவுளின் கண்கண்ட உருவினனான ஆதிபகவன். அவன் அறவாழி அந்தணன் வழி நின்ற அந்தணனாய், பிற பகவர் அல்லது அந்தணர் மூலம் அறவோரையும் அறத்தையும், சமுதாயத்தையும் உலகையும் இயக்குகிறான். அதுபோலவே, மனிதப் பேரினத்தின் ஒரு முழு நிறைவுடைய கூறாகிய இனம் அல்லது தேசிய அமைப்பு அல்லது அரசியல் சமுதாய எல்லையிலும் ஆள்வோரை இயக்குபவனாக இறைவழி நின்ற அரசன் அல்லது இறைவன் அமைகிறான். அறவாழி இயக்கும் இறைவன் வழிநின்றே பொருளாழி இயக்குவதால் அவனும் இறைவன் ஆவான்.
‘முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்!’
-குறள் 388
இக் குறட்பா மேற்குறிப்பிட்ட கருத்தை வள்ளுவர் வாய் மொழியாலேயே விளக்குகிறது. இறைவன் பண்பு இயற்கையில் ஊழ் அல்லது தெய்வமாக, அமைதியாக (Laws of Nature) இயங்குகிறது. அதுவே, சமுதாயத்தில் அறமாக (Laws of Ethics or Moral Code) இயல்கின்றது. பின்னும் அதுவே அரசியல் சமுதாயம் அல்லது தேசிய இனம் நாட்டில் ‘முறை’ என்ற பெயருடன் (Laws of State) இடம் பெறுகிறது. அற ஆழி இயக்குபவன் இறைவன் அல்லது ஆதிபகவனானால், ‘முறை’ யாழி இயக்குபவனாக அரசன் விளங்குகிறான்.
திருவள்ளுவர் கால அரசன், மக்கள் சமயம், அரசியல், சமுதாய வாழ்வு ஆகிய மூன்றுக்கும் ஒருங்கே பொறுப்புடைய முழு நிறை தேசிய முதல்வன் என்பதை நாம் உளங்கொள்ளுதல் வேண்டும். அதுமட்டுமன்று, அவன் பிறப்பால் இயல்பான குடிமுதல்வன். ஆனால், அவன் உரிமை முடியரசின் நிலையான தனி உரிமையன்று. குடியரசின் தற்காலிகமான தேர்வுரிமைகூட அன்று. அஃது அவன் அன்புரிமையும் மக்கள் ஆர்வ உரிமையும் மட்டுமே. தற்கால மொழியில் கூறுவதானால், அவனுக்கு உண்மையில் உரிமை எதுவும் கிடையாது. கடமை மட்டும்தான் உண்டு. மக்கள் வாழவில் வளம் காணும் அளவிலேயே அவன் ஆட்சி சிறக்கும். மக்கள் உள்ளத்தில் அவா ஆர்வம் எழுப்பிச் செயலாற்ற வைத்து, அவ் அவா ஆர்வங்கள் எழுமுன் அவை நிறைவேறும்படி செய்வதே அவன் செங்கோன்மைப் பண்பு. இப் பண்பைக் குடியாட்சி யியக்கும் அரசன்பால் ஏற்றாமல் அவன் புகழ்க்குரிய நாட்டின்பால் வைத்துப் பாடியுள்ளார் திருவள்ளுவர்.
‘நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு’
-குறள் 739
‘மக்கள் நாடிய வளங்கள் யாவும் நாடுமுன்பே நாட்டில் அமைதல் வேண்டும். அப்படி நாடுமுன்பே அமையாமல், நாடிய பின் அமையுமானால், அது நாடல்ல’ என்பது இக் குறட்பாவின் பொருள்.
மேலீடாகப் பார்ப்பவர்க்கு இது பொருளற்ற பசப்புக் கூற்றாகக்கூடத் தோற்றக்கூடும். பொருள் செறிவித்து உரையாற்றினால்கூட அது கம்பர் போன்ற கவிஞரின் கட்டற்ற கவிந்துரையாக விளங்குமேயன்றி, சங்கப் புலவருக்கோ அது கடந்து திருவள்ளுவர்க்கோ உரிய முழு வாய்மையுரையாகத் தோற்றாது. வள்ளுவர் கால நாடு குடியாட்சிக்கு மூலமான நகர் நாட்டுக் குடியரசு என்பதையும், அதன் முதல்வனாக வள்ளுவர் குறிக்கொண்ட அரசனும் அரசியற் பண்பும் இன்றைய குடியாட்சியும் சமதருமமும் பொதுவுடைமையும் இன்னும் சென்றெட்டாத, காந்தியடிகள் போன்ற அருளாளர் கனவுகள்கூடக் கடந்த ஓர் உயர் குறிக்கோள் என்பதையும் உணர்பவர்க்கு இது போலிக் கவிதையின் மிகையுரையல்ல; உண்மைக் கவிதை, தெய்விகக் கவிதையின் உள்ளுணர்வுரை என்பது இணக்கமாகும்.
அரசியலில் செயலுரிமை பெற்றவர் அமைச்சரும், மன்ற வாணரும், அம்பலக்காரரும், அகம்படியரும், அரசியற் பணியாளருமேயன்றி அரசனல்லன். அவன் அவர்கள் செயல்துறையில் அவர்கள் காட்டிய வழி நடப்பவன் மட்டுமே, அதனை மீறும் ஆற்றல் அவனுக்குக் கிடையாது; மக்களுக்கே உண்டு. ஆனால், அவன் சமுதாயத் தலைவன். மக்கள் உள்ளங்களில் வீற்றிருப்பவன்; அவன் சமுதாயத் தலைவர்கள் அல்லது பெரியார்களின் நண்பன். அவர்களைச் சேர்ந்தொழு குபவன், அவன் அந்தணர்கள் உள்ளத்தில் வீற்றிருப்பான், அவ்வுள்ளம் இடங்கொண்ட இறைவனின் கண்கண்ட செயலுருவாக ‘மக்கட்கு இறையாக’ விளங்குபவன். இக்காரணங் களால் அவன் மக்கள் அவாவையே இயக்கி, ஆட்சியாளர் உள்ளமும் இயக்கித் ‘தோன்றாத் துணை’யான ’ஒரு கடவுளாக’; செய்பவர் அறியாமலே செயல்வளம் உண்டுபண்ணுவான். வள்ளுவர் மொழியில் அவன் ஊழை வெல்லும் ஊழ் கண்ட பெரியார்களின் உள்ளமாக, அரசியல் சமுதாயத்தின் ஓர் ‘ஆகூழாக’ நிலவுவான். இவ் ஆகூழ்வளம் இயற்கையால் நாட்டுக்கு அமைவதன்று, இயற்கை வளமன்று, இயற்கை வளத்தின் வாய்ப்புகளறிந்து, அன்பின் தொலையறிவும், ஆர்வத்தின் செயலாற்றலும், ஒப்புரவு, சால்பு ஆகியவற்றின் எல்லையற்ற துணையாற்றலும் கொண்டு நாட்டுக்குக் குடியாட்சி மரபில் நிற்கும் மன்னன் அளிக்கும் வளமே இது.
சங்க இலக்கியத்தில் இயற்கை தரும்; போட்டியிடும் மன்னன் கைதரும் வளத்தைப் புலவர் பலர் சுட்டிக் காட்டியுள்ளனர்.
“நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;
அதனால், யான் உயிர் என்பது அறிகை
வேல்மிகு தானை வேந்தர்க்குக் கடனே”
- புறம். 186
என்று மோசிகீரனாரும்.
“வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன்
வைப்பற்று ஆயினும், நண்ணி யாளும்
இறைவன் தாட்கு உதவாதே; அதனால்
நிலன்நெளி மருங்கின் நீர்நிலைபெருகத்
தட்டோர் அம்ம, இவண் தட்டோரே!”
- புறம். 18
என்று குடபுலவியனாரும் இக்கருத்துக்கு ஓரளவு விளக்கம் தந்துள்ளனர். மழை பெய்யா இடத்துக்கும் காலத்துக்கும் உதவ அணைகட்டி நீர்ப்பாசனம் அமைத்தல் மன்னனால் ஏற்படும் ஆகூழ்க்கு-நாடா வளத்துக்கு ஓர் எடுத்துக் காட்டேயாகும்.
பாயிரத்தில் இறை வாழ்த்தினை யடுத்து வான் சிறப்பு கூறப்பட்டது. இயற்கை வழி நின்று இறைவனாற்றும் வரையா அன்புச் செயல் அது. அதுபோலச் சமுதாய ஆட்சி வழி நின்று அரசனாகிய இறைவன் ஆற்றும் அறிவுச் செயல் ஒன்று உண்டு. அது வான் போலச் சமுதாயத்தின் வளம் பெருக்குவது. அதுவே கல்வி, வான் சிறப்போடொத்த பொருட்பால் கூறு அதுவே. வான்மூலம் இறைவன் உலகில் அறவொளி இயக்கினான். அறம், வானின் பண்பாகிய கடவுட் பண்பை மனித இனத்தில் பரப்புகிறது. அதே கடவுட் பண்பை அரசியல், சமுதாயத்தில் அரசன் பரப்பும் கல்வி தரும். கல்வி இறையாட்சியின் பின் அடுத்து வைக்கப்பட்டதன் காரணம் இதுவே.
‘கல்வி’ அதிகாரம் பொருட்பாலில் ஏன் இடம் பெறுதல் வேண்டும்? பொருட்பாலில் இடம்பெற்றாலும் ‘அரசியலில்’ ஏன் கூறப்படுதல் வேண்டும்? இக் கேள்விகளை எழுப்பியவர் உண்டு. கல்வி மக்களுக்குப் பொதுவாகவும், அரசனுக்குச் சிறப்பாகவும் அமைவது என்ற முறையிலேயே அஃது அரசியலில் இடமளிக்கப்பட்டது என்று விளக்கம் அளிப்பவரும் உளர். பரிமேலழகர் உரை விளக்கம் இதுவே. ஆனால், இவை, விளக்குபவர் குறுகிய உள்ளப் போக்கைக் காட்டக்கூடுமேயன்றி வள்ளுவர் கருத்துயர்வையோ, கோட்பாட்டின் அருமையை யோ அணுகமாட்டா. ஏனெனில், வள்ளுவர் கீழ்த்திசையிலும் மேல்திசையிலும் இடையிருட் காலத்தவர் கருதியபடி, சிறந்த மனிதர் அல்லது அறிவினம் அல்லது அறிவு வகுப்புக்குரியது கல்வி என்று கருதவில்லை. தற்கால அறிஞர்களைப் போல குடியாட்சி, சமதரும, பொதுவுடைமை அறிஞரைப்போல், மனித இனத்துக்குச் சிறப்பளிப்பது என்று கூடக் கருதியமையவில்லை; கல்வியை விலங்குக்கும் மனிதனுக்கும் இடையேயுள்ள வேறுபாடாகவே கருதினார்.
மனித இனம் முழுவதும் கல்வி பரவுதல் வேண்டும் என்று இன்று குடியாட்சியறிஞர், சமதரும, பொதுவுடைமை யறிஞர்கள் கனவு கண்டுள்ளனர். சில பல நாடுகளிலேனும் அதை முனைந்து வெற்றிகரமாக்கிக் காட்டியுள்ளதாக அரசியற் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆனால், இங்கே கல்வி என்று கூறப்படுவது எழுத்தறிவையே. இஃது, ஆள்பவர் ஆளப்படுபவர் என்ற வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்ட கருத்தன்றி வேறன்று. ஏனெனில், ஆளப்படுபவர் இவ்வடிப்படைக் கல்வி பெறுவது ஆள்பவர் நலத்துக்கு உயிர்த் தேவையாகும். ஆள்பவர்—ஆளப்படுபவர் வேறுபாடற்ற நிலையில், எல்லார்க்கும் ஒத்த கல்வியே குறிக்கோளாதல் சாலும். திருவள்ளுவர் குறிக்கோள் இதுவே என்பதைக் கல்வி அதிகாரத்திலுள்ள அவர் குறட் பாக்கள் காட்டுகின்றன.
திருவள்ளுவர் கல்வி எண்ணும், எழுத்தும் உள்ளடக்கியது. ஆனால், இந்த இரண்டுக்கும் கடவுளுக்கும் இன்று எவரும் எத்தகைய நேர்த்தொடர்பும் காணமுடியாது. எவரும்-பரிமேலழகர்கூடக்—காணவில்லை. இவை கடவுள் பற்றிய அறிவுநூல் காணக் கருவிகள் ஆகும் என்று மட்டுமே அவரும் பிறரும் கூறுவர். ஆனால், இப்படியும் ‘எண்’ எழுத்தளவு பயன்படாது, தவிர, கடவுள் பற்றிய நூல்களுள் ஒன்று மட்டுமே மேலே குறித்தபடி ‘ஒரு நல்ல ஆத்திகரின் தீங்கற்ற மிகையுரை’ என்று வள்ளுவர் பாடத்தைக் கொண்டாலன்றிக் கல்வியின் பயனும் நோக்கமும் இறைவன் தாள் என்பதை உணருமாறில்லை.
வள்ளுவர் குறிக்கோளை நாம் சென்று எட்டாததற்குக் காரணம் ‘அறிவு’ என்ற சொல் பற்றியும், ‘அழகு’ என்ற சொல் பற்றியும் உலகம் இன்று கொண்டுள்ள மயக்கக் கருத்துகளே யாகும். இரண்டுடன் ‘நன்மை’ என்பதற்குரிய தொடர்பைக் கண்டுணர்ந்தார் உலக அறிஞர்களிடையே கூட மிக மிகச் சிலரே. அவர்களும் அதை விளக்கியவர்களல்லர். வள்ளுவர் விளக்கி யுள்ளார். ஆனால், அஃது இடைக்காலப் பிற்காலச் சமயவாணர் அரைகுறை அறிவின் மாயையால் மறைக்கப்பட்டுள்ளது.
அறிவு நன்மையுடன் தொடர்பற்றதல்ல. காவல் துறை யறிவும், திருட்டுத் துறை அறிவும் ஒன்றே. முன்னதை நாம் வளர்க்கிறோம். பின்னதைச் சில சமயம் அறிவு என்று கூறினாலும் பெரும்பான்மை விலக்க விரைகிறோம். அறிவும் இவ்வாறே! மனித இனம் கண்காணாப் பகவர் வழிநின்று நல்லறிவும் நல்லழகுமே வளர்த்துள்ளனர். உயிர் வளர்ச்சி நூலார் இதனைத் தெளிவுபட இன்னும் காட்டுவர். வள்ளுவர் இதன் உண்மை கண்டவர்; கண்டு சமய முதல்வர்களுக்குத் தம் சொல்மரபில் விட்டுச் சென்றவர். அதன் சொல் மரபு இன்று எல்லாச் சமயங் களையும் வளர்த்துள்ளது. அதன் பொருள் மரபோ ஓரொரு சமயத்தில் ஓரோரு கூறாக மட்டும் நின்று நிழலொளி அல்லது மின்னொளி தருகின்றது. எல்லாச் சமயங்களும்,—நாத்திகக் கோட்பாடுகள்கூடத்—தம்மையறியாமல் வள்ளுவர் குறட்பாவில் ஈடுபடுவதன் காரணம் இதுவே.
வள்ளுவர் கடவுள், இனநல உருவினர். அன்புருவினர். அவர் வழி நிற்கும் வள்ளுவர் அறிவும், அழகும் அன்பு வளர்க்கும் அறிவு. அன்பு வளர்க்கும் அழகு. இயலும் கலையும் பயன் நோக்கியன வல்ல என்று கூறும்போது, நாம் எண்ணுவது தனி உயிர்ப் பயனையே. அவை பொது உயிர்ப்பயன். எண் கடந்த, இடங்கடந்த. காவல் கடந்த, —அதாவது நாடு, இனவேறுபாடு, சூழல் வேறுபாடு, சமய வேறுபாடு, தலைமுறை வேறுபாடு, ஊழி வேறுபாடு கடந்த தூய உயர் நிலை (absolute) அறிவு நலமும், அழகு நலமும் ஆகும். ஆகவேதான் வள்ளுவர் கருத்துப்படி கல்வியின் நோக்கமும் பயனும் சமுதாயத் தொண்டு, உயிர்த் தொண்டென விரிந்து, எல்லையற்ற அன்புருவான கடவுளின் தாள் கடைப் பிடிக்கச் செய்யும் பண்பாய் உள்ளது.
கண்காணா முழுமுதல் இறைவன், அவன் வழி அவனைக் கண்டுணர்ந்த அவன் தாள் ஆகிய ஆதிபகவன், அவன் வழி நின்ற உலகம், அதில் அவன் நேர்வழி மரபாகிய பகவர், கிளை வழி மரபாகிய அந்தணர், அரசியல் சமுதாயத்தில் மீண்டும் நேர் இறைவழி நின்று; அனைவரையும், அனைவர் மரபையும் இணைக்கும் அரசனாகிய இரண்டாம் இறைவன், அவன் ஆதிக்க உரிமையின்றி அன்புரிமையால் இயக்கப்படும் அவன் தாள்கள், தாளாளர்கள் அல்லது செயலாட்சி முதல்வர் அதாவது அமைச்சர் முதலிய ஆள்வோர் குழுவினர்; மீண்டும் இறைவன் வழிநின்று சமுதாயம் இயக்கும் பெரியார், சான்றோர், பண்பாளர் ஆகியோரால் இயக்கப்படும் மக்கள் அவை அல்லது மன்றம், இவர்கள் இயக்க இயங்கும் மக்கள் எனத் திருவள்ளுவர் வகுத்த அறம், பொருட்சங்கிலியின் பின்னல்; இறைவன் தாளாகிய ஒரு தலையினின்று உலகளாவுகிறது.
தற்காலத்தில் சிந்தனையுரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, பத்திரிகையுரிமை, எதிர்க்கட்சியுரிமை, அவையோர் உரிமை யாகிய எத்தனையோ உரிமைகளை அரசியலார் அளிப்பதாகக் கூறுகின்றனர். அறிஞர் திருநிலையுடையதாகப் பேண விரும்பு கின்றனர். ஆனால், இவை கருத்தளவிலும் குறிக் கோளளவிலும் நிலவுவனவன்றிச் செயல்முறையில் செயற்படத் தக்கனவல்ல என்பதை ஒரு சிறிது அனுபவ வாயிலாகச் சிந்திப்பவர் காணக்கூடும். ஏனெனில், ஒருபுறம் தீயோர் இவற்றைப் பயன்படுத்துவதை எந்த அரசியலாரும், சமயத் தலைவரும், சமுதாயத் தலைவரும் தடுக்கமுடியாது; முடியவில்லை. அதே சமயம் ஆள்பவர் விரும்பாத, அல்லது தற்காலிகமாகவேனும் உணராத இடத்தில் நல்லோர் இவற்றை வழங்க முடியாமல் திணறுவதையும் காணலாம். இயேசுபிரான், முகமதுநபிகள், காந்தியடிகள் வாழ்க்கையே இதற்குச் சான்று. நல்லோர் ஆள்வோராக வரினல்லது நல்லோர்க்குப் பாதுகாப்பு இருக்க முடியாது. உலகின் சூழலில் நல்லோர் பெயர் கூறிப் பிறர் ஆள்வோராதலல்லது, நல்லோர் ஆள்வோராக வருதல் என்றும் கூடாத ஒன்று. கிரேக்க மாபேரறிஞருள் ஒருவரான பிளேட்டோ இவ்வுண்மை கண்டு குடியாட்சி என்பது குழப்ப ஆட்சியேயன்றி வேறன்று என்று அங்கலாய்த்துள்ளார். தற்காலத்துக் குடியாட்சியறிஞர் அங்ஙனம் கொள்ளவில்லை என்றால் குடியாட்சியின் உயர் குறிக்கோளே போதும். நாளடைவில் நலம் விளையும் என்ற அவர்கள் நம்பிக்கையாலேயன்றி வேறன்று. தற்காலக் குடியாட்சி என்பது நல்லோர் விரும்பும் குடியாட்சிக் குறிக்கோளுடன் அதன் நிழலிலே வல்லோர் விரும்பும் வல்லாட்சியைத் தழைக்கவிடும் ஒரு முறையேயன்றி வேறன்று.
பிளேட்டோவுக்கும் சாக்ரட்டீசுக்கும் காலத்தாலும் முந்தியவர் வள்ளுவர். அவர்கள் கடந்து சிந்தனையின் உச்ச உயர் முகட்டில் உலவியவர் அவர். பிளேட்டோவின் புதிரை இக்கால அறிஞர் விடுவிக்காது முடிச்சறுத்து விளையாடுகின்றனர். வள்ளுவரோ புதிரை விடுவிக்கப் புது வழியை முன்பே காணினும், அறிஞர் அறிவு ஒன்றின் உதவியால் மட்டும் காணமுடியாத ’காந்திய அருள் வழி’யில் அதைச் சுட்டிச் சுட்டிச் சென்றுள்ளார். அவர் உரிமையை முழுதும் மக்களிடம் விட்டார். ஆள்பவருக்குக் கடமையை மட்டும் வகுத்தார். உரிமையும் கடமையும் இல்லாத, இயற்கைக் கடப்பாடுடைய, இடையார்வமே உயிராகக் கொண்ட இன உயிர்மரபைக் கண்டுணர்ந்து, அம் மரபில் அன்புரிமை வகுத்தார். அதன் உச்சி கண்காணா இறைவன் அல்லது இன ஆர்வம். இதனையே அணிமைக்கால உலக அருளறிஞர் சிலர் வள்ளுவர் நிழல் மரபுக்கூற்றின் நிலை உயிர் ஆர்வ ஆற்றல் (Life force) என்று அழைத்துள்ளனர். அதன் வடிவு போன்ற மரபின் நடுமய்யம், அரசன் அல்லது இரண்டாம் இறைவன். அவன் ஆள்பவனுமல்லன், ஆளப்படு பவனுமல்லன். இரண்டுமற்ற அன்பு மரபின் மய்ய உருவினன். அவன் வழி நிற்பவர் சான்றோர்; பண்பாளர். அவர்களும் அரச இறைவன்போல மனிதரானாலும், பிறகுடி மனிதர்க்குரிய உரிமையையும் மேற்கொள்ளாமல், கடமைகளையும் கடமை களாகக் கொள்ளாமல் பிறர் உரிமையைத் தாம் தம் இயல்பால் பேணி, தம் கடமையையும் தம் இயல்பாகச் செய்தமைபவராவர். அது மட்டுமன்று. இனத்தின் அறியாமையைத் தம் அறிவால் காத்து, இனத்தின் ஏலாமையைத் தம் ஆற்றலால் அகற்றி, இனத்தின் பொல்லாங்கைத் தாம் அவற்றின் தீவினையேற்று நலமாக்கி, இனம் அறிந்தும் அறியாமலும், இனம் உதவியும் உதவாமலும் சில சமயம் தடுத்தும் இனம் வளர்க்க வாழ்பவர், மாள்பவர் ஆவர்.
ஒழிபியலின் குடிமை, அரசியலில் இறைமாட்சியுடனும், அங்கவியலில் அமைச்சுடனும் இணைவுடையது. அது குடும்பத்துக்குரிய நற்குடி உறுப்பினர் பண்பு கூறுவது. தற்கால உலக நாகரிகத்தில் மேலை நாடுகளில்கூட ஆங்கிலேயர் மட்டுமே பேணிவரும் அரும்பண்பு இது. குடும்பத்துக்கு ஒரு குடும்பப் புகழ் மரபும் (Family Tradition). நாட்டுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும் இதுபோல ஒருமரபு (Espirit decion) வகுத்து, அவற்றின் மூலம் தனி நபரை இயக்கும் பண்பு முறையே இங்கிலாந்தும் பிரான்சும் கண்ட வாழ்க்கைப் பண்புகள். இப் புகழ் மரபை ஒரு தெய்வமாக, உவமை யணிந்துரையாக்குவதை இன்றும் ஆங்கிலக் கல்லூரி களில் காணலாம். திருவள்ளுவர் வகுத்த குடிமை, மானம், பெருமை, சான்றாண்மை, பண்புடைமை இவை போன்ற பண்பு மரபுகளாகும் என்பதை உணராமலே, குறளின் பெருமையை அறிந்து போற்றுகின்றனர். தமிழர் அறிந்தால் எவ்வாறு போற்றுவாரோ, அறியோம்!
ஆங்கில, பிரஞ்சு மரபுகளுக்கு இணையாகத் தமிழரிடம் இன்னும் அறியாத வள்ளுவர் மரபு ஒன்று உண்டென்றால், அது ‘மானம்’ ஆகும். அந்த ஒரு சொல்லுக்குத் தமிழர் பொருள் மரபு, உணர்ச்சி மரபு இழந்துவிடவில்லை. சங்ககாலம் முதல் இன்றுவரை அவ்வுணர்ச்சியும், சொல்லும், பொருளும் இணையறாமல் நீடித்துள்ளனர். ‘அரைக்காசுக்குப் போன மானம் ஆயிரம் கொடுத்தாலும் வாராது. ஆயிரத்தில் ஒன்று குறைந்தால் அஃது ஆயிரமன்று. ஒரு ஆத்திரத்தில் கிணற்றில் குதிக்கலாம். ஓராயிரம் ஆத்திரத்தில் மேலே எழுந்து வர முடியாது’ என்பன போன்ற பழமொழிகள் இதற்குச் சான்றுகள். ‘வீம்பு’ என்ற தவறான படியில் தமிழர் வாழ்வையே இது பல சமயம் இன்றும் அலைக்கழிப்ப துண்டு —-அரைக்காசு உரிமைக்காக ஆயிரம் செலவழிக்கும் மரபு மடமை, வீண் மதிப்புக்காக வாழ்வு குலைக்கும் மடமைத் தருக்கையும், உயர்வு நாட்டுவதற்காக ஓயாது போராடிப் பூசலிடும் மடமைக் குடியாட்சிப் பண்பையும் நாம் இவ் வள்ளுவர் கால மானத்தின் உருக்குலைந்த நிழல் மரபுகளாகக் கொள்ளலாம்.
ஒழிபியல் விளக்கும் நற்பண்புகளுக்கும், அற்பப் பண்புகளுக்கும் இடைப்பட்ட இயல் ‘உழவு.’ தொழில்களில் உழவுக்கு மட்டுமே உரிய தனிச் சிறப்பு, அஃது உயிர்த் தொழில் என்பதே. இயற்கை, உயிர், இறைவன் இந்த மூன்றின் தொடர்பால் அன்பு, அறிவு, வளம் என்ற வடிவில் அஃது இயங்குகிறது. எல்லா உயிர்ப்பண்புகளுக்கும் அது சின்னமாய் அமைவது. திருவள்ளுவர் வீரத்தை வில்லேர் உழவு என்றும், புலமையைச் சொல்லேர் உழவு என்றும் குறித்தது வெற்றுவமையன்று. உழவே போல் அவை பண்பை ஒன்றிப் பெருக்குவன. நாட்டளவில் உள்ள இந்த உழவுப் பண்பே தேசியம். உலகளாவிய இவ் வுழவுப் பண்பே நாகரிகம். உயிருலகும், இயற்கையும், கால எல்லை கடந்த இனமும் அளாவிய இவ் உழவுப் பண்பே வள்ளுவர் குறித்த அற ஆழி, பொருளாழி, இன்ப ஆழி.
இரவு முதல் கயமை ஈறான அதிகாரங்கள்; உழவுப் பண்புகளின் குறைபாட்டின் பயனேயாதலால், உழவு அதிகாரமும் அவையும் ஒருங்கே இன்பத்துப் பாலின் முதல் அதிகாரத்துக்கு வாயிலாய் அமைகின்றன. கயமை வறட்சியையும், இன்பம் இவ் வறட்சி நீக்கும் வானையும் ஒக்கும். பொருட்பாலில் தீர்ந்த இன்மை (இல்லாமை)யை. இன்பப் பாலின் நிறைந்த இன்மை (இல்வாழ்வின் தன்மை) நிறைவுபடுத்திப் பொங்க வைப்பதாகும் என்ற முறையில் கயமை யதிகாரமும், கயமையின் எதிரான இன்பத் தெய்வமாகிய ‘தகையணங்குறுத்தும்’ செயல் கூறும் இன்பத்துப் பாலின் முதலதிகாரமும்; பொருள் இன்பப் பால்களிடையே வாயில்கள் ஆயின.
முப்பால் இன்பம்
முப்பால் பாகுபாடு திருவள்ளுவர் பொதுமறை கடந்து தமிழினத்தில் பரவியுள்ளது. தமிழினம் கடந்து கீழ்த்திசையிலும் பரவியதுண்டு. ஆயினும், அப் பாகுபாட்டின் கூறுகளும், அதன் அறிவுத் திறங்களும் பண்புத் திறங்களும் பல; கீழ்த்திசையளாவிப் பரவாமல், தமிழகத்துக்கே யுரிய சிறப்புக் கூறுகளாக நிலை பெற்றுள்ளன. அதுபோலவே அதன் ஆழ்ந்து செறிந்த கூறுகளும், திறங்களும் பல தமிழினத்திலேயே பரவ முடியாமல், வள்ளுவர்க்கே யுரிய தனி உயர் சிறப்புகளாக அமைகின்றன. இதனால், வள்ளுவர் பண்பின் நிழலை நாம் தமிழினத்திலும்; வள்ளுவர், தமிழக நிழல்களைக் கீழ்த்திசையிலும் காண முடிகிறது. இவை கடந்து உலகில் வள்ளுவர் நிழலைக்கூடக் காணமுடிகிறது. ஆனால், புறநிழல்கள் எதனையும் தமிழினத்திலோ வள்ளுவரிடத்திலோ காணமுடியாது.
புறத்தே பரவாமல், தமிழினப் பரப்பில் பொதுவாகவும், திருவள்ளுவரிடம் சிறப்பாகவும் செறிவுற்ற பண்புகளில் தலை சிறந்தது இன்பப் பண்பே. இதனையே தமிழர் அகம் எனச் சிறப்பித்தனர். இப் பண்பின் உயர்விலே தமிழர் செம்மாந்து மகிழ்ந்திருந்தனர் என்பதனைக் குறிஞ்சிப் பாட்டு என்ற சங்கப் பாடலால் அறிகிறோம். அதைப் பாடியவர் பொய்யா நாவிற் கபிலர் என வள்ளுவர் பண்பினாலேயே சிறப்பிக்கப்பட்டவர். அவர் ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழறிவுறுத்துவதற்காக இப் பாட்டை இயற்றினாரென்றும் பாட்டின் அடிக்குறிப்புத் தெரிவிக்கிறது. தமிழ் அறிவுறுத்துவதற்காக இவ்வுயர் பாட்டை இயற்ற நேர்ந்தது ஒன்றினாலேயே, ஆரிய அரசன் பிரகத்தன் தமிழறியாத வனல்லன் என்று துணிந்து கூறலாம். தமிழ் மொழியறிந்து அதனாலேயே அவன் தருக்கியிருத்தல் வேண்டும். தமிழிலக்கியம் உணரும் தன்மையும் தனக்கு உண்டு என அவன் தறுகணுரை ஆற்றியிருத்தல் வேண்டும். ஏனெனில், ‘அவன்’ அறிந்தவரையில் ‘இது தமிழ்’ என்று அவன் அறியாதது அறிவுறுத்து வதற்காகவே குறிஞ்சிப்பாட்டைக் கபிலர் இயற்றி அளித்தார் என்று அறிகிறோம்.
குறிஞ்சிப்பாட்டு அகம் சார்ந்தது. அகத்திலும் அழகிய ஊடல் அளாவியது. அகப் புறப்பாகுபாடு தமிழர் வகுத்த பாகுபாடேயானாலும், அதில் அகம் சிறப்பாக, அகத்தில் ஊடல் இன்னும் சிறப்பாகத் தமிழர்க்கே உரிய பண்பு ஆகும். இதனை இப் பாட்டின் உரையாசிரியர்கள் எடுத்து விளக்கியும் உள்ளனர்.
ஓர் இனத்தின் நாகரிக உயர்வை, பண்பாட்டை, அவ்வினத்தவர் பெண்பாலார்க்குக் காட்டும் மதிப்பால் அளவிட்டு உணரலாம் என்று மேலை அறிஞர் கூறுவதுண்டு. இதில் வியப்பில்லை. மனித இனத்தை நாகரிகம் நோக்கி உயர்த்திய பண்பு பெண்டிரின் காதற்பண்பே. காதல் இருவர்க்கும் பெயரளவில் உரியதாயினும்; அதனை இயக்குபவர், அதனை மூலதளமாகக்கொண்டு அறிவுப் பயிரும் வாழ்வுப் பயிரும் வளர்ப்பவர் பெண்பாலரேயாவர். நாகரிக வளர்ச்சியில் எல்லா இனங்களுக்கும் மிக மிக முற்பட்டே முந்திக் கொண்டிருந்த தமிழர் இதனை நன்கு உணர்ந்திருந்தனர். எனவேதான், எந்த இனமும் வகுக்காத முறையில் அவர்கள் அகம் புறம் வகுத்தனர். எந்த இனமும் ஆராயாத அளவில், அகத்துறையில் நுட்ப நுணுக்க விரிவுகளை ஆராய்ந்து விளக்கினர். தமிழர் வகுத்த இந்தத் தளத்தின் மீது நின்றே திருவள்ளுவர் தமிழர் கனவு காணாத உச்ச உயர் எல்லைக்கு இந்த இனப்பண்பை உயர்த்திச் சென்றார். அவர் முப்பால் பாகுபாட்டில் இன்பம் மூன்றாவது பாலாக மட்டும் அமையாமல், முப்பாலின் முடிமகுடமாக நிலவும் வகை அதுவே.
அறநூல், பொருள்நூல் என்ற பெயர்களும் வள்ளுவர் முப்பால் நூலுக்கு முற்றிலும் பொருந்துபவையே. இது மேலே காட்டப்பட்டது. ஆனால், இவற்றைத் தாண்டி இன்பநூல் என்ற பெயர் அதற்கு முற்றிலும் இசைவும் முழு உயிர்ப் பொருத்தமும் உடையதாகும். ஏனெனில், அப் பாகுபாடு முழுவதும் இன்பத்தையே நோக்கமாகக் கொண்டது. இன்பத்தை நோக்கியே செல்வது. அறத்துப்பாலில் அஃது அவ்வின்பத்தின் தலையூற்றாகிய இல்லறத்தில் தொடங்குகிறது. துறவறம் அத் தலையூற்றின் விரிவே. இரண்டனுக்கும் உரிய கருவி கலங் களாகவே அது பொருள் முழுதும் ஆராய்ந்து, மீண்டும் இறுதியில் அவ்வின்பத்துக்கே வருகிறது. இதன்பின் அது இன்பப் பயிரில் பரவுதல் விடுத்து அதன் உயிரூற்றிலேயே இறங்கி, அதன் ஆழ்சுவையில் ஈடுபடுகிறது. இது மட்டுமா? அச் சுவையிலும் அகத்தில் அகமாக உள்ளார்ந்து நுழைந்து, களவியல், கற்பியல், கூடல், ஊடல் என நுணுகிச் செல்கிறது.
சிறப்பாக இறுதி மூன்று அதிகாரங்களும் புலவி, புலவி நுணுக்கம், ஊடலுவகை எனக் குறித்துச் செல்லும் சீர்த்தி நினைந்து நினைந்து இன்புறத் தக்கது. சிந்தித்துச் சிந்தித்து மேன்மேலும் சிந்தனையை ஓடவிடத்தக்கது.
இன்பம் முப்பாலின் முடிந்த நோக்கம் மட்டுமன்று, அதன் தொடக்கமும் முடிவும் மறுமலர்ச்சியுமாக அஃது இயங்குகிறது. ஒரு முடிவுக்குக் காரணமாக, முடிவுபெறாக் காரியமாக, இடையறாது முப்பால் மணிகளினூடாகச் செல்லும் உயிரிழையாக அது செயற்படுகிறது. உண்மையில் வள்ளுவர் வகுத்த முப்பால் வளம் அன்பு என்னும் நிலத்தில் வேரூன்றி, இனம் என்னும் வான அகல் வெளியிலே பரவி, இன்பம் என்னும் கதிரவனை நோக்கி உயர்ந்து வளர்வதாகும். இவ் வளர்ச்சியில் இன்பத்தின் இனக் கனிவாகிய காதலே கனிவளமாய் அமைகிறது. ஆனால், அன்பு நிறைவாகிய இக் காதலே மீண்டும் இன வளர்ச்சிக் கும், மறுமலர்ச்சிக்கும் உரிய கரு விதையாகவும், வேர் முதலாகவும் இயல்கின்றது. இவ்வாறு அன்பிலிருந்து இன்ப நோக்கிலும். இன்பத்திலிருந்து அன்பு நோக்கிலும் அலையலை யாகத் தவழ்ந்து செல்லும் இன்பப் பயணமே வாழ்வு.
வள்ளுவர் தரும் இந்த இன்ப வாழ்க்கைச் சித்திரம், அறிவுலகம் அறியாத ஒன்று மட்டுமன்று; தமிழகத்திலேகூட வள்ளுவர் நூலுக்கு வெளியே இத்தகைய கவினார்ந்த மெய்ம்மையை முழு உருவில் காணமுடியாது. காலத்தாலும் பண்பாலும் மற்ற எவரையும்விடத் திருவள்ளுவர்க்கு மிகவும் அணிமையுடையவராகக் கருதப்படக்கூடியவர் தொல்காப்பிய ஆசிரியரே. அவர்கூட இந்த உயர் மெய்ம்மையைக் குறிக் கொண்டதாகக் கூறுவதற்கில்லை. அதன் ஒருதொலை நிழலையே, சில நிழற் கோடுகளையே நாம் தொல்காப்பியத் திலும், சங்க இலக்கியங்களிலும் காணலாம். பிற்கால ஏடுகளிலோ நாம் திருக்குறளின் சொல் நிழல்களையும் சொற்பொருள் நிழல்களையும் காண்டலாகுமே யன்றி, அவர் கருத்துணர்வுகளின் நிழலையோ அவர் உயிர்க் கருத்து மரபின் நிழலையோ காண்டலாகாது.
‘இன்ப நூல்’ என்பது வள்ளுவர் நூலுக்கு இசைவுடைய பெயர் மட்டுமல்ல, அதுவே நூலின் தொல்பழம் பெயர் என்பர் அறிஞர் மீனாட்சி சுந்தர முதலியார். அத்துடன் ‘இன்பம்’ என்ற சொல்லின் பொருளெல்லை பற்றியும் அவர் தனிக் கருத்துரை தந்துள்ளார். வள்ளுவர் ‘இன்பம்’ என்ற சொல்லை நாம் வழங்குவது போல ஆண், பெண்பாலாரிடையேயுள்ள சிற்றின்பத்தை மட்டும் குறிக்க வழங்கவில்லை, தனி உயிர்க்கும் இறைவனுக்கும் இடையே நிகழும் பேரின்பத்தையும் உட்குறிக்கவே வழங்கினார் என்பது அவர் கோட்பாடு.
அறிஞர் கருத்து இங்கே ஊன்றி ஆராயற்பாலது என்பதில் ஐயமில்லை.
கடவுட் பற்றைக் காதலாகப் பொது அளவிலேயே மனித உருவமறிந்த மொழியில் தீட்டிக் காட்டும் மரபு தமிழகத்துக்கு மட்டும் உரியதன்று; உலக முழுமைக்குமே பொதுவானது. வைணவர் தனியுயிரைக் காதலியாகவும். அத் தனியுயிரின் கருத்தில் கருக்கொண்டெழும் உணர்வாக இறைவனையும் கற்பனை செய்து பாடுவது மரபு. மேலையுலகக் கிறித்துவத் தொண்டர் பலர் பின்பற்றிய மரபும் இதுவே. ஆனால், சைவப் புலவோர், சிறப்பாகத் தமிழ்ச் சைவர் வணங்கும் அன்புத் தெய்வமாகிய மாணிக்கவாசகர் தம் திருக்கோவையாரில் தனி உயிரைக் காதலனாகவும், இறைவனைக் காதலியாகவும் வருணித்துத் தம் உணர்ச்சிகட்கு உருவம் தந்துள்ளார். ‘மலங்கெடுத்து மனங்கரைக்கும்’ இவ் வாசகத்தின் மரபிலேயே மேலை இசுலாமிய அருட்கவிஞர் —-சிறப்பாகப் பாரசீகக் கவிஞர் நின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிற்காலத்தார்-சிறப்பாக மேலை நாட்டறிஞர் இந்த இறை நினைவில் இறையை முற்றிலும் மறுக்கும் அளவுக்கு, இவர்களுள் பலர் பேரின்ப உணர்வை முற்ற முழுக்கச் சிற்றின்ப உணர்வின் உருவிலேயே சுழித்தோட விட்டுள்ளனர். கால இடம் கடந்து நீடித்துள்ள இவ்வுலக மரபு, வள்ளுவர் பற்றிய அறிஞர் மீனாட்சிசுந்தரனார் கருத்தை வலியுறுத்துவதாகும்.
அறிஞர் கருத்துக்கு மற்றொரு வலியுறவும் உண்டு. வள்ளுவர் முப்பால் வகுப்பு முறையிலேயே அது நாற்பால் வகுப்பு முறையையும் படியவைத்துக் காண உதவுகிறது. அதன்படி வள்ளுவரின் அறம் புறத்தின் புறம் ஆகும். புறப்புறமாகிய இயற்கையுடன் ஒத்த தனிமனிதன் வாழ்க்கை யமைதியை அஃது எடுத்தியம்புகிறது. இதனையடுத்த பொருட்பால் இதுபோலப் புறத்தின் அகமாக இயங்குவது ஆகும். ஏனெனில், புறத்தின் புறம் இயற்கையானால், புறத்தின் அகம் அதன் உயிர்களின் வாழ்குழு அல்லது மன்பதையேயாகும். தனியுயிர் வாழ்வின் பின்னணி வண்ணமும்; அதை இனவாழ்வு நோக்கி முனைப்பாக ஊக்குவித்துச் செலுத்தல் முன்னணி வண்ணமும், சமுதாயம், சமயம், அரசியல் ஆகியவற்றை உள்ளடக்கிய வாழ்வே - இவற்றின் மூலம் இனத்தின் புறவாழ்வை அதன் உயிர் நிலையாகிய அகவாழ்வு நோக்கித் திருப்பும் பகுதியே-புறத்தின் அகப்பகுதியே வள்ளுவரின் பொருட்பால் ஆகும். இப் பகுப்பின் நுட்பம் கண்ட பின்—வள்ளுவர் இன்பப்பால்; புறப்புறம், புறத்தின் அகம் ஆகிய இரண்டுக்கும் எதிரான அகப்புறம், அகத்தின் அகம் ஆகிய இவற்றின் தொகுதி என்பது எளிதில் தெரியவரும்.
இன்பப்பாலில் அகப்புறம், அகத்தினகம் என்ற இந்தப் பாகுபாட்டை இருவேறு வகைகளில் காணலாம். ஒரு புறம் களவியலை நாம் அகத்தின் புறம் என்றும், கற்பியலை அகத்தின் அகம் என்றும் கருதலாம். ஏனெனில், களவியலில் தலைவன் தலைவியர் இருவராய் நின்று ஒருவரை யொருவர் அணுகி ஓருணர்வில் தம்மையறியாது ஒன்றுபடத் தொடங்குகின்றனர். ஆனால், கற்பியலில் அவர்கள் இரண்டறக் கலந்து ஒன்றுபட்ட நிலையை அடைந்து விடுகின்றனர். இந் நிலையிலேயே அவர்கள் இருமையில் ஒருமை, ஒருமையில் இருமை என்ற மறைநிலை நயங்களின் நுட்பங் கண்டு ஒருவர் இன்பம் ஒருவர் பெருக்கி, தாமும் இன்பம் பெறுகின்றனர். கொடுத்தலால் பெறுதல், துய்ப்பித்தலால் துய்த்தல் என்ற இயற்கை கடந்த—வாழ்வின் பொதுநிலை கடந்த இந்த ஒப்பற்ற ஒரு பருவத்தின் தனி நுகர்ச்சிகள் ஆகும். இயற்கையிலோ, வாழ்விலோ, வேறெங்கும் நாம் இதனை ஒத்த, இது போன்றவற்றைக் காண முடியாது.
அகத்தின் அகப்புற உட்கூறுகளை நாம் இன்னொரு வகை யாகவும் காணலாம். கூடலை அகத்தின் புறமாகவும், ஊடலை அகத்தின் அகமாகவும் கருதுவதற்கு இடம் இல்லாமலில்லை. ஏனெனில், கூடலில் இருவர் தாம் ஒன்று படுவதால் ஏற்படும் இன்பத்தையே நுகர்கின்றனர். ஊடலிலோ போலியாகக்கூட இரண்டுபட முடியாததிலும் இரண்டக நிலை கண்டு இன்பத்தில் துன்பமும் துன்பத்தில் இன்பமும் அடைகின்றனர்.
இன்பப்பாலின் அகப்புறம், அகத்தினகம் என்ற கூறு நாட்டின் வகையில், மேலே தரப்பட்ட விளக்கங்கள் இரண்டுமே அறிஞர் மீனாட்சி சுந்தரனார்க்கு ஏற்புடையதன்று. வள்ளுவர் இன்பப்பாலில் வெளிப்படையாகக் கூறிய அத்தனையும், அகத்தின் புறமே என்றும்; அவர் குறிப்பு அறிந்து உற்றுணர்ந்து ஆழ்ந்து நுணுகி நோக்கினால், வெளிப்படையாகக் கூறியவற்றின் உட்பொருளே அகத்தினகமாய் இலங்குமென்றும் அவர் கருதியுள்ளார்.
பொதுவாக முப்பால் நூலின் போக்கும் குறிப்பும் பின்பற்றிச் செல்பவர்க்கு அறிஞர் மீனாட்சி சுந்தரனார் கருத்து பொருந்தாக் கருத்தென ஒதுக்கித் தள்ளுவதற்குரியதன்று என்றே பெறப்படும்.
‘ஊடுதல் காமத்திற்கு இன்பம்; அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்!’
- குறள் 1330
வள்ளுவர் திருக்குறளின் கடைசி அதிகாரமான ’ஊடலுவகை’யில் கடைசிக் குறட்பாவே இது. நூலின் இந்தக் கடைசிக் குறட்பா ஒரு முற்று வினையுடன் அமைவு பெறவில்லை; ஓர் எச்ச வினையுடன் அவாய் நிலைபோல நின்றுவிடுகிறது. அது மட்டுமன்று; கூடலின் பல்வேறு உணர்ச்சிகளைக் கூறிய பின்னரே வள்ளுவர் ஊடலில் கருத்துச் செலுத்தினார். ஊடலின் பலவகை நய நுட்பங்களை எல்லாம் ஆராய்ந்த பின்னரே இக் குறட்பாவுடன் ஊடலை முடிக்க எண்ணுகிறார். ஆயினும், ஊடலை முடிக்கும் இக் குறட்பாவின் இரண்டாவது அடியே மீண்டும் கூடலை நினைவூட்டுகிறது.
முடிந்த இடத்தில் தொடக்கம் நோக்கிச் சொற்போக்குத் திரும்பும் இந்த நிலை, வளையில் புகுமுன் தலையைத் திருப்பிக் கொள்வதாகக் கூறப்படும் பாம்பின் செயல் போன்றது. தனிச் செய்யுளில் இலக்கண நூலார் இச் சொல்லணி முறையை அளைமறிபாப்பு என்று கூறுவர். ஆனால், வள்ளுவர் நூலில் இஃது அவாய் நிலையாக நிற்கும் இறுதி எச்சச் சொல்லை யடுத்து, நூற்பொருளையும் அவாய் நிலையாக நிறுத்திச் சிந்தனையைத் தூண்டுவதாய் அமைந்துள்ளது. அகத்தின் புறம் முடிவுற்று, அகத்தின் அகத்தில் சிந்தனை செலுத்துவதாக இக் குறட்பா இறுதிக்கண் நிற்பதென எண்ண இடமுண்டு.
தவிர, வள்ளுவர் நூல் முழுவதுமே இன்பத்தில் தொடங்கி இன்பத்தில் முடிவது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அதே சமயம் இன்பத்துக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு வான்சிறப்பால் விரித்துத் தரப்பட்டது. எனவே, நூல் மெய்ம்மையில் இன்பத்துடன் தொடங்கி இன்பத்துடன் முடிவது மட்டுமன்று; அஃது இறைவனுடன்தொடங்கி இறைவனுடன் முடிவதுமாகும். ஏனெனில், வள்ளுவர் குறிக்கொண்ட வாழ்க்கைக் குறிக்கோள் இறைவன். அதன் திசை நின்ற இன்பம்; பயன் இன்பம்; பயன் குறிக்கோளின் செயல் விளைவே யாதலால், வள்ளுவர் கருத்துப்படி இன்பத்துடன் இன்பமே வடிவாகக் கொண்டவன் இறைவன். தனியுயிர் இறைவன் வழி நின்று இனத்தில் பரவிச் சென்று அதனுடன் ஒன்றுபடுவதே இன்பம். இருவராகிய தலைவன், தலைவி காதல் வழி ஒன்றுபட்டு இரண்டறக் கலந்தும்; இன்ப நுகர்வு நோக்கியே முற்றிலும் ஒன்றற்ற இருநிலையும், முற்றிலும் இரண்டற்ற ஒரு நிலையும் அடைவதுபோல; இரண்டுபட்ட மெய்ம்மைகளிடையே தொடங்கிய தனியுயிரும், இனமுதல்வனாகிய இறைவனும் இன உணர்வின் மூலம் ஒன்றுபட்டு; இரண்டற்ற, ஒன்றற்ற இடையறா இன்பநிலையில் இழைகின்றனர். அகப்புறம் அகத்தினகத்தைக் காட்டும் வகையும், அதன் வயப்பட்டு உட்பொருள் குறிக்கும் வகையும் இதுவே.
இக் கருத்துடன் மீண்டும் இறுதிக் குறட்பாவை நோக்கினால் அதன் முழு நிறைவான பொருள் நமக்கு நன்கு விளங்கும்.
‘கூடுதல் இன்பம், ஊடுதல் அதன் மேல் இன்பம். ஊடுந்தொறும் அவ்வின்பம் மேன்மேலும் நுணுகிய இன்பமாகி, நய நுட்பமிக்க உவகை என நுணுகி நுணுகிச் செல்கிறது,’ இவ்வாறு கூறி, வள்ளுவர் இன்பக் கேணியின் நுண்புழை வாயிலில் நம்மை மேன்மேலும் இட்டுக் கொண்டே செல்பவர். திடுமென, ஒரு புழைவாயிலின் முடிவில் வந்ததும் சற்றே திரும்புவது போல நம்மை நோக்கி; ‘இந்த இன்பமும் மீண்டும் கூடி முயங்கப்பெற்றால்; இப்படியே இன்பத்தின் மேல் இன்பமாக நீண்டு விரிந்து வளர்ந்துகொண்டே செல்லும்.’ எனக் கூறி முடியுமுன், கூறிய இச் சொற்கள் முற்றிலும் நம் செவியில் ஏறும் முன், அவர் திடுமென மறைந்துவிடுகிறார். இவ்வாறு அவாய் நிலையில் விட்ட செய்திக்கு விளக்கம் இனி அவரிடம் பெறுமாறில்லை. நாமே அவர் வழி நின்று சிந்தித்து அதைப் பெற்றுக்கொள்ளுதல் வேண்டுமென்ற நிலையில் நம்மை அவர் விட்டுச் சென்றுள்ளார்.
புனைகதை அல்லது நாடக உலகிலே, காதலர் காதலுரை யாடலை நம்முன் காட்டி, அம் மகிழ்விடையே ஓர் இயலைக் காட்சியை முடித்த கலைஞர்; அடுத்த இயல்-காட்சியின் தொடக்கத்திலேயே காதலியின் மடியில் ஒரு குழந்தையைக் காட்டுவதுண்டு. இடையே நடைபெற்ற திருமணத்தையும், திருமண வாழ்வையும் நாம் உய்த்துணரும்படி செய்து நம் உள்ளத்தில் இன்னதென்று உணரமுடியாத வான்பேருவகையை எழுப்பும் கலைஞன் நயமே இது. சில சமயம் இறுதி இயல் காட்சியிலே கதைத் தலைவனைக் கலைஞன் தூக்குமேடை நோக்கிக்கொண்டு செல்வான். ஆனால், அதன் முடிந்த முடிவினையைக் கூறாமல்-காட்டாமல், நாமே உய்த்துணர வைத்துவிடுவான். வள்ளுவர் இறுதிக் குறட்பாவின் அவாய் நிலைக் குறிப்பும் இது போன்ற ஒரு புதைபொருள் கலைத்திறமே யாகும். ஆனால், அது குறித்துக்காட்டும் பொருள், கலைஞர் பொதுவாக அவாய் நிலையால் உணர வைக்கும் பொருளைவிட எத்தனையோ எல்லையற்ற பொருள் நிறைவுடையது. எல்லையற்ற இறைவன் தாளுடன் நூல் தொடங்கிய வள்ளுவர், அத் தாளைச் சுட்டிக் காட்டியே நூல் முடிவில் நம்முள் நாமாக இணைந்து ஒன்றுபட்டு விடுகின்றார் என்னலாம். இயற்கைத் திரையிலும், மனித வாழ்க்கைத் திரையிலும் நாம் முன்னே கண்ட காட்சிகளையெல்லாம், இன முதல்வன் அல்லது கடவுள் என்ற வண்ணக் கண்ணாடித் திரையில் மீட்டும் புதுவண்ணம்படக் காணவைத்து; வள்ளுவர், இன்பத்திலும் ஒரு மாய இன்பம் உண்டுபண்ணியுள்ளார்.
காணும் அழகைவிட, காணா-கண்ட அழகின் கவர்ச்சி பெரிது. உண்ணும் இன்சுவையைவிட, உண்ணவிருக்கும் - உண்ட பின்னைய இன்சுவை இனிது. கேட்கும் இசையை விட, கேளாத-கேட்டபின் இசைக்கும் இசை இனிது. வள்ளுவர் புறத்தின் புறம், புறத்தின் அகம், அகத்தின் புறம், ஆகியன கூறி அகத்தின் அகத்தை உய்த்துணர வைக்கும் அழகு இது போன்றது ஆகும்.
வள்ளுவர் இன்பப்பாலின் முழு நிறை சுவையையும் உலகம் நுகர்தல் வேண்டுமானால், அது காதல் இன்பத்துக்கு எந்த அளவு பொருந்துமோ, அதனினும் பன்மடங்கான அளவில் இறையின்ப மாகிய பேரின்பத்துக்கும் பொருந்துவதாகும் என்பதை மனங்கொளல் வேண்டும். பல குறட்பாக்களின் சொல்லும் சொற்றொடரும், அகப்புறமாகக் கருதுபவர்க்கே அவை இன்பக் கவிஞர் எவர் வருணனைகளாலும் சென்றெட்டப்படாத கனிந்த-விஞ்சிய சுவை நயம் உடையது ஆகும். ஆனால், அதனை அகத்தினகப் பொருளுடன் ஒட்டிக் கண்டால், அவற்றின் இனிமை நமக்குக் கவிதையினிமை, அறிவு நுட்பத்தின் விழுமிய நயம், இன உணர்வு நலம் ஆகிய மூவகை அழகும் நிரம்பிய தெய்விக இனிமையாய் அமையவல்லது.
வள்ளுவர் இன்பப் பாலின் இருதிசை நயத்தைக் காணுமுன், தமிழ் மொழியிலேயே அப் பண்பு நிறைவுடையதாக அமைந் திருத்தலை நாம் ஓர்தல் வேண்டும். இறைவயப்பட்ட உயிர் இறைவனாகவே இயங்கும் என்பர் சமய அறிவு நூலார். இதனை நினைவூட்டும் வகையில் தமிழர் இறைவனுக்கும், காதலனுக்கும் தலைவன் என்ற பெயர் தந்துள்ளனர். அது மட்டுமன்று காதலனைத் தலைவன் என்றழைத்தது போலவே காதலியையும் தலைவி என்றழைத்து, இறைவயப்பட்ட உயிர் பெறும் இறை நிலையை உய்த்துணர வைத்தனர். தனி உயிர் பெறும் தனி வாழ்வின் நிறைவும், இறைவழி நின்ற உயிரின் நிறை நிலையும் தமிழில் ஒருங்கே ‘இன்பம்’ என்றுதான் குறிக்கப்படுகின்றன. முன்னது சிற்றின்பம் என்றும், பின்னது பேரின்பம் என்றும் பெயர் பெறுகின்றன.
இது மட்டுமன்று, இரண்டு இன்பத்துக்கும் நிலைக் களன்கள் ‘வீடு’ என்ற ஒரே பெயரால் குறிக்கப்படுகின்றன. இடைக்காலத் தமிழர் பேரின்பங் குறித்த வீட்டுக்குப் ‘பற்றுவிட்ட இடம் வீடு’ என மாயப் பொருள் விரித்தனர். ஆனால், குடும்ப இன்ப நிலைக்களனான வீட்டுக்கு மட்டும் ‘துன்பம்விட்ட இடம் வீடு’ என்று பொருள் கூறினர். உண்மையில் இரண்டு சொற்களுமே ‘துன்பம் விட்ட இடம்’ என்ற பொருள் உடையதாகலாம். அன்றியும் ‘வீழ் தரும்’ அதாவது அன்பு ஆழ்ந்து வேர் விடுதற் குரிய இடம் என்றே இரண்டும் பொருள்படுதல் செவ்வியதாகும். வீழ்து (விழுது) என்ற சொல்லும், திருவள்ளுவர் அடிக்கடி வழங்கும் வீழ்தல் (அன்பில் ஊன்றுதல்) என்ற சொல்லும் தொடர்புடையவையே யாகும். காதலித்தல் என்பதற்குக் காதலில் வீழ்தல் (Fall in love) என்று கூறும் ஆங்கில மொழி மரபு வழக்கும் இதனுடன் ஒப்பு நோக்கத்தக்கது.
தமிழரின் பண்பு வழி நின்று திருவள்ளுவரும் ‘தலைவனை’க் காதலனாக மட்டுமன்றிப் பத்தனாகவும் கொண்டார். தலைவியைக் காதலியாக மட்டுமன்றி இறைவன் அல்லது இறைவனருளாகவும் தோற்றம் தருகின்றார். தலைவி பற்றிய கூற்றுகளை எல்லாம் இறைவன் மேலேற்றிக் கூறினால் இருவரது இயைபும் நன்கு விளங்கும். தலைவி கண்காட்டிக் குறிப்பறிவித்துச் செல்லும் காரிகை. பரமன் தானே ஞானகுருவாகத் தோன்றிக் குறிப்பினால் போதம் அளிக்கிறான் என்பது சைவ மரபு. தொடக்கத்தில் தலைவி மயக்கமூட்டிப் பின் தன் நோக்கின் குறிப்பாலேயே மயக்கம் தெளிவிக்கிறாள். மாயையில் உயிர்களைத் தோய்விக்கும் மாயவனும், அதிலிருந்து மீட்கும் காவலனும் திருமாலே என்று வைணவரும்; மாயையூட்டி மாயை மலமறுப்பவன் இறைவன் எனச் சைவரும் பிறரும் கூறுவர். ’தலைவன் காணுங்கால் அவள் நிலம் நோக்குகின்றாள் - குறிப்பு கண்ணிற் படவில்லை.’ தலைவன் காணாக்கால் தான் நோக்கி மெல்ல நகையாடுகிறாள். புறநோக்கில் இறைவன் மறைந்து, அகநோக்கில் அகப்படுகிறான் என்பது வைணவக் கருத்து. ‘அவள் ஒரு நோக்கு நோய் செய்கிறது - மாயை; மறு நோக்கு அந்நோய்க்கு மருந்தாகிறது - அருள்.’ அவள் பொது நோக்கும் ஏதிலார் போலப் பேசும் பேச்சுமே அவனுக்கு அவள் ஈடுபாட்டைக் குறிப்பாக உணர்த்தி விடுகின்றன - அன்பு பரவுமிடமே அருள் குவிவுறும். இவ்வளவும் களவியல் நிலை.
கற்பு நிலையில் தலைவி தலைவனைக் கைப்பற்றி உரிமையாக்கிக் கொள்கிறாள் - கடவுள் தானே செவ்வி கண்டு பத்தனை ஆட்கொள்கிறார் என்பது சைவ மரபு. ஆளும் தன்மையுடைய பெண், தலைவனையே ஆளவைத்து, ஆண் அல்லது ஆடவனாக்கித் தான் அவனைப் பேணுபவள் (பெண்) ஆகிவிடுகிறாள் - இறைவன் இயக்குவிக்கும், ஆட்டுவிக்கும் அறிவும் இது. இதன் பின்னும் தலைவி கூறிச் சிலவும், கூறாமல் பலவும் தலைவனுக்கு உணர்த்துபவள் ஆகிறாள் - சமய நூலுணர்வுடையார்க்கு இறைவன் அரியனாய், அன்புடை யார்க்கு எளியனாகிறான். கடமையில் பிரிய நினைக்கும் தலைவனைத் தலைவி சிலசமயம் வேண்டா வெறுப்புடன் பிரியவிட்டு ஏங்குகிறாள். சில சமயம் தன் மெல்லியல்பும் அதன் உறுதிப்பாடும் காட்டி அவனைத் தன்னிடம் அன்புச் சிறைப் படுத்துகிறாள். தன்னிடம் நொடிப் பற்றுடையவனைப் புறக்கணித்து, தன்னை விட்டுவிட்டு உயிர்ப்பாச வழிச் செல்பவன் வசப்பட்டு இறைவன் அணைக்க அவன் ஆட்படுகிறான்.
உடனிருக்கும்போதே பலகால் மறைந்து நின்று உவகை யூட்டுகிறாள் தலைவி - இயற்கை யழகில் தோன்றாத் துணையாய் இருந்து களிப்பூட்டுகிறான் இறைவன். கூடலின் இன்பத்தை ஊடிப் பெருக்குகிறாள் அவள். தலைவன் இன்பத்திலேயே தன் இன்பம் காண்கிறாள். சில சமயம் அவன் கடமை, அவன் இன்பம் நாடித் தான் துன்புறுகிறாள். அவள் மென்மையின் உறுதி கண்டு அவன் அன்பால் உடைகிறான். ஆனால், தன் தோல்வியிலேயே அவன் வெற்றி காண்கிறான் - கடை இடமே நாடுபவன் முதலிடம் பெறுவான். முதலிடம் நாடுபவன் கடை இடம் பெறுவான் என்பது இயேசு மொழி. ஊடலில் அவன் அன்புறுதியைப் பலவாறு கடுந்தேர்வுகளால் வாட்டிப் புடமிட்டு, அவனுக்குத் துன்பத்தில் இன்பம் ஊட்டத்தான் இன்பத்தில் துன்பம் நுகர்கிறாள் தலைவி. நோன்பு, தவம், சோதனை இன்பமோ துன்பமோ என்றும் நிலையிலாத் துன்பமின்பம் துவள அவனும் அவளும் கூடி, ஊடி, ஊடிக்கூடி எல்லையில்லா இன்பத்தில் திளைக்கின்றனர். இன்ப அலையிலிருந்து துன்ப அலைக்கும், துன்ப அலையிலிருந்து இன்ப அலைக்குமாகத் தாவி வாழ்வில் விளையாடுகின்றனர் - பித்தனாகிய பத்தன் செயலிது.
காதலன், காதலிக்குரிய இந்த அகப்பொருள் விளக்கத்தில் பெரும் பகுதியும், பத்தன், இறைவன் தொடர்புக்கு அழகுறப் பொருத்துவதாகும் என்று கூறத் தேவையில்லை. பொருந்தாதது போலத் தோன்றுமிடங்கள் கூட, உண்மையில் உலகச் சமயங்களின் ஒப்புமையால் பொருத்திக் காணக் கூடியவையே யாகும்.
வள்ளுவர் சமய நெறி உலக சமயங்களின் கருமூலம் என்பதைக் கருத்துட் கொண்டால், இந் நிலை இயல்பேயாகும்.
நாடு, இடம், இனம், காலம் கடந்தவர் கடவுள் என்பதைச் சமயங்கள் வலியுறுத்துகின்றன. ஆனால், அவர் சமயமும் கடந்தவர் என்பதைப் பல சமயங்கள் வலியுறுத்தத் தவறிவிடு கின்றன. கடவுளைத் தனக்கே உரியவராக்க முற்படும் நாடும், இனமும் எப்படிக் கடவுள் தன்மையில் குறைபடுகின்றனவோ; அப்படியே கடவுளைத் தம் எல்லையில் குறுக்கும் சமயங்களும் அவர் பண்பில் குறைபடுகின்றன. இவற்றுக்கு மாறாக, உலகச் சமய முதல்வராகிய வள்ளுவரின் கடவுட் பண்பு இனப் பொது நிலையுடையது. தமிழக மரபு இன்னும் அதைச் சொல்லள விலேனும் காத்தே வருகிறது. ஆனால், இடைக்காலச் சமயங்கள் பல, கடவுளைத் தம் அளவில் குறுக்கியுள்ளன.
உலகச் சமயங்களிலே வினைமுறை - கர்மமார்க்கம், அறிவு விளக்கத் துறை - ஞானமார்க்கம், அன்புநெறி - பத்திமார்க்கம், இரண்டற்ற ஒருமை நிலை - யோகம் என்ற நான்கு கூறுகளைக் காணலாம். இப் பாகுபாட்டிலேயே நாம் திருவள்ளுவர் முப்பால் பாகுபாட்டின் நாற்பாற் கூற்றின் நிழற் கோடுகளைக் காணலாம். வினைமுறை சமயத்தின் அறக்கூறு. அது பல சமயங்களில் தூய உயர் அற நெறியிலிருந்து பலபடி கீழே விழுந்து தடுமாற்ற மடைந்துள்ளது. ஆயினும் புத்த, சமண நெறிகளில் இதன் உச்ச உயர் நிலையைக் காணலாம். சமயங்களின் அறிவு விளக்க நெறியே அவற்றின் பொருள் நெறியாகும். இது புத்தம், சமணம், சைவம், வைணவம் ஆகிய கீழ்த்திசைச் சமயங்களில் தலை சிறந்து காணப்படுகிறது. அன்பு நெறி, இரண்டற்ற ஒருமை நிலை ஆகிய இரண்டும் அகத்தின் புறம், அகத்தின் அகம் ஆகியவற்றுடன் இசைவனவாகும் - இது சைவ, வைணவ சமயங்களிலேயே உச்ச உயர் நிலை அடைந்துள்ளது. இவ்விரண்டு சமயங்களின் பத்தி களவியலுடனும், யோகம் கற்பியலுடனும் பெரிதும் பொருந்துவன என்னலாம்.
அகத்தின் அகப்புற இருமை நயத்தைப் பெரும்பாலும் கற்போரே ஊகிக்கும்படி விட்டுவிட்டு வள்ளுவர் வகுத்த இன்பப் பாதையிலே படிப்படியாகச் செல்வதே குறளுணர்வார்க்குப் போதியது. ஏனெனில், வள்ளுவர் இன்பம் இன இன்பமாதலால், அஃது இன வழி நிற்கும் உயிராகிய காதலரையும், இன முதல்வர் வழி நிற்கும் உயிராகிய பத்தனையும் ஒருங்கே குறிப்பதாகும்.
அறத்துப்பாலில் இல்லறத்திலேயே வாழ்வில் பெண்டிரின் இன்றியமையாமையையும், வளமிக்க துணைமையையும், சிறப்புகளையும், பொறுப்புகளையும் இரண்டகமற்ற சீரிய சொற்களால் வள்ளுவர் விளக்கியுள்ளார். பெண்டிரின் உடலின்பத்திலும் தோற்றத்திலுமே மயங்கி அறிவழிகின்ற ஏனைய கவிஞர்களைப் போலல்லாது, திருவள்ளுவர் வேறு எப்புலவர்களும் கூறாத முறையில் ஆர்வமிக்க இழுமெனும் கனிவு மொழிகளால், குறட்பாக்கள் வடிவிலேயே பல சிறு காவியங்கள் தந்துள்ளார். அவற்றிலேயே இனவாழ்வின் குறிப்பும் தொக்கி நிற்கிறது. ஏனெனில், மகன் கடமை தந்தைக்குப் புகழ் பெருக்குவது எனினும், தந்தை கடமை மகனுக்கு அவையில் முந்தும் இடம் பெறுவித்தல் என்றும்; தம்மினும் தம்மகனை அறிவுடைய வனாக்குதலே தந்தையின் இன நலமடக்கிய கடமை என்றும் அவர் வகுத்தார். இவை உலகில் வேறு எந்த அறநூலாரும் இன அறிஞரும் இனக் கலைஞரும் கரை காணாத கருத்துகள் ஆகும்.
இனத்துக்குரிய இந்த வாழ்வின் தலையூற்றாகிய இன்பம்; அவ்வின் பத்தினூடாகப் பொங்கித் ததும்பும் அன்பின் கனிவு, அறிவின் முதிர்வு, அவற்றிடையே வீசும் இனஉணர்வின் மணம் ஆகிய இவற்றை வள்ளுவர் தீட்டிய வகையில் தீட்டிய கலைஞன் அவர்க்கு முன்னும் இலன்; பின்னும் இலன். தொல்காப்பியமும் சங்க இலக்கியமும்கூடச் சிலவகையில் வள்ளுவரின் வெளிப்புறச் சாயல்களாகவே இயல்கின்றன.
இன்பத்தைப் பற்றிய இரு நூற்றைம்பது குறட்பாக்களையும் இன்றைய இருபதாம் நூற்றாண்டின் கோணத்திலிருந்து பார்த்தால், அவற்றின் மேலீடான தனிப் பண்புகள்கூட வியப்புக்கிடமானவையாகவே அமைகின்றன. காதலைப் பற்றிப் பாடிய உலகின் மற்றைய புலவர்கள் அனைவரும் இன்றுவரை பெண்மையின் உடலழகை, உறுப்பு உறுப்பாகச் செயற்கை உவமைகளுடன் காமுகன் நிலையில் நின்று விரித்துரைப்ப திலேயே பெரிதும் ஈடுபட்டுள்ளனர். திருக்குறள், தொல் காப்பியம் , சங்க இலக்கியங்கள் ஆகியவற்றில்தாம் காதல் ஈர் உள்ளங்களில் மாறி மாறி எழும் உணர்ச்சிச் சித்திரங்களின் இயக்கமாக, அவற்றின் உடலூடான மெய்ப்பாடுகளாக வருணிக்கப்படுவதைக் காணமுடியும். தவிர, உலகின் பிற புலவர்களிடையே உணர்ச்சி தீட்டப்படும்போது, ஆடவன் அதுவும் பெரிதும் காமுகனான ஆடவனின் இழிதக்க உணர்ச்சிகளே கவிதை வடிவில் காட்டப்படுதல் மரபு. பண்டைத் தமிழிலக்கியத்தில் பொதுவாகவும், திருக்குறளில் சிறப்பாகவும் உயர்ந்த காதலிலீடுபட்ட பண்பார்ந்த உள்ளங்களின் - ஆண் உள்ளம் மட்டுமின்றிப் பெண் உள்ளங்களின் காதலனுபவங் களின் ஒவ்வொரு நிழலும், சாயலும் நுண் மய்யத்துடன் மெய்ந்நிலையும், வாய்மையும் வழுவாது தீட்டப்பட்டுள்ளது காணலாம்.
உடலழகு வருணனையும், உணர்ச்சி வெறியும் வள்ளுவரால் தீட்டப்பட நேரும்போதும் காணப்படும் அவரது கூரறிவுத் திறமும் கவிதை நயங்களும், இலக்கிய உலகெங்கணும், தமிழ்ச் சங்க இலக்கியத்தில்கூட காணப் பெறாதவை. கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் ஐம்புல நுகர்வும் பெண் தரும் இன்பம் ஒன்றிலேயே உண்டு என வள்ளுவர் கூறிய பின்னரே எவரும் முதன் முதல் கருத்தில் உன்ன முடிகிறது. இங்கே அழகு மட்டுமன்று எவரும் ஊன்றிக் கவனிக்காத, கண்டுணராத ஓர் ஆழ்ந்த மெய்ம்மை கண்டுணர்ந்து அழகுபட ஓரடியில் வைத்து யாக்கப்பட்டுள்ளது.
பெண் தரும் இன்பம் என்பது இங்கே பெண் பெறும் இன்பத்துக்கும் பொருந்துவதே. வள்ளுவர் அவற்றிடையே வேறுபாடு காணவில்லை. இருதிசையும் வேறுபாடற்ற நிலையே தமிழர் இன்பப் பண்பு என்பதும் ஈண்டுக் கருதத்தக்கது.
இதே உண்மை; வருணனை வடிவில் மற்றோர் அரிதினும் அரிய குறட்பாவில் தரப்படுகிறது.
‘முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு’
- குறள் 1113
இங்கே ஏழு சீர்களுக்குள் தெய்வக் கவிஞர் தரும் வருணனை வளம், கம்பன் அகலக் கவிதையில் இருபது பாட்டுகளில் அடங்க முடியாத செல்வம் ஆகும். கம்பன் காவியம் முழுவதையுமோ, வேறு தமிழ், பிறமொழிக் காவியம் முழுவதையுமோ கொடுத்துக் கூட விலைக்கு வாங்கிவிடத் தக்க நிறை நய அழகு இந்த ஒரு குறட்பாவில் அமைந்துள்ளது என்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது.
‘அவள் உடலின் நிறமும் மென்மையும் மாந்தளிரை நினைவூட்டுவன. பற்கள் முத்துகளேதாம் என்று கூறத் தோன்றும். அவளைச் சுற்றி நிலவும் தோற்றமும், நறுமணமும் கள்ளினும் மயக்க வெறியூட்டுவன. அவள் கண்களோ வேல்கள் போலக் காண்பவர் உள்ளம் புகுந்து அவர் உயிரைப்பற்றி ஈர்ப்பதாயிருக்கும். அவள் தோள்களோ மூங்கில் போன்ற பசுமையும் மென்மையும், அழுத்தமும் கொண்டவை.’
குறட்பா தரும் முழுப்பொருள் இது. இதில் உறுப்பு உறுப்பான வருணனை உண்டு. அவையும் ஐம்புலன்களின் நுகர்வு வண்ணங்களாகவே தரப்பட்டுள்ளன. உடல் சார்ந்த பெண்மைக் கவர்ச்சியைக்கூட எந்தக் கவிஞனும் இதைவிட வெறியூட்டும் மொழிகளில் கூறமுடியாது. ஆனால், அதே சமயத்தில் வள்ளுவர் வாய்மொழி நின்று நோக்கின், வள்ளுவக் காதலன் வெறும் காமுகன் என்றோ காம வெறியன் என்றோ இவ் வருணனை மூலம் முடிவு கட்ட எவராலும் முடியாது. பெண் ஒரு போகப்பொருள்; ஆடவர் முதலில் பசப்பி விளையாடிப் பயன் பெற்றுப் பின் போலி வேதாந்தங்களுக்கு இரையாக்கி, பழித்துக் கறிவேப்பிலை யாகக் கசக்கி எறியும் ஒரு பொருள்தான் என்று பிற கவிஞர் பலர் கையாண்ட- கையாளும் உணர்ச்சியின் நிழல்கூட அதில் கிடையாது. மேலும் உயர் சமயவாணர் பலராலும் விளக்க முடியாத இந்த உணர்ச்சியின் சாயலைப் பகட்டாரவாரமற்ற வள்ளுவர் இன்பச் சமயத்தில் காண்டலரிது.
பெண்மையை மதிக்கும் இத்தகைய காதல் உணர்ச்சிகள், கவிதை வருணனைகள் மேலை இலக்கியத்தில்கூட எளிதில் கிட்டமாட்டா. கம்பர் கவிதையிலோ, அதற்குப் பிற்பட்ட கவிதையிலோ அது குதிரைக் கொம்பென்றால் மிகையாகாது. ஆனால், திருவள்ளுவர் மரபின் தடமாக, நாம் சங்க இலக்கியக் காலம் முதல் சேக்கிழார் பெரிய புராணக் காலம்வரை தமிழிலக்கியத்தில் இப் பண்பை ஓரளவு கெடா நிலையில் காணலாம். தமிழ்க்கு அடுத்தபடி பாரசீகக் கவிதையிலும், ஓரளவு டால்ஸ்டாய் காலத்துக்கு இப்பாற்பட்ட இரஷ்ய, வட ஐரோப்பிய இலக்கியங்களிலும் மட்டுமே பெண்ணினம் இதே அளவில் மனித உணர்ச்சியும், தன் மதிப்பும் கெடாமல் தீட்டப்பட்டுள்ளது. இதில் வியப்புக்கிடம் என்னவென்றால், சங்க கால ஒளவையார் போன்ற பெண்பால் தமிழ்ப்புலவர் நீங்கலாக, மற்றக் கலையுலகப் பெண் எழுத்தாளர்கள் எவருமே பெண் ணினத்தின் இத் தன்மதிப்பு ஓவியம் காணவில்லை. பெண் எழுத்தாளரும் பிற எழுத்தாளர் மரபில் இழைந்து ஆணோக்கு அடைந்து விடுவதையே எங்கும் காண்கிறோம்.
உடற்காதலைத் துய்த்தபின் அதன் கழிபேருவகை யிலீடுபட்டு, அதனைப் புதுமைச் சுவையுடன் ஆர்வம் கெடாத புதுப் புது உவகைகளுடனும், பண்பார்ந்த அறிவுத் திறங் களுடனும், காதலன் காதலியரை வருணிக்கும் இடங்கள் திருவள்ளுவரின் அறிவும், கவிதை நயமும் ஒருங்கே உச்ச நிலையளாவும் இடங்களாகும்.
‘உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று’
- குறள் 1090
காதலின்பம் கள் போன்ற வெறி தருவது. ஆனால், கள் உண்டவர்க்குத் தான் வெறிதரும். காதலோ கண்வழிக் கண்ட உடனேயே அதே மகிழ்ச்சி தருகிறது.
இவ்வுவமையின் புதுமை கடந்து மேலும் புதுமை காண்கிறது. மற்றொரு குறள். இத் தடவை அது காதலியின் கூற்றாய் அமைகிறது.
‘உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில், காமத்திற்கு உண்டு!’
- குறள் 1281
‘கள்ளை உண்டால்தான் களிப்பு வருகிறதன்றிக் காமம்போல் கண்ட அளவில் களிப்பு வாராது. இது மட்டுமோ? நினைத்த அளவில் மகிழ்ச்சியளிக்கும் மாயம் கள்ளுக்கு ஒரு போதும் கிடையாது. அந்த வியத்தகு ஆற்றல்கூடக் காதலுக்கு இருக்கிறதே!’ என்று விளக்குகிறாள் வள்ளுவக் காதலி. இதே கருத்தை,
‘உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது’
- குறள் 1201
என வேறு நயம்படக் காண்கிறோம்.
இயற்கையில் ஒளிக்கே கதிர் உண்டு. ஆனால், மேலைக் கவிஞர் மில்டன் தம் ‘துறக்க நீக்கத்தில்’ இருளுக்கும் கதிர்கள் கற்பித்துத் தம் புனைவாற்றலைக் காட்டியுள்ளார். வள்ளுவர் காதலின் ஆற்றலுக்குத் தீயின் ஆற்றலை இரண்டு இடங்களில் ஒப்பிட்டு அதே போன்ற இயற்கை கடந்த அரும் புனைவுகளைப் படைத்துள்ளார்.
‘நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்?’
- குறள் 1104
’இந்தக் காதலியின் காதல் ஆற்றல் தீயின் வெப்புப் போல்தான் சுடுகிறது. ஆனால், இதன் ஆற்றல் மிகைப்படுகிறது. தீயானது அணுக அணுகத்தான் அது வெப்பு மிகுதியாகிச் சுடும். அகன்று செல்லச் செல்ல அந்த வெப்புக் குறைவதற்கே வழி உண்டு. ஆனால், இவள் காதல் ஆற்றலின் தீயோ, அகல அகலத்தான் வெப்பு மிகுதியாகிச் சுடுகிறது! அணுகினாலோ பன்னீரும் சந்தனமும் போல் குளிர்ச்சியாயிருக்கிறது! இது என்ன வியப்பு? என்ன கவிதை நயம்படப் பாராட்டுகிறான் காதலன். ஆனால், இதே கருத்தை வேறு ஓர் உணர்வு படக் காதலியும் ஒரு குறட்பாவில்,
‘தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ?’
- குறள் 1159
‘தொட்டால்தான் தீ சுடும். இந்தக் காதல் தீ விட்டாலும் சுடுகிறதே!’ எனக் குறிக்கிறாள். காதலி கூற்றில் காதல்தான் சுட்டப்படுகிறது. காதலன் குறிக்கப்படவில்லை. கூறுவது பெண்ணாகையால். பெண்மைக்குரித்தான நாணின் உள்ளார்ந்த நய அழகு இந்தக் கவிதையின் ’பேசாத பேச்சில்’கூட இனிமை பயக்கின்றது.
‘இருநோக்கு இவள்உண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கு ஒன்று அந்நோய் மருந்து’
- குறள் 1091
‘இவள் பார்வை இருவகைப்பட்டது. ஒன்று எனக்குப் பொதுவே நோய் செய்வது. ஆனால், மற்ற நோக்கு அந் நோய்க்கே மருந்தாக அமைந்து விடுகிறது.’ என்று தலைவன் இன்ப துன்பங்களில் இழைந்து மகிழ்கிறான். அதனையே வியப்பணியாக மற்றோரிடத்தில் குறிக்கிறான்.
’பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து’ - குறள் 1102
‘நோய்க்கு மருந்து வேண்டுமானால், அதற்கு எதிரான பண்புடைய வேறு ஏதேனும் ஒரு பொருளை, எங்காவது, யாரிடமாவது சென்றுதான் தேடித்திரிதல் வேண்டும். ஆனால், இந்த ஆயிழை தரும் நோய்க்கு மருந்து, யாரிடமும் பெற முடியாது; எங்கும் கிடைக்காது. எப்பொருளும் அமையாது. அவள் தந்த நோய்க்கு, மருந்து அவளிடமே உள்ளது. அஃது அவளேதான்’ என்று காதலன் அவள் காதலின் தனி நலம் உணர்ந்து பாராட்டுகிறான்.
‘உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்’
- குறள் 1106
‘தளர்ந்த உயிரைத் தூண்டிப் புத்துயிர் தோற்றுவிக்கும் பண்பு, அமிழ்தத்துக்கே உண்டு என்பர். பார்வையால் தீண்டியவுடனேயே, அதே ஆற்றலை உடையனவாக விளங்குகின்றன, இனிய மடநோக்குடைய இக் காதலியின் கண்கள். எனவே, ஒரு வேளை அக் கண்கள் அமுது கொண்டு குழைத்து உருவாக்கப்பட்டிருக்குமோ அறியேன்!’
காதலர் கூற்றுகளாக இங்ஙனம் நுண்ணறிவின் கொடுமுடியையும், கலையழகின் செவ்வியையும் ஒருங்கே கொண்ட குறட்பாக்கள் எண்ணற்றவை. இவற்றுட் பல காதலின் தலைசிறந்த விளக்கங்களாகவும், நயத்திறமிக்க பாராட்டுரை களாகவும் அமைவன.
‘காதலிக்கப்பட்டவரே தம்மைக் காதலிக்கும் காதலனாகப் பெறும் அரும்பேறு எவர்க்கும் கிட்டக்கூடுமானால், அது கொட்டையில்லாத இனிய கனிபோல முழுவதும் எளிய இன்சுவையுடையது’ - குறள் 1191. ‘காதல் இருபுறமும் ஒத்திருந்தால் அஃது இருபுறமுமொத்த பளுவுடைய தூக்குக் காவடி போல இனிய வாய்ப்புடையது. அஃது ஒரு புற மட்டுமிருந்தால், குடைமறிக்கும் காவடி போன்றதாகத் துன்பம் தரும்.’- குறள் 1196. காதலித்தவர்க்குக் காதலர் காதலையேதான் கைம்மாறாகத் தரமுடியும். வேறு எதுவும் தரமுடியாது. அக் காதல் தாராவிட்டால் வேறு என்ன தந்தாலும் ஒரு சிறிதும் பயன் இல்லை - குறள் 1195.
‘காதலித்தவர் பெறும் காதல், வாழும் உயிர்கட்கு வானமழை போன்ற இன்றியமையா இன்னலம் ஆகும்.’ - குறள் 1192. ‘காதலித்தவர் தோள் மீது சாய்ந்து உறங்கும் இன்பத்தை விடத் துறக்க இன்பம் என்று கூறுகிறார்களே அதுகூடப் பெரிதாகாது!’ -குறள் 1103. ‘காதல், மலரைவிட மெல்லிது. குறித்த பருவத்தில் மட்டும் மலர்ந்து மணம் கமழ்வது. பக்குவ நிலை அறிந்தே அதனைப் பெறுதல் வேண்டும். இங்ஙனம் பெற்றாரே அதன் அரும் பேறு பெற்றாராவர். அது மிகவும் அரிதாதலால், அதைப் பெறும் பேறு பெற்றோர் மிகச் சிலரேயாவர்.’ - குறள் 1289.
காதலுக்கும், கலைக்கும் இடையேயுள்ள தொடர்பு உலகம் அறிந்தது. இரண்டும் உணர்ச்சி வசப்பட்டவை. கலையைப் படைப்பவனுக்கும், அதன் சுவையை நுகர்பவனுக்கும் உரிய தூண்டுதலும், அவர்களிடையேயுள்ள தொடர்பும் - இணைவும் உணர்ச்சிதாம். உணர்ச்சிகளுள் தலைசிறந்த உணர்ச்சி என்ற வகையில் காதல் அதில் தலைப்பெரும் பேரிடம் வகிக்கிறது. ஆனால், காதலுக்கும், கலைக்கும் அறிவுடன் தொடர்பு உண்டு என்பதோ, காதல், கலை, அறிவுத்துறை ஆகிய மூன்றுமே, நன்மை, தீமை, உணர்வு அதாவது அறத்துடன் உறவுடையவை என்பதோ எவரும் உளம் கொளாக் கருத்து ஆகும். அவ்வாறு உளங் கொண்டவர், வகுத்தமைத்தவர் திருவள்ளுவர் ஒருவரே. அவர் காதற் சித்திரத்தை மற்றக் கவிஞர், கலைஞர், எழுத்தாளர் சித்திரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இது மிகத் தெளிவாக விளங்கும்.
காதல், உணர்ச்சிகளுள் தலை சிறந்த உணர்ச்சி மட்டுமன்று; அதுவே உணர்ச்சிகளின் தாய். அதே சமயம் அறத்தின் தந்தையும், அறிவின் ஆசானும் அதுவன்றி வேறன்று. இயக்கும் ஆற்றல்களில் தலை சிறந்து இயங்கும் ஆற்றலாகிய இறையும் அதுவே.
காதலின் முழுநிறைப் பண்பை நாம் காதல் என்று கூறுவ தில்லை. பண்பு என்றே கூறுகிறோம். அது பெண்ணினத்தில் இயல்பாகப் படிந்து பெண்மை என்ற பெயரால் இயல்கின்றது. ஆயினும், உணர்ச்சி என்ற முறையில் அஃது ஆடவரிடமிருந்தே பிறக்கின்றது. பெண்மை மீது பரந்து ஓடும் ஆணின் உருவற்ற காதல், பெண்மையின் பண்புகளைக் கரையாகக் கொண்டு பல உருவங்கள் கொள்கின்றது. பெண்ணினத்துக்குரிய உருவுடைய, உறுதியுடைய காதலே கற்பு. அக் கற்பு நெறியளாவி நின்று காதல் குடும்பமாக மாறுகிறது. அந் நிலையிலே ஆடவர் பெண்டிரிடையே அஃது இடை நின்று ஓயாது ஊடாடி, அலை எதிர் அலையாக வளர்ந்து விசை பெருக்கி, பிள்ளைகள் மீது படர்ந்து, உறவினர், சமுதாயம், இனம், உலகம் ஆகிய பலவகைப் பரப்புகள் அளாவி, முடிவற்ற கால இட எல்லைகளில் விரிவுறுகின்றது. நட்பு, பாசம், பரிவு, இரக்கம், அருள், உலகப் பற்று, இனப் பற்று, இறைப் பற்று முதலிய பல்வகை உணர்ச்சிகள் காதலின் மென்மை உருவாக்கிய அன்பின் குழந்தைகளே. இவற்றுள் உலகப் பற்று, இனப் பற்று, இறைப் பற்று ஆகிய மூன்று திறங்களும் இன உணர்வு தூண்டிக் கலை வளர்க்கின்றன. அவையே நேர்மை, ஒப்புரவு, சரிசமநிலை, ஒற்றுமை, ஒத்துழைப்பு, தன்மறுப்பு, விட்டுக்கொடுப்பு ஆகிய திறங்களை உருவாக்கி, அன்பு, அறம் பேணுகின்றன. அவ்விரண்டின் வழி தனி உயிர்களைச் செலுத்தி, அவையே அறிவாகவும் இயங்குகின்றன. இவ்வறிவு தனிமனிதனைச் சமுதாய நோக்கிலும், சமுதாயத்தை இன நோக்கிலும், இனத்தை இறைமை நோக்கிலும் ஊக்கு கின்றது. இதுவே திருவள்ளுவர் குறிக்கொண்ட காதலாகும். இக் காரணத்தினால்தான் உலகக் கவிஞர்களிடையே அவர் ஒருவர் வகையில் மட்டும் காதற் சித்திரம் இவ்வெல்லாப் பண்புகளையும், அறிவுப் பண்பையும், அறப் பண்பையும், கலைப் பண்பையும் உட்கொண்டு அவை கடந்து இயங்குவது காண்கிறோம்.
வள்ளுவரின் காதல் தலைவன், தலைவி கூற்றுகளை உற்று நோக்கி ஒப்பிட்டுப் பார்த்தால், இரண்டிலுமே பொதுவாக அறிவுப் பண்பையும், இன உணர்வையும் காணக் கூடுமானாலும், இரண்டு பண்புகளுமே தலைவி கூற்றில்தான் சிறக்க அமைகின்றன என்பது தெளிவு. காதலில் ஆணின் நிலை, தனியுயிரின் நிலை - மாணவன் நிலை மட்டுமே. பெண்டிர் நிலையே, இனமுதல் அதாவது இறைநிலை-ஆசான் நிலை ஆகும். ஆயினும், பொதுவாக மாணவரிடம் காணப்படும் பணிவும், ஆசானிடம் காணப்படும் தன்முனைப்பும் மட்டும் இங்கே ஆண், பெண்பாலாரிடம் தலைமாறி விடுகின்றன. இரு பால்களின் தொடர்பால் உலகெங்கும் காணப்படுகிற - ஆனால் அறிஞர், கலைஞர்களால் முற்றிலும் சரிவர உணரப்படாத மாயப் புதிர் இதுவே. நிறையறிவும் ஆற்றலும் வாய்ந்த பெண், தன் அறிவும் ஆற்றலும் தனக்கே தோன்றாத நிலையில், பணிவுப் பண்பை மேற்கொள்கிறாள். தன்முனைப்பற்ற இந்த நிறை நிலையையே தமிழர் நாணம், அச்சம், மடம், பயிர்ப்பு என்ற நாற் குணங்களாக வகுத்துப் பேணினர். இப் பண்புகள் மூலம் பெண், தான் அறிவதை ஆண் அறிவதாக உணர்ந்து அவனை அறிய வைத்து, அவன் வழி அறிவதாகவே எண்ணி, அவனை மேன்மேலும் அறிவில் தூண்டி இயக்குகிறாள். தன் உணர்ச்சிகளை அவன் உணர்ச்சிகளாக்கி, அவனை இன்ப துன்பங்களில் தோய்விக் கிறாள். மணிப்பொறியில் தான் அசையாததுபோல் காணப்பட்டு, புற உறுப்புகளை விரைந்தோட வைக்கும் விசை முதல் (main spiring) போல, அவள் தன் அடங்கிய கருவியக்கத்தால் அவனை மேன்மேலும் விசைபடச் செயலில் இயக்கியமைக்கிறாள்.
ஆண், பெண்பாலாரின் தொடர்பில் இயல்பாகக் காணப்படும் இந்தப் புதிர், ஆணுக்குப் பெண் அடிமை என்று கூறும் வடபுல அறிஞரும், ஆணும் பெண்ணும் சரி நிகர் சமானம் என்று பாடும் மேல் புல அறிஞரும், ஒரு சிறிதும் காணாத கண்டு தெளியாத ஒன்று ஆகும். ஏனெனில், ஆணுக்குப் பெண் அடிமை என்று கூறும் வட புலத்தார், அதே சமயம் ‘பெண்மாயை’ பற்றிப் பாடத் தவறுவதில்லை. ஆற்றல், அறிவு, செல்வம் ஆகிய மூன்று பண்புகளுக்கும், மலைமகள், கலைமகள், திருமகள் என்ற பெண் தெய்வங்களையே உரியவராகக் கூறப்படும் மரபையும் தம் கோட்பாட்டுக்கு முரண்பட்டதென்று காணாமல், அமைந்த ஆராய்வின்றி அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதுபோலவே இயற்கை யாற்றல்களுக்கெல்லாம் காரண காரியம் துருவி ஆராய்ந்து தனி மனிதன், சமுதாய வாழ்க்கைப் பண்புகளையும், உளப் பண்புகளையும் அலசிக் காணும் ஆற்றல் படைத்தவர் களான மேல் புலத்தவர்களும் ஆண், பெண் சமத்துவக் குறிக்கோளை மேற்கொண்டுள்ளனராயினும், அதற்கு மாறான இயற்கை, சமுதாயச் சூழல்களையும், ஆண், பெண்பாலாரின் இயற்கை வேறுபாடுகளையும் விளக்க முடியாதவர்களாகவே அமைகின்றனர். இவ்விரண்டின் பின்னணியுடன் வைத்து ஒப்பிட்டு நோக்க, வள்ளுவர் கருத்தின் தெளிவும், உயர்வும் போற்றுதற்குரியன ஆகும்.
வள்ளுவர் கருத்துப்படி ஆண், பெண்பாலார் அடிப்படைச் சமத்துவ முடையவராயினும், இருவரும் இருவேறு வகைப்பட்ட தனி மாறுபாடுகளும் உடையவராவர். இன எல்லையில் இனக் காவலராகி, இன மரபைப் பேணி, வரன் முறையாக வந்த இனப் பண்புகளைத் தம் தலைமுறைக்களித்து, தம் தலைமுறைகளையும், வருங்காலத் தலைமுறைகளையும் ஊக்கும் மிகப் பெரும்பொறுப்பு பெண்களுடையதே. இதில் ஆணின் பங்கு தம் தலைமுறையின் புதுப்பண்பு காண்பது ஒன்றேயாகும். இத் துறையில் பெண்ணை இனத்தின் முதல் என்றும், ஆணை அதன் வட்டி என்றும் கூறலாம். ஒவ்வொரு தலைமுறையிலும் எழும் வட்டி, இன முதலுடனே அடுத்த தலைமுறையில் சேர்ந்து விடுவதால், இன மரபு என்பது பெரும்பாலும் பெண்டிர் மரபு மட்டுமே. ஆண் அதன் தற்காலிகத் துணைவன், செயலாளன் அல்லது தொழிலாளனாகவே இயங்குகிறான். பெண்ணை முதலாளி இனமென்றும், ஆணைத் தொழிலாளி இனமென்றும் அறிஞர் பெர்னாட்ஷா கருதியது இவ்வகையில் தவறு படுவதல்ல. ஆனால், முதலாளித்துவ நாகரிகத்தில், தொழிலாளியின் உழைப்பின் பயனை முதலாளி சுரண்டுவதுபோலப் பெண் ஆணின் உழைப்பைச் சுரண்டுவதில்லை. ஏனெனில், அவள் தானே ஆணுக்கு உடைமைப்பட்டு, ஆணுக்காகவே தன்னை மறந்து வாழ்கிறாள்.
இனத்தின் உறுப்புகளாகிய குடும்பம், சமுதாயம் ஆகிய இரண்டில், குடும்பமே சிற்றுறுப்பு. பெண்டிர் இன வாழ்வில் வகிக்கும் இடத்தையே இதிலும் வகிக்கின்றனர். குடும்ப எல்லையிலே வீட்டினுள் பெண்ணே போட்டியற்ற ஆட்சி செலுத்துகிறாள். ஆனால், குடும்பத்தையும் இனத்தையும் இணைக்கும் சமுதாய எல்லையில் ஆடவனே பெரும்பங்கு கொள்கிறான். குடும்பத்தைச் சமுதாயத் துடனும் சமுதாயத்தை இனத்துடனும் இணைத்து இருவகையிலும் செயலாற்றும் கூறும் அவனே.
குடும்பத்திலும், இனத்திலும் பெண்; சமுதாயத்திலும் சமுதாயத்துடன் குடும்பம், இனம் இணைப்பிலும் ஆண், இப்பாகுபாடு ஆண், பெண் பாலார்க்குத் தனித் தனித் துறையில் சமத்துவம் அளிக்காவிட்டாலும், மொத்தத்தில் ஏறத்தாழ சமநிலை அளிக்கிறது. ஆயினும், அச் சமத்துவத்திலும் பெண் உயிர்ப் பகுதியாகவும், ஆடவன் உடற் பகுதியாகவும் இயங்கு கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்’
- குறள் 56
என்று பெண்டிர்க்குத் திருவள்ளுவர் கிட்டத்தட்ட வாழ்வின் முப்பொறுப்பும் உரிமையும் அளித்ததன் காரணம் இதுவே. ஆனால், சமுதாயப் பெண் பண்புடையவளாதலால் தன் அறிவை அடக்கி முடக்கி ‘மடம்’ ஆக்கி, தன் முனைப்பை உள் ஈர்த்து ‘நாணம்’ ஆக்கி, தன் உள்ளுறுதியைப் பொதுவாக மறந்து ‘அச்சம்’ ஆக்கி, தன் செயல் திறத்தைச் சேமித்துப் ‘பயிர்ப்பு’ ஆக்கிக் கொள்பவளாதலால் தான் எதுவும் செய்யாமல், இயக்காமல் செய்விக்கும், இயக்குவிக்கும் இயல்புடையவளாய் விடுகிறாள். இதனால், இயல்பாக அவள் பங்கு உயிர்நிலையா னாலும், உயிர் புறந்தோன்றாததுபோல அது புறந் தோன்றுவதில்லை. பெண்டிர், ஆடவர் கண்களே தம் கண்களாகக் கொண்டு, கண்டு, அவர் அறிவே தம் அறிவாகக் கொண்டு அறிந்து, அவர் செயலாற்றலே தம் செயலாற்றலாகக் கொண்டு செயலாற்றிவிடுகின்றனர். எனவேதான், உண்மையில் மனித இனம் என்பது பெண்டிரினமே யானாலும், அஃது ஆடவரினமாகவே இயங்க முடிகிறது.
ஆண், பெண் வேறுபாடுகளுள் பெரும்பாலானவை பெண்டிரின் இன முதற் பண்பின் விளைவுகளேயாகும். பெண்டிர் அறிவு புறந் தோன்றாததாயினும், உடல் தோற்றத்தில் மெல்லியதாயினும், இரண்டும் ஆண் கடந்து வேகமாக வளர்கின்றன என்பது உற்றுணர்வார்க்கு எளிதில் புலனாகும். பருவ முதிர்ச்சி பெண்டிர் வகையில் 12உம், 16மாயிருக்க, ஆடவர் வகையில் அது 16உம் 21மாக வேறுபடுவதன் காரணம் இதுவே. தவிர, குறைந்தது ஏழாண்டு வயதிளமையுடைய பெண்ணுடனேயே ஆடவன் தோழமை கொள்ள முடிகிறது என்பதும் இதன் இன்றியமையா விளைவேயாகும். தம்மினும் ஏழாண்டுகள் அல்லது அதற்கு மேல் இளமையுடைய தம் பாலாருடன் ஓர் ஆடவனோ, ஒரு பெண்ணோ இவ்வாறு தோழமை கொள்ள முடியாது என்று கூறத் தேவையில்லை.
இது மட்டுமன்று, ஆடவர் வளர்ச்சி என்பது பருவ முதிர்ச்சியின் பின் ஒரே திசை மாறா வளர்ச்சியாகும். ஏனெனில், இன வாழ்வில் தம் தலைமுறையின் படி வந்தவுடன் அவர்கள் இனவாழ்வின் பங்கு முடிந்து விடுகிறது. முதுமை ஒன்றுதான் அதன் தளர்ச்சியாய் அமைகிறது. ஆனால் பெண்டிர் வகையில் பருவ முதிர்ச்சிக்குப் பின்னும் வளர்ச்சிப் படிகள் முடிவதில்லை. ஆடவன் பிள்ளைப் பேற்றைத் தூண்டுகிறான்; பெறுவதில்லை. பெண்ணோ மறு தலைமுறை வாழ்வை ஈன்றெடுக்கிறாள். மறு தலைமுறை உடலைப் பாலூட்டிப் பேணுபவளும் அவளே. அதற்கு அறிவூட்டும் வேலையில் ஆடவர் உதவக் கூடுமானாலும், அப் பொறுப்பு முற்றிலும் பெண்ணினுடையதே. இதன் விரிந்த விளைவே இருபாலாரின் இளமை முதுமை வேறுபாடுகளில் பெரும் புதிர்களை உண்டு பண்ணுகின்றது.
பிள்ளைப் பேற்றுப் பருவம், உடல் பேணும் பருவம் முடிந்த பின், பிள்ளைகள் அறிவை ஊட்டி வளர்க்கும் தாய்மைப் பருவத்தை-இளமை கடந்த பருவத்தைப் பெண் அடைகிறாள். ஆடவனுக்கும் மனித மொழி இத்தகைய ஒரு தந்தைப் பருவத்தைக் கற்பித்தாலும், உண்மையில் அவனுக்குத் தந்தைப் பருவம் என்றொரு பருவம் கிடையாது. ஏனெனில், உடல் தளரும் வரை பிள்ளைப் பேற்றைத் தூண்டுவது தவிர, அவனுக்கு இன வாழ்வில் எந்தப் பங்கும் கிடையாது. அவன் முதுமை, இளமை கடந்த முதுமையன்று. வலி தளர்ந்த முதுமை மட்டுமேயாகும்.
முதிய ஆடவன் ஓர் இள நங்கையைக் காதலித்து, அவளுடன் மணத் தொடர்பு கொண்டு வாழ முடிகிறது. முதிய பெண்டிர் வகையில் இது நம்மிடையே காணப்படாத ஒன்று . இதற்கு விளக்கம் மேற்கூறப்பட்ட வள்ளுவ அடிப்படையான மெய்ம்மையேயாகும். பெண் தாய்மைப் பருவம் அடைந்த பின், மீண்டும் பிள்ளைப் பேற்றுக்குரிய மணப்பருவம் அடைய முடியாது. ஆனால் ஆண் என்றும் தந்தைப் பருவத்தை எட்டாதவனாதலால், கடைசிவரை பிள்ளைப் பேற்றுப் பருவத்தி லிருந்து, அது தளர்ந்த பின் வற்றல் முதுமையை மட்டுமே அடைகிறான். பெண்ணுக்கு இளமையும், தாய்மையும் வேறு வேறு பருவங்கள் என்பதையும், ஆணுக்கு இரண்டும் வளர்ச்சி தளர்ச்சி என்ற வேறுபாடன்றி, வேறு மாறுபாடுடையன அல்ல என்பதையும் இங்கே காணலாம்.
கருவாகப் பத்து மாதம் வயிற்றில், பால்குடி குழந்தையாக மூன்று முதல் ஐந்தாண்டுவரை மடியில், ஒவ்வொரு பேறு காலமடுத்த வளர்ப்புப் பருவம் கடந்த பின் மறு இளமை, பருவம் கடந்தபின் அறிவுத் தாய்மை, அது கடந்த பின் தளர்ச்சியிலும் இன வருங்காலத்துக்குரிய பண்புத் தாய்மை என்று இவ்வாறு இயற்கை யன்னையின் மறு படிகளாகப் பெண்பாலார் கொள்ளும் இனத் தாய்மைப் படிகள் பல. இவை ஆண் பாலார்க்கு இல்லாத பெண்டிர்ச் சிறப்பு. ஆடவரின் அறிவற்ற, அன்பற்ற, பண்பற்ற கண்களுடன் வாழ்க்கையைக் காணும் கீழ்த்திசை, மேல்திசை மக்களும், அறிஞர் பலரும் இயல்பான பெண்டிரின் சரிசமக் கேடான வாய்ப்புக் கேடுகள் என்று கருதுபவை, உண்மையில் இன மரபு கண்டவர்கட்குப் பெண்டிரின் குறைபாடுகளேயல்ல; அவை உண்மையில் அவர்களின் தனிப்பெரும் நிறைவுகளேயாகும்!
இந்த ஆண், பெண் வேறுபாடுகளை வள்ளுவர் காட்டிச் செல்லும் இடங்கள் பல.
பண்டைத் தமிழர் பழக்க வழக்கங்களில் காதல் பெறாதவர், அல்லது பெறும் வாய்ப்புக் காணாதவர் அதற்காக உயிர் துறக்க முனைவதுண்டு. அவ்வகையில் பின்பற்றும் முறையே மடல் ஏறுதல். வாள்போல் அறுக்கும் கருக்குடைய பனை மட்டை களால் இயன்ற குதிரையில் ஏறிஇருந்து மாள்வது; அல்லது விருப்பம் ஈடேறும் வரை அத் துயர் ஏற்பதே அம் முறையின் செயலாறு. இவ்வுரிமை ஆடவர்க்கு உண்டு. பெண்டிர்க்கு இல்லை. இதனைக் குறிக்கும் குறட்பா அது காரணமாகப் பெண்ணினம் புகழவும் அதனை ஒரு வாய்ப்பாக்கியுள்ளது.
‘கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்கது இல்’
- குறள்1137
பெண் தன் காதலைக் காதலனிடம்கூட வெளிப்படக் கூற முடியாமல், அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் வேலிகள் அவளைத் தடை செய்கின்றன. காதலன் தன்னை வந்தடுத்தாலல்லாமல், அவள் அவனை அணுக முடியாது. பிரிவுற்ற காதலன் அவளைத் தேடிவரும் வரை பெண் வாடி வதங்கலாமேயன்றி அவனைச் சென்று காணமுடியாது. அவனாகக் காதலித் தாலன்றி அவள் அவன் காதலை இயக்கவும் முடியாது. ஆடவனைவிட அவள் தன் களவுக் காதலைப் புறம் தெரியாவகை அடக்குதல் வேண்டும். ஊரின் அலர் தூற்றலும், சுற்றத்தினர் கண்டனக் கணைகளும் அவளை நோக்கியே எய்யப் படும். அவள் குடியின் மான உணர்ச்சி அவளையே சாரும். காதலனுக்கு இஃது அவ்வளவாகக் கிடையாது. இந்த நிலையில் பெண்ணின் காதலும் எளிதில் புறம்போகும் இடமின்றிப் பெருகி உள்ளலை பாய்ந்து கடலாகக் குமுறுகின்றது. ஆனால், இந்த நிலையிலும் காதலின் தடைகளை மீற, அல்லது கடக்க ஆடவனுக்கு ஒரு வழி உண்டு. அதுவே மடலேறுதல். பெண்டிர்க்கு அதுகூடக் கிடையாது. அவள் மடலேறமாட்டாள்.
‘காதல், காதல், காதல்!
காதல் போயின், காதல் போயின்
சாதல், சாதல், சாதல்!’
என்ற பாரதியார் பாடல் அவள் வகையில் ‘உயிர்விடுதல்’ என்ற எளிய வழி காட்டவில்லை. ‘உயிர் அழிய விடல்’ என்ற கோரப்பொருளே உடையது. இந்த நிலையில் காதல் பயணம் ஆற்றும் பெருமையுடைய இனம் பெண்ணினம் எனக் கட்டுரைக்கிறார் வள்ளுவர்.
‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்’
- குறள்54
அறத்துப் பாலின் இந்தக் குறட்பாவுக்கு, மேற்குறிப்பிட்ட இன்பத்துப் பாலின் குறட்பா ஓர் உரை விளக்கமாக அமைகிறது. கற்பின் பெருந்திண்மை—-திண்மை என்பது கைக்கிளைக் காதலிலும், சமநிலையற்ற காதலிலும் மடலேறாமலே தன் மனங் கொண்ட காதலுறுதி வழியே நிற்றல் என்பதாகும், ‘சொற் காத்து’ என்று திருவள்ளுவர் பெண்டிர் கடமை சுட்டிய இடத்தில் கூறுவதும், கணவன் சொல்லை அல்லது ஆணையைக் காத்து என்று பொருள் படுவதன்று. பெண்ணினத்துக்கு, பெண்குடிக்கு உரிய மரபுப் புகழ், மானம், மதிப்புக்காத்து என்பதே அதன் பொருள் ஆகும்.
பெண்மையைப் பற்றிய வள்ளுவர் கருத்துகள் அறத்துப் பாலிலும், இன்பத்துப் பாலிலும் மட்டுமன்றி, பொருட்பாலிலும் ஓரிரு அதிகாரங்களில் இடம் பெறுகிறது. அவையே பெண்வழிச் சேறல், வரைவின் மகளிர் என்பன. தற்காலச் சீர்திருத்த அறிஞர் பலர்க்கும், முற்போக்கெண்ணம் கொண்ட புலவர், ஆராய்ச்சித் துறையாளர்க்கும் இடர்ப்பாடு தரும் அதிகாரங்கள் இவை.
பெண்ணுக்கு முழு உயர்வும், பொறுப்புந் தந்த வள்ளுவர், இன்பப் பாலில் பிரிவுப் பகுதிகளில் பெண்மையின் அறிவு நயம், இன நயம், நுணுகி நுணுகிக் கண்டுணர்ந்த வள்ளுவர் ‘பெண்வழிச் சேறல்’ என்ற அதிகாரத்தில் ஆடவன் பெண் வழி நிற்கலாகாது என்று கூறுவது வியத்தற்குரியது என்பதில் ஐயமில்லை. ஏனெனில், இங்கே வள்ளுவர் பொதுமகளிர் அல்லது வரைவின் மகளிரைக் கூறினார் என்றுகூடக் கொள்ளுதற்கில்லை. அஃது அடுத்த அதிகாரத்துக் குரியது. இவ்வதிகாரத்தில் பெண்ணைக் குறிக்கும் ‘மனை, இல்லாள், மனையாள், நன்னுதலாள்’ என்ற சொற்கள் ஐயத்துக்கிடமின்றி, வாழ்க்கைத் துணையையே குறித்து நிற்கின்றன என்று ஒத்துக்கொண்டே யாதல்வேண்டும்.
‘ஆண், பெண்ணின் சொற்கேட்டு நடப்பது தவறு’ என்ற பொருளையே மேற்கொண்டு, முற்போக்காளர்களை ஓரளவு மறுத்து அதற்குப் பழைமைப் பொருள் காண விழைந்துள்ளார் முனைவர். மு. வரதராசனார் முதலிய பேராசிரியர்கள். ஆனால், பெண்ணின் அறிவுமீது, பண்பு மீது இது சுமத்தும் கறையை அவராலும் முற்றிலும் மறந்துவிட முடியவில்லை. ஏனெனில், பெண்ணுக்கு வள்ளுவர் அளித்துள்ள மிக உயர் மதிப்புடன் இதை இசைவித்துக் காண முடியவில்லை.
ஆண், பெண் இருவருமே தமிழில் சரி ஒப்பாகத் துணைவர் என்றும், சரி ஒப்பான உரிமையாட்சியுடைய தலைவர் என்றும் வழங்கப்படுகின்றனர். ஆனால், குடும்பம் என்ற ஒரே சிறு எல்லையில் இருவர் எப்படிச் சரி சம ஆட்சி செலுத்துவது? ஒருவர் இயக்கி மற்றவர் செயலாற்றினாலும், ஒருவர் அரசர், மற்றவர்அமைச்சர் என்ற நிலை பெறலாகுமேயன்றி, இருவரும் உரிமை ஒத்த தலைவராவது எங்ஙனம்? பெண்வழிச் சேறல் அதிகாரத்தின் திறவு இவற்றின் விடையிலிருந்து ஓரளவு பெறப்படுதல் வேண்டும்.
தமிழர் மரபில் ‘இல்லாள், மனைவி’ என்ற பெயர் பெண்ணுக்கே உரியன. ஆணுக்கு இது போன்ற பெயர்கள் இல்லை. ஆகவே, குடும்ப ஆட்சி பெண்ணாட்சியே என்பதில் ஐயமில்லை. பெண் இயக்குபவளாகவே உள்ளாள். ஆயினும், அவள் பண்பு, இங்கும் அவள் உரிமை ஆட்சியை அன்பாட்சி யாக்கி, அவள் உரிமைகளை மறைக்கிறது. ஆனால், சமுதாயத்தில் அவள் முற்றிலும் இயக்குவிப்பவள் மட்டுமே. சமுதாய ஆட்சி பெண்ணால் இயக்குவிக்கப் பட்டாலும், ஆணே உரிமை ஆட்சி செலுத்துகிறான். இவ் வகையில்தான் இருவரும் தலைவர் ஆகின்றனர். அக ஆட்சி ஒருவரிடத்தும் புற ஆட்சி மற்றவரிடத்தும் அமைகிறது.
குடும்பமும், சமுதாயமும் ஒன்றுடனொன்று பிணைக்கப் பட்ட நலன் உடையன. எனவே, குடும்ப ஆட்சி செய்யும் பெண், குடும்ப எல்லையில், சமுதாயத்தின் சார்பில் கணவனின் பேராள் (பிரதிநிதி) ஆகிறாள். இது போலவே சமுதாயத்தில் செயலுறுப்பினனான ஆண் அதில் தன் சார்பில் உரிமை செலுத்துவதன்றித் தன் மனைவி சார்பிலும் பேராள் ஆக இருந்து செயலாற்ற வேண்டியவனாகிறான். குடும்பத்தில் மனைவி சமுதாயத்துக்குப் பொறுப்புடைய பேராள் என்றால்; சமுதாயத்தில் கணவன் குடும்பத்துக்குப் பொறுப்புடைய பேராள் ஆகிறான்.
காதல், குடும்பத்திலேயே முழு வளர்ச்சி பெற்று ஏறத்தாழ முழு நிறை வடிவில் ஆட்சி செய்கிறது. ஆனால், சமுதாயத்திலோ, இனத்திலோ காதலின் வழி வந்த பண்புகள் குறையாட்சியே செலுத்துகின்றன. இதனால் குடும்பத் தலைவியும், குடும்பத்தில் சமுதாயப் பேராளுமான பெண் காதலடிப்படையாகவே, காதலியாக, மனைவி அல்லது இல்லாளாக இருந்து கொண்டே எல்லாப் பொறுப்புகளையும் நிறைவேற்றிவிட முடிகிறது. ஆனால், காதல் நிறைவுறப் பரவாத சமுதாயத்தில் தன்போன்ற பல குடும்பப் பேராள்களிடையே ஒருவனாக நின்று, செயலாட்சியில் பங்கும், குடும்பப் பேராள் என்ற முறையில் குடும்பப் பொறுப்பும் நிறைவேற்ற வேண்டிய ஆண், முற்றிலும் காதலனாக நின்று எல்லாப் பொறுப்புகளையும் நிறைவேற்றிவிட முடியாது. ஆகவே, அவன் குடும்ப எல்லையில் மட்டும் காதலனாகவும், அதற்கு வெளியே சமுதாய மனிதன் அல்லது உழைப்பாளி, அரசியல்வாதி, வீரன் முதலிய பல்வேறு பண்பு களுடையவனாகவும் நின்று செயலாற்ற வேண்டியவனாகிறான்.
ஆண், பெண் இருவர் காதல் வாழ்வுகளில் உள்ள இந்த வேறுபாட்டை நாம் உலகெங்கணும் நாகரிக சமுதாயங்களில் காணலாம். ஆனால், தமிழ் இலக்கிய இலக்கணங்களில் மட்டுமே இவ் வேறுபாட்டினை அழகிய வாழ்க்கைச் சித்திரமாகவும், திருக்குறளிலேயே அதன் முழு விளக்கத்தையும் காணலாம். அந்த விளக்கமே பெண்வழிச் சேறல் என்ற பொருட்பாலின் அதிகாரம்.
தலைவியின் காதல் வாழ்வில் கூடலுக்கெதிராக ஊடல் மட்டுமன்றிப் பிரிவும் பேரிடம் பெறுகிறது. ஏனெனில், கூடியிருக்கும் காலத்தில் காதல் எவ்வளவு அவளை இன்பத்தில் மிதந்து தன்னை மறக்க வைக்கிறதோ, அதே அளவு பிரிந்திருக்கும் காலத்தில் காதல் அவளைத் துன்பத்தில் திளைக்க வைத்துத் தன்னையுந் தன் கணவனையும் பற்றிப் பன்மடங்கு மிகுதியாகச் சிந்தித்துச் சிந்தித்து அழிய வைக்கிறது. காதல் வாழ்வின் இப் பாகுபாடு ஆணின் வாழ்க்கையில் மிகமிகக் குறைவே என்பது தெளிவு. காதலன் அல்லது கணவன் வரைவுக்காக (மண ஏற்பாட்டுக்காக) அல்லது உயர்தரக் (கல்லூரிப் பல்கலைக் கழகக்) கல்விக்காக, பொருள் ஈட்டுவதற்காக அல்லது அரசியல் (உத்தியோகக்) கடமைகட்காகப் பிரிந்து செல்கிறான். தலைவியை அவன் எளிதில் மறப்பதில்லை. போகும் வழியில் பல காட்சிகள் அவனுக்குச் சிறிது கவலையூட்டலாம். வேலை முடிந்த பின் காதலி பற்றிய ஆர்வம் அவனை விரைந்து திரும்பும்படி தூண்டலாம். வரும் வழியில் அவளைப் பற்றி அவன் பிதற்றலாம். ஆனால், பிரிவின் பெரும்பகுதியில் வினை (செயல்) அவன் முழுநிறை கவனத்தைக் கவர்கிறது. கவர்தல் வேண்டும்.
காதல் வாழ்விலேகூடத் தலைவனுக்கு ஓர் ஆண்மை கற்பிக்கப்படும் இடம் இதுவே. அவன், பெண்ணைப்போலக் காதலில் பிறந்து, காதலில் மிதந்து, காதலாகவே இருப்பவன் அல்லன். அத் தகையவன் ஆண் ஆகமாட்டான். காதல் அவனை இயக்குகிறது. அவன் பெண்ணைப் போலக் காதலாக இயங்க மாட்டான்; இயங்கக்கூடாது. காதலில் ஆழ்ந்து அழகுக் கற்பனைகளில் காலம் கழிக்கும் கவிஞர்களும், சிந்தனையில் சிக்கிக் காரண காரிய உலகில் திரியும் அறிஞர்களும், இன உணர்வில் ஆழ்ந்து அதற்காக வாழும் அறவோர், அந்தணர், அருளாளர் களும், பெரும்பாலும் ஆடவர்களாகத் தோற்றத்தால் அமைந்தாலும், உண்மையில் குடும்ப எல்லைக்கு வெளியே செயலாற்றும் பெண்மையின் கூறுகளே யாவர்.
ஆணுக்குத்தான் சமுதாயம். பெண் ஆணின் இன்ப வாழ்க்கைக்குரிய ஓர் உறுப்பு மட்டுமே என்று கூறுவோரும், சமுதாயத்திலே ஆணுக்கும், பெண்ணுக்கும் வேறுபாடு கற்பிக்கக் கூடாதென்போரும், இன்றும், என்றும் உலகில் உண்டு. ஆனால், பண்டைத் தமிழரும் திருவள்ளுவரும் இவ்விரு திறத்தவரையும் கடந்த ஆண்மை, பெண்மைத் தத்துவம் கண்டவர்கள். அவர்கள் இலக்கிய அறிவுக் கண்ணால் கண்டது; அனுபவத்தில் நாம் என்றும் காணக் கூடியதே. காதலிலேயே அழுந்தி வழியும் ஆணை-கவிஞனை, அறிஞனை, அறவோனைக்கூட—எந்தப் பெண்ணும் காதற் களவின் தலைவனாக ஏற்றதில்லை. தாய்கூட இத்தகைய பிள்ளையை, தங்கைகூட இத்தகைய அண்ணனை, தோழியர்கூட இத்தகைய நண்பனை விரும்ப மாட்டார்கள். அவனை ஆணுலகம் பெரிதும் விரும்பலாம்; ஆண், பெண் இருபாலாரும் தந்தையாக, தெய்வமாகப் போற்றலாம். ஆனால், இது பாலினங் கடந்த இனப் பாசமேயல்லது வேறன்று.
‘மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று’
- குறள் 1112
வள்ளுவக் காதலன் தன் காதலியின் கண்கள் மலர்கள் போன்ற கவர்ச்சியுடையன என்று மகிழ்கிறான் முதலில். அடுத்த கணம் உவகை அவனை வருத்துகிறது. ‘மலர் பலர் காணும் பூ ஆயிற்றே! இது நான் மட்டுமே காணும் அழகு நலனுட்கொண்ட கண் அல்லவோ?’ என்று கவல்கின்றான்.
பெண் பற்றிய ஆணின் காதற் கற்பனை போன்றதன்று ஆண்கள் பற்றிய பெண்களின் காதற் கற்பனை. அவள் விரும்புவது ஆற்றலுடைய உள்ளத்தை. அது மட்டுமா? ஆற்றலுடைய அந்த உள்ளத்திலும் அவள் முழு நிறை உரிமையை, முழுநிறை ஆட்சியை நாடுகிறாள். அந்த உள்ளமும் தன்னை மட்டுமன்று, பெண்மையையே ஈர்க்கத் தக்கதாய் இருத்தல் வேண்டும். அதுவும் பெண் தான் வலிந்து சென்று பெற்றதாய் இருந்தால் அவளுக்கு அதில் ஆர்வம் ஏற்படு வதில்லை. தன்னை அவன் வலிய விரும்பி அவனாக நாடி அரு முயற்சியுடன் பெறுதல் வேண்டும். பெண் விரும்பும் காதலன், நுகரும் காதற் பண்புகள் இவை. தன் விருப்பு, வெறுப்புகளை மறைக்கும் நாண்; தன்முனைப்பை அடக்கும் அடக்கம்; தெரிந்தும் தெரியாத வகையாக இருக்கும் மடம்; இயக்கியும் இயக்காதவள் போல் குறிப்பறிவித்து இயக்குவிக்கும் பயிர்ப்பு; ஆகியவற்றைப் பெண்கள் பயன்படுத்துவதன் காரணம் இது. ஏனெனில், தன் செயல்கள், விருப்பங்கள் ஆகியவற்றுக்கும் அவள் ஆணையே பொறுப்புடையவனாக்கி, அவனைத் தன் விருப்பப்படி ஆட்டிப் படைப்பதிலேயே இன்பம் கொள்கிறாள்.
மேலும், ஆடவர்களின் காதலில் இல்லாத போட்டி மதிப்பு, பெண்ணின் காதலில் இடம் பெறுகிறது. பெண்கள் விரும்பும் தகுதியுடைய, ஆனால் பெண் வழியில் எளிதில் இணங்கி விடாத ஆடவனையே பெண்மையில் சிறந்த அணங்கு நல்லாள் நாடுகிறாள். இதுவே பெண்ணின் இனமளாவிய இன ஆர்வம் என்னலாம். ஆடையணிகளில் கூடப் பிறபெண்டிர் விருப்பம் பெண்ணை ஆள்வது காண்கிறோம். இதனால் ஆணைப் போலவே பெண்ணும் தன்னிடமே காதலர் முழுப்பாகத்தை விரும்பினாலும், அப் பாகத்தில் அமிழா ஆண்மையிலேயே முழுக் கவர்ச்சி பெறுகிறாள்.
பெண்ணின் இந்த இரண்டக உள்ளத்தின் இருமை நயங்களை வள்ளுவரைப்போலத் திறம்பட, கவினுற எடுத்துக் காட்டும் ஒரு கவிஞனை உலகில் வேறெங்கும் காணமுடியாது. காதலன் தன்னைத் துறந்ததற்காக அவள் அவனைப் பழிப்பாள். ஆனால், தோழி இதனை ஏற்காது காதலன் பக்கமாய்ப் பேசினாலும் காதலி அவளை நோவாள். தோழி அவனைக் குறை கூறினாலும் காதலி சினம் கொள்வாள். அவன் அன்பின்மையை நினைந்து மனமுருகுவாள். அதே சமயம் அவனுடன் ஊடாமல் கூடும் அவாவுடன் எழும் கைகளை, நெஞ்சை, உடலை நோவாள்.
‘கலந்துணர்த்தும் காதலர்க் கண்டால் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு’
-குறள் 1246
‘நெஞ்சே! உன் போலி நட்பையும், வஞ்சகத்தையும் நான் அறியாதவளல்லள். நீ எப்போதும் அவர் (தலைவர்) பக்கம் நின்று என்னைக் கைவிடுகிறாய் என்பது எனக்குத் தெரியாதா? அவர் இருக்கும்போது, அவரிடமிருந்து மிகுதி இன்பம் பெற எண்ணி, நான் சிறிது ஊட நினைத்தால், நீ அது பொறுக்காமல் அந்த ஊடலை உடைத்துப் பாழாக்கி அவர் மீது போய் விழுவாய். ஆனால், இப்போது அவர் இல்லாத நேரத்தில் ஏதோ அவர்மீது குறைபடுவது போலப் போலிச் சீற்றம் சீறுகிறாய்?’ என்று காதலி தன் நெஞ்சுடன் கொஞ்சிப் பூசலிடுகிறாள்.
மற்றொரு சமயம் தலைவனைக் காண விரும்பும் கண்களை இடித்துரைக்கிறாள், அவள் துன்பம் அச் சமயம் கோபமாகி கோபம் கோபநகையாக மின்னுகிறது.
‘ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது’
- குறள் 1176
‘இந்தக் கண்கள் தாமே அவரை எனக்குக் காட்டி என்னை இந்தக் காதற் றுன்பத்தில் இழுத்துவிட்டது! இப்போது அவையே துயில் கெட்டுத் தொல்லைப்படுகின்றன. படட்டும், நன்றாகப் படட்டும், தாம் செய்த பழிக்குத் தாமே நன்றாகப் பட்டழியட்டும். அதைக் காண எனக்கு மகிழ்ச்சியே’ என்று கண்களைப் பழித்துத் தன் துன்பத்தில் இன்பம் தேடுகிறாள்.
காதலர் திரும்பிய பின்னர்க் கைகள் ஊட மறுக்கின்றன. அது மட்டுமோ? இவற்றை அடக்கி அவள் ஊடினாலும்—ஊடல் நீடித்தாலும் அவள் பெண்மைக் கோட்டையின் செருக்கு நிற்பதில்லை. அதை உடைக்கும் ஒரு படை அவனிடம் உண்டு.
‘பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை’
-குறள் 1258
‘நாம் அவர்க்கே என்று அவர்க்குத் தெரியும். அவர் நமக்குக் கிடைத்தற்கு அரியர் என்று நமக்குந் தெரியும். இந் நிலையில் பல வேடங்கள் போடுதல் மாயம் வல்ல அவர்க்கு எளிது. அவற்றுக்கு நாம் இணங்காவிட்டால், நம் பெண்மையின் அரணை அவர் தன் கை எல்லையிலுள்ள ஒரு படையால் எந்நேரமும் உடைத்து நம்மை ஆட்கொண்டுவிடமுடியும். அதுதான் நம் முன் பணிந்து கெஞ்சிவிடுவது! அதை நாம் எப்படிப் பொறுக்க முடியும்!’ என்று பெண்மையின் ஆற்றலெல்லை கண்டு அதில் மனம் நைவது போல உள்ளூரப் பெண்மை நயத்தில் ஆழ்கிறாள்.
பெண் வழிக்குச் செல்லாத ஆணிடமே பெண் உள்ளம் ஈடுபடுகிறது என்பதையும், பெண்ணுக்குத் தன்மதிப்பு உண்டானாலும் அது காதலனுக்குப் பல வகையில் தளர்ந்து உள்வாயில் திறக்கும் தன்மையுடையதே என்றும், அது போலவே எங்கும் வீரமே பேணிக் காதலியை ஆட்கொண்ட ஆணும் காதற் பெண்ணின் கருத்தினைக் கவிழ்க்கும் முயற்சியில் அந்த ஆண்மையையும், அந்த ’ஒருத்தி’யிடம் ஒப்படைத்துவிடத் தயங்குவதில்லை யென்றும் இவை சித்திரித்துக் காட்டுகின்றன.
பெண்வழிச் செல்லாது சமுதாயத்தின் வழிச் சென்று, தலைமுறை வாழ்வின் கடமையினூன்றிய ஆணும், பெண்மையை ஈர்க்கும் திறமுடைய அவ்வாணைத் தனக்கே உரியவனாக இழுத்துக் காட்டும் ஆற்றலுடையவளாய், அந்த ஓர் ஆணை உயிரெனக் கொண்டு, அவன் வழி நின்று சமுதாயத்தில் அவன் மதிப்பும் தன் உயர்வும் நாட்டும் கற்பு நெறியாண்மை வாய்ந்த பெண்ணும் கூடிய காதற் கற்புக் கூட்டுறவே தமிழர்-வள்ளுவர் கண்ட குடும்ப வாழ்வு. இத்தகைய குடும்ப வாழ்வே, ஆண் மூலம் சமுதாயமும், பெண் மூலம் இனமும் இருவர் மூலம் குடும்ப வாழ்வும் திறம்பட நடத்த வல்ல தமிழர் குடியாட்சியின் மறைதிறவு ஆகும்.
‘புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை’
- குறள் 59
என்று அறத்துப்பாலில் வள்ளுவர் கூறியது இதனாலேயே. ஆடவனுக்குச் சமுதாயத்தில் மதிப்பும் புகழும் தருவது மனைவியின் கற்புத் திறனே. ஆடவன் பெண்வழிச் சேராதவனாக இருத்தல் வேண்டும். பொருட்பாலில் பெண்வழிச் சேறலுக்குப் பின்னரே, ‘வரைவின் மகளிர்’ பற்றிக் கூறப்படுவதன் காரணம் இதுவே.
பொதுமகளிர் என்றவுடன் இந் நாளையத் தமிழர், நம் கால விலை மகளிரையும், விலையிலாச் சிறு மகளிரையும் எண்ணி விடுவதுண்டு. ஆனால், அக் காலப் பொதுமகளிர் இந்நாளையக் குடும்பப் பெண்களைவிடப் பண்பில் உயர்ந்தவர் என்பதைத் தமிழ் இலக்கியங்கள் தீதின்றிக் காட்டுகின்றன. பொதுமகளிருள் பல தரப்பட்ட படிகள் அந் நாளில் இருந்தனவானாலும், அத்தனை வகையினரும் இந் நாளையக் ‘கட்டற்ற காதலுரிமை’ யுடைய மேனாட்டு அல்லது மலையாள நாட்டுப் பெண்களிலிருந்து மாறுபட்டார்களல்லர். மனைமகளிர்க்கும், பொதுமகளிர்க்கும் இடையே தமிழர் கண்ட வேற்றுமை ஒன்றே ஒன்றுதான். அதாவது மனை மகளிர் காதலர் தம்மைத் தேடிப் பெறக் காத்திருப்பர். அவனைத் தமதாகக் கொள்ளக் கற்பு என்ற படையைப் பயன்படுத்துவர். அவர்கள் வாழ்வின் நோக்கம் உடலின்பமன்று—வாழ்வு, வீடு, புகழின்பங்கள். ஆனால், பொது மகளிர் ஆடவரைத் தாம் வலிந்து கைக்கொள்வர். அவர்களைப் பெண்வழிச் செல்லவைப்பர். அவர்கள் வாழ்வின் நோக்கம் உடலின்பத்தின் மேலான எதுவும் இருப்பதில்லை. ஆயினும், சமுதாயத்தில் அவர்கட்கும் ஒரு நோக்கம் உண்டு. பெண்மை உணர்வு - அதாவது கலையுணர்வுடைய ஆடவரைத் தேர்ந்து கண்டு பற்றிக் கொள்ளுதலும், மற்றவரிடையே அவ்வுணர்வு கொளுத்துவதும் பெண்ணினத்தில் ஆண்மைக் கூறாக இயங்கும் அவர்கள் செயல் ஆகும். குடும்ப எல்லைக்குள் நின்று குடும்பம் மூலம் இனப் பண்பு வளர்க்கும் கற்புடைப் பெண்டிர் போலன்றி, அவர்கள் சமுதாய எல்லையளாவிச் சமுதாயப் பண்பு—அதாவது கலை மூலம் அதே இனப் பண்பு பேணுபவர்களாக அவர்கள் விளங்கினர். இன்றளவும் ஜப்பான் நாட்டுச் ‘செய்ஷாப்’ பெண்கள் இப் பண்டைத் தமிழ் மரபில் பெரிதும் கெடாது நிற்பது காண்கிறோம்.
ஆணும், பெண்ணும் கூடிக் குடும்பத்தில் வாழ வேண்டிய நெறியில் வாழ்ந்து, பண்பாளர் அல்லது நன்மனிதராய், சமுதாயத்தில் வாழவேண்டிய முறையில் வாழ்ந்து, துறவோர் அல்லது அறவோராய், இனத்தில் வாழவேண்டிய வகையில் வாழ்ந்து, தெய்வமாகத் திகழ்வர். அத் தெய்வங்கள் இறைவன் தாள்களாக, அடியவர்களாக, இறைவழி காட்டும் உயிருடைய நாழிகைக் கற்களாக இயங்குவர். இதுவே வள்ளுவர் முழுநிறை வாழ்க்கைக் கோட்பாடு.
‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்’
- குறள் 50
** தமிழுக்கு அருந்தொண்டு ஆற்றியவர்**
பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் அவர்களின் மணிவிழாவிலே கலந்து கொள்வதில் நான் மிகுந்த உற்சாகம் அடைவதற்கும், இதனை ஒரு நல்ல வாய்ப்பாகக் கருதுவதற்கும் காரணம் - பல ஆண்டுகளாக அப்பாத்துரையார் அவர்களுடன் நெருங்கிப் பழகி அவரை அறிந்தவன்; அவருடைய தமிழ்த் தொண்டால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நற்பயனை உணர்ந்தவன்; அவர்கள் குடும்பத்தில் நெருங்கிய தொடர்பு கொண்டவன் என்பதுதான்.
ஒருவரை நாம் மதிக்கிற நேரத்தில் மாற்றுக் கருத்துக் கொண்டவர்களும் மதிக்கிறார்கள் என்பதை அறியும்போது ஏற்படுகிற இனிமையை விட வேறு ஓர் இனிமை இருக்க முடியாது.
அப்பாத்துரையாரை நாம் எந்தக் கோணத்திலிருந்து பாராட்டு கிறோமோ அதையல்லாமல், அவருடைய தனித் திறமையை அறிந்த மற்றவர்கள் அவருடைய தொண்டின் மேன்மையை உணர்ந்து, பல்வேறு கோணங்களில் பாராட்டிப் பேசுவதைக் கேட்கும்போது, நாம் மேலும் மகிழ்ச்சி அடைகிறோம்.
நம்முடைய அப்பாத்துரையார் அவர்கள் ஆசிரியராகத் தம் பணியைத் தொடங்கிய காலத்திலிருந்து, அறப்போராட்டங்களில் ஈடுபட்ட கட்டம் வரை அவரது தனித் திறமையை நாம் நன்கு அறிவோம்.
தமிழின் மூலத்தை ஆய்ந்தவர்
அவர், தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர்; தமிழ் இனத்தின் வரலாற்றைத் துருவித் துருவி ஆராய்வதன் மூலம் தமிழ் இனத்துக்கும் மற்ற இனத்துக்கும் இடையே பகைமூட்ட அல்ல — தோழமையை ஏற்படுத்த நற்பணி செய்திருக்கிறார். அவர் அறிந்த அனைத்தையும் எழுதி ஏடாக்கினால், அவை இந்த மண்டபமே நிறையும் அளவுக்கு இருக்கும்.
நம் அப்பாத்துரையார் அவர்கள், எந்த நேரத்தில் பார்த்தாலும், சிந்தனை—படிப்பு—எழுத்து என்று சிறப்பாகக் கழித்திருக்கிறார்.
மற்ற நாடுகளில் அறிவாளர்கள் ஒன்று சொன்னால், அதை ஏற்றுக் கொள்வதற்கு அங்கே ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொள்வார்கள். ஆனால், இந்த நாட்டில் ஒருவரை ‘அறிவாளி’ என்று சொன்னாலே ஆபத்து; “அவன் என்ன பெரிய அறிவாளியா? என்ன அறிவு? ……… பெரிய அறிவு!” என்று கேட்பதன் மூலமும் தங்களிடம் அறிவு இருக்கிறது எனக் காட்டிக் கொள்ளச் சிலர் முனைவார்கள்!
இத்தகைய அறிவுப் பணி புரிவதே பெரிய சிக்கல்தான்; ஆனால், சிக்கலிலேதான் சுவையும் இருக்கும். மேனாடுகளில் எந்த அளவு இப்பணியில் ஈடுபடுகிறார்களோ அந்த அளவுக்கு எழுத்துத் துறையானாலும், பேச்சுத் துறையானாலும், வேறு எந்தத் துறையானாலும் இங்கே உற்சாகமாக ஈடுபடுவது என்பது மிகமிகக் கடினம். இப்படிப்பட்ட கடினமான தொண்டை முப்பது—முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்கி, பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் நிறைவேற்றி வருகிறார். அவர், தம் வாழ்க்கையைக் கரடு முரடான பாதையில் நடத்தி, அதே வேளையில் மிகத் தெளிவான தமிழறிவைத் தமிழகம் ஏற்கும் அளவுக்குப் பணி புரிந்திருக்கிறார்.
சுதிக்குள் பாடும் இசைவாணர்
அப்பாத்துரையாரது வாழ்க்கை, ஒரு பூந்தோட்டமா? இல்லை! வறுமைச் சூழலிலே தம் குடும்பச் சூழலை அமைத்துக் கொண்டு இருப்பவர் அவர். எனினும் பண்பட்ட உள்ளத்தோடு— மாற்றாரின் இழிமொழிகளையும் ஏசல்களையும் தாங்கிக் கொண்டு—தம் பணிகளைச் செய்திருக்கிறார்.
முத்தமிழ்க் காவலர் கி. ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் சொன்னதுபோல், அவர் விரும்பியிருந்தால் ஒரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக ஆகியிருக்க முடியும். ஆனால், அவர் அப்படிச் செய்து கொள்ளவில்லை. எந்தெந்த வகைகளில் எல்லாம் தமிழுக்குத் தொண்டாற்றலாம்—எந்தெந்த வழிகளில் எல்லாம் தமிழ் நாட்டுக்குப் பணியாற்றலாம் என்று எண்ணி, எண்ணி, அந்தந்த நேரங்களில் அருந்தொண்டு ஆற்றியவர் அப்பாத்துரையார்.
ஒவ்வொன்றையும் பற்றி ‘இப்படிச் செய்வது சரியா?’ என்ற கேள்வி அவருடைய எண்ணத்தில் ஊடுருவி நிற்கும், ஆகவே, சிறிது காலம் பள்ளி ஆசிரியராக இருப்பார்; பிறகு அது பிடிக்காமல் பத்திரிகை ஆசிரியர் ஆவார்; அதன் பிறகு, தமிழ்ப் பாதுகாப்புப் பணியில் குதிப்பார். பின்னர், போராட்டத்தினால் பயனில்லை என்று கருதி, ஏடுகளை எழுதி அளிக்க எண்ணுவார். இவ்வாறு அந்தந்த நேரத்தில் தோன்றுவதில் ஈடுபடுவார்.
இசை நிகழ்ச்சியில் பாடுபவர், பல வகையான பண்களை ஏற்ற இறக்கத்தோடு பாடினாலும்—பல்வேறு இசை நுணுக்கங்களைக் கையாண்டாலும் - ஒரு சுதிக்குள்ளே நின்றுதான் பாடுவார்.
அதுபோலவே, அப்பாத்துரையாரும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டாலும், ஒரு சுதிக்குள்ளாகவே - ‘தமிழ் வாழ வேண்டும்; தமிழ் வளர வேண்டும்’ என்ற ஒரு குறிப்பிட்ட கொள்கை வட்டத்தில் நின்று தொண்டாற்றியவர்.
மாறுபட்ட கருத்துடையவர்களும் தமிழ் மொழியின் பாதுகாப்பைப் பொறுத்து இன்று ஒன்றுபடுகிறார்கள்.
நானும் குன்றக்குடி அடிகளாரும் தோற்றம்-பேச்சு-நடவடிக்கைகள்-இருக்கும் இடம்-ஆகியவற்றில் மாறுபட்ட வர்கள்; என்றாலும், எங்கள் இருவரையும் தமிழ் ஒன்றுபடுத்தி இருக்கிறது. இதுதான் நாம் கையாள வேண்டிய சுதி! இதற்குள் நாம் எல்லாவற்றையும் காட்டலாம்; இந்த நிலை ஏற்பட, தமிழ்நாட்டில் முப்பது ஆண்டுகளுக்குமேல் பாடுபட வேண்டியிருந்தது!
இந்தச் சுதியை நமக்கு அமைத்துத் தந்தவர்களில் அப்பாத் துரையாரும் ஒருவர். அப்படிப்பட்ட முறையில் அமைவதுதான் அடிப்படையான தொண்டு.
கடன்பட்டுக் குமுறும் புத்தக ஆசிரியர்கள்
மேலை நாடுகளில் ஒரே ஒரு புத்தகம் எழுதினாலே, ஒருவன் தம் வாழ்நாளை வசதியாகக் கழித்துவிட முடியும் -அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு! அப்படித்தான் ஓர் எழுத்தாளர் தாம் எழுதிய புத்தகத்தின் வருவாயைச் செலவழிப்பதற்காக-ஓராண்டுக் காலம் ஓய்வில் இருந்தே செலவழிப்பதற்காக-தென்னமெரிக்காவுக்குச் சென்று அங்கே வாழ்ந்தாராம்!
இங்கோ.. ஓர் ஆசிரியர், ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டார் என்றாலே, குடியிருந்த வீட்டை மாற்றுவதைப் பார்க்கிறோம். அந்தப் புத்தகத்தை அச்சிடுவதற்குத் தாம் பட்ட கடனை அடைக்க முடியாமல், கடன்காரர்களுக்கு அஞ்சி, தென்சென்னையில் வீடு இருந்தால் வட சென்னைக்கும், வட சென்னையிவ் வீடு இருந்தால் தென் சென்னைக்கும், அவர் குடிபோவார்! அப்படிப்பட்ட நிலையே இங்கு இருக்கிறது!
இங்குப் புத்தகம் எழுதுவதும் அதன் மூலம் வருவாய் தேடுவதும் அவ்வளவு கடினம்!
புத்தகம் வாங்கும் பழக்கம் எல்லோருக்கும் ஏற்பட வேண்டும்.
அப்பாத்துரையாரின் நூல்களை - ஏடுகளை - வீடுதோறும் வாங்கி வைக்க வேண்டும்.
அப்பாத்துரையார் எழுதிய நூல்களில் ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ என்னும் நூல் என்னை மிகவும் கவர்ந்த ஒன்றாகும். அந்த நூலின் ஒரே ஓர் ஏட்டை எழுத, அவர் எத்தனை ஆயிரம் ஏடுகளைத் தேடிப் பார்த்திருக்க வேண்டும்- எத்தனை ஆயிரம் கவிதைகளை, இலக்கியங்களைத் திரட்டிப் பார்த்திருக்க வேண்டும்-என்பதை எண்ணி எண்ணி வியந்தேன்.
புத்தகம் எழுதுவோரை மற்ற நாடுகளில் எல்லாம் வித்தகர்களாகப் போற்றுகிறார்கள். இந்த நாட்டிலோ, ‘புத்தகம் எழுதி இருந்த பணத்தைப் பாழாக்கிக் கொண்டவர்கள்’ என்கிற பழிச் சொல்தான் கிடைக்கும் எழுத்தாளர்களுக்கு!
இந்த நிலையிலும் நம்முடைய அப்பாத்துரையார் அவர்கள், தமிழ் மொழிக்கு ஏற்றம் தரும் பல அரிய நூல்களை எழுதியிருக்கிறார்!
மறதி ஆகும் மரபு
நம்மால் மதிக்கத் தக்கவர்களின் வாழ்க்கை வரலாறு முழு அளவுக்குத் தமிழகத்தில் இல்லை.
‘தனித்தமிழ் இயக்கம்’ கண்ட மறைமலையடிகள், ‘தமிழ்த்தென்றல்’-திரு.வி.க., நீதிக்கட்சித் தலைவர் சர்.பி. தியாகராயர் போன்றவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளைக் குறிப்பெடுத்துத் தொகுத்து, நூல்கள் ஆக்கித் தருவதில் இன்றைய புலவர் பெருமக்கள் ஈடுபட வேண்டும்.
தமிழ்ப் பெரும்புலவர்களின்-வாழ்க்கை வரலாறுகள் நம்மிடத்திலே இல்லை. அப்படிப்பட்ட பெரியார்களின் வரலாற்றை மறந்துவிட்டால், நம்முடைய ‘மரபு’ பிறகு நமக்குக் கிடைக்காது.
‘மரபு’ என்பதே இப்போது ‘மறதி’ என்று ஆகிவிட்டது.
பண்டைத் தமிழ் மன்னர்களைப் பற்றிச் சரியாக எந்த நூலிலும் குறிப்பிடப்படவில்லை.
நம்முடைய பள்ளிச் சிறுவர்களின் பாடநூலைப் பார்த்தால்-‘இராசராச சோழனுக்கு இராசேந்திர சோழன் மகன் என்று சொல்வாரும் உண்டு தம்பி என்பாரும் உண்டு’ என்று இருக்கும்! ஒரு புத்தகத்தில் கரிகாலனைப் பற்றிய செய்தி வருகிற இடத்தில் ஒரு நட்சத்திரக் குறி இட்டிருப்பார்கள். அதற்கு விளக்கம் கடைசிப் பக்கத்தில் இருக்கும்: “கரிகால் வளவன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டான் என்பது உண்மை என்பாரும் உண்டு; இல்லை என்பாரும் உண்டு” என்று இப்படித்தான் அந்த விளக்கம் எழுதப்பட் டிருக்கும்!
உண்மை வரலாறு உருவாகட்டும்
இப்படி அய்யப்பாடுகளுக்கு இடம் கொடுக்கும் போக்கினை நீக்கி, உண்மையான தமிழக வரலாற்றை உருவாக்கும் பணியினை வரலாற்று ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.
கல்வெட்டுகளில் காணப்படுவதையும், இலக்கிய ஏடுகளில் உள்ளவற்றையும், இன்ன பிற சான்றுகளையும் திரட்டி, தமிழக வரலாற்றைத் தொகுத்துக் கொடுக்கும் பணியைத் தமிழ் மக்கள்-தமிழ்ச் சான்றோர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இன்னும் சில திங்கள்களில் (1968-சனவரித் திங்கள் முதல் வாரத்தில்) இரண்டாம் உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கருத்தரங்கு மாநாடு சென்னையில் நடைபெறவிருக்கிறது. அதற்குள் இந்தப் பணியைச் செய்து முடித்தால், வெளிநாடுகளிலிருந்து வருபவர்கட்கு, “இதுதான் எங்கள் நாட்டு வரலாறு” என்று எடுத்துக்காட்ட முடியும்.
இத்தகைய பணியைச் செய்து முடிக்கக்கூடிய குழு ஒன்று அமைக்கப்பட்டால், அதற்குத் தலைமை ஏற்றுப் பணியாற்றுவதற்கு முழுத் திறமை பெற்றவர்—பன்மொழிப் புலவர் அப்பாத்துரையாரே ஆவார் என்பதை இங்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
(சென்னையில் 20.9.1967-இல் நடைபெற்ற பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் அவர்களின் மணி விழாவுக்குத் தலைமை தாங்கி முதல்வர்-பேரறிஞர் அண்ணா ஆற்றிய பாராட்டுரை.
‘நம் நாடு’ நாளிதழ் 22-9-1967)
** பன்மொழி கற்ற தென்மொழிப் புலவர்**
தமிழகத்தில் இரண்டு அகரதுரைகள் உள்ளனர்— ஒருவர் அண்ணாத்துரை— மற்றவர் அப்பாத்துரை; அண்ணாத்துரை அரசியற் புலவர்; அப்பாத்துரை மொழியியற் புலவர்.
இன்று நமது தமிழகம் தமிழராட்சியில் வளம்பெறுகிறது.
"தமிழ் நாட்டுக் கல்விமுறை தமிழர்கையில்
தாய்நாட்டுத் தொழிலாக்கந் தமிழர்கையில்
தமிழர் வாணிகமெல்லாம் தமிழர்கையில்
தமிழ்த்துறையில் இயங்குவதும் தமிழர்கப்பல்
தமிழ்ச் சமுதாயத் தொண்டு தமிழர் வாழ்க்கை
தமிழகத்தின் அரசாட்சி தமிழர் ஆட்சி
தமிழுள்ளம் சாதிமத பேதம் இன்றித்
தாயுள்ளம் ஆகிடினே தழைப்பதாமே’’
என்று நான் 1919ஆம் ஆண்டு நடந்த திருச்சி தமிழர் மாநாட்டிற் பாடினேன்; இன்று என் எண்ணம் நிறைவேறித் தமிழகத்தில் தமிழ்மணம் கமழ்கிறது. நான் ஆசிரியராயிருந்து நடத்திய மலர்களில் கதிரெழுச்சியையே இலச்சினையாகக் குறித்தேன். கதிரெழுச்சி இன்று கன்னித் தமிழுலகை ஆளுவது பற்றி மகிழ்கிறேன்.
இந்த மகிழ்ச்சிக்கிடையே அப்பாத்துரையின் மணிவிழா கிண்கிணி நடைபோட்டு வருகிறது. அப்பாத்துரை யார்? அவருக்கு மணிவிழா ஏன்? அதற்கு மலர் ஏன்? என்று சிலர் கேட்கலாம். அவர்களுக்கு இதுவே விடையாகும்:
அப்பாத்துரை பன்மொழி கற்ற தென்மொழிப் புலவர். தனித்தமிழ் வித்தகர்; நுண்மாண் நுழைபுலன் மிக்கார். தமிழர் பண்பாட்டின் எடுத்துக்காட்டாக விளங்கும் எழுத்தாளர். இலக்கணப் பண்பும் இலக்கிய நயமும், ஈர்க்கும் சுவையும், இயக்கும் உணர்வும், கற்பனைக் கனவும், கவின்பெறு நடையும் உடைய உயர்ந்த நூல்களை உலகிற்கு அளித்தவர். அவர் நூல்களை அவர் எனக்கு அனுப்புவதில்லை; எனினும், அப்பாத்துரை நூல்கள் என்றால் நான் வாங்கிப் படிப்பது வழக்கம். சங்ககாலப் புலவர் கருத்துகளின் சிங்க நாதமே அப்பாத்துரை. அவர் நாடகம் எழுதியுள்ளார். ஆராய்ச்சி நூல்கள் பல யாத்துள்ளார். தமிழுக்கு மிகவும் தேவையான விஞ்ஞானத் துறையிலும் புகுந்துள்ளார். அவரது எயின்ஸ்டின் வரலாற்றைப் படித்து மகிழ்ந்தேன். அதில் மிடுக்கான கலைச் சொற்களுக்குத் தனித் தமிழ்ச் சொற்கள் தருகிறார்.
பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், தமிழிலேயே தற்காலக் கலையியலைப் புகட்ட வேண்டும் என்று ‘செங்கோல்’ ம.பொ.சி.யும் பேசுகிறார். கல்வியமைச்சர் நெடுஞ்செழியனும் பேசுகிறார்; நான் அந்தக் காலம் விஞ்ஞான ஆசிரியராயிருந்த போதே தமிழில் விஞ்ஞானத்தை அளந்து தரமுடியும் என்று ஆசிரியர் குழுவில் விளக்கி நடத்தியும் காட்டினேன்; எனது நண்பர் பா.வே. மாணிக்க நாயக்கர் என்னைத் தூண்டி நூல்கள் எழுதப்பணித்தார். ஞாயிறு தோறும் பொன்மலைக்குச் சென்று அவரைக் கண்டு எனது விஞ்ஞான நூல்களைப் படித்ததுண்டு. நல்ல தமிழில் தற்கால அணுவியலையும் எழுதலாம் என்ற துணிவு எனக்குண்டு; அப்பாத்துரைக்கும் உண்டு. எங்களைத் தமிழகஅரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
Molecular Dimensions = அணு அளவை, Dynamics of Bodies in Motion=மின் இயக்கத்திறன், இவ்வாறு கலைச் சொற்களைத் தமிழாக்கலாம்; சில சிறப்புச் சொற்களை (ரேடியம், எலக்ட்ரான், புளுடோனியம் போன்ற சொற்களை) அப்படியே வழங்கலாம். தமிழில் விஞ்ஞானத்தைப் பயிற்றலாம். ஜப்பானியர், சீனர், ரஷ்யர், ஆங்கிலேயர் - அனைவரும் தமது தாய்மொழியிலேயே கலைவளம் பெருக்கி முன்னேறுகின்றனர். அவர்களைவிடத் தமிழர் குறைவா என்ன?
- கவியோகி சுத்தானந்த பாரதியார்
** பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் (24.7.1907-26-5-1989)**
‘அறிவுச் சுரங்கம் அப்பாத்துரையார்’ என்று பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையாரை ’முகம் மாமணி குறிப்பிடுவது எவ்வளவு பொருத்தமானது என்பது அவருடன் பழகியவர் களுக்கு, அவருடைய பேச்சுக்களைக் கேட்டவர்களுக்கு, அவருடைய புத்தகங்களைப் படித்தவர்களுக்கு நன்றாகத் தெறியும்.
அப்பாத்துரையார் பேசும்பொழுது, உலக வரலாறுகள் அணிவகுத்து நடைபோடும் அரிய செய்திகள், ஆய்வுச் சிந்தனைகள், ஒப்பீடுகள் நிரம்பிய அவருடைய பேச்சைக் கேட்டவர்கள் மூளை கனத்துவிடும். ஒரு சிறு மூளைக்குள் இவ்வளவு செய்திகளை எப்படி அடைத்து வைத்திருக்கிறார் என்று வியக்க வைக்கும். அவரைத் தமிழகம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்னும் ஏக்கம் அறிஞர் களிடையே இருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி என்னும் சிற்றூரில் திருவாளர் காசிநாதப்பிள்ளை - திருவாட்டி முத்து இலக்குமி அம்மையாருக்கு மூத்த மகனாக 1907 ஆம் ஆண்டு, ஆனி மாதம் ஏழாம் நாள் (சூன் 24) பிறந்தவர் அப்பாத்துரையார். குடும்ப மரபையொட்டிப் பாட்டனார் பெயரான நல்லசிவன் என்னும் பெயரே இவருக்குச் சூட்டப்பட்டது. ஆயினும் பெரியோர்களால் செல்லப் பெயராக அழைக்கப்பட்ட ‘அப்பாத்துரை’ என்னும் பெயரே இவருக்கு இயற்பெயர் போல் அமைந்துவிட்டது. இவருடன் பிறந்த இளையவர்கள் செல்லம்மாள், சுப்பிரமணி, குட்டியம்மாள், கணபதி ஆகியோர். இரு தம்பிகள். இரு தங்கைகள்,
நல்லசிவன், காசிநாதன் என மாறி மாறி வரும் குடும்ப மரபில் அப்பாத்துரையாரின் பாட்டனாரின் பாட்டனார், அவர் பாட்டனாரின் பாட்டனார் ஆகிய ஏழாம் தலைமுறையினரான நல்லசிவன் என்பவர், கல்வி கற்ற, வேலையற்ற இளைஞராய்ச் சாத்தான்குளம் என்னும் ஊரிலிருந்து ஆரல்வாய்மொழி என்னும் ஊருக்கு வந்து, அக்கால (மதுரை நாயக்கர் காலத்தில்) அரசியல் பெரும் பணியில் இருந்த ஊரின் பெருஞ்செல்வரான தம்பிரான் தோழப்பிள்ளையிடம் கணக்காயராக அமர்ந்தார்.
ஆண் மரபு இல்லாத தம்பிரானுக்கு நல்லசிவன் மருமகன் ஆனார். சதுப்பு நிலமாயிருந்த புறம்போக்குப் பகுதி ஒன்றைத் திருத்திப் புதிய உழவு முறையில் பெருஞ்செல்வம் ஈட்டிய அவரே அப்பாத்துரையார் குடும்ப மரபின் முதல்வர். அவருக்கு நாற்பது மொழிகள் தெரியுமாம்.
குடும்ப மரபினர் வழியில் தன் பிள்ளையும் எல்லா மொழிகளும் பயில வேண்டும் என்னும் வேட்கையில் காசிநாதப்பிள்ளை அப்பாத்துரையாரிடம், ‘குறைந்தது ஏழு மொழிகளில் நீ எம்.ஏ. பட்டம் பெற வேண்டும். ஆங்கிலம் முதலில் தொடங்கி, பதினைந்தாம் வயதில் எம்.ஏ., முற்றுப் பெற வேண்டும். இருபத்து மூன்று வயதிற்குள் இயலும் மட்டும் மற்றவை படிக்க வேண்டும்’ என்று கூறினார். அவருடைய எண்ணத்தைத் தம் வாழ்நாளில் நிறைவேற்றி முடித்தவர் அப்பாத்துரையார்.
பழைய - புதிய மொழிகள் என ஆப்பிரிக்க மொழிகள் உட்பட நாற்பது மொழிகள் (ஏழாம் தலைமுறை பாட்டனார் போல்) அப்பாத்துரையாருக்குத் தெரியும். எழுத, பேச, படிக்க என அய்ந்து மொழிகள் தெரியும். அவை: தமிழ், ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம், மலையாளம் ஆகியன. இனி அப்பாத்துரை யாரின் வாய்மொழி யாகவே அவரது வரலாற்றுச் சுருக்கத்தைக் கேட்போம்.
’ஆரல்வாய்மொழி ஊரில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்து வந்தபோது, புதிதாக அரசினர் பள்ளி தொடங்கப் பட்டது. அப்போது, கன்னியாகுமரி மாவட்டம் திருவாங்கூர் தனி அரசில் சேர்ந்திருந்த நிலையில் அப்புதிய பள்ளியில் தமிழுக்கு இடம் இல்லாதிருந்தது.
தமிழ்க்கல்வி நாடி, குலசேகரப்பட்டினத்திலிருந்த என் பெரியன்னை வீட்டில் தங்கிப் படித்தேன். பின், குடும்பத்தினர் அனைவரும் எனக்காக நாகர்கோவிலில் குடியேறி, வாடகை வீட்டில் இருந்து வந்தனர். இந்நிலையில் என் பெற்றோர் என்னை நான்காம் வகுப்பிலிருந்து கல்லூரி முதலிரண்டு ஆண்டு படிப்பு வரை பயிற்றுவித்தனர்.
1927இல் எனது பி.ஏ., ஆனர்ஸ் (ஆங்கில இலக்கியம்) படிப்புக்காகத் திருவனந்தபுரம் சென்றேன். நண்பர்கள் வீடுகளில் தங்கி, 1930இல் அத்தேர்வு முடித்து பணி நாடி சென்னைக்கு வந்தேன்.
சென்னையில் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்தேன். கூட்டுறவுத் துறையில் ஆறு மாதங்களும், ‘திராவிடன்’, ஜஸ்டிஸ்’ பத்திரிகைகளில் ஒவ்வொன்றிலும் ஆறு மாதங்களும், பச்சையப்பன் கல்லூரியில் இரண்டு மாதங்களும் பணியாற்றினேன். அதன்பின், ‘பாரத தேவி’, ‘சினிமா உலகம்’, ‘லோகோபகாரி’, ‘தாருல் இஸ்லாம்’ ஆகிய பத்திரிகைகளின் விற்பனைக்களம் அமைத்ததோடு, அவற்றில் பாடல், கட்டுரைகள் எழுதி வந்தேன்.
இச்சமயம், புகழ்வாய்ந்த சேரன்மாதேவி ‘காந்தி ஆசிரமம்’ என்ற குருகுலம் அரசியல் புயல்களால் அலைப்புற்று, கடைசியில் காரைக்குடி முத்துப் பட்டிணத்தில் சா.சு. சுப்பிரமணியம் செட்டியார் குருகுலம் என்ற பெயரால் நடைபெற்று வந்தது. இதில் நான் தோழர் ஜீவானந்தத்திற்கு அடுத்த தலைமை ஆசிரியராக ஓராண்டும், ‘குமரன்’ பத்திரிகைகளில் சில மாதங்களும் பணியாற்றினேன்.
நாகர்கோவில் திரும்பி மீண்டும் சில மாதங்கள் கழித்த பின், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நாசரேத், சாத்தான்குளம் ஆகிய ஊர்களில் காந்தியடிகளின் ஆக்கத் திட்டங்களில் ஒன்றாகிய இந்தி மொழி பரப்புதலை நன்கு நடத்தி வந்தேன். அதன் முத்தாய்ப்பாக ராஜாஜி முதல் அமைச்சரவையின் ஆட்சியின் போது, திருநெல்வேலி, எம்.டி.டி. இந்துக் கல்லூரி பள்ளியில் 1937 முதல் 1939 வரை இந்தி ஆசிரியராகப் பணியாற்றினேன்.
இங்கிருக்கும்போதுதான் இந்தி விசாரத் தேர்வையும் முடித்துக் கொண்டேன். நாச்சியாரை நான் திருமணம் செய்து, இரண்டாண்டு வாழ்க்கைக்குப் பின் அவளையும், என் தந்தையும் ஒருங்கே இழந்தேன்.
அரசியல் சூழல்களால் இந்தி கட்டாயக் கல்வி நிறுத்தப்பட்டதனாலும், என் சொந்த வாழ்க்கையில் நேரில் துயரங்களாலும் நான் திருநெல்வேலியை விட்டு வெளியேறினேன்.
இதே ஆண்டில் ஆங்கில எம்.ஏ. பட்டம் பெற்றதுடன், தமிழ் எம்.ஏ.வையும் தனிமுறையில் திருவனந்தபுரத்தில் எழுதித் தேறினேன். அத்துடன் ஆசிரியப் பயிற்சிக்காக ஓராண்டு சென்னை சைதாப்பேட்டை ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் படித்தேன்.
இதே ஆண்டில்தான் காந்தியடிகளை, இந்திப் பிரச்சார சபையில் கண்டு பழகவும், மறைமலையடிகளுடன் தொடர்பு கொள்ளவும், சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகத்தில் என் தமிழ் நூலாசிரியப் பணி தொடங்கவும் வழி ஏற்பட்டது.
1941இல் பழைய காந்தி ஆசிரமத்தின் புது விரிவாக செட்டிநாடு அமராவதிப் புதூரில் அமைக்கப்பட்டிருந்த சா.சு. சுப்பிரமணியம் செட்டியார் குருகுலப் பள்ளியில் ஆறு மாதங்களுக்கு மேல் தலைமை யாசிரியராகப் பணியாற்றினேன். கவிஞர் கண்ணதாசன் இப்பள்ளியில் என் மாணவராய்ப் பயிலும்போது தான் தன் இலக்கிய வாழ்வைத் தொடங்கினேன்.
அப்பாத்துரையாரின் முதல் மனைவி நாச்சியார் அம்மையார் மறைவுக்குப் பின், செட்டிநாடு அமராவதிப்புதூரில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த போது அலர்மேலு அம்மையாரின் தொடர்பு கிடைத்தது. காதலாக மாறியது. திருச்சி திராவிடர் கழகத் தலைவராக இருந்த வழக்கறிஞர் தொ.பொ. வேதாசலம் தலைமையில், திருக்குறளார் வீ. முனுசாமி முன்னிலையில் அப்பாத்துரையாரின் திருமணம் திருச்சியில் நடைபெற்றது.
இதனையடுத்து, செட்டிநாடு கோனாப்பட்டில் சரசுவதி உயர்நிலைப் பள்ளியில் இரண்டாண்டுக்காலம் பணியாற்றினார். இந்த ஊருக்கு அறிஞர் அண்ணாவும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் வந்திருந்தபோது அவர்களுடன் இவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. பின்னர், பாவேந்தர் உதவியோடு 1943 இல் துணைவியார் அலர்மேலுவுடன் சென்னைக்குக் குடிவந்தார். பாவேந்தரின் உதவியால் ஆங்கில நாளேடான ‘லிபரேட்டரில்’ உதவியாசிரியராகப் பத்து மாதங்கள் பணியாற்றினார். பின்னர், ‘விடுதலை’ நாளேட்டில் ஆறு மாதங்களும், முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளியல் இரண்டு ஆண்டுகளும் பணியாற்றினார். இக்காலங்களில் தான் பெரியாரின் தொடர்பும், திராவிடர் கழகக் தொடர்பும் இவருக்கும் அலர்மேலு அம்மையாருக்கும் ஏற்பட்டது.
பின்னர், 1947 முதல் 1949 முடிய நடுவண் அரசின் செய்தித் துறையில் பணியாற்றினார். இச்சமயம் சைதாப்பேட்டையில் ஓராண்டுக்காலம் தங்கியிருந்த போது, ‘இந்தியாவில் மொழிச் சிக்கல்’ என்னும் ஆங்கில நூலை எழுதினார். இந்நூலுக்கு மறைமலை அடிகள் நாற்பது பக்கத்தில் முன்னுரை வழங்கி யுள்ளார் என்பது தனிச்சிறப்பு. இந்த நூலே, அப்பாத்துரையாரின் அரசுப் பணிக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டது.
1949 முதல் 1959 வரை பதினோரு ஆண்டுகள் வேலையில்லாமல் இருந்தார். ஆயினும், இந்த ஓய்வே நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுத வாய்ப்பாக இருந்தது. வருவாய்க்கும் உதவியது.
ஆங்கில மொழிக்கு ஜான்சன் தந்த ஆங்கில அகராதியைப் போல் தமிழுக்கு ஒரு அகராதி எழுத வேண்டும் என்ற விரைவு அப்பாத்துரையாரின் நெஞ்சில் ஊடாடியதால், முதலில் ஒரு சிறு அகராதியைத் தொகுத்தார். பிறகு அது விரிவு செய்யப்பட்டது.
தற்கால வளர்ச்சிக்கேற்ப பெரியதொரு அகராதியைத் தொகுக்க வேண்டுமென்று எண்ணிச் சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகக் காவலர் சுப்பையாபிள்ளை சென்னைப் பல்கலைக்கழகத்தின் அனுமதியையும், பண உதவியையும் நாடியபோது, பல்கலைக்கழகமே அம்முயற்சியில் ஈடுபடப் போவதாகக் கூறியது. அப்பணிக்கு அப்பாத்துரையாரை சென்னைப் பல்கலைக் கழகம் பயன்படுத்திக் கொண்டது. 1959லிருந்து 1965 வரை சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலத் தமிழ் அகராதித் துறையில் டாக்டர் அ. சிதம்பரம் செட்டியாருடன் இணையாசிரியராகப் பணியாற்றி ‘ஆங்கிலத் தமிழ் அகராதியை’ உருவாக்கினார். 1971 ஆம் ஆண்டு, தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் ஈடுபட்டு அதன் தலைவராகவும் தொண்டாற்றி யுள்ளார்.
இயக்கத் தொடர்பு
அப்பாத்துரையாரின் முன்னோர் ‘பிரம்மஞான சபை’ என்னும் தேசிய விடுதலை இயக்கத்துடன் தொடர்புடையவர்கள். அப்பாத்துரையாருக்கும் அவ்வியக்கத்தில் ஈடுபாடு இருந்தது. டாக்டர் அன்னிபெசன்ட், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. லாலா லஜபதிராய், லோகமானிய பாலகங்காதர திலகர் ஆகியோரின் தேசிய இயக்கத்தின் தீவிர செயல்பாடுகளில் பற்று வைத்தார். அக்காலம் காந்தியார் இந்தியாவிற்கு வராத காலம்.
தேசிய விடுதலை இயக்கத்தைப் பரப்பும் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டவர் அப்பாத்துரையார். தெருவில் தேசிய பஜனைக் குழுக்களுடன் பாடிச் சென்று இயக்கம் வளர்த்தவர். தன் சேமிப்புப் பணத்தில் மூடி போட்ட காலணா புட்டிகளை நிறைய வாங்கி, அதற்குள் துண்டுக் காகிதங்களில் தேசிய முழக்கங்களை எழுதிப் போட்டு, அப்புட்டிகளை குளம், அருவிகள், கடற்கரைகள் எங்கும் மிதக்கவிட்டவர். அதன் மூலம் தேசியச் சிந்தனைகள் பரப்பியவர். ஓர் ஆங்கிலப் புத்தகத்தில் வெளியான சிப்பாய்க் கலகம் பற்றிய ஆங்கிலப் பாடலை ஆங்கிலத்திலும், தமிழிலுமாக நிறைய படிகள் எழுதி, ஆசிரியர் சட்டைப் பைகளிலும் மாணவ நண்பர்களின் புத்தகங்களிலும் வைத்து நாட்டு விடுதலை எழுச்சியைப் பரப்பியவர்.
இத்தகைய தேசியவாதி, திராவிட இயக்கவாதியாக மாறியதற்கு எண்ணற்ற காரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்று, திருவனந்தபுரம் பிரம்மஞான சபையின் சமபந்தி போஜனம். ஆதி திராவிடர் பரிமாற, பார்ப்பனரும் வேளாளரும் உட்பட அனைத்து வகுப்பினரும் கலந்து உண்ண வேண்டுமென்று வேளாளராகிய பி.டி.சுப்பிரமணியப் பிள்ளையும், கல்யாணராம ஐயரும் ஏற்பாடு செய்திருந்தனர். பந்தி வேளையில் எல்லாப் பார்ப்பனரும், வேளாளரும் எழுந்து சென்றுவிட்டனர். அதனால் இவ்விருவருக்கும் பெருத்த அவமானமாயிற்று. அதுமட்டுமன்றி, இவ்விருவரையும் தத்தம் அமைப்புகள் மூலம் சாதி நீக்கம் செய்துவிட்டனர். இந்நிகழ்ச்சி அப்பாத்துரையாரை மிகவும் பாதித்தது.
தேசிய இயக்கத்தில் அப்பாத்துரையார் இருந்தபோதும் இளம் வயதிலேயே முற்போக்குச் சிந்தனையாளராக இருந்தவர். தேசியத் தலைவர்களான காந்தியடிகள், திலகர், லாலா லஜபதிராய் போன்றோரின் படங்களை வைத்து பூசை செய்வது அப்பாத்துரையாரின் வழக்கம். இச்செயலை தந்தையாரைத் தவிர மற்ற அனைவரும் கண்டித்தனர். அதற்கு அவர், ‘பெண்கள் சேலையை ஒளித்து வைத்த காமுகன், யானையை ஏவிப் பெண்ணை ஏமாற்றி வசப்படுத்திய காம வேடன் ஆகியோரை நீங்கள் கடவுளாக வணங்குகிறீர்கள். அவர்களைவிட இந்தத் தலைவர்கள் எவ்வளவோ மேலானவர்கள்’ என்று எதிர்மொழி தொடுத்துள்ளார். மேலும், எட்டாம் வகுப்பில் சேரும்பொழுது, பார்ப்பனத் தலைமையாசிரியர் நடந்து கொண்ட முறை ஆகியவை இவருடைய உள்ளத்தில் ஆழப் பதிந்துவிட்டது. இவையெல்லாம் இவரை திராவிட இயக்கத்தின் பால் பற்றுகொள்ள வைத்துள்ளது.
பெரியார் தொடங்கிய திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளராகும்படி, சென்னைக்குப் பாவேந்தரால் அழைத்து வரப்பட்ட அப்பாத்துரையார், ‘விடுதலை’ இதழில் குத்தூசி குருசாமி அவர்களுடன் துணையாசிரியராகப் பணியாற்றினார். தென் சென்னையில் திராவிட இயக்கத்தை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கிளைக் கழகங்கள் அமைப்பதிலும், துணை மன்றங்கள் அமைப்பதிலும் முழு மூச்சாக ஈடுபட்டு திராவிட இயக்கத்தை வளர்த்தார்.
சென்னையில் பெரியார் வீடு வாங்கத் தயங்கியபோது, பெரியாரின் தயக்கத்தைப் போக்கி மீர்சாகிப் பேட்டையில் வீடு வாங்கத் துணை நின்றவர் அப்பாத்துரையார். இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின்போது முன்னணிப் பேச்சாளர்களில் ஒருவராக விளங்கியவர். இந்தி ஆசிரியராக இருந்த இவரை இந்தி எதிர்ப்புக் களத்தில் முன் நிறுத்தப்பட்டதற்குக் காரணம். அவரைக் கொண்டே இந்தியின் தன்மையைச் சொல்ல வைப்பதற்கே. பெரியார் நடத்திய முதல் திருக்குறள் மாநாட்டில் இவருடைய பங்களிப்பும் உண்டு.
தம் பேச்சாலும், எழுத்தாலும் திராவிட இயக்கத்திற்குத் தொண்டாற்றிய அப்பாத்துரையாரை இயக்க மேடைகள் நிறைவாகப் பயன்படுத்திக் கொண்டன. இலக்கிய மேடைகளும் அலங்கரித்துக் கொண்டன. தமிழ்மொழி, தமிழ் இன முன்னேற்றத்தின் போராளியாகத் திகழ்ந்த அப்பாத்துரையார் தம் இறுதிக் காலங்களில் ‘தலைநகர்த் தமிழ்ச் சங்கம்’ நடத்திய மொழிப் போராட்டங்களிலும் பங்கேற்றுள்ளார்.
அப்பாத்துரையார் கவிதை எழுதுவதிலும் ஆற்றல் பெற்றவர். 1935க்கு முன் அவருடைய படைப்புகள் அனைத்தும் கவிதைகளாகவே இருந்தன. இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டக் காலங்களிலும் இவருடைய கவிதைகள் ‘திராவிட நாடு’ இதழில் வெளியாயின. இவருடைய பெயரில் வந்த முதல் புத்தகம், சிறை சீர்திருத்தம் செய்த திருமதி ஃபிரை ஆகியோரின் வரலாறுகளைத் தமிழாக்கம் செய்ததுதான்.
தமிழிலும் ஆங்கிலத்திலுமாக சுமார் 170க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’, ‘கொங்குத் தமிழக வரலாறு’, ‘ஆங்கிலத் தமிழ்முத்து அகராததி’, ‘திருக்குறள் மணிவிளக்கஉரை’ ‘காரல் மார்க்சின் தாஸ் காபிடல் (மூலதனம்)’ மொழிப் பெயர்ப்பு ஆகியவை அறிஞர்கள் மனத்தைவிட்டு அகலா நூல்கள். திருக்குறள் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களுக்கு 2132 பக்கங்களில் உரை எழுதியுள்ளார். கால்டுவெல்லின் ஒப்பிலக்கணத்தைத் தமிழில் மொழி பெயர்த்துத் தந்தவர்.
அப்பாத்துரையார் 82 ஆண்டுகள் வாழ்ந்து பல அறிஞர்களோடு பழகி கணக்கற்ற அறிவுச் செல்வங்களை வழங்கி, 26.9.89 இல் புகழுடம்பு எய்தினார். பள்ளி ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி, எழுத்துத் துறையில் கவிஞராக ஆய்வறிஞராக, எழுத்தாளராக, மொழி பெயர்ப்பாளராக ஒப்பிலக்கியவாதியாக பத்திரிகையாளராக விழுதுகள் பரப்பி ஆலமரமாகத் திகழ்கிறார். இந்த ஆலமரத்தின் விழுதுகளைப் பிடித்து விளையாடியவர்களெல்லாம் பெரிய மனிதர்களாக உயர்ந்துள்ளார்கள். ஒரு பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த அப்பாத்துரையார் தமிழர்கள் நெஞ்சில் என்றும் நிலைப்பார்.
-முனைவர் இளமாறன்
யாதும் ஊரே மாத இதழ், வைகாசி 2037,
சூன் 2006, பக். 18-22
** ஊசியின் காதுக்குள் தாம்புக் கயிறு…?**
வினா: இக்கால படைப்பாளிகளுக்கு நீங்கள் கூறும் அறிவுரை?
விடை: நிறைய படிக்க வேண்டும். ‘இலக்கியம்’ என்றால் என்ன? ஓர் இலக்கை உடையது. என்ன இலக்கு? மனிதனுக்குப் பொழுது போக ஏதாவது படிக்க வேண்டும். அதற்காக ஏற்பட்டதுதான் இலக்கியம். பிறகு தான் ‘இலக்கியம்’ வெறும் பொழுதுபோக்காக இருக்கக் கூடாது என்று ஆயிற்று.
பன்னிரண்டாம் நூற்றாண்டில்தான் உலகமெங்கும் இலக்கிய உணர்வு ஏற்பட்டு, இலக்கியங்கள் தோன்றின.
இலக்கியத்திற்கு முன்பே சயின்ஸ் - அறிவியல் தோன்றியது. அறிவியல்தான் மனிதனைப் படிப்படியாக உயர்த்தியது. பிறகுதான் இலக்கியம் தோன்றியது. இந்த இலக்கியங்கள் தோன்றிய பிறகுதான் அறிவியல் துறை குன்றிவிட்டது. இலக்கியத்தைவிட அறிவியல்தான் மனிதனுக்கு வேண்டும்.
‘நீதி நூல்கள்’ இலக்கியங்கள் அல்ல என்று சொல்கிறார்கள். நான் சொல்வேன், திருக்குறள் ஓர் ஒப்பற்ற இலக்கியம்; அருமையான நீதி நூல்; இணையற்ற, தத்துவ நூல்! அதற்கு ஈடான நூல் உலகத்தில் கிடையாது!
திருக்குறளுக்கு அடுத்து; திருக்குர்ரானைக் கூறலாம். அது ஒரு நீதி நூல்! அதில் கற்பனை குறைவு. முகம்மது நபியின் நேரடி அனுபவங்களே - உண்மைகளே, இவர் சொல்லச் சொல்ல எழுதப்பட்ட நீதி நூல்! பைபிளை அப்படிச் சொல்ல முடியாது. அதை யேசுநாதர் மட்டும் எழுதவில்லை! பலர் எழுதியிருக் கிறார்கள். பல கற்பனைகள் உள்ளன. ஆனால், யேசுவின் வாசகங்கள் உயர்ந்த நீதிகள்!
‘ஊசியின் காதுக்குள் ஒட்டகம் நுழைய முடியாது!’ என்று ஒரு பொன்மொழி இருப்பது தவறு! யேசு அப்படிச் சொல்லியிருக்க முடியாது! அவர் பேசிய மொழியில் ‘ஒட்டகம்’ என்பதையும், ‘தாம்புக்கயிறு’ என்பதையும் குறிக்க ஒரே சொல் தான் உண்டு. ஆகவே, ‘ஊசியின் காதுக்குள் தாம்புக்கயிறு நுழைந்தாலும் நுழையலாம்; பரலோக ராஜ்யத்திற்குள் பணக்காரன் நுழைய முடியாது!’ என்றுதான் அவர் சொல்லி இருக்கவேண்டும்!
காதல் திருமணம்
செட்டி நாடு அமராவதிப் புதூரில் அப்பாத்துரையார் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருக்கும்போதுதான் அலமேலுவைச் சந்தித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து திருச்சிராப்பள்ளிக்குச் சென்றார்கள். திருச்சி திராவிடர் கழகத் தலைவராக இருந்த வழக்கறிஞர் தொ.பொ. வேதாசலம் அவர்கள் தலைமையில் திருக்குறளார் வீ. முனுசாமி அவர்கள் முன்னிலையில் இவர்கள் திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமணம் கலப்புத் திருமணம் மட்டுமன்று, இருவருக்குமே மறுமணமுமாகும்!
தமிழுக்காக மயக்கம்
ஆங்கிலத் தமிழ் அகராதியைத் தொகுக்கும் பணியில் அப்பாத்துரையார் முழு ஈடுபாட்டோடு பகல் நேரம் மட்டுமல்லாமல் பின்னிரவு வரை உழைத்து மயங்கி விழுந்த நாள்கள் பலவாம். அப்படி மயங்கி விழுந்த போது, மண்டையில் இரத்தக் காயம் ஏற்பட்டு, தலையின் முன் பகுதியில் ஒரு கறுப்பு வடு ஏற்பட்டுள்ளது.
சைவ சித்தாந்தத்தில் ஈடுபாடு
பத்தாம் வகுப்பில் படிக்கும்போது பிரமு அத்தையாருக்கு என்னை மருமகனாகக்கிக் கொள்ளும் ஆர்வம் இருந்தது. தந்தை விருப்பமின்மையால், இது தடைபட்டது. இச்சமயம் சைவ சித்தாந்தத்தில் வல்லுனரான ஒரு முதலியார் அவர்கள் குடும்பத்திலும் ஊரிலும் கோயிலிலும் சைவ போதகராக இருந்தார். அவரிடம் அத்தையார் என் ஆங்கிலக் கல்வி, தமிழ்க் கல்வி பற்றிப் புகழ்ந்துரைத்தார்.
முதலியார், “ஒரு தமிழ்ப் பாட்டுப் பாடு” என்றார். நான் அன்று படித்த தமிழ் புத்தகங்களில் மிகப் பெரும்பாலும் வேதாந்தப் புத்தகங்களே. ‘ஞான வாசிட்டம்’, ‘கைவல்ய நவநீதம்’, ‘நிட்டானுபூதி’ முதலிய புத்தகங்களின் பாடல்களை ஒப்புவித்தேன்; விளக்கமும் கூறினேன்.
முதலியாருக்கு என் தமிழ் அறிவில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும், வேதாந்த அறிவில் கசப்பு ஏற்பட்டது. ஆயினும் அவர் உடல்நலமில்லாதபோது, அவருக்குப் பதிலாகக் கோவிலில் சொற்பொழிவாற்றும் வேலையை எனக்கு அளித்தார்.
அச்சிட்ட அவர் சொற்பொழிவுகளையே படித்து நான் பேசினேன். பிற்காலத்தில் சைவ சித்தாந்தத்தில் பேரளவில் ஈடுபட இது எனக்கு உதவிற்று.
இந்தி ஆசிரியராக இந்தி எதிர்ப்பு
‘முகம்’ மாமணி: நீங்கள் இந்தி ஆசிரியராக இருந்து கொண்டே இந்தியை எதிர்த்திருக்கிறீர்களே, உங்கள் செயல் மக்களைக் குழப்பியிருக்குமே!
விடை: ’சிலருக்குக் குழப்பமாக இருந்திருக்கலாம். ஆனால், இந்தி எதிர்ப்பின் முன்னோடிகளான பெரியாரும் - அண்ணாவும் என் செயலைப் புரிந்து கொண்டு, இந்தி எதிர்ப்பு மாநாடுகளில், கூட்டங்களில் எனக்கு முதன்மை கொடுத்தனர்.
’இந்தி மொழியே தெரியாதவர்கள், இந்தியை எதிர்ப்பதை விட இந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற பன்மொழிகளில் புலமை பெற்ற அப்பாத்துஐரயார் எதிர்ப்பது தான் சரி. ஏனென்றால் அவருக்குத் தான் தெரியும். இந்தியில் ஒன்றும் இல்லை; அரசியல் ஆதிக்கத்துக்காக அதைப் புகுத்துகிறார்கள் - என்று நம்மைவிட அப்பாத்துரையார் சென்னால்தான் மக்களுக்கு உண்மை புரியும்" என்னும் பொருள்பட பெரியாரும் அண்ணாவும் எனக்கு ஆதரவு கொடுத்தனர்.
(குறிப்பு: அப்பாத்துரையார் 250 பக்கங்களில் India’s Language Problemஎனும் நூலை மறைமலையடிகளாரின் 40 பக்கங்கள் கொண்ட முன்னுரையோடு 1948இல் வெளியிட்டார். இந் நூல் வெளியிட்டதால் தமிழக அரசின் மொழி பெயர்ப்புத் துறையில் பணியாற்றி வந்த அப்பாத்துரையார் வேலை பறிக்கப்பட்டது. அண்ணா முதல் அமைச்சரானதும் முறையிடப் பட்டது. ஆனால், அப்பாத்துரையாரின் பத்தாண்டுகாலப் பணிக்குச் சேர வேண்டிய பணம் கொடுக்கப்படவில்லை.)
- நேர்க்காணல் ‘முகம்’ மாமணி
யாதும் ஊரே மாத இதழ்,
வைகாசி 2037, சூன் 2006, பக். 30-31
** கா. அப்பாத்துரையார் தமிழ்ப்பணி பன்மொழிப் புலமை**
தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் முதுகலைப் புலமைப் பெற்றவர்.
தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி போன்ற இந்திய மொழிகளிலும் அரபு, சப்பான், ஹீப்ரு மற்றும் மலேயா முதலிய ஆசிய மொழிகளிலும் பிரஞ்சு, செர்மன், ரஷ்யா, இத்தாலி போன்ற ஐரோப்பிய மொழிகளிலும் சுவாசிலி என்ற ஆப்பிரிக்க மொழியிலும் மூல அறிவு பெற்றவர்.
இம்மொழிப் புலமை பல்வேறு மொழிகளில் நூல்களை எழுதவும், மொழி பெயர்ப்பு செய்யவும் பெரிதும் துணை செய்தது.
திருக்குறள் உரை
அப்பாத்துரையார் பெரிதும் மதித்த தலைவர்களுள் ஒருவரான பெரியார், சமய சார்பற்ற முறையில் ஓர் உரையினைத் திருக்குறளுக்கு எழுதுமாறு அவரைக் கேட்டுக் கொண்டார்.
அவர் தன் மாணவராகிய கவிஞர் கண்ணதாசன் நடத்திய ‘தென்றல்’ என்னும் இலக்கிய வார ஏட்டில் இருநூறு குறட்பாக்களுக்கு உரை எழுதினார். 1965ஆம் ஆண்டு ‘முப்பால் ஒளி’ என்னும் பெயரில் திங்கள் இதழ் ஒன்றைத் தொடங்கி அவ்விதழில் திருக்குறளுக்குத் தொடர்ந்து உரை எழுதலானார்.
1965 முதல் 1971 வரை ‘முப்பால் ஒளி’ இதழில் வெளிவந்த திருக்குறள் உரையினை விரிவுபடுத்தி ஒவ்வொன்றும் ஏறத்தாழ ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆறு தொகுதிகளாகத் திருக்குறள் மணி விளக்கவுரையென்னும் பெயரிட்டு வெளியிட்டார். இந்த ஆறு தொகுதிகளிலும் இருபது அதிகாரங்களிலுள்ள இருநூறு திருக்குறட்பாக்களுக்கு விரிவான விளக்கவுரைஅமைந்துள்ளது. எஞ்சிய 1130 குறட்பாக்களுக்கு அவர் எழுதிய உரை இன்னும் அச்சேறாமல் உள்ளது.
ஆங்கிலத்திலும் திருக்குறளுக்கு மணி விளக்கவுரை
1980இல் திருக்குறள் அறத்துப்பாலின் முதல் 19 அதிகாரங்கள் வரை ஆங்கிலத்தில் விரிவான உரை வரைந்து அதற்கு அவரது ஆதரவுடன் தட்டச்சு வடிவம் தந்தார். அறத்துப் பாலின் எஞ்சிய 19 அதிகாரங்களுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நிதியுதவியுடன் ஆங்கிலத்தில் விரிவான உரை வரைந்து அதற்கும் தட்டச்சு வடிவம் தந்துள்ளார். இவ்வாறு அறத்துப்பால் முழுமைக்கும் தட்டச்சில் 2132 பக்கங்கள் அளவிற்கு அவரது ஆங்கில உரை எழுதப்பட்டுள்ளது. எனினும் இந்த ஆங்கில உரையும் இன்னும் அச்சேறாமல் உள்ளது.
தென்னாடு முழுவதும் ஒரே மொழி, தமிழ்!
திராவிட மொழிகள் பற்பலவாயினும் அவற்றுள் பண்பட்டவை ஐந்து. அவை தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் துளு. இவ்வைந்தனுள் இலக்கியம் கண்ட மொழிகள் நான்கு. அவை தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம்.
பண்பட்ட ஐந்து மொழிகளும் ஒரே இலக்கியம் உடையதாய் ஒரே எழுத்து வடிவம் உடையதாயிருந்த காலம் உண்டு. ஆனால், இலக்கியம் ஒன்றானதால் ஐந்து மொழிகளும் ஒரே பெயருடன் ‘தமிழ்’ என்றே அழைக்கப்பட்டது. சங்க இலக்கியங்கள், தேவாரத் திருவாசகங்கள் ஆழ்வார்களின் நாலாயிரப் பிரபந்தங்கள் எழுதப்பட்ட காலத்தில் தொன்னாடு முழுவதும் ஒரு மொழிதான் இருந்தது.
வள்ளுவர் “தமிழ் மொழியையே மொழியாகக் கண்டார். தமிழ் நாட்டையே உலகமாகக் கண்டார். தமிழ்ப் பண்பையே மனிதப் பண்பாகத் தீட்டினார். அவர் தனிச் சிறப்புக்குக் காரணம் இந்தப் பொதுமைதான்” என்றும் வள்ளுவர் நாளில் தமிழ்ப் பண்புடன் போட்டியிடும் பண்பு இல்லை. அதுவே உச்சநிலையில் இருந்தது என்றும் கூறுகிறார். அப்பாத்துரையார்.
“தமிழ்ப் பண்பு நிறைந்த பகுதியையே அக்காலத்தவர்கள் தமிழகம் அல்லது செந்தமிழ்நாடு என்றார்கள். ‘தமிழ் கூறும் நல் உலகு’ எனத் தொல்காப்பியம் கூறுவது இதையே” எனவும் சமற்கிருதம் அன்று பிறக்கவில்லை. ஆரிய மொழியில் எழுத்தில்லை. இலக்கணமில்லை. இலக்கியம் என்ற கருத்தின் நிழல்கூட அன்று கிடையாது. சமற்கிருதம் இலக்கிய மொழி ஆன காலம் திருவள்ளுவருக்குப் பல நூறு ஆண்டுகளுக்குப் பின் சங்க இலக்கியத்துக்குப் பின்னரே" என்பதும் அப்பாத்துஐரயாரின் கருத்தாகும்.
தீண்டாமையை ஒழிக்கும் நோக்கில் தீண்டாதோருக்காக ஆலயங்கள் திறந்த போது தன் மகிழ்வை வெளிக்காட்டி அச்செயலைப் பாராட்டிக் கூறும்போது-
பிறையெனத் தேய்ந்து நின்ற
…….. ………… ………..
பயிரது காக்கும் வேலி
படர்ந்ததை அழித்ததே போல்
செயிருறு சமய வாழ்வு
சீருற அமைந்த பேதம்
அயர்வுறு மனித வாழ்வை
அழித்த தீங்கிதனை நீக்கி
உயிருறச் செய்த கீர்த்தி
ஓங்கு சித்திரைக் கோ மாற்கே!
என்று கூறுகிறார்.
வேலியே பயிரை மேய்ந்தது போல், சீர்படுத்த வந்த சமயம் தீண்டாமை எனும் பேதத்தை ஏற்படுத்தியது. இத் தீங்கை நீக்கிக் கீர்த்தி பெறச் செய்த செயலைப் பாராட்டுகிறார்.
‘தமிழ்ப் பண்பு’ என்னும் நாடகத்தில் தமிழர் விழா பற்றி இருவர் விவாதம் மூலம் விவரித்துள்ளார். கிறிஸ்துமஸ், ஈதுப் பண்டிகைகளைச் சிறப்பாக் கிருத்துவரும், முசுலீம்களும் கொண்டாடினாலும் அது தமிழர்களை எவ்வகையிலும் அவமதிக்கவோ, புண்படுத்தவோ செய்வதில்லை. தமிழ் விழாக்களுடன் தமிழ் விழாக்களாக அவற்றை ஏற்ற கிருத்தவ, இஸ்லாமிய நண்பர்களுடன் அவற்றை நாம் கொண்டாடுவதன் காரணம் எல்லாத் தமிழரும் சேர்ந்து முழு நிறை தமிழ்த் தேசியம் பேண அது உதவுகிறது.
ஆனால், தீபாவளி போன்ற வடவர் பண்டிகைகள் தமிழரை அவமதிக்கும் புராணக் கதைகளைக் கொண்டாடுபவை. தமிழரைப் புண்படுத்துபவை. அத்துடன் அவை தமிழ்ப பண்புக்கு மாறுபட்டவை என்ற கருத்தை விதைப்பதோடு ’மலையாளிகள் கொண்டாடும் ஓணம் விழா தமிழ்ப் பண்புடைய விழா மட்டுமல்ல, தமிழின விழா. மலையாளிகளும் இனத்தால் தமிழ்க் குழுவான திராவிடம் சார்ந்தவர்களே.
பண்பில் அது பொங்கலைவிட குறைந்த விழாவல்ல. மேலும் பண்டு தமிழகத்திலும் அவ்விழா எங்கும் கொண்டாடப்பட்டதாகப் பத்துப்பட்டுப் பறைசாற்றுகிறது எனத் தமிழ்ப் பண்புடைய தமிழர் விழாக்கள் பற்றி இந்நாடகத்தின் மூலம் ஒரு சிறு ஆய்வே செய்துள்ளார், அப்பாத்துரையார்.
வங்க தேசத்திற்கு இணையான சிறப்புடையது தமிழகத் தேசியம். இச் சிறப்பிற்குக் காரணமாக விளங்கிய தலைவர் வ.உ.சி. அவர்களின் சிறப்பை எடுத்து உணர்த்துகிறார்.
"கப்பலோட்டிய தமிழரான வ.உ.சிதம்பரனார் தமிழகத்தின் முடிசூடா மன்னராகவும், தொழிலாளரியக்கத்தின் முதல் அனைத்திந்தியத் தலைவராயும் விளங்கினார். அத்துடன் இந்தியத் தலைவர்களிடையே காலங்கடந்த தொலை நோக்குடைய தலைவராகவும் விளங்குகிறார். அவருக்குப் பின் வந்த தீவிரவாதத் தலைவர்களுள் செயல்பாட்டில் அவருக்கு ஒப்பான செயற்கரியன செய்த பெரியாராகப் போஸ் நீங்கலாக எவரையும் கூற முடியாது.
இவ்விருவருக்குமிடையே காந்தியடிகள் தலைமை இவர்களைத் தாண்டி ஒளி வீசிற்றாயினும், அது நாடு கடந்த உலக எல்லையும், அரசியல் கடந்த ஆன்மிக எல்லையையும் என்று கூற முடியாது".
1906 ஆம் ஆண்டு சூரத்தில் கூடிய பேரவையில் தீவிரவாதியான திலகரை மிதவாதிகள் தாக்குதலிலிருந்து வ.உ.சி. தலைமையில் தமிழகத்திலிருந்து சென்றவர்கள் காத்தார்கள் என்ற சூழலை அப்பாத்துரையார் விரிவாக விளக்குகிறார்.
வான்புகழ் மணிமேகலை
மணிமேகலையும் சிலப்பதிகாரமுமே பழமைமிக்க சிறப்பு வாய்ந்த காவியங்களாகத் திகழ்கின்றன. இளங்கோவடிகளால் சிலப்பதிகாரம் இயற்றப்படு முன்பே மதுரைக் கூலவாணிகரால் இயற்றப்பப்டட மணிமேகலையே புத்த உலகில் தலைசிறந்த காப்பியமாகக் காணப்படுகிறது. இலக்கியப் பண்பில் உயர்ந்த இம் மணிமேகலை பற்றி ‘மணிமேகலை’, ‘வான்புகழ் மேகலை’ என்ற கட்டுரையில் ஆய்ந்துள்ளார், அப்பாத்துரையார்.
இலக்கியத்தில் காப்பியங்களை இயற்கைக் காப்பியங்கள், செயற்கைக் காப்பியங்கள் என இரண்டாகப் பிரித்து இயற்கைக் காப்பியமாவது மக்களிடையே வழங்கி மக்கட் பாடங்களைக் காப்பிய உணர்வுடைய ஒரு கலைஞன் தொகுப்பால் ஏற்படுவது. செயற்கைக் காப்பியமாவது ஒரு கலைஞனையே கட்டமைக்கப்படுவது என விளக்கும் அப்பாத்துரையார் ஹோமரின் ‘இலியட்’ இயற்கைக் காப்பியம் என்றும் மில்டனின் ‘துறக்க நீக்கம்’ செயற்கைக் காப்பியம் என்றும் கூறி மணிமேகலையை இரண்டுக்கும் இடைப்பட்டதாகக் கூறியுள்ளார்.
உயர்காப்பியப் பண்புகள் முற்றிலும் அமைந்த மணிமேகலை புத்த சமய இலக்கியமாகக் காணப்படுவது பற்றி ’புத்த சமயம் சார்ந்த ஏடுகள் உலகில் பல மொஇயக்கத் தொடர்புழிகளில் இருக்கின்றன. ஆனால், புத்த சமயச் சார்பான இத்தகைய நல் இலக்கியம் சமற்கிருதத்திலோ பாலியிலோ வேறு எந்த உலக மொழிகளிலோ கிட்டத்தட்ட 50 கோடி புத்த சமயத்தினர் பேசும் சீன மொழியிலோ 8 கோடி புத்த சமயத்தினர் பேசும் சப்பான் மொழியிலோ கூடக் கிடையாது" என இலக்கியப் பண்பாலும் காலத்தாலும்கூட புத்த சமய உலகில் மணிமேகலைக்கு ஈடு வேறு எதுவும் இல்லை எனக் கூறியுள்ளார்.
யாதும் ஊரே மாத இதழ்,
வைகாசி 2037, சூன் 2006, பக். 40-42